ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா?
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் சேர்ந்து நடத்திய துல்லிய தாக்குதலில் ஈரான் உச்ச தலைவராக இருந்த அயதுல்லா அலி கமேனி இறந்தார். அவரது மகனும், ஈரானின் புதிய உச்சபட்ச தலைவர் மொஜ்தபா கமேனி உயிர் தப்பினார். அவர் படுகாயமடைந்துள்ளார். இந்நிலையில் நட்பு நாடு என்பதால் அவருக்கு ரஷ்யாவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த மாதம் 28 ம் தேதி போரை தொடங்கியது. முதல் நாளிலேயே ஈரான் உச்ச தலைவர் அயல்லா அலி கமேனி, அவரது குடும்ப உறுப்பினர்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் மூத்த அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

அயதுல்லா அலி கமேனி இறந்ததால் அவரது மகன் மொஜ்தபா கமேனி ஈரானின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த 28 ம் தேதி நடந்த தாக்குதலில் மொஜ்தபா கமேனி காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு ரகசிய இடத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ரஷ்யாவில் சிகிச்சை?
மொஜ்தபா கமேனியை தீர்த்து கட்டுவோம் என்று அமெரிக்காவும், இஸ்ரேலும்தெரிவித்துள்ளதால் அவர் சிகிச்சை பெறும் இடம் மிகவும் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் மொஜ்தபா கமேனி ரஷ்யாவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ரகசிய இடத்தில் வைத்து அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவில் மொஜ்தபா கமேனிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ரஷ்யா – ஈரான் நட்பு
ரஷ்யாவும், ஈரானும் நெருங்கிய நட்பு நாடுகள். ஈரான் மீது பொருளாதார தடைகளை அமெரிக்கா விதித்தபோதும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் நெருக்கமாக செயல்பட்டு வருகிறார். இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு துறை சார்ந்த ஒப்பந்தங்கள் உள்ளன. உக்ரைன் மீதான போரின்போதும் கூட ஈரான், ரஷ்யாவிற்கு டிரோன்கள் மற்றும் டிரோன் டெக்னாலஜியை வழங்கியதாக கூறப்படுகிறது.
இதற்கு கைமாறாக மொஜ்தபா கமேனியை காப்பாற்ற அதிபர் விளாடிமிர் புதின் அவரை ரஷ்யாவில் வைத்து சிகிச்சை அளித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அரபு நாடுகளில் உள்ள அமெரிக்காவின் பாதுகாப்பு படை தளங்கள் தொடர்பான உளவு தகவல்களை ரஷ்யா தான் ஈரானுக்கு வழங்கியதாகவும், அதனடிப்படையில் தான் ஈரான் அரபு நாடுகளை தாக்கியதாகவும் கூறப்படும் நிலையில் இந்த தகவல் கசிந்துள்ளது.
உறுதி செய்த செய்தி நிறுவனம்
இதுதொடர்பாக குவைத் நாட்டை சேர்ந்த அல்-ஜாரிதா செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ”ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், ஈரான் அதிபர் மசூத் பெசஸ்கியானும் தொலைபேசியில் பேசினர். அப்போது மொஜ்தபா கமேனிக்கு ரஷ்யாவில் சிகிச்சை அளிக்க புதின் தனிப்பட்ட முறையில் முன்வந்தார். இதையடுத்து மொஜ்தபா கமேனி கடந்த 12ம் தேதி ரஷ்ய ராணுவ விமானத்தில் மாஸ்கோவிற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.
மறுக்காத ரஷ்யா
இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவிடம் கேள்வி கேட்கப்பட்டது. ‘டாஸ்’ செய்தி நிறுவனம் சார்பில் அவரிடம் ”மொஜ்தபா கமேனிக்கு ரஷ்யா சிகிச்சை அளிக்கிறதா?” என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு டிமிட்ரி பெஸ்கோவ், ”இதுபற்றி நாங்கள் ஒருபோதும் கருத்து தெரிவிப்பது இல்லை” என்று ஒற்றை வரியில் முடித்து கொண்டார்.
இதன்மூலம் மொஜ்தபா கமேனிக்கு மாஸ்கோவில் சிகிச்சை அளிக்கப்படுவதை ரஷ்யா உறுதி செய்யவோ, மறுக்கவோ இல்லை. இது பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி உள்ளது.
மொஜ்தபா கமேனிக்கு என்ன நடந்தது?
மொஜ்தபா கமேனியின் காயங்கள் குறித்து மாறுபட்ட தகவல்கள் பரவி வருகின்றன. கடந்த 28 ம் தேதி அயதுல்லா அலி கமேனி மூத்த அதிகாரிகளுடன் தலைநகர் டெஹ்ரானில் உள்ள தனது அலுவலக இல்ல மாளிகையில் ஆலோசனைக்கு முயன்றார். அப்போது அமெரிக்கா, இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்திய. இதில் அவரது அலுவலக இல்ல மாளிகை நொறுங்கியது. அயதுல்லா அலி கமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் பலரும் இறந்தனர்.
மகன் மொஜ்தபா கமேனி தப்பினார். ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின்படி, அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களில் கால், கை, மணிக்கட்டில் காயமடைந்தாலும் கூட மொஜ்தபா கமேனி நலமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஈரான் உச்ச தலைவர் அலுவலகத்தின் நெறிமுறை பிரிவின் தலைவர் மஸாஹெர் ஹோசைனி பேசியதாக வெளியான ஆடியோவில் மொஜ்தபா கமேனிக்கு காலில் மட்டுமே காயமடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ”ஈரான் புதிய உச்ச தலைவர் உயிருடன் இருக்கிறாரா? என்பது தனக்கு தெரியாது” என்றார். அதேவேளையில் பிரிட்டிஷ் நாளிதழ் ‘தி சன்’ செய்தி வெளியிட்டுள்ளது. அதில், ” ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர் கோமாவில் உள்ளார்” என்று செய்தி வெளியிட்டுள்ளது. இப்படியான சூழலில் தான் மொஜ்தபா கமேனியை ரஷ்யா கொண்டு சென்று அதிபர் விளாடிமிர் புதின் சிகிச்சை அளித்து வருவதாக வெளியான தகவலை ரஷ்யா மறுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





