‘போர்’ உக்ரைனுக்கு நெத்தியடி புதினுக்கு மார்பில் இடி!!

யூசுப் என் யூனுஸ்

நடப்பது

ஆயுதப் போர்

ஆதிக்கப் போர்

ஊடகப் போர்

கௌரவப் போர்

போர் என்றால் அங்கு மரணங்கள் காயங்கள் அழிவுகள் நாசம் என்பனதான் இருக்கும். இது பஞ்சுமெத்தையில் சிறுபிள்ளைகள் போடுகின்ற தலையனைச் சண்டை அல்ல என்பதனை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடந்த வராம் போரில் குதித்துள்ள ரஷ்யா-உக்ரைன் ஆகிய நாடுகள் பற்றியும் அதன் படைப்பலம், இந்தப் போருக்கான பின்னணிகள் என்பவற்றைச் சொல்லி இருந்தோம். இன்று போர்க் களத்தில் புதிய தகவல்களைச் சொல்லலாம் என்று நினைக்கின்றோம். நாம் கட்டுரையை எழுதுகின்ற நேரத்துக்கும் அது வெளியே வருகின்ற நேரத்துக்குமிடைய கள நிலவரங்களில் மாற்றங்களுக்கு நிறைய வாய்ப்புக்கள் இருப்பது வாசகர்கள் அறிந்ததே.

நாம் இந்தக் கட்டுரையில் ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பில் சர்வதேச ஊடகங்களோ நமது உள்ளுர் ஊடகங்களோ பார்க்காத-பேசாத  சில விடயங்களைத் தகவல்களைச் சொல்லாம் என்றும் எதிர்பார்க்கின்றோம். உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலன்ஸ்கி நேட்டோவில் சேருகின்ற அசையும் அதற்கு எந்த வகையிலும் இடம் தரமுடியாது என்ற புதினின் உறுதியான நிலைப்பாடுமே இந்த மோதலுக்கு அடிப்படை. ஆனால் அமெரிக்காவும் நேட்டோவும் உக்ரைன் ஜனாதிபதிக்குக் கொடுத்து வந்த அசாதாரன நம்பிக்கையுமே அவர் இந்த விவகாரத்தில் ரஷ்யாவை இந்தளவு துனிச்சலுடன் எதிர்க்கக் காரணம். ஆனால் அதே நேட்டோவின் சட்டக் கோவை 5வது சரத்து உக்ரைனுக்கு அவர்களினால் நேரடியாக உதவமுடியாமலும் பண்ணி இருக்கின்றது. காரணம் அது நேட்டோ அங்கத்துவ நாடல்ல என்பதனால்.

எனவேதான் இன்று பூதமாக நிற்கின்ற ரஷ்யாவுடன் உக்ரைன் தனித்து மோத வேண்டிய இக்கட்டன நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது. அதனால்தான் எவ்வளவு பணம் வேண்டுமோ ஆயுதம் வேண்டுமோ தருகின்றோம் என்று அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளும் நேட்டோவும் உக்ரைன் ஜனாதிபதியை இன்று வரை உற்சாகப்படுத்திக் கொண்டு வருகின்றன. தனக்கு இந்த நிலை வரும் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமீர் ஸெலன்ஸ்கி எதிர்பார்த்திருக்க மாட்டார். அவர் இன்று களத்தில் தனித்து விடப்பட்டடிருக்கின்றார். சர்வதேசம் என்னதான் ஆதரவு என்று வாக்கு பண்ணினாலும் களத்தில் அது ஏட்டுச் சுரக்காய்தான்.

சட்டங்கள் விதிகள் என்று என்னதான் இருந்தாலும் நேட்டோ விரும்பினால் துணிந்தால் அவற்றை எல்லாம் காற்றில் பறக்க விட்டு  நேரடியாக உக்ரைனுக்கு ஆதரவாக களத்துக்கு வர முடியும். அப்படி வரலாற்றில் நடந்தும் இருக்கின்றது. அவர்கள் நாம் சொல்லுவது போல் போருக்கு வந்தால் நிச்சயம் உலக யுத்தம். அழிவுதான். அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இதனை அமெரிக்க அதிபர் பைடன் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கின்றார். எனவேதான் அப்படி ஒரு நிலை வராது என்று அவர் அமெரிக்க மக்களுக்கு உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார். பைடன் கூட புதின் இப்படிக் கடுமையாக நடந்து கொள்வார் என்று ஒரு போதும் எதிர்பார்த்திருக்க மாட்டார்.

தான் உக்ரைன் மீது தாக்குதல்களை நடாத்தினால் நேட்டோ உற்பட ஐரோப்பிய நாடுகள் தன் மீது பொருளாதாரத் தடைகளைப் போடும் என்பதனை புதின் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தாலும் இந்தளவுக்கு அவர்கள் ஐக்கியமாக செயலாற்றுவார்கள் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை. குறிப்பாக ஜேர்மன் துருக்கி போன்ற நாடுகள்  இந்தளவுக்குப் பக்கச் சார்பான முடிவுகளை எடுக்கும் என்று அவர் கணக்குப் போட்டிருக்க மாட்டார். மேலும் குகில், ஆப்பில் போன்ற தனியார் நிருவனங்கள் தன்மீது இப்படியான தடைகளைக் கொண்டு வந்து தொந்தரவு கொடுக்கும் என்று ரஷ்யா கனவிலும் எதிர்பார்த்திருக்க மாட்டாது.

உக்ரைனுக்கு அமெரிக்க கொடுத்த நம்பிக்கைகளைப் போன்றே ரஷ்யாவுக்கு சீனா கொடுத்த உறுதி மொழிகளின் அடிப்படையில்தான் இந்த தாக்குதல் முடிவு. குளிர்கால ஒலிம்பிக் சீனாவில் முடிவடையும் வரை இருந்து விட்டு ரஷ்யா சண்டையைத் துவங்கியது என்பது அனைவரும் தெரிந்த விடயம். பொதுவாக சீனா அடுத்த நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்வதில்லை. அதற்கு இந்தியாவுடன் பிரச்சினைகள் இருக்கின்றது. அது எல்லை தொடர்பான சிக்கல்கள். அந்தக் கதை வேறு தனது எல்லைக்கே சம்பந்தம் இல்லாத நாடுகளின் உள்விவகாரங்களில் தலையீடு செய்யும் விடயங்களைத்தான் நாம் இங்கே பேசுகின்றோம்.

உக்ரைன் விவகாரமும் ராஷ்யாவின் உள்விவகாரம் என்ற அளவில் இதுவரை சீனா நிற்க்கின்றது. பெருளாதார ரீதியில் அமெரிக்க உற்பட ஐரோப்பிய நாடுகளினால் தனக்கு வரக் கூடிய நெருக்கடிகள் விவகாரத்தில் சீனாவின் உதவியை ரஷ்யா பெரிதும் எதிர்பார்க்கின்றது. அதற்கான வாக்குறுதிகளும் ராஷ்யாவுக்குக் கிடைத்திருக்க வேண்டும். எனவேதான் தாக்குதலை ரஷ்யா அறிவித்து விட்டு துவங்கியது. போரை ரஷ்யா துவங்கினாலும் உக்ரைனை அச்சுறுத்தி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வரவே அது விரும்பியது. இதற்காக மட்டுப்பட்ட தாக்குதல்களைத் தெரிவு செய்துதான் அது நடாத்தி வந்தது. இன்று வரை அது ஓரளவு வரம்பு மீறிப் போகாமல்தான் நடக்கின்றது.

ரஷ்யா நினைத்தால் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடாத்தி இரண்டு மூன்று நாட்களுக்குள் உக்ரைனைத் தனது பிடிக்குள் கொண்டு வர முடியும். ஆனால் ரஷ்யாவால் அப்படி செய்ய முடியாது. தற்போதய அதிபரை விரட்டி விட்டு தன்னுடன் இணங்கிப் போகின்ற ஒரு பொம்மையை அங்கு ஆட்சியில் அமர்த்தி அவர்களுடன் நல்லறவை வைத்துக் கொண்டே காரியத்தை முடிக்க ரஷ்யா விரும்புகின்றது. அதன் திட்டமும் அதுதான். அதற்கான ஆளையும் அது தயார் நிலையில் வைத்திருக்கின்றது.

பொது மக்களுக்கு சேதங்கள் ஏற்பட்டு விடக்கூடாது அப்படி நடந்தால் அது தான் ஆட்சிக்கு கொண்டு வருபவருக்கு எதிர்காலத்தில் நெருக்கடிகளைக் கொண்டு வரும் என்பதனை புதின் அறிவார். எனவேதான் ஆட்சியாளர்களே ஓடிப் போய் விடுங்கள். இராணுத்தினரே ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள் என்ற பரப்புரையைத் தொடர்ந்து செய்து கொண்டிருந்தது ரஷ்யா. உக்ரைன் மீது ஆக்ரோசமான போரை ரஷ்யாவால் நடத்துவது சிக்கலானது. அது நாம் அறிந்த அளவில் ஒரு குடும்பச் சண்டை போன்றது.

ஆனால் தாக்குதல் விடயத்தில் ரஷ்யாவின் எதிர்பார்ப்பு கைகூடவில்லை. அமெரிக்காவும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய நாடுகளும் கொடுத்த நம்பிக்கைகள் போர்க் களத்தில் தாங்கள் பின்னடையத் தேவையில்லை சகாக்கள் ஒரு கட்டத்தில் நிச்சயம் உதவிக்கு வருவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி நம்பினார்கள். அந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் கூட நடக்கவில்லை. இந்த நிலையில் ரஷ்யாவுக்கு போர் விடயத்தில் நீண்ட காலத்தை எடுத்துக் கொண்டால் அதன் இராணுவம் பற்றிய பிழையான ஒரு சித்திரத்தை உலக்கிற்குக் கொடுத்து விடும். கதையை விரைவாக முடிக்க வேண்டும் அதற்காக சீறிப்பாயவும் முடியாது.

ரஷ்யா மட்டுப்பட்ட அளவில் தெரிவு செய்த இடங்கள் மீதே தாக்குதல்களை நடத்துகின்றது என்பதற்கு சிறந்த உதாரணம் இன்று வரை ஹெலிக்கப்படர்களையும் மிகவும் பழைய விமானங்களையுமே அது போரில் பாவித்து வருகின்றது. ஏன் தனது நவீன போர் விமானங்களை ரஷ்யா பாவிக்க வில்லை என்று பரவலாக கேட்கப்படும் கேள்விக்கு இதுதான் பதில். அந்த நவீன விமானங்களையும் அதில் இருக்கும் ஆயுதங்களையும் பாவித்தால் பொதுமக்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்படும். அதனைத் தவிர்க்கவே இது வரை ரஷ்யா முயன்று வந்திருக்கின்றது. மக்கள் செரிவாக இருக்கும் தலை நகர் கியு மீது முடிந்தளவு விமானத் தாக்குதல் தவிர்க்கப்பட்டு வருகின்றது.

தற்போது உக்ரைனில் நடக்கின்ற போர்: ஆயுதங்களைப் பாவித்து நடக்கின்ற தாக்குதல்கள். ஊடகங்களை வைத்து நடத்துக்கின்ற உலவியல் தாக்குதல்கள்- செய்திகள் என்றும், இப்போது புலிவாலைப் பிடித்தது போல நிலை. இடையில் கைவிட்டால் கடுமையான விமர்சனத்துக்கு இடமிருக்கின்றது. கௌரவப் போர் என்ற அடிப்படையிலும் உலக வல்லாதிக்கத்தை தீர்மானிக்கின்ற போர் என்ற அடிப்படையில்தான் இந்தப் போர் தற்போது போய்க் கொண்டிருக்கின்றது.

இதில் ஆயுதப் போரில் ஒரு போதும் ரஷ்யாவுடன்  உக்ரைனால் தாக்குப் பிடிக்க முடியாது. அதில் ரஷ்யாவுக்கே இறுதி வெற்றி என்பது தெளிவு. ஆனால் அதற்கு ரஷ்யா நிறையவே விலை கொடுக்க வேண்டி வரும் என்ற நிலை உருவாகி இருக்கின்றது. அது இப்போதைக்கும் நடந்து கொண்டிருக்கின்றது. அதே  போன்று உக்ரைன் தனது வரலாற்றில் மிகப் பெரிய அழிவை இந்தப் போரில் சந்தித்து விட்டது. ஒரு உதாரணத்தை மட்டும் நாம் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம்.

போர் துவங்கி ஓரிரு நாட்களில் விமான தளத்தில் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த உலகில் மிகப் பெரிய விமானம் என்று அறியப்பட்ட ‘மிரியா’ என்ற விமானத்தை ரஷ்யா குண்டுவீசி ஓரே அடியாக அழித்து விட்டது. அதன் பெருமதி மட்டும் 59400 கேடி ரூபா.   என்றால் இன்று உக்ரைனில் நடந்து கொண்டிருக்கும் அழிவுகளின் தொகையை ஒருவர் மதிப்பீடு செய்து பார்க்க முடியும். விமான நிலையங்களில் வைத்தே பல டசன் கணக்கான உக்ரைன் போர் விமானங்களைக் குண்டு வைத்து ரஷ்யா தகர்த்து விட்டது. ‘மிரியா’ அழிந்தது உக்ரைன் மக்களுக்கு சோகமான ஒரு செய்தியாவும் துவக்கத்திலே இருந்தது.

இந்தப் போரில் இரு பக்க ஊடகங்களும் பெரிய நாடகங்களை நடாத்திக் கொண்டிருந்தாலும் ரஷ்யத் தரப்பு இதில் மிகப் பெரிய பின்னடைவுகளைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.  மேற்கத்திய ஊடகங்கள் அனைத்தும் ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றன. அதில் அப்பட்டமான பொய்கள் கட்டுக் கதைகள் திரிவு படுத்தப்பட்ட செய்திகள் எங்கோ நடந்த சம்பவங்கள் எல்லாம் அதில் அடங்கியும் இணைக்கப்பட்டும் இருக்கின்றன.

இந்தியா இந்த போர் விவகாரத்தில் நடு நிலையாக  இருந்து வந்தாலும், இந்திய ஊடகங்கள் மேற்கத்திய ஊடகங்களின் செய்திகளைக் காப்பி அடித்து செய்திகளைச் சொல்லி வருவதால் அதுவும் மேற்கத்திய பாணியில் ரஷ்யா விரோத்தன்மை கொண்டதாக இருந்து வருகின்றன. இதனை அவதானித்த ரஷ்யா வெளி விவகாரத் பிரிவு இந்திய ஊடகங்கள் உக்ரைன் விவகாரத்தில் நடு நிலையாகச் செய்திகளை வெளியிட வேண்டும் என்று கேட்கும் அளவுக்கு அந்தச் செய்திகள் பக்கச் சார்பாக அமைந்திருந்தன. இன்றும் அதே நிலைதான் காணப்படுக்கின்றன.

மேற்கத்திய ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அதே போன்று நகைச்சுவை நடிகர் என்பதாலோ என்னவோ உக்ரைன் அதிரும் நானும் சலைத்தவன் அல்ல என்ற அடிப்படையில் பஞ்சமில்லாது நகைச்சுவைக் கதைகளை மொத்தமாகவும் சில்லரையாகவும் சந்தைப்படுத்தி வருகின்றார். போர் பற்றிய வதந்திகள் சிலவற்றை இங்கே பார்ப்போம். ஒரு சிறுமி ஆயுதம் தரித்து நிற்க்கின்ற இராணுவ வீரானுடன் தனியே நின்று சண்டை போடுகின்றாள். அவளுக்கு ஒரு ஐந்து வயதுதான் இருக்கும். அது வீரமிக்க உக்ரைன் சிறுமி ரஷ்யா போர் வீரனுடன் சண்டை என்று சொல்லப்பட்டு பகிரப்பட்டு வந்தது. ஆனால் அது ஒரு பலஸ்தீனச் சிறுமி இஸ்ரேல் இராணுவ வீரனை எதிர்த்து போடும் சண்டை. அதனை நாமும் பல வருடங்களுக்கு முன்பே பார்த்திருந்தோம். மில்லியன் கணக்கானவர்கள் அதனைப் முன்பு பார்த்திருக்கின்றார்கள் பகிர்ந்திருக்கின்றார்கள்.

மேலும் போர் இழப்புகள் பற்றி உக்ரைன் மற்றும் ஊடகங்கள் ஒரு நாளைக்கு ஆயிரம் ரஷ்ய இராணுவ வீரர்கள் கொல்லப்படுகின்றார்கள் என்று தினந்தோரும் செய்திகளைச் சொல்லி வந்தது. இந்த கட்டுரையை எழுதுகின்ற நேரம் போர் துவங்கி ஒன்பதாம் நாள். ரஷ்யா வீரர்கள் 9000 பேர் பலி என்று உக்ரைன் கணக்குச் சொல்கின்றது. 9000 பேர் சாவு என்றால் அந்த உடல்கள் எல்லாம் எங்கே? ரஷ்யா படையினர் டாங்கிகள் ஹெலிக்கப்படர்களை எல்லாம் வீதியில் போட்டு விட்டு ஓடுவதாகப் பரவலான செய்திகள். அவற்றை மக்கள் தங்களது வீடுகளுக்கு எடுத்தச் சென்று விற்றுப் பணம் சம்பாதிக்கலாம் என்று உக்ரைன் அதிபரின் கதைகள். அதற்கு அரசு சட்டரீதியாக அனுமதி வழங்குகின்றது என்றும் செய்தி.

மேலும் ரஷ்யா இராணுவ வீரன் ஒருவன் பிடி பட்டு ஒப்பாறி வைக்கும் காட்சிகள், கொத்துக் கொத்தாக சரணடையும் ரஷ்ய இரணுவ வீரர்கள். இவை எல்லாம் கோமாளித்தனமான கதைகள் என்பதுதான் நமது கணக்கு. இழப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் தரவுகள் உண்மைக்குப் புறம்பானவையாக இருக்கின்றன. என்பதனை நாம் அடித்துச் சொல்கின்றோம் இது போர்க்களங்களில் வழக்கமான தகவல்கள்தான். ஆனால் புத்திகூர்மையுள்ள வாசகர்கள் இவற்றை புரிந்து கொள்வார்கள் அப்பாவிகளும் ஏமாளிகளும் அப்படியே நம்பிக் கொள்வார்கள்.

உக்ரைன் விவகாரத்தில் ஊடகப் போரில் மிகப் பெரிய பின்னடைவை ரஷ்யா சந்தித்துக் கொண்டிருக்கின்றது. மேற்கத்திய ஊடகங்களுடன் ரஷ்யா சார்பு ஊடகங்களுக்கு கிட்டக் கூட நெருங்க முடியாதிருக்கின்றது. அதனால்தான் இப்படியான கதைகள் சில நாட்கள் ஏனும் உயிர் வாழ்கின்றன. அது பற்றி மக்கள் கதைக்கின்றார்கள். நமக்கு வருகின்ற நடுநிலையான  செய்திகளின் படி 689 ரஷ்யப் போர் வீரர்கள் இதுவரை சண்டையில் பலியாகி 1900 பேர் காயம் அடைந்திருக்கின்றார்கள். உக்ரைன் தரப்பில் 2200 போர் வீரர்கள் பலியாகி 4600 பேர் வரை காயப்பட்டிருக்கின்றார்கள். இதில் பொது மக்களும் அடக்கம்.

1700 வரையான பொது மக்களும் அங்கு பலியாகி இருக்கினறார்கள். போர் உக்ரைன் மண்ணில் நடப்பதால் பல ரில்யன் டொலர் மதிப்பில் சொத்துக்கள் கட்டிடங்கள் அழிந்து நாசமாகி இருக்கின்றது. தன்னைத் தாக்கும் போது ரஷ்யா பிரதேசங்களிலும் திருப்பித் தாக்கும் உரிமை உக்ரைனுக்கு இருக்கின்றது என்பது எமது வாதம் ஆனால் அங்கு உக்ரைனால் இதுவரை ஒரு துப்பாக்கி வேட்டைக் கூட அதனால் சுட்டுத் தீர்க்க முடியவில்லை. இதிலிருந்து போரின் போக்கை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இராஜதந்திர ரீதியில் ரஷ்ய இந்தப் போரில் படுதேல்வியைக் கண்டிருக்கின்றது. கிரிமியாவை அது கைப்பற்றிய போது ஐ.நாவில் ரஷ்யாவுக்கு எதிராக நூறுவாக்குகள் வரை கிடைத்திருந்தன. இன்று அது 141 என்ற அளவில் உயர்ந்து இருப்பது இதற்கு நல்ல உதாரணம். உக்ரைன் விவகாரத்தில் இந்திய இது வரை நடுநிலையாக இருப்பது ரஷ்யாவுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. சீனா இந்தப் போரில் ரஷ்யா பக்கம் இருப்பது உண்மை. போரில் பங்கேட்பது பற்றி அந்த நாட்டு இராஜதந்திரிகளைக் கேட்டால் உக்ரைன் போன்று ஒரு நாட்டுடன் சண்டை போட ரஷ்யாவுக்கு எதற்கு கூட்டணிகள் என்று அவர்கள் திருப்பிக் கேட்க்கின்றார்கள்.

ரஷ்யாவும் உக்ரைனும் இந்தப் போரில் நேரடியாகப் பங்கு பற்றினாலும் உண்மையில் அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் நடக்கின்ற வல்லாதிக்கப் போர்தான் இங்கே இப்போது நடக்கின்றது. எனவே இன்று தனக்கு எதிராக உலகில் மிகப் பெரிய சக்திகளாக இருப்பது ரஷ்யாவும் சீனாவும் எனவே அவற்றின் ஒன்றின் முதுகெழும்பை இந்தப் போரில் உடைத்துப் போட அமெரிக்க முனைகின்றது. இதனால்தான் அது உக்ரைனை அதற்காக இந்தப் போரில் ஈடுபடுத்தி, உலக நாடுகளை ரஷ்யாவை ஒரு பயங்கரவாதியாகக் காட்டி சர்வதேசத்தை தனது பக்கத்துக்கு வலைத்துப் போடப் பார்க்கின்றது அமெரிக்கா.

அதே நேரம் இந்த நெருக்கடியான நேரத்தில் மிகவும் செல்வாக்கான அதிகாரிகளை-முன்னாள் படைத்துறை அதிகாரிகளையும் சீனாவுக்கு எதிரான தைவானுக்கு தற்போது அனுப்பி வைத்திருக்கின்றது அமெரிக்க பைடன் நிருவாகம்  அது ஏன் என்று தெரியவில்லை. ரஷ்யா பாணியில் சீனாவும் தைவானில் ஏதும் பண்ணிவிடுமே என்ற அச்சமே என்னவோ தெரியாது. உக்ரைன் போரை முள்ளில் போட்ட சேலையை எடுப்பது போலத்தான் ரஷ்யா கையாள வேண்டி  இருக்கின்றது என்பது நமது கருத்து.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 06.03.2022

 

 

Previous Story

தமிழ்-முஸ்லிம் தரப்பு சந்திப்பு!

Next Story

உக்ரைன் ஜனாதிபதி ஓடிவிட்டார்- ரஷ்யா