நஜீப் பின் கபூர்
நன்றி 02.11.2025 ஞாயிறு தினக்குரல்
*****

சமூகத்துக்கு போதை வியாபாரிகள் முகவரி தெரியும்!
பாதாள – போதை அரசுகளின் வெற்றியின் இரகசியம்!
போதை ஒழிப்பு என்பது சிவில் யுத்தத்துக்கு சமனான!
போதையும் பாதாள உலகும் அண்ணன் தம்பி உறவு!
*****

நமது வரலாற்றில் போதைப் பொருள் பாவனைக்கு எதிரான மிகப் பெரிய நடவடிக்கைகள் கடந்த 30ம் திகதி ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக தலைமையில் கொழும்பில் ஆரம்பமானது. மிகவிசலாமான அந்த வேலைத்திட்டம் நான்கு பிரிவுகளைக் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றது.
1.நாட்டிலுள்ள 14000 கிராம சேவர் பிரிவுகளை மையப்படுத்திய மக்கள் கமிட்டி
2.அந்த மக்கள் கமிட்டியில் இருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதேச மட்டக் கமிட்டி
3.பிரதேச மட்டத்திலிருந்து தெரிவாகும் மாவட்ட செயலணி
4.தேசியசபை என்று அது அமைகின்றது.
அத்துடன் ஒவ்வொரு மாவட்டதிலிலும் புனருத்தாபன மைய நிலையங்களும் இந்த வேலைத்திட்டத்தில் அமைக்கப்பட இருக்கின்றது. அது அப்படி இருக்க நமது நாட்டில் இந்த போதைப் பொருள் அறிமுகம் பற்றி சற்று விரிவாகப்பார்ப்போம்.
பாதாள உலகு மற்றும் போதை வியாபாரம் என்பன பற்றிப் பேசுகின்ற போது மிகவும் எச்சரிக்கையாக வார்த்தைகளை உச்சரிக்க வேண்டும். அதேநேரம் சொல்கின்ற தகவல்கள் மற்றும் நாமங்களுக்கும் நாம் பொறுப்புக் கூற வேண்டியும் இருக்கும். எனவே நமக்குள்ளேயே சில வரம்பை போட்டுக் கொள்வதும் கட்டாயம். அதற்காக சொல்ல வேண்டியதை நாம் மூடிமறைத்துப் பேசுவதற்கும் தயாராக இல்லை.
வரலாற்றுக் காலம் முதலே உலகில் போதைப்பாவனை இருந்து வந்திருக்கின்றது. ஆனால் தற்காலத்தில் உச்சரிக்கப்படுகின்ற போதைப் பொருட்களின் பாவனை கடந்த பத்தொன்பது மற்றும் இருபதாம் நூற்றாண்டிலிருந்துதான் அறிமுகமாகி இருக்கின்றது. உள்நாட்டைப் பொறுத்து 1970ன் பிற்பகுதியில்தான் நமது நாட்டில் இது அறிமுகமாகி இருக்கின்றது. இதில் கஞ்சா அபின் போன்றவற்றுக்கு ஒரு நீண்ட வரலாறு இருக்கின்றது. மதுபானம் கஞ்சா அபின் புகையிலைவகைகள் என்பவற்றை சம்பிரதாய போதகைள் என்று எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
ஹெராயின் கோக்கைன் ஐஸ் அசீஜ் நவீன் என்ற இன்னோரன்ன போதைப் பொருட்கள் நவீன போதைப் பொருட்களில் அடக்குகின்றன. இது வேதியியல் மற்றும் வைத்தியத் துறைகளின் வளர்ச்சி காரணமாக உருவானவை. அத்துடன் இவற்றை செயற்கை போதைப் பொருட்கள் என்றும் வகைப்படுத்த முடியும்.
இவை சர்வதேச சட்டங்களாலும் உள்நாட்டுச் சட்டங்களாலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றது. சில நாடுகளில் இவற்றின் பாவனைக்கும் வியாபாரத்துக்கும் கூட மரணதண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. எனவே இது சட்டவிரோத ஒரு நடவடிக்கை என்பது அனைவரும் அறிந்து வைத்திருக்கின்றனர்.

தென் அமெரிக்காவில் பொலிவியா பேரு கொலம்பியா என்பன போதை வியாபாரம் செய்யும் முக்கிய நாடுகள். போதை வியாபாரத்துக்கு எதிராக தனியான படைப்பிரிவுகளும் சில நாடுகளில் இயங்கி வருகின்றன. ஐக்கிய அமெரிக்காவில் மட்டும் ஓராண்டில் போதைப்பாவனையால் மரணிப்போர் எண்ணிக்கை 50000-60000 என்று தெரிகின்றது.
போதைவியாபாரம் கடத்தல் தொடர்பாக பல சினிமப்படங்கள் கூட தயாரிக்கப்பட்டிருக்கின்றது. போதை வியாபாரத்துடன் பாதாள உலகிற்கும் ஒரு நெருங்கிய உறவு முறை இருக்கின்றது. பதாள உலகும் போதை வியபாரமும் ஒரு சூழலில் பிறந்த இரட்டைக்குழந்தைகள் என்று சொல்ல முடியும்.
விமானங்கள் கப்பல்கள் நீர்மூழ்கிக்கப்பல்கள் மற்றுமல்லாது கெண்டேனர்களில் கூட பொருட்கள் கடத்தப்பட்டு வருகின்றது என்றால் அதன் ஆதிக்கமும் செல்வாக்கும் எந்தளவுக்கு இருக்கின்றன என்பதை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.

உலகரீதியிலும் நாடுகள் மட்டத்திலும் இந்த போதை வியாபாரத்துக்கு எதிரான நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருவதை நாம் பார்க்கின்றோம். ஆனால் நமது நாட்டில் இந்தப் போதை வியாபாரமும் பாதாள உலக செயல்பாடுகளும் எந்த அடிப்படையில் நடந்து கொண்டிருக்கின்றன என்பதனை சற்று விரிவாகப்பார்ப்போம்.
சுதந்திரத்துக்குப்பின் பொதுவாக நமது அரசியல் தலைவர்கள் நமக்கு நல்லதொரு வாழ்க்கைக்கான அடித்தளத்தை போட்டார்கள் என்பதனைவிட நம்மையும் நமது தலைமுறையினரையும் தமது தனிப்பட்ட அரசியல் நலன்களுக்காக சிரழித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.
காரணம் நம்மை விட எவ்வளவோ பின்னுக்கு இருந்த நாடுகள் எல்லாம் எம்மை விட எவ்வளவோ தூரம் வளர்ச்சியடைய நாம் உலகத்திலே மிகவும் பின்தங்கிய நாடானது மற்றுமல்லாது முதல்தர வங்குரோத்து நாடு என்ற பெயரையும் அவர்கள் நமக்கு வங்கித் தந்துவிட்டுத்தான் இப்போது அதிகாரத்தைக் கை மாற்றி இருக்கின்றார்கள் என்று சொல்வதை விட குடிகளால் விரட்டியடிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

நாம் முன்பு சொன்னது போல 1970களுக்குப் பின்னர் சிரிதளவில் துவங்கிய போதை பாவனை கடந்த இரு தசாப்தங்களாக துரித வளர்ச்சி கண்டிருக்கின்றது. இந்தப் போதை வியாபாரிகள் சூசகமாக அரசியல் முகங்களுக்கு குறிப்பாக அதிகாரத்தில் இருக்கின்ற ஆட்சியாளர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்த வியாபாரத்தில் தமக்குக்கிடைக்கின்ற பெரும் தொகையான பணத்தை அவர்கள் அரசியல் தலைவர்களின் நலன்களுக்கு-தேவைகளுக்கு உதவி வந்திருக்கின்றார்கள். அதுவும் அவர்களின் தேர்தல் செலவுகளுக்கு இவர்கள்தான் பிரதான அனுசரனையாளர் என்ற நிலை. இது உள்ளாட்சித் தேர்தல் முதல் ஜனாதிபதித் தேர்தல் வரை நடக்கின்றது. இதனால் அரசியல்வாதிகளுக்கும் போதை-பாதாள உலகிக்குமிடையிலான நல்லுறiவை மேலும் வலுப்படுத்தி வந்திருக்கின்றது.
இந்த உறவினால் பிற்காலத்தில் அரசியல்வாதிகளும் பாதாள-போதை வியாபாரிகளும் இணைந்து இந்த வர்த்தகத்தில் நேரடியாக ஈடுபட்டு வரும் ஒரு ஆபத்தமான நிலை தோன்றியது. அதன் உச்சத்தைத்தான் இப்போது நாம் பார்த்து வருகின்றறோம்.
தெற்குப் பிராந்தியம் இந்தப் பாதாள-போதை வியாபாரத்தின் மையப்புள்ளியாக மாறியதிலிருந்து அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக ராஜபக்ஸாக்களுக்கும் இருக்கின்ற உறவு இன்று பேசுபொருளாகி கடும் விமர்சனத்துக்கும் இலக்கியுள்ளது.
மெதமூலனையைச் சுற்றித்தான் இதன் செயல்பாடுகள் நடந்து வந்திருக்கின்றது என்றும் தெரிகின்றது. ஆம் அவர்களை நமக்குத் தெரியும். நமது பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவுகள்தான் என்றும் அரசியல்வாதிகள் கூறுகின்றனர். இவர்களுக்குப் போதை-பாதாள உலகத்தாருடன் நெருக்கமாக இருக்கின்ற புகைப்படங்கள் தொடர்பாக கேட்டால், நாம் அரசியல்வாதிகள் நம்முடன் ஒருவர் போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டால் எப்படி மறுக்கமுடியும் என்றும் அவர்கள் திருப்பிக் கேட்கின்றார்கள்.

மேலும் அதே போதை பாதாள உலகத்தரை உங்களது வேட்பாளர்களாக்கி அவர்களுக்காக முகமிட்டு தலைவர்கள் தேர்தல் பரப்புரைகளை செய்து அவர்களது புகழ்பாடியது எப்படி என்று கேட்டால் அவர்கள் என்ன தொழில் செய்கின்றார்கள் எங்கு போய்வருகின்றார்கள் என்று நாம் எப்படிப்பார்ப்பது என்று வேறு நியாயம் பேசுகின்றார்கள். பாதாள-போதை வியாபாரிகள் அரசியலுக்கு கொண்டு வந்தது ஆர்.பிரேமதாச காலத்தில்தான் ஆரம்பமாகி இருக்கின்றது.
கடந்த ராஜபக்சாக்கள் காலத்தில் இது உச்சம் தொட்டிருக்கின்றது. ஒரு சமயம் சுஜீவ பணக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சானி சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்ட போது அதனை எல்லாம் கண்டு கொள்ள வேண்டாம். எனக்கும்தான் பலர் காசு தருகின்றார்கள் அரசியல்வாதிகள் என்றால் அப்படியான உதவிகள் வருவது தவிர்க்க முடியாது என்று ரணில் கூறியதுடன் சட்ட நடவடிக்கை என்று நின்ற சானியை ஏசி வெளியே போ கழுதை என்று விரட்டியதும் தெரிந்ததே.

பாதாள உலகத்தார் அரசியல்வாதிகளுடன் நெருக்கமான உறவுகளை வளர்த்தக் கொண்டதால் பொலிஸ் மற்றும் அரச அதிகாரிகளின் ஒத்துழைப்புக்களும் இந்த வியாபாரத்தில் சம்பந்தப்படுகின்றது. மேலும் இதிலிருந்த வருகின்ற வருமானங்களை வேறும் துறைகளில் மூலதனமிடுகின்ற ஒரு ஒழுங்கும் இதில் இருக்கின்றது.
பெகோ சமன் தலா ஐந்து கோடி ரூபா பெருமதியான இரு சொகுசு வசு வண்டிகளை சேவையில் ஈடுபடுத்தியதும் அதற்கு அரச அதிகாரிகள் உதவியதும் ஒரு நல்ல உதாரணம். மேலும் பல அரச அதிகாரிகள் பொலிஸ் மற்றும் படை அதிகாரிகள் டசன் கணக்கான வாகனங்களையும் நிலபுலன்கள் மற்றும் சொத்துக்களை எப்படி இந்த அரச தொழில் பெறும் சம்பளத்தில் வாங்கிக் குவிக்க முடியும் என்ற கேள்விகளும் இப்போது வருகின்றது. அது பற்றிய விசாரணைகளும் இன்று துவங்கி இருக்கின்றது.
‘அந்தக்கருப்பு ஆடுகள்’
போதை-பாதாள உலகத்தினர் தமக்கென சிறு சிறு தனியார் படைகளையும் அயுதங்களையும் வைத்திருப்பதுமட்டுமல்லாது அரச படைத்துறையைச் சேர்ந்தவர்களையும் பகுதி நேர ஊழியர்களாக தொழிலுக்கு அமர்த்தி அவர்களின் ஒத்துழைப்புக்களையும் இந்த வியாபாரத்தில் பாவித்திருக்கின்றார்கள்.
இதனால் அவர்களும் இன்று பெரும் செல்வந்தர்களாக வளர்ந்திருக்கின்றார்கள். பல பொலிஸ் அதிகாரிகள் பாதள போதை வியாபாரத்துக்கு பாதுகாப்புக் கொடுத்தது மட்டுமல்லாது ஆயுதங்களையும் தேவைக்காக விநியோகம் செய்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த வாகனங்களும் போதை வியாபாரத்தில் பாவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கின்றது. எனவே அரச படைகளின் உதவியும் தமது சொந்த ஆயுதக் குழுக்களும் இந்த வியாபாரத்தில் அவர்களுக்கு உதவி இருக்கின்றது. எனவேதான் நாட்டில் ராஜபக்ஸாக்கள் காலத்தில் இந்த வியாபாரம் கொடிகட்டிப் பறந்திருக்கின்றது.

போதை வியாபாரத்துக்கு எதிராக உருவாக்கப்பட்ட நாகொடி என்று படைப்பிரிவின் பிரதானியே நேரடியாக இந்த போதை வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டப்பட்டு வருகின்றது. இது எவ்வளவுதூரம் கொடியது-ஆபதத்தானது.? ஒரு போதை வியாபாரி தெற்கில் எட்டுக்கோடி செலவில் ஒரு விகாரை கட்டிக் கொடுத்திருக்கின்றார். அதன் திறப்புவிழாவில் பங்குபற்றிய அரசியல்வாதிகள் பற்றிய தகவலும் இருக்கின்றது.
மற்றுமொரு சமூக வழிபாட்டுத் தளத்தில் போதை பாவனைக்கு எதிரான விளிப்புணர்வுக் கூட்டம் ஒன்று நடந்திருக்கின்றது. அதற்கு அனுசரனையை அந்த வியாபாரத்துடன் சம்பந்தப்பட்ட ஒருவரால்தான் ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டதாம். அதனால் பாவனை பற்றிய அறிவுரை மட்டும்தான் அங்கு நடந்திருக்கின்றது. வியாபாரம் பற்றி அங்கு ஒரு வார்த்தையேனும் உச்சரிக்கப்படவில்லையாம்.!
மேலும் இந்த போதை வியாபாரிகள் சமூகத்தின் நல்ல மனிதர்களாக தம்மைக்காட்டிக் கொள்ள சமய வழிபாட்டு நிலையங்களையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கின்றாhகள். அங்கு தர்மகர்த்தாக்களாகவும் அனுசரணையாளர்களாகவும் தனது பணப்பலத்தை வைத்து அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர். அது போல பாடசாலைகளிலும் இவர்கள் பதவிகளை கைப்பற்றிக் கொள்வதில் ஆர்வமாக இருக்கின்றர். இது ஏன் என்பது புரிந்து கொள்ள முடியும்.
ஆட்சியாளர்களுடன் தமக்கு நல்ல உறவு இருக்கின்றது. தான் ஒரு செல்வாக்கான மனிதன் என்பதை காட்சிப்படுத்தவது இந்தப்பதவிகளைக் கைப்பற்றுவதற்கான பிரதான நோக்கமாக இருக்கின்றது.
பிரதேசத்திலுள்ள பொலிஸ் மற்றும் அரச நிருவாகிகளுடன் நெருக்க உறவு. பிரதேசத்தில் ஏதாவது நற்பணிகளுக்கு உதவி வழங்கும் போது சராசரி மனிதார்கள் ஆயிரம் ஐநூறு என்று கொடுக்கும் போது இவர்கள் இலட்சம் மில்லியம் என்று தராளமாக கொடுத்து மக்களின் நல்லெண்ணத்தை பெற்று தன்னை ஒரு பிரபுவாகவும் பரோபகாரியாகவும் காட்டிக் கொள்கின்றார்கள்.

வைபவங்களின் போது பிரதம அதிதி என்றளவுக்கு இமேஜை எற்படுத்தி வைத்திருக்கின்றார்கள். பிரதேசத்திலுள்ள பொலிஸ் மற்றும் அரச செயலகங்களுக்குக் கூட இவர்கள் உதவி வருகின்றனர். தனிப்பட்ட ரீதியில் அதிகாரிகளுக்குக் கூட சந்தேசங்களைக் கொடுத்து அவர்களையும் தமது கையாட்களாக மாற்றி வைத்திருக்கின்றார்கள்.
மிக முக்கிய குறிப்பு: நமது இந்த வார்த்தைகள் நல்ல புனிதமான பரோபகாரிகளுக்கானது அல்ல என்பதனையும் இங்கு நாம் சொல்லி வைக்கின்றோம். எனவே நமது இந்த வார்த்தைகளினால் அவர்கள் மனம் நொந்து கொள்ளத் தேவையில்லை. நமது தலைப்பு போதை பற்றியது என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பிரதேசங்களில்-ஊர்களில் வட்டாரங்களில் என்ன நடக்கின்றது. நாம் குறிப்பிடுகின்ற அந்தக் கறுப்பாடுகள் எது என்பதும் சமூகம் தெரிந்துதான் வைத்திருந்திருக்கின்றது.

ஆனாலும் பலம் வாய்ந்த இந்த மனிதர்களுக்கு எதிராக சராசரி மனிதர்களினால் மோத முடியாத ஒரு நிலை. அரசு அதிகாரிகள் படைத்துறை ஒத்துழைப்புடன் நடக்கின்ற இந்த வியாபாரத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை வைத்திருக்கின்ற என்பிபி.அரசாங்கமே தடுப்பதில் இன்று கடுமையாக நெருக்கடிகளை-சவால்களை எதிர் நோக்கி வரும் போது பாமர மக்கள் என்னதான் செய்ய முடியும்.!
கஜேந்திர குமார்பொன்னம்பலம் வடக்குக் கிழக்கில் படைத்தரப்பு போதை வியாபாரம் செய்கின்றது என்று ஒரு குற்றச்சாட்டை முன்வைக்கின்றார். தமிழ் இளைஞர்களை போதைப்பாவனைக்கு படைத் தரப்பு ஊடாக அரசு ஊக்குவிக்கின்றது என்ற ஒரு குற்றச்சாட்டும் கடந்த காலங்களில் இருந்தது.
பிரபாகரன் காலத்தில் வடக்கு கிழக்கில் போதை பாவனை சீரோவாக இருந்ததாகச் சொல்லப்படுகின்றது. கிழக்கிலும் சில அரசியல் தலைமைகள் போதை வியாபாரிகளுடன் நெருக்க உறவில் இருப்பது பற்றி தகவல்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றது. அது பற்றி மற்றுமொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.
அரசு போதைப்பாவனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கின்றது. கடந்த காலங்களிலும் அதிகாரத்தில் இருந்தவர்கள் இதுபோன்ற திட்டங்களை முன்வைத்திருந்தனர். அதற்கும் இதற்கும் என்ன வித்தியாசம் என்பதனை நாம் வரும் நாட்களில் நடைமுறையில் பார்க்க முடியுமாக இருக்கும்.

எப்படி இருந்தாலும் போதைக்கு எதிரான இந்த போராட்டம் ஒரு சிவில் யுத்தம் அல்லது உள்நாட்டுப்போருக்கு சமமானது என்பது நமது கருத்து. நாம் இதனை ஏன் இப்படி அழைக்கின்றோம் என்றால் நாடாளுமன்றம் படைத்தரப்பு சட்டம் நீதி நிருவாகம் என்ற அனைத்துத்துறையிலும் இதன் ஆதிக்கம் இருப்பதால்தான்.





