“போராடித்தான் தேர்தலைப் பெறவேண்டும்”

நஜீப் பின் கபூர்

சட்டம் நீதி நேர்மை அரசியல் யாப்பு இவற்றை கண்டு கொள்ளாமல் அல்லது மதிக்காமல் இன்று உலகில் ஆட்சி செய்கின்ற முன்னணி நாடுகளில் ஒன்றாக  நமது நாடு இருக்கின்றது. இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி நடக்க வேண்டிய மாகாணசபைத் தேர்தல் நெடுங்காலமாக நடக்காமல் கைவிடப்பட்டிருக்கின்றது. இதனால் அதற்காக அரசியல் யாப்பில் செய்யப்பட்ட 13வது திருத்தம் இன்று திட்டமிட்டுக் காணாமல் ஆக்கப்பட்டிகின்றது அல்லது கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருக்கின்றது. இந்தியா-இலங்கை உடன்பாடு மதிக்கப்படாமல் இருக்கின்றது. இந்தியாவும் இலங்கைத் தமிழர்களும் உலக நாடுகளும் கேட்டுக் கொண்டாலும் அதனை நமது ஆட்சியாளர்கள் கண்டு கொள்ளாமல் இருக்கின்றனர். அதனால் அந்த மாகாணசபைத் தேர்தல் நெடுங்காலமாக நாட்டில் நடக்கவில்லை.

இது இலங்கையில் வாழ்கின்ற சிறுபான்மை நலன்கள் சார்ந்த விடயம் என்பதால் அப்படி என்று எடுத்துக் கொள்ள முடியும். அதற்காக எல்லை நிர்ணயம் நடாத்தப்பட்டு புதிய விதி முறைகளில் தேர்தல் என்று ஒன்றை ஏற்படுத்தி, அதற்கு அங்கிகாரத்தையும் நாடாளுமன்றில் பெற்றும் இருக்கின்றது.  இந்த ஏற்பாட்டை  பெரும்பாலான கட்சிகள் விரும்பவில்லை அதனால் பழைய முறையில்தான் மீண்டும் தேர்தல். இதற்காக நாடாளுமன்றத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டிய தேவை இருக்கின்றது என்று ஒரு ஆப்பை மாகாணசபைத் தேர்தலில் உண்டு பண்ணி இப்போது காலம் கடத்தப்பட்டு வருகின்றது. இது சிறுபான்மை அரசியல் அதிகாரத்துடன் சம்பந்தபட்ட விவகாரமாக இருப்பதால் ஒரு திட்டமிட்ட ஏற்பாடு சதி என்பது நமது கருத்து.

Abiding by Sri Lanka's Democracy – Groundviews

சிறுபான்மை சமூகங்களுக்கு அரசியல் அதிகாரங்களைக் கொடுப்பதற்கு ஆட்சியாளர்கள் தயாரில்லை என்பதனை மேற்சொன்ன விவகாரம் தெளிவுபடுத்துகின்றது என்று நாம் தர்க்கம் பண்ணினாலும், இன்று ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்றவர்களே சிங்கள சமூகத்துக்கும் அதே அடக்கு முறையைத்தான் இப்போது பாவிக்கின்றார்கள். வரலாற்றில் இப்படி எல்லாம் சட்டம் நீதி நேர்மை அரசியல் யாப்பு இவற்றை கண்டு கொள்ளாமல் அல்லது மதிக்காமல் சிங்கள இனத்தின் மீதே அடக்கு முறை ஆட்சியை மேற்கொள்வார்கள் என்று எவரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது அது நடக்கின்றது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பற்றி அறிப்பு வந்தபோதும், பின்னர் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலுக்கான திகதியும் முடிவு செய்யப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேர்தல் நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று நாம் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருந்தோம். அப்படி தேர்தல்களை இந்த அரசியல் பின்னணியில் நடாத்தி ஆட்சியாளர்கள் தற்கொலை அரசியல் செய்து கொள்ள மாட்டார்கள் என்பதனை எமது கட்டுரைகளில் தொடர்ச்சியாகச் சொல்லி வந்திருக்கின்றோம். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

அதற்குப் பின்னர் ஆட்சியாளர்கள் மேற்கொள்கின்ற நாடகங்களைப் பார்க்கின்றபோது நாட்டில் இந்த ஆட்சியாளர்கள் எந்தத் தேர்தலையும் நடத்த மாட்டார்கள் என்று சில மாதங்களில் இருந்து நாம் சொல்லி வருகின்றோம். தேர்தல் பற்றிய பொய்யான கதைகளைப் பரப்பி ஆட்சியாளர்களுக்காக பேசுகின்ற ஊடகங்களும் செய்தியை வெளியிட்டுக் கொண்டு வருகின்றன என்பதும் இதற்கு முன்னர் பல இடங்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றோம். எனவே நாட்டில் உரிய காலத்தக்கு ஜனாதிபதித் தேர்தலும் நடக்காது பொதுத் தேர்தலும் நடக்காது, அதற்கான குறுக்கு வழிகளைத்தான் இன்று ஆட்சியாளர்கள் தேடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது நமது வாதம்.

எமது இந்த தர்க்கத்தை ஜேவிபியும் தற்போது ஏற்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த வாரம் அனுராதபுரத்தில் நடைபெற்ற இந்த அரசுக்கு எதிரான போராட்டத்தில் குறிப்பாக மக்களின் அடிப்படை உரிமைகள் தேர்தல்கள் தொடர்பாக ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நமது வார்த்தைகளை லால்காந்தாவும் சொல்லி இந்த ஆட்சியாளர்கள் நமக்குத் தேர்தல்களை நிகழச்சி நிரலுக்கு ஏற்றவாறு தரமாட்டார்கள். அதனை நாம் போராடித்தான் பெற்றுக் கொள்ள வேண்டி வரும் அதற்கும் நாங்கள் தயாராகவே இருக்கின்றோம். மக்களும் தயாராக வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். ஆளும் தரப்பிலுள்ளவர்களும் ரணிலுக்கு இன்னும் காலத்தை கொடுக்க வேண்டும் என்ற வாதம் இதனை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

Sri Lanka's fragile government faces scrutiny over attempt to delay local election | South China Morning Post

கடந்த சில மாதங்களாக தொடர்ந்து ஆளும் தரப்புக்குள் இருந்த இழுபறி நிலையில் ரணிலுக்கும் மொட்டுக் கட்சிக்கும் பிளவு அரசு கவிழ அதிக வாய்ப்புக்கள் என்று பெரும்பாலான அரசியல்வாதிகளும் ஊடகங்களும் எதிர்பார்த்தன. ஆனால் உண்மை அப்படி இல்லை அது நாடகம் என்று நாம் கடந்த வாரமும் எழுதி இருந்தோம். சில நாட்கள் கடந்து நாங்கள் மொட்டுக் கட்சிக்கும் ஜனாதிபதி ரணிலுக்கும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நாங்கள் எக்காரணம் கொண்டு ரணிலுக்கு எதிராகவோ அவரை அதிகாரத்தில் இருந்து இறக்கவோ எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ள மாட்டோம். அவரை விட்டால் நாட்டை முன்னெடுக்க வேறு ஆட்கள் இல்லை என்று மொட்டுக் கட்சி முக்கியஸ்தர் மஹிந்தானந்த அலுத்கமகே பகிரங்கமாகவே சில தினங்களுக்கு முன்னர் கூறி இருந்தார். இதுதான் ராஜபக்ஸாக்களின் நிலைப்பாடும். இப்போதைக்கு சிலர் பகல் கனவு காண்பது போல தேர்தல்கள் ஏதும் நடக்க வாய்ப்புக் கிடையாது.

தேர்தல் நடந்தால் அதன் பின்னர் நடக்கப் போகின்ற நிகழ்வுகளை ராஜபக்ஸாக்கள் கண்முன்னே பார்ப்பதால் ரணில்-ராஜபக்ஸாக்கள் பிணைப்பு மேலும் அவசியமாகின்றது. அதுதான் நடந்தும் வருகின்றது. இந்த அரசியல் யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல்தான் சஜித் தன்னை ஜனாதிபதி வேட்பாளர் என்று முன்கூட்டி அறிவித்து இன்று மூக்குடை பட்டுக் கொண்டிருக்கின்றார். எனவே இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களும் பெரும்பான்மை சமூகமும் தமது அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்காக கூட்டிணைந்து போராட வேண்டி இருக்கின்றது. எனவே இந்த நிலையில் தமிழருக்கு அரசியல் பகிர்வு உரிமைகள் என்று பேசவது நாடகம் நமது தமிழ்த் தலைவர்கள் இதனை இப்போதாவது புரிந்து கொவார்களோ என்னவோ தெரியாது.

Protest near Election Commission…

இன்னும் சில தினங்களுக்குள் ஜனாதிபதி ரணில் இந்தியாவுக்கு விஜயம் செய்ய இருக்கின்றார். எனவே தமிழர்களின் உரிமைகள் தொடர்பில் மோடி ஊடாக அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்று சில தமிழ் தலைவர்கள் பேசுவதை நாம் பார்க்க முடிந்தது. கடந்த காலங்களில் நெருக்கமாக இருந்த இந்திய-ஈழத் தமிழர் உறவுகள் தற்போது அந்த நிலையில் இல்லை என்பதுதான் எமது கருத்து. அதனை இப்படி ஓர் உதாரணம் மூலம் சுட்டிக் காட்ட முடியும். பட்டம் விட்டுக் கொண்டிருக்கின்ற சிறுவர்கள் பிடியிலிருந்து சில சந்தர்ப்பங்களில் பட்டம் தூலறுந்து காற்றோடு போவதை நாம் பார்த்திருக்கின்றோம். அப்போது சிறுசுகள் அந்தப் பட்டத்தை பிடிப்பதற்கான பட்டம் போன திக்கில் காடுமேடு வயல் குளம் குட்டை வழியில் ஓடிப் போய் பட்டத்தை விரட்டி ஓடுகின்ற நிலையில்தான் இன்று இந்த உறவு இருக்கின்றது. தமிழ் நாட்டுடனான உறவுகளும் அப்படித்தான் போய்க் கொண்டிருக்கின்றன. இந்திய-ஈழத் தமிழர் உறவில் சீனாவின் ஆதிக்கமும் விரிசல்களும் கூட இருக்கின்றது. இது இந்தியாவுக்கு வாய்பாகவும் அமைந்து விட்டது. சீனாவைக் காட்டிக் காலத்தைக் கடத்த அவர்களுக்கு இது நல்ல வாய்ப்பு.

ஓட்டு மொத்தமாக இந்த நாட்டில் வாழ்கின்ற பெரும்பான்மை இனங்களும் தமிழ் முஸ்லிம் சமூகங்களும் கூட அரசியல் உரிமைகளுக்காக குறிப்பாக பேச்சுச் சுதந்திரத்துக்குக் கூட போராட்டத்தில் இறங்க வேண்டி ஒரு காலகட்டமாக இது அமைந்திருக்கின்றது. நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியைக் கூட ஆதிகாரத்தில் இருப்பவர்கள் தமது பதவிகளை நீடிப்புச் செய்வதற்காகப் பாவித்துக் கொள்வதில் வெற்றி நடை போட்டு வருகின்றார்கள். இந்த நாட்டில் வாழ்கின்ற குடிமக்களிடத்தில் நாம் கேட்டுக் கொள்வது சடுதியான எந்தத் தேர்தல்களுக்கும் வாய்ப்புக் கிடையாது. எனவே நிகழ்ச்சி நிரலில் இருக்கின்ற தேர்தல்கள் தள்ளிப்போவதை தடுத்து நிறுத்த ஒவ்வொரு தனி மனிதனும் ஏதாவது செய்ய வேண்டி இருக்கின்றது. அடுத்து ஆட்சி அதிகாரத்துக்கு வருவது யார் என்பது முக்கியமானதல்ல. மக்களின் அடிப்படை ஜனாநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்.

Hakeem and Rishad to be expelled from SJB!

அரசுக்கு எதிரான பிரதான எதிரணியான சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி போட்ட எந்த வியூகங்களும் இதுவரை வெற்றி பெறவில்லை. அது துவக்க இடத்திலே சரிந்து விடுகின்றது. நாடாளுமன்றத்தில் அடுத்த பெரும் அரசியல் சக்தியாக இருக்கின்ற தமிழர் தரப்பினர் சேற்றில் நாட்ட கம்புபோல அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் சரிந்து கொண்டு நிற்க்கின்றார்கள். நல்லெண்ணத்தை காட்ட அரசுக்கு அல்லது ரணிலுக்கு விசுவாசமாக நடந்து கொள்ள வேண்டி வந்தது என்று ஒரு முறை கூறியவர்களிடத்தில் அதனால் இன்று என்ன சாதித்தீர்கள் என்று கேட்க வேண்டி இருக்கின்றது. அதே போன்று முஸ்லிம் அரசியல் தலைமைத்துவங்களும் வழக்கம் போல வர்த்தக நோக்கில் தான்  காய் நகர்த்திக் கொண்டு போகின்றது. அதற்கும் சமூகத்துக்கும் எந்தத் தொடர்புகளும் கிடையாது. மலையக தலைமைகளும் அப்படித்தான்.

Nominations called for Local Government Election 2023 - NewsWire

இதற்கிடையில் புதியதோர் கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் மொட்டுக் கட்சி முக்கியஸ்தர்கள் சிலர் ஈடுபட்டுவருவதாகவும் சொல்லப்படுகின்றது. இந்த புதிய கூட்டணியில் மஹிந்த, ரணில், சஜீத், மற்றும் அணுர உள்ளடங்காத கூட்டாக அது இருக்கும் என்றும் இதில் சகல கட்சிகளையும் சேர்ந்த் 80 வரையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் இணைய இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பணியில் கம்பஹ மாவட்டத்தைச் சேர்ந்த இரு மொட்டுக் கட்சி உறுப்பினர்களும் கொழும்பு மாவட்ட உறுப்பினர் ஒருவரும் முனைப்புடன் செயலாற்றி வருவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. ஆனால் அவர்கள் சொல்கின்ற உறுப்பினர் எண்ணிக்கையிலும் இந்தக கூட்டணி மக்கள் மத்தியில் பெரிதாக எடுபடும் என்று நாம் நம்பவில்லை.

அரசியல் மந்த நிலை காணப்படுகின்ற இந்த நேரத்தில் சிறுபான்மை அரசியல் தலைமைத்தங்கள் தமது சமூகத்தில் காணப்படும் அரசியல் சமூகப் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடல்களை நடாத்தி கட்சி அரசியலுக்கு அப்பால் பிரச்சினைகளை இனம் காண்பதற்கும் அதற்கான கோரிக்கைகளைத் தயாரிப்பதற்கும்- முன்வைப்பதற்கும் இந்த சந்தர்ப்பத்தை பவிக்கலாம். அந்தந்த சமூகத்தில் இருக்கின்ற புத்திஜீவிகள் இதுவிடயத்தில் அரசியல் கட்சிகளுக்கு அழுத்தங்களைக் கொடுக்க முடியும். தேர்தல் காலம் வந்தால் அரசியல் களம் சூடேரி விடும். அந்த சமயத்தில் இது சாத்தியம் இல்லை. கட்சி பேதங்களை தள்ளிவிட்டு கூடிப்பேச இது தான் நல்ல நேரம். இதனை சிறுபான்மை அரசியல் சிவில் சமூகங்கள் எவ்வளவு தூரம் பயன்படுத்திக் கொள்ளப் போகின்றார்கள் என்பது நமக்குத் தெரியாது. அவர்கள் அதனைச் செய்வார்கள் என்றும் நாம் எதிர்பார்க்கவுமில்லை.

Sri Lanka stages mock election to test coronavirus measures – DW – 06/14/2020

என்னதான் ரணிலும் ராஜபக்ஸாக்களும் முடியுமான மட்டும் தேர்தல்களைத் தள்ளிப் போட்டு ஆட்சியை முன்னெடுக்க முயன்றாலும் திடீரென ஆளும் தரப்புக்குள் ஏற்படுகின்ற வெடிப்புக் காரணமாக ரணில் மொட்டுக் கட்சியில் தனது பெரும்பான்மையை இழக்கவும் வாய்ப்பு இருக்கின்றது. அப்படியான ஒரு சூழ்நிலையில் தேர்தலுக்கு இடமிருக்கின்றது. எனவேதான் ஆட்சியாளர்கள் அடக்குமுறையை விஸ்தரிக்கும் முயற்ச்சியல் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றார்கள்.

இதற்கிடையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் 53 கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பாக பிரதி ஆணையாளர் நடால் அல் நஷPட் குறிப்பிடும் போது இலங்கையில் கடந்த சில மாதங்களில் மக்கள் அரசுக்கு எதிராக நடத்திய கண்டணப் பேரணிகளை அரசு அடக்கிய விதம் மற்றும் ஊடகத்துறையினர் மீது கொடுக்கும் அழுத்தங்கள், மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளான தேர்தல்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கத்தின் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் நடால் கருத்துத் தெரிவித்திருக்கின்றார். அதே நேரம் தழிழ் தரப்புடன் அரசு தலைவர்கள் நடத்துகின்ற பேச்சுவார்த்தைகளை அவர் வரவேற்றிருக்கின்றார். ஆனால் இது வெரும் கண்துடைப்பு என்பதனை ஆணையாளர் விரைவில் புரிந்து கொள்வார். இதுதான் இலங்கை அரசியல்.

நன்றி: 25.06.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

கோட்டா ஆட்சியில் ஜனாதிபதி செயலகத்தில் 51 வாகனங்கள் மாயம்

Next Story

டைடானிக் கதை 2  ஆரம்பம்!