பொறிக்குள்  இலங்கை! பேரம் பேசும் சர்வதேசம்!!

எங்கு பார்த்தாலும் வரிசை, எப்பொருளை எடுத்தாலும் விலையேற்றம், எதற்கெடுத்தாலும் தட்டுப்பாடு என இலங்கை அதளபாதாளத்தில் விழுந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில் நாட்டின் பொருளாதார வீழ்ச்சியைக் கட்டுக்குள்கொண்டுவருவதற்குப் புலம்பெயர் தமிழர்களின் உதவிகள் தேவை என்பதைத் தெற்கின் அரசியல்வாதிகள் பலரும் கூறிவருகின்றனர். இந்தக் கோரிக்கைகளுக்குப் புலம்பெயர் தமிழர்கள் சாதகமாக சிந்திக்க முடியுமா?

நாட்டின் அவசரநிலை கருதி ஏதாவதொருவகையில் புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா என்பது குறித்த உரையாடல்கள் ஆங்காங்கே இடம்பெற்றும் வருகின்றன. இந்தப் பத்தியும் அதற்கான பதிலைத் தேட விளைகின்றது.

புலம்பெயர்க்கும் பொறி

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

இலங்கை 1948ஆம் ஆண்டில் சுதந்திரமடைந்த பின்னர் தமிழர்கள் இந்நாட்டை விட்டு வெளியேறுதல் / வெளியேற்றப்படுதல் எழுதப்படாத ஓர் அரசியல் நிகழ்ச்சிநிரலாகப் பின்பற்றப்பட்டுவருகின்றது. அதாவது தொழிலுக்காகப் புலம்பெயர்வது அல்லாமல், உயிர்தப்பித்தலுக்காக நாட்டைவிட்டு வெளியேறுவது/வெளியேற்றப்படும் பொறிமுறையொன்று நடைமுறையில் உள்ளது.

1956 ஆம் ஆண்டிலிருந்து தமிழர்கள் மீது ஏவப்பட்ட சிங்கள இனவாத வன்முறைகள், கலவரங்கள், இனந்தெரியாதோரின் துப்பாக்கிச் சூடுகள், ஆட்கடத்தல்கள், இராணுவத்தினரின் கைதுகள், அச்சுறுத்தல்கள் போன்றன இங்கு தமிழ் இளையோர் வாழமுடியாத சூழலை ஏற்படுத்தியது.

யார் புலம்பெயர் தமிழர்கள்?

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

இவ்வாறு அச்சுறுத்தல்களுக்குள்ளாகியோர் தம் உயிர்தப்பித்தலுக்காக நாட்டைவிட்டு வெளியேறினர். உலகம் முழுவதும் தமக்கு வசதியானதொரு நாட்டில் தஞ்சமடைந்தனர். இரவு – பகல், பனி – வெயில் பாராது உழைத்து முன்னேறினர்.

பொருளாதார ரீதியில் அந்நாட்டவரையே விஞ்சிவிடுமளவிற்குப் பலமடைந்தனர். தம் மரபார்ந்த தாயகப் பிரதேசத்தில் அரசியல் ரீதியாக ஒடுக்குமுறைக்குள்ளாக்கப்படுதலின் காரணமாக, அதிலிருந்து தப்பித்தலுக்காக வேறு தேசங்களில் தஞ்சமடைந்து, அத்தேசத்தில் பலமான சமூக அமைப்பாக மாற்றம் பெறுபவர்கள், “புலம்பெயர்ந்தவர்கள்” என அடையாளப்படுத்தப்படுகின்றனர். அந்த அடையாளப்படுத்தலுக்கு மிகப்பொருத்தமான சமூகத்தினராகப் புலம்பெயர் தமிழர்கள் உருவாகியிருக்கின்றனர்.

குறை மதிப்பீடு

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

தற்போது “புலம்பெயர்ந்த தமிழர்கள்” எனத் தமிழ் ஊடகப் பரப்பினால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் ஒரு தொகுதி தமிழர்கள் உலகம் முழுவதும் பரவி வாழ்கிறார்கள். அவர்கள் வாழும் நாடுகளின் அரசியல், பொருளாதார, சமூக பரப்புக்களில் அதிக தாக்கம் செலுத்துபவர்களாகவும் மாறியிருக்கின்றனர்.

அத்தேசங்களின் உள்ளூர் அரசியலில் குறிப்பிடத்தக்களவு செல்வாக்குச் செலுத்துமளவிற்கு அரசியல் பலமுடையோராயும் மாறியிருக்கின்றனர். ஆனால் இவையெதையும் புரிந்துகொள்ளாத இலங்கை அரசானது, தன் தூதரகங்கள், தூதரக அதிகாரிகள் மூலமாகப் புலம்பெயர் தமிழர்களை மிரட்டி வந்திருக்கின்றது.

புலம்பெயர் தமிழர்களது போராட்டங்களை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இராணுவ அதிகாரிளைத் தூதரகங்களுக்குப் பொறுப்பானவர்களாக நியமித்திருக்கிறது.

அந்த அதிகாரிகள் புலம்பெயர் தமிழர்களை நோக்கி “கழுத்தை அறுப்பேன்” என சைகை காட்டினால் அது பெரும் வீரதீரச் செயல் எனக் கொண்டாடி, வீதி வீதியாக அவர்தம் படங்களை ஓவியமாகத் தீட்டி மகிழுமளவிற்குத் செயற்றிட்டங்களை முன்னெடுத்திருக்கிறது.

இப்போது தமக்கு கஸ்ரம் என்று வரும்போது, கழுத்தை அறுக்கக் காத்திருந்தவர்களிடமே உதவியும் கோருகின்றது.

எனவே உதவலாமா?

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

புலம்பெயர் தமிழர்கள் தம் மரபார்ந்த தாயகப் பிரதேசங்களைவிட்டு வெளியேறினாலும், அவர்களது பண்பாட்டு இருப்பென்பது இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதிகளில்தான். என்னதான் வசதிவாய்ப்பாக– செல்வச்செழிப்பாகப் புலம்பெயர் தேசமொன்றில் வாழ்ந்தாலும், ஊருக்குத் திரும்புதல், தம் தாய் வீட்டிற்குச் செல்லுவதற்கு சமனனாதாகும்.

எனவே தாய்வீடும், வீடு சார்ந்த நிலமும் பறிபோகதிருக்க வேண்டும். 2009 ஆம் ஆண்டோடு தாய் வீடும் அது சார்ந்த நிலமும் பறிக்கப்பட்டிருப்பினும், “இது எங்களுடையது, வலிந்து ஆக்கிரமித்திருக்கிறீர்கள்”

என்ற அரசியலைத் தமிழர்கள் உலகம் முழுவதும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இலங்கை சிக்கவைக்கப்பட்டிருக்கும் கடன்பொறியானது, தமிழர்களது தாயக நிலத்தையே அந்நிய தேசங்களிடம் பறிகொடுக்கும் நிலைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது.

திருகோணமலை தொடக்கம் பூநகரி ஊடாக நெடுந்தீவு வரை இந்தியாவின் ஆதிக்கம் கோலோச்சுகின்றது. எனவே கடன்பொறியால் சிக்கவைக்கப்பட்டுள்ள இலங்கைத்தீவில், தமிழர் தாயகத்தை இனி மீட்கவே முடியாது எனச் சொல்லுமளவிற்கு அந்நியர்களிடம் பறிபோய்க்கொண்டிருக்கிறது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்காகவே புலம்பெயர் தமிழர்களின் உதவி அவசியப்படுகின்றது.

தேவை பொருளாதார பேரம்பேசல்

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

இவ்வுலகின் கொடுக்கல் – வாங்கல்கள் அனைத்துமே ஏதோவொரு நலனில் அடிப்படையில்தான் நடந்தேறுகின்றன. இலங்கை அரசுக்கு சீனா, இந்தியா, அமெரிக்கா, யப்பான், அவுஸ்திரேலியா போன்ற நாடுகள் நிதியுதவிகளை செய்துவருகின்றன. ஆனால் யாருமே எவ்விதப் பொறுப்புக்கூறலுமின்ற நிதியளிப்பை செய்யவில்லை.

சீனா தனக்குப் போதுமானளவுக்கு இலங்கையின் தெற்கு, மேற்கு பாகங்களில் கால்வைத்துவிட்டது. அதேபோல இந்தியாவும் வடக்கு, கிழக்கு பாகங்களைத் தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருகின்றது. இவையெல்லாம் கடன்பொறியின் அடிப்படையில்தான் நடந்திருக்கின்றன. இதே கடன்பொறியின் அடிப்படையில்தான் இலங்கைக்கு புலம்பெயர் தமிழர்களும் உதவவேண்டும் என்றில்லை. தெளிவானதொரு அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தின் அடிப்படையிலேயே புலம்பெயர் தமிழர்கள் உதவ முடியும்.

தமிழர் தாயகப் பகுதியான வடக்கு, கிழக்கைப் பிரித்ததோடல்லாமல், அவற்றை மேலும் பல கலாசார கூறுகளைப் பிரதிபலிக்கும் வகையில் திட்டமிட்ட குடியேற்றங்களையும் இதே இலங்கை அரசுதான் உருவாக்கியது.

சர்வதேச நிதி நிறுவனங்களின் பங்களிப்புடன், துரித பொருளாதார அபிவிருத்திக்கான செயற்றிட்டங்கள் என்ற கொள்கையின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய திட்டமிட்ட குடியேற்றங்கள் அனைத்துமே தோல்வியில் முடிந்திருக்கின்றன.

முன்மொழியப்பட்டதைப் போல அபிவிருத்தியும் நடக்கவில்லை, இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் சாத்தியப்படவில்லை. எனவே தோற்றுப்போன இத்தகையை செயற்றிட்டங்களை முன்வைத்துப் புலம்பெயர்தமிழர்கள் பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை உருவாக்குதல் வேண்டும். அந்தப் பொறிமுறையின் அடிப்படையிலேயே உதவியளிக்க முன்வரல்வேண்டும்.

உதாரணத்திற்குத் திட்டமிட்ட குடியேற்றங்களை நீக்குதல், சிங்களமயமாக்கலைக் கைவிடல், வடக்கு கிழக்கில் இராணுவ பிரசன்னத்தைக் குறைத்தல், காணாமலாக்கப்பட்டோர் விடயத்தில் நீதியான நடவடிக்கையொன்றை மேற்கொள்ளல், தமிழர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீளளித்தல், இணைந்த வடக்கு கிழக்கில் சமஷ்டி அளவிற்காவது அரசியல் தீர்வொன்றை நோக்கி நகர்தல் போன்ற விடயங்களை முன்வைத்துப் பேரம்பேசலின் அடிப்படையில்தான் உதவியளிப்பை செய்யவேண்டும். இந்த நிபந்தனைகளுக்கு உடன்பாடாவிட்டால், இன்னொரு வழி குறித்தும் புலம்பெயர்தமிழர்கள் சிந்திக்கலாம்.

இருக்கிறது இன்னுமொரு மாற்றுவழி

பொறிக்குள் சிக்கியது இலங்கை: பேரம் பேசல்களுடன் இறங்கிய சர்வதேச நாடுகள்! புலம்பெயர் தமிழர்கள் உதவலாமா...

போர் முடிவுக்கு வந்த நாள் தொட்டு வடக்கு கிழக்கு பகுதிகளைப் பொருளாதார ரீதியில் மீளமைக்கப் பாரிய நிதியளிப்பை புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டிருக்கின்றனர்.

அதனை மேலும் விரிவுபடுத்தவும், பொறுப்புக்கூறத்தக்க சுயாதீன நிதியம் ஒன்றை அமைத்து அதன் அடிப்படையில் வடக்கு, கிழக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்த பூரண ஒத்துழைப்பை அரசு வழங்க இணங்க வேண்டும்.

அதற்குரிய அனுமதியினைத் தந்தால், நாட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளை மாத்திரமாவது இந்தப் பொருளாதார சரிவிலிருந்து காப்பற்ற முடியும் என்கிற விதத்தில் நலிந்துபட்ட இலங்கை அரசைப் புலம்பெயர்தமிழர்கள் கையாளவேண்டும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளின் அபிவிருத்தியும், சுதேச பொருளாதார எழுச்சியும் இந்தப் பிராந்தியங்களுக்குள் மட்டுமே நின்றுநிலைக்கப்போவதுமில்லை. தற்போதைய நிலையில் வடக்கு, கிழக்கின் பொருளாதார நல்லறுவடையில் தெற்கிற்கும் நன்மையுண்டு.

அத்தோடு வடக்கு, கிழக்கை மட்டுமாவது தமிழர்களிடம் கையளித்து சுயாதீனமாக இயங்கவிடுவதன் மூலம் அந்நிய சக்திகளின் கடன்பொறிகளில் இருந்து இந்தப் பகுதிகளையாவது தக்கவைத்துக்கொள்ள முடியும். இல்லையேல் கடன்பொறியில் சிக்கிய இலங்கையின் எப்பாகமும், யாரிடமும் மிஞ்சப்போவதில்லை. TW

Previous Story

அட்டாளைச்சேனையில் 11 வயதான சிறுமி துஷ்பிரயோகம் - 2 இளைஞர்கள் கைது!

Next Story

MAY 10: ஏறாவூர் வன்முறைகளை கண்டித்து  பிரேரணை ஏகமனதாக ஏற்பு