மாணவர்கள் விடுத்த கெடு.. 1 மணி நேரத்தில் பதவி விலகிய நீதிபதி!

 வங்கதேசத்தில் மாணவர் போராட்டத்தையடுத்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியிருந்தார். இந்நிலையில், தலைமை நீதிபதியையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

போராட்டத்தையடுத்து நீதிபதி விலகுவதாக அறிவித்திருக்கிறார். இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இந்தியாவில் இருப்பதை போன்றே இட ஒதுக்கீடு முறை இருக்கிறது. குறிப்பாக வங்கதேச சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உயிர் நீத்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணிகளில் 30 சதவிகிதம் வரை இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

வங்கதேச விவகாரம்..இது தவிர சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள், பெண்களுக்கு 10 சதவிகிதம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறுபான்மையினர் என மொத்த இடஒதுக்கீடு 56%ஐ கடந்திருக்கிறது. வங்க தேசத்தை பொறுத்த வரையில் ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் 3,000 காலிப்பணியிடங்கள் உருவாகின்றன. இ

தற்கு 4,00,000 பேர் விண்ணப்பிக்கின்றனர். எனவே, வேலை வாய்ப்புக்கு அதிக போட்டி ஏற்பட்டு வருகிறது. இந்த போட்டிக்கு மத்தியில் 56% பணியிடங்கள் இடஒதுக்கீடு மூலமாக நிரப்பப்பட்டுவிடுகிறது. இது அந்நாட்டு மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. முக்கிய துறைகளில் திறமையானவர்கள் வருவதில்லை என்று புலம்பி வந்திருக்கின்றனர்.

இதற்காக தொடர் போராட்டங்கள் நடந்து வந்திருக்கிறது. போராட்டங்கள் உச்சக்கட்டத்தை எட்டும்போது அந்நாட்டு அரசு இடஒதுக்கீட்டில் சில மாற்றங்களை ஏற்படுத்தும். இப்படியாக கடந்த 2018ல் இந்த இடஒதுக்கீட்டை அந்நாட்டு அரசு ரத்து செய்திருந்தது.

இதற்கு பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேநேரம், இடஒதுக்கீடு ரத்துக்கு மற்ற மாணவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்படி இருக்கையில் அந்நாட்டின் உயர்நீதிமன்றம் இடஒதுக்கீடு ரத்து செல்லாது என்று அறிவித்தது.

போராட்டம் அரசுக்கு எதிராக திரும்புவதை உணர்ந்த பிரதமர் ஷேக் ஹசீனா கட்சி, உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறது. உச்சநீதிமன்றம் விரைவில் இந்த வழக்கை விசாரிக்க இருக்கிறது.

அதுவரை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கும் தடை விதித்திருக்கிறது. இருப்பினும் மாணவர் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. பல இடங்களில் போராட்டங்கள் வன்முறையாக வெடித்திருக்கிறது. இதனை அடக்க காவல்துறை மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையிலும், வன்முறையிலும் 300க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

1000க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 98 பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். இந்த வன்முறையையடுத்து ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

ஹசீனாவை தொடர்ந்து, அந்நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகளையும் பதவி விலக வேண்டும் என்று மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அதாவது, தற்போது வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையில் காபந்து அரசாங்கம் அமைந்திருக்கிறது.

இந்த அரசுடன் கலந்தாலோசிக்காமல் முழு நீதிமன்றக் கூட்டத்தை கூட்ட தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் உத்தரவிட்டிருந்தார்.  இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்துதான் மாணவர் போராட்டம் தொடங்கியது.

ஒரு மணி நேரம் கெடுவிதிப்பதாக கூறி உயர்நீதிமன்றத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டம் நடத்தியிருந்தனர். போராட்டத்தையடுத்து தலைமை நீதிபதி ஒபைதுல் ஹசன் பதவி விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

Previous Story

காசா பள்ளியை குறிவைத்த இஸ்ரேல். 100 உயிர்களை பறித்த மூன்று குண்டுகள்!

Next Story

57 இலட்ச வித்தியாச வெற்றியாம்!