பொன்னியின் செல்வன் பட டிரெய்லர் – 33 குறிப்புகளில் மொத்த படமும்

-நபில் அகமது-

பொன்னியின் செல்வன் பாகம் 1 படத்தின் இசை மற்றும் டிரெய்லர் காட்சிகள் மிக பிரமாண்டமான முறையில் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 6) வெளியிடப்பட்டது. தமிழ் திரைப்படத்துறையின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல் என ஒட்டுமொத்த திரையுலகமே சங்கமித்த இந்த நிகழ்ச்சி அந்த படத்தைப் பார்க்கும் ஆர்வத்தை ரசிகர்கள் மத்தியில் மேலும் தூண்டியுள்ளது.

பொன்னியின் செல்வன்

அந்த படத்தின் டிரெய்லரில் இடம்பெற்றுள்ள தகவல்கள் மற்றும் கதாபாத்திரங்கள் குறித்த விரிவான அலசல் இதோ…

  • மொத்தம் 3 நிமிடங்கள், 23 விநாடிகள் கொண்ட பொன்னியின் செல்வன் படத்தின் டிரெய்லர், 5 மொழிகளில் வெளியாகி உள்ளது. தமிழில் வெளியான இப்படத்தின் டிரெய்லர், நடிகர் கமல்

2. முதல் காட்சியிலேயே ஒரு வால் நட்சத்திரத்தை காண்பிப்பார்கள். பொன்னியின் செல்வன் நாவலின்படி அதை ‘தூமகேது’ என்று அழைப்பர். அப்படியென்றால் கெட்ட சகுனம் என்று அர்த்தம். கதைப்படி பார்த்தால், சோழ அரசில் பெரும் இழப்பொன்று நிகழபோவதாக காண்பிக்கின்றனர்.

3. அடுத்த காட்சியில் நடிகர் பிரகாஷ் ராஜ் தோன்றுகிறார். கதைப்படி இவர் சுந்தர சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் ஆதித்திய கரிகாலன், குந்தவை, அருண்மொழி வர்மன் ஆகியோரின் தந்தை.

சம்புவரையர் மாளிகையில் ரகசிய கூட்டம்

பொன்னியின் செல்வன்

4. பிறகு சில போர் காட்சிகள் காண்பிக்கப்படுன்றன. அதன் பின் கடம்பூர் சம்புவரையர் மாளிகையில் ஒரு கூட்டம் நடப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதில் பழுவேட்டரையர்களும் சிற்றரசர்களும் கடம்பூர் அரசர் முன்னிலையில் கலந்தாலோசித்துக் கொண்டு இருப்பது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அவர்கள் இந்தக் காட்சியில் என்ன விவாதித்து இருப்பார்கள் என்பதை விரிவாக அறிய பொன்னியின் செல்வன் நாவலை படித்தால் தான் புரியும்.

5. சுந்தர சோழன் உடல்நலிவுற்று இருப்பதால் அடுத்ததாக ஆதித்திய கரிகாலனை அரசராக்கும் திட்டம் இருக்கும். அது இக்கூட்டத்திற்கு பிடிக்காததால் எப்படியாவது உத்தம சோழனை பேரரசராக்கி விட வேண்டும் என விவாதித்து கொண்டு இருப்பர்.

6. அடுத்ததாக, சில அலைச் சீற்ற காட்சிகள் வரும். பிறகு, நந்தினியாக நடித்துள்ள ஐஸ்வர்யா பச்சன் தோன்றும் காட்சியில் அவர் அறிமுகம் செய்யப்படுகிறார். இப்பாகத்தின் கதாநாயகனாகிய ஆதித்திய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரம் நடித்துள்ளார். இவர் அறிமுக காட்சிக்கு அடுத்ததாக ஒரு போர் காட்சி காண்பிப்பர். அதை நாவலின் அடிப்படையில் பார்த்தால், சோழர்களுக்கும் பாண்டியர்களுக்கும் இடையே ஒரு மிகப்பெரிய போர் நடக்கும். அதில் வீரபாண்டிய அரசன் தலையை வெட்டப்படுவதாக காட்சிப்படுத்தி உள்ளனர்.

7. அடுத்த காட்சியில் மிகபெரிய கப்பல் படை ஒன்று தயாராக இருப்பது போல் காட்சி உள்ளது. இது அருண்மொழி வர்மன் இலங்கை மீது போர் தொடுத்து வெற்றி பெற்றதாக இடம்பெற்ற காட்சிகள்.

8. அதன் பின் குகைக்குள் பெளத்த பிக்குகளுடன் அருண்மொழி வர்மனான ஜெயம் ரவி உரையாடுவது போல் ஒரு காட்சி வருகிறது. இக்காட்சியை பொறுத்தவரை இலங்கையை அருண்மொழி வர்மன் வென்று இருந்தாலும் நேரடியாக அவர் ஆட்சி செய்யவில்லை. அதனால் பெளத்த பிக்குகள், தங்களின் கீழ் உள்ள ஆட்சியில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதனால் நீங்களே இலங்கைக்கு அரசராக பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவர். அதற்கு அருண்மொழி வர்மன், நான் எந்த நாட்டை வென்றாலும் எனக்கு என் தந்தையிட்ட கட்டளை ‘சோழர்களை காக்க வேண்டும் என்பதே. அதனால் நான் சோழ தேசத்தில் இருப்பது தான் சிறந்தது,” என்று நாவலில் கூறிய காட்சியை இங்கு வைத்துள்ளனர்.

கார்த்திக்கு வலுவான கதாபாத்திரம்

பொன்னியின் செல்வன்

பட மூலாதாரம்,LYCA PRODUCTIONS

9. அடுத்ததாக இப்பாகத்தின் மிக முக்கிய கதாபாத்திரமான வல்லவரயான் வந்தியத்தேவன் ஆக நடிகர் கார்த்தி நடித்துள்ளார். வந்தியத்தேவன் கதாபாத்திரம் என்பது ஆதித்திய கரிகாலனின் நம்பிக்கைக்குரிய நண்பர் கதாபாத்திரம்.

10. ஆதித்திய கரிகாலன் வந்தியதேவனிடம் கடம்பூர் மாளிகையில் ஏதோ தவறாக நடப்பதாக உளவு செய்தி வந்துள்ளது. அதை கண்டுபிடிக்க அனுப்பப்படுவது போல் காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. வந்தியத்தேவனை பொறுத்த வரையில் எப்படிபட்ட கோட்டையாக இருந்தாலும் இலகுவாக உள்ளே சென்று வெளியே வந்து விடுபவர்.

11. அடுத்த காட்சியில் வந்தியதேவன் குதிரையில் பயணம் செய்வது போன்று ஒரு காட்சி இருக்கும். அநேகமாக இங்கு தான் பொன்னிநதி பாக்கனுமே பாடல் இடம்பெறலாம்.

12. வந்தியத்தேவன் தன் நண்பனும் சிற்றரசர் செங்கண்ணர் சம்புவரையர் மகன் கந்தன் மாறன் உதவியோடு கடம்பூர் மாளிகைக்குள் நுழைந்து விடுகிறார். அப்போது கடம்பூர் அரண்மனையில் குரவைக்கூத்து என்று சொல்லப்படக்கூடிய நடனம் நடைபெற்றுக் கொண்டு இருக்கும்.

13. அந்த நடன நிகழ்ச்சி முடிந்த பின் ஒருவர் குறி சொல்வது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். அதில் அவர் தூமகேது தோன்றியுள்ளதால் அரச குடும்பத்தில் ஒருவர் உயிர் பறிபோகும் என்று கூறியிருப்பார். அதன் பின் தான் சம்புவரையர், பழுவேட்டரையர்கள், குறுநில மன்னர்கள் மற்றும் உத்தமசோழன் ஆகியோர் சதி திட்டம் தீட்டுவது போல் காட்சி அமைக்கப்பட்டு இருக்கும்.

14. கூட்டத்தில் எப்படியாவது ஆதித்ய கரிகாலனை வீழ்த்தி அந்த இடத்தில் உத்தமசோழனை அரியணை ஏற்ற வேண்டும் என்று முடிவு செய்வார்கள். அக்கூட்டத்திற்கு நாவலில் ‘மந்திர ஆலோசனைக்கூட்டம்’ என்று அழைத்திருப்பார் நாவலாசிரியர்.

15. மந்திர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுவதை வந்தியத்தேவன் உளவு பார்ப்பது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் இன்னொரு கதாபாத்திரமும் உளவு பார்க்கும். அவர் பெயர் ஆழ்வார்க்கடியான் நம்பி. இக்கதாபாத்திரத்தில் நடிகர் ஜெயராம் நடித்துள்ளார். அதன் பின் அடுத்த காட்சியில் ஆழ்வார்க்கடியான் நம்பியும் வந்தியத்தேவனும் இரவு நடந்த கூட்டத்தைப் பற்றி ஆலோசித்து வருவது போல் இருக்கும்.

அகோரிகளுடன் நடிகர் ரகுமான்

16. அதன் பின் உத்தம சோழனாக நடிக்கும் நடிகர் ரகுமான் அகோரிகளுடன் வருவது போல் ஒரு காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

17. பிறகு உத்தம சோழன் தன் தாயாரான செம்பியன் மாதேவியுடன் பேசுவது போல் காட்சி உள்ளது. அடுத்த காட்சியில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பார்த்திபன் தோன்றியுள்ளார்.

பொன்னியின் செல்வன்

18. அடுத்ததாக வந்தியத்தேவன் ஓடுவது போல் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. இது குறித்து நாவலில் பார்த்தால், தன் நண்பரான கந்தன் மாறனுக்கு ஒரு சண்டையில் அடிபட்டு இருக்கும். அவரை காப்பாற்றி விட்டு அதன் பின் காவலர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சியாக அது இருக்கலாம்.

19. அடுத்தாக தோன்றுவது, குந்தவை அதாவது அருண்மொழி வர்மனுடைய அக்கா இக்கதாபாத்திரத்தில் நடிகை த்ரிஷா நடித்துள்ளார்.

20. இக்காட்சியை பொருத்தவரை ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவனிடம் ஒரு ஓலை அனுப்பி வைப்பான். அதில் ஓலை கொண்டு வரும் வந்தியத்தேவனை நம்பி எல்லா ரகசியங்களையும் கூறலாம் என்று எழுதி இருக்கும். அதை சுந்தர சோழனிடமும் குந்தவையிடமும் கொடுக்க ஆதித்திய கரிகாலன் வந்தியத்தேவன் கூறி இருப்பார். அந்த காட்சி தான் இங்கு இடம்பெற்றுள்ளது.

குந்தவையின் வேண்டுகோள்

21. வந்தியத்தேவனிடம் குந்தவை, தன் தம்பியான அருண்மொழி வர்மனை இங்கு அழைத்து வரவேண்டும் என்பார். நாவலின்படி அருண்மொழி வர்மன் அப்போது இலங்கையில் இருப்பார்.

22. அடுத்த சில காட்சிகள் போன பின் குந்தவை ஆதித்திய கரிகாலனோடு உரையாடுவது போல் காட்சி உள்ளது. அதில் ஏன் தஞ்சை வராமல் உள்ளீர்கள் நந்தினிக்காவா என்று குந்தவை கேட்க, அதற்கு ஆதித்திய கரிகாலன் ‘உனக்காகதான் என்று நான் வரவில்லை,” என்று குந்தவையிடம் கூறுவார்.

23. அடுத்தாக நந்தினி கதாபாத்திரம் காண்பிக்கப்படும். அதில் மிக முக்கிய காட்சியாக திரைச்சீலையை நந்தினி விலக்கிப் பார்ப்பது போல் உள்ளது. இக்காட்சி நாவலில் இரண்டு இடங்களில் இடம்பெறுகிறது. ஒன்று கடம்பூர் அரண்மனைக்கு நந்தினி செல்லும் போதும், மற்றொன்று வந்தியத்தேவனை பார்க்கும் போதும் உள்ளது.

24. நந்தினி தன் கணவரான பெரிய பழுவேட்டரையரிடம் ஆதித்யா கரிகாலனும் அருண்மொழி வர்மனும் இணையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பார்.

25. நந்தினி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா பச்சனும் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமாரும் நடித்துள்ளனர்.

26. அடுத்த சில காட்சிகளுக்கு பின் ரவிதாசன் கதாபாத்திரம் தோன்றுகிறது. நாவலில் வரும் பாண்டிய ஆபத்துதவிகளில் ஒருவராவார். மேலும் பழுவூர் இளயராணி நந்தினி தேவியின் துணையுடன் வீரபாண்டியனின் மரணத்திற்காக சுந்தர சோழரின் குடும்பத்தை பழிவாங்க முயற்சிக்கும் நபராக வருகிறார்.

27. அதிலும் குறிப்பாக, ஆதித்ய கரிகாலனை கொல்ல கையில் சூடமேற்றி சபதம் எடுப்பது காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. ரவி தாசனை மந்திரவாதியாகவும் நாவலாசிரியர் குறிப்பிடுகிறார்.

வாளுடன் நந்தினி – யார் இவர்?

28. அடுத்த காட்சி வந்தியத்தேவனும் அருண்மொழி வர்மனும் சண்டையிடுவது போல் இருக்கும். அதன் பின் நடிகர் பிரபு தோன்றுகிறார். இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பூதி விக்ரம கேசரி. இவர் சோழர்களில் படைத்தளபதியாக இருந்தவர்.

29. அதன் பின் விக்ரம் பிரபு தோன்றும் காட்சி. இவருடைய கதாபாத்திரத்தின் பெயர் பார்த்திபேந்திர பல்லவன். இவர் ஆதித்ய கரிகாலனின் நண்பர். பல்லவ நாட்டிலிருந்து ஆதித்ய கரிகாலனுக்கு உதவி புரிய சோழ தேசத்திற்கு வருகை புரிந்திருப்பார்.

30. அடுத்த சில காட்சிகளுக்கு பின், ஆதித்ய கரிகாலன் அரண்மனையில் உள்ள ஓர் அறையில் நுழைவது போல் காட்சி இருக்கும். இது நாவலில் ஆதித்ய கரிகாலனை கொல்ல நந்தினி ஒரு வாள் எடுப்பது போன்றதாக இருக்கும்.

31. அடுத்த சண்டை காட்சிகளுக்குப் பின் நடுக்கடலில் பெரிய படகில் அருண்மொழி வர்மனும் வந்திய தேவனும் இணைந்து சண்டை போடுவது போல் இருக்கும். இது குறித்து நாவலில் பார்க்கும் போது இலங்கையிலிருந்து தஞ்சை வரும் அருண்மொழி வர்மனை கொல்ல ரவிதாசன் உள்ளிட்டோர் முயற்சிப்பதாக காட்சி இருக்கும்.

32. இறுதியாக நந்தினி கதாபாத்திரம், சோழர்களின் சிம்மாசனத்தை பார்ப்பது போல் டிரெய்லர் முடிகிறது. நந்தினியின் அந்தப் பார்வையின் அர்த்தம், சோழர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்த பின் பாண்டியர்களின் ஆட்சியை நிலைநாட்டுவதே.

33. நமது கணிப்பின்படி ஆதித்ய கரிகாலன் கொல்லப்படுவதுடன் முதல் பாகம் முடிவு பெறும்.

Previous Story

ஆசிய கோப்பை: இந்திய மோசமாக விளையாடியது ஏன்? ரோஹித் ஷர்மா கேப்டன்சியில்  தவறுகள் என்ன?

Next Story

UK அமைச்சரவையில் ஒரு இலங்கை வம்சாவளியினர்