மன அழுத்தத்தை வெளிக்காட்டும் மூக்கு

ஆய்வில் புதிய தகவல்

அழுத்தம், மன அழுத்தம், ஆய்வு, தெர்மல் கேமரா, மூக்கு

உங்கள் மூக்கின் வெப்ப அளவில் ஏற்படுகிற மாற்றம், நீங்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை கணக்கிடுவதற்கு உதவிட முடியுமா? சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வு ஒன்று அதற்கான முயற்சியில் உள்ளது. பிபிசி செய்தியாளர் விக்டோரியா கில் அந்தச் சோதனையில் கலந்து கொண்டு அதனை விளக்குகிறார்.

Why Is My Nose Burning? | Ear, Nose & Throat Associates | Blog

பெரியளவில் முன்தயாரிப்பு இல்லாமல் மூன்று பேர் அடங்கிய குழு முன்பாக 5 நிமிட உரை நிகழ்த்துமாறும், பின்னர் 17-ன் மடங்காக இறங்கு வரிசையில் கூறுமாறும் (51, 34, 17 என்கிற வகையில்) என்னிடம் கூறியபோது நான் எதிர்கொண்ட மன அழுத்தம் என் முகத்தில் வெளிப்படையாகவே தெரிந்தது.

ஏனென்றால் சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர்கள் இதனை ஒரு ஆய்விற்காக தெர்மல் கேமராக்களைக் கொண்டு படம்பிடித்துக் கொண்டிருந்தனர்.

மன அழுத்தம் என்பது முகத்தில் உள்ள ரத்த ஓட்டத்தைப் பாதிக்கிறது. மனிதனின் மூக்கின் வெப்ப அளவு குறைவதை வைத்து மன அழுத்தத்தின் அளவை கணக்கிடவும், மன அழுத்தத்தில் இருந்து மீள்வதை கண்காணிக்கவும் முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

மன அழுத்தம் தொடர்பான ஆய்வுகளில் தெர்மல் இமேஜிங் என்பது “திருப்பு முனையாக” இருக்கும் என இந்த ஆய்வை மேற்கொள்ளும் உளவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அழுத்தம், மன அழுத்தம், ஆய்வு, தெர்மல் கேமரா, மூக்கு
இங்குள்ள இரண்டு தெர்மல் புகைப்படங்களிலும் இருப்பவர் ஒரே பெண் தான். இடதுபக்கம் உள்ள புகைப்படத்தில் அவரின் முகம் மஞ்சளாகவும் சிவப்பாகவும் உள்ளது. வலது பக்கம் உள்ள தெர்மல் புகைப்படத்தில் அவரின் மூக்கு நீல நிறத்தில் தெரிகிறது. அவர் செய்து முடிக்க வேண்டிய வேலை தொடர்பான மன அழுத்தத்தால் மூக்கின் வெப்பநிலை குறைந்துள்ளது.

நான் மேற்கொண்ட பரீட்சார்த்த முறையிலான இந்த அழுத்தப் பரிசோதனை என்பது மிகவும் கவனமாக வடிவமைக்கப்பட்டது. இந்த ஆய்வில் என்ன நடக்கப்போகிறது என்பதை பற்றிய எந்தத் தகவலும் இல்லாமல் தான் பல்கலைக்கழகத்திற்கு வந்தேன்.

முதலில் என்னை அமர வைத்து, ஆசுவாசப்படுத்தி ஹெட்போன்கள் மூலம் இரைச்சலான சத்தத்தைக் கேட்க வைத்தனர். அது வரை நன்றாக தான் இருந்தது.

பின்னர் இந்தப் பரிசோதனையை மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர், மூன்று நபர் அடங்கிய குழுவை அறைக்குள் அழைத்தார். எல்லோரும் என்னையே அமைதியாக உற்றுப் பார்த்த போது ஆராச்சியாளர் என்னிடம் வந்து, என் “கனவு வேலை” பற்றிய 5 நிமிட பேச்சுக்கு தயாராக எனக்கு 3 நிமிடங்கள் உள்ளது எனத் தெரிவித்தார்.

நான் அந்த வேலையில் தீவிரமான போது என் முகத்தில் நிறம் மாறுவதை விஞ்ஞானிகள் தெர்மல் கேமரா மூலம் பதிவு செய்தனர். என் மூக்கின் வெப்பநிலை குறைந்து, தெர்மல் கேமராவில் மூக்கின் நிறம் நீலமாக மாறியது.

நான் முன்னேற்பாடு இல்லாத இந்தப் பணியை எவ்வாறு செய்வது என்கிற யோசனையில் இருந்தேன். (இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்வெளி வீரர் பயிற்சி திட்டத்தில் சேர்வதற்கான என்னுடைய ஆசையை வெளிப்படுத்தலாம் என முடிவு செய்திருந்தேன்!.)

இதே பரிசோதனையை மேலும் 29 தன்னார்வலர்களிடம் மேற்கொண்டனர். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்கள் மூக்கின் வெப்பநிலை 3 டிகிரி முதல் 6 டிகிரி வரை குறைந்ததைக் காண முடிந்தது.

எனது மூக்கின் வெப்பநிலை 2 டிகிரி குறைந்தது. எனது நரம்பு மண்டலம் ரத்த ஓட்டத்தை மூக்கிலிருந்து கண்களுக்கும் காதுகளுக்கும் மடைமாற்றியது. இந்த புலன்கள் பார்ப்பதற்கும், ஆபத்தைக் கேட்பதற்கும் எனக்கு உதவியாக இருக்கிறது.

அழுத்தத்தின் தீவிரத்தை எவ்வாறு கணக்கிடுவது?

அழுத்தம், மன அழுத்தம், ஆய்வு, தெர்மல் கேமரா, மூக்கு
மனிதன் மன அழுத்தத்தை உணரத் தொடங்கிய சில நிமிடங்களில் மூக்கின் வெப்பநிலை குறைகிறது.

இதில் பங்கேற்ற என்னைப் போன்ற பலரும் விரைவாக மீண்டுவிட்டனர். பரிசோதனை முடிந்த சில நிமிடங்களிலே அவர்கள் மூக்கின் வெப்பநிலை பரிசோதனைக்கு முந்தைய நிலையை அடைந்தது.

ஒரு செய்தியாளராக இருப்பது, “அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்க என்னை பழக்கப்படுத்தியுள்ளது,” என்கிறார் முதன்மை ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான கில்லியன் ஃபாரஸ்டர்.

“நீங்கள் கேமராவிலும் பேசுவதற்கும், அந்நியமான நபர்களிடம் பேசுவதற்கும் பழக்கப்பட்டவர்கள். எனவே உங்களால் இயல்பாக அழுத்தம் ஏற்படுத்தும் விஷயங்களால் எளிதில் பாதிக்காமல் இருக்க முடிகிறது.” என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய கில்லியன், “ஆனால், அழுத்தமான சூழ்நிலைகளில் இருக்க பழக்கப்பட்ட உங்களைப் போன்ற ஒருவரிடமுமே ரத்த ஓட்டத்தில் மாற்றம் ஏற்படுவதைக் காண முடிகிறது. இந்த அம்சம் தான் இந்த முறை, அழுத்த நிலை மாற்றத்தை குறிக்கும் சிறப்பான வழி என்பதை பரிந்துரைக்கிறது.” என்று கூறினார்.

மன அழுத்தம் என்பது வாழ்வின் ஒரு அங்கமாகும். ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு, பாதிப்பை ஏற்படுத்துகிற அளவிலான அழுத்த நிலையை சமாளிக்க உதவும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

“மூக்கின் வெப்பநிலை மாறுவதிலிருந்து எவ்வளவு விரைவாக ஒருவர் பழைய நிலைக்கு வருகிறார் என்பது அவர் மன அழுத்தத்தை எவ்வளவு சிறப்பாக சீராக்குகிறார் என்பதற்கான அளவீடாக இருக்கும்,” என்கிறார் கில்லியன்.

“ஒருவேளை அவர்கள் மெதுவாக பழைய நிலைக்கு வருகிறார் என்றால் அது மனஅழுத்தம் அல்லது கவலையின் குறியீடாக இருக்குமா? அதற்கு நாம் எதுவும் செய்ய முடியுமா? என்பது போன்ற கேள்விகளும் உள்ளன.”

இந்த தொழில்நுட்பத்தின் மூலம் உடலின் மீது நேரடியாக எந்த விதமான உபகரணத்தையும் பயன்படுத்த வேண்டிய தேவையில்லை. இது உடல் வெளிப்படுத்தும் எதிர்வினையைக் கணக்கிடுகிறது. இது குழந்தைகள் அல்லது வாய் பேச முடியாதவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தை கணக்கிடவும் உதவியாக இருக்கும்.

இந்தப் பரிசோதனையில் இரண்டாவது கட்டம் என்பது என்னைப் பொருத்தவரை முதல் கட்டத்தை விட மோசமானது. 2023 என்கிற எண்ணிலிருந்து 17 இடைவெளியில் பின்னோக்கி எண்ணுமாறு என்னிடம் கூறப்பட்டது. பரிசோதனையைக் காண வந்த குழுவில் இருந்தவர்கள் நான் ஒவ்வொரு முறை தவறாகக் கூறிய போதும் என்னை நிறுத்தி முதலில் இருந்து தொடங்குமாறு கூறினர்.

நான் ஒப்புக்கொள்கிறேன், மனக்கணக்கில் நான் மிகவும் மோசம்.

கழித்தல் கணக்கை மேற்கொள்ள நான் என் மூளையைக் கட்டாயப்படுத்த நீண்ட நேரம் முயற்சித்த போது என் எண்ணத்தில் தோன்றியதெல்லாம் அந்த அறையை விட்டு ஓடிவிட வேண்டும் என்பது தான்.

இந்தப் பரிசோதனையில் கலந்து கொண்ட 29 தன்னார்வலர்களில் ஒருவர் மட்டுமே கிளம்பிச் சென்றார். மற்ற அனைவரும் இறுதி வரை இருந்து அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு தான் சென்றனர். இறுதியில் மீண்டுமொரு முறை ஹெட்போனில் இரைச்சல் சத்தத்தைக் கேட்க வைக்கப்பட்டோம்.

குரங்குகளிடம் நடந்த ஆய்வில் தெரியவந்தது என்ன?

தெர்மல் கேமராக்கள் அனைத்து விலங்குகளிடமும் உள்ள உடல் அழுத்தத்தைக் கணக்கிடுவதால் குரங்குகளிடம் இவற்றைப் பயன்படுத்த முடியும்.

இதனை சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்கள் போன்ற விலங்குகளிடம் சரணாலயங்களில் பயன்படுத்துவதற்காக ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். அதிர்ச்சிகரமான சூழ்நிலைகளில் இருந்து மீட்கப்பட்ட விலங்குகளின் மன அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் அவற்றின் நலனைப் மேம்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

குழந்தை சிம்பன்சிகளின் காணொளிகளை வயது வந்த சிம்பன்சிகளிடம் காண்பிக்கும்போது அவை அமைதியாவதை குழுவினர் கண்டறிந்துள்ளனர். மீட்கப்பட்ட சிம்பன்சி குரங்குகளின் கூண்டிற்கு அருகில் வீடியோ திரையை வைத்தபோது அவற்றைக் கண்ட குரங்குகளில் மூக்கில் வெப்பநிலை கூடியதை காண முடிந்தது.

எனவே விலங்குகள் விளையாடும் காணொளிகளைப் பார்க்கின்ற போது அழுத்தம் குறைகிறது. மாறாக திடீர் வேலைக்கான நேர்காணலுக்கு தயாராவது அல்லது மனக்கணக்கு போடுவது போன்றவை அழுத்தத்தை அதிகரிக்கிறது.

அழுத்தம், மன அழுத்தம், ஆய்வு, தெர்மல் கேமரா, மூக்கு
கூண்டில் அடைக்கப்பட்ட சிம்பன்சி குரங்கை தெர்மல் கேமரா மூலம் புகைப்படம் எடுத்தபோது முகம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் இதமாக இருப்பதைக் காட்டுகிறது.

சரணாலயங்களில் தெர்மல் கேமராக்களைப் பயன்படுத்துவது மீட்கப்படும் விலங்குகள், புதிய சமூக குழுக்கள் மற்றும் அந்நியமான சுற்றுச்சூழலுக்கு தகவமைத்துக் கொள்ளும் முயற்சிகளுக்கு உதவியாக இருக்கும்.

“இந்த விலங்குகளால் தாங்கள் எவ்வாறு இருக்கிறோம் என்பதை சொல்ல முடியாது, மேலும் அதன் உணர்வுகளை எளிதில் மறைத்துக் கொள்பவை,” என்கிற சஸ்செக்ஸ் பல்கலைக்கழகத்தில் குரங்குகள் நல ஆராய்ச்சியாளரான மேரியான் பைஸ்லி.

“மனிதர்கள் தங்களைப் புரிந்து கொள்வதற்காக 100 வருடங்களுக்கும் மேலாக விலங்குகளை ஆய்வு செய்து வருகின்றனர். தற்போது மனிதர்களின் மன நலன் பற்றி நிறைய தெரிந்து கொண்டுள்ளோம். தற்போது விலங்குகளுக்குத் திருப்பிச் செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.” எனத் தெரிவித்தார்.

எனது சொந்த அறிவியல் அனுபவமும் கூட நமது மிக நெருங்கிய உறவினராக குரங்குகளின் அழுத்தத்தைப் போக்குவதற்கு சிறிய அளவில் பங்களிப்பு செலுத்தலாம்.

Previous Story

மாகாணசபை தேர்தல்களும் சிறுபான்மை சமூகங்களும்

Next Story

இஸ்ரேல் மீண்டு வர ரொம்ப வருஷம் ஆகும்!