மலேசியாவில் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு – இன்றே முடிவுகள்!

மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

மலேசிய பொதுத்தேர்தல்

மலேசிய நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.

கடந்த அக்டோபர் 10ஆம் தேதி மலேசிய நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில், புதிய அரசை தேர்வு செய்வதற்கான பொதுத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.

இது மலேசிய நாடாளுமன்றத்தின் 15ஆவது பொதுத்தேர்தலாகும். இந்தத் தேர்தலில் மொத்தம் 2.1 கோடி மக்கள் வாக்களிக்க உள்ளனர்.

பொதுத்தேர்தலில் வாக்களிப்பதற்கான வயது வரம்பு 21லிருந்து 18ஆக குறைக்கப்பட்டுள்ளதால் இன்றைய தேர்தலில் 40 லட்சம் இளம் வாக்காளர்கள் புதிதாக வாக்களிக்க உள்ளனர்.

முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அனைத்துக் கட்சிகளும் சமூக ஊடகப் பிரசாரங்களில் தீவிர கவனம் செலுத்தின. தமிழ் மக்களைக் கவர எம்ஜிஆர் பாடல்கள் உட்பட தமிழ்த்திரைப்பட பாடல்கள் பிரசார களங்களில் பயன்படுத்தப்பட்டன.

கொரோனா காரணமாக மலேசிய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால் இந்த நேரத்தில் தேர்தலை நடத்த எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

மலேசியாவில் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. ஐந்து மாநிலங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், சில இடங்களில் கனமழையைப் பொருட்படுத்தாமல், மக்கள் வாக்களிக்க திரண்டிருந்தனர். தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற முழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாக அரசு ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய இரண்டு நாள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், சாலை சுங்க கட்டணமும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை தேர்தல் களத்தில் நான்கு கூட்டணிகள் களமிறங்கி உள்ளன. பிரதமர் பதவிக்கு ஆறு பேருக்கு இடையே நேரடியாகவும் மறைமுகமாகவும் போட்டி நிலவுகிறது.

எனினும், 70 மலாய் பேராசிரியர்களைக் கொண்ட குழு எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிமை ஆதரிப்பதாக கூறியுள்ளதை அடுத்து, கடைசி நேரத்தில் பிரதமர் பதவிக்கான போட்டியில் அன்வார் முன்னிலை வகிப்பதாக பேச்சு எழுந்துள்ளது.

அன்வார் இப்ராஹிமின் தலைமையிலான நம்பிக்கை கூட்டணி (பக்காத்தான் ஹராப்பான்) அதிக நாடாளுமன்ற இடங்களைப் பிடிக்கும் என்றும், ஆனால் பெரும்பான்மை கிடைப்பது கடினம் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

“தற்போது நிலைமை நன்றாக உள்ளது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என பினாங்கு மாநிலத்தில் வாக்களித்த பின்னர் அன்வார் இப்ராஹிம் செய்தியாளர்களிடம் கூறினார்.

தங்கள் கூட்டணி தனிப்பெரும்பான்மையை இலக்காக கொண்டுள்ளதாகவும், அது கிடைக்காத பட்சத்தில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட தயார் என்று நடப்பு பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகூப் தெரிவித்துள்ளார்.

மலேசிய பொதுத்தேர்தல்

மலேசிய நாடாளுமன்றத்தில் மொத்தம் 222 இடங்கள் உள்ளன. பாடாங் செராய் தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர் காலமானதால் அங்கு தேர்தல் நடைபெறவில்லை. மீதமுள்ள 221 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு மலேசியாவில், மொத்தமுள்ள 175 தொகுதிகளில் எந்த கூட்டணி 90 முதல் 100 தொகுதிகளைக் கைப்பற்றுகிறதோ, அந்த கூட்டணியே ஆட்சி அமைக்கும், வலிமையைப் பெறும் என்கிறார் செல்லியல் இணையதள ஆசிரியர் இரா.முத்தரசன்.

வாக்குப்பதிவுக்காக விடுமுறை அளிக்கப்பட்டதால், மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் சாலைகள் போக்குவரத்து இன்றி அமைதியாக காணப்படுகின்றன.

இன்று மாலை வாக்குகள் எண்ணப்பட்டு, நள்ளிரவுக்குள் முடிவுகள் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Previous Story

உங்கள் மூளையை இளமையாக வைத்துக் கொள்ள உதவும் சிறந்த உணவு எது?

Next Story

ஈரான்:  கொமேனி இல்லத்திற்கு தீ வைப்பு