2024 பொதுத் தேர்தலில் NPP க்கு 140 ஆசனங்கள்

-நஜீப் பின் கபூர்-

தினக்குரல் அரசியல் ஆய்வாளர்.
(ஸ்ரீ லங்கா கார்டியன் நியூஸ் கொம். மற்றும்
கார்டியன் நியூஸ் செய்தித்தாள் என்பவற்றின்
பிரதம ஆசிரியரும்.)

இப்படி ஒரு எண்ணிக்கைகையை நாம் பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில சொல்கின்ற போது சிலர் அப்படி எப்படி நடக்க முடியும் என்று விமர்சிக்கலாம்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே 2024 ஜனாதிபதி தேர்தலில் அனுரவுக்கு அதிக வாய்ப்பு என்று நாம் ஊடகங்களில் சொன்ன போதும் எமது கணிப்பு மிகைப்பட்ட ஒரு எண்ணிக்கை என்று அநேகமானவர்கள் விமர்சித்தார்கள். எமது நண்பர்களும் நெருக்கமானவர்களும் கூட நமது எண்ணிக்கை ஜீரணிக்க தயாராக இருக்கவில்லை.

தேர்தலுக்கு இரண்டொரு நாட்கள் இருக்கும் போது நாம் துல்லியமாக வாக்கு வீதத்தை ஊடகங்களுக்குச் சொல்லி இருந்தோம். அதனை நமது வாசகர்கள் பார்த்திப்பார்கள். வருகின்ற பொதுத் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்பது தொடர்பாக இப்போது எமது எண்ணிக்கையை தர இருக்கின்றோம்.

சஜித் மற்றும் ரணில் இணைந்தால் அனுரவை வெற்றி கொள்ள முடியும் என்று இப்போது கணக்குப் பார்க்கின்றார்கள்-கதை விடுகின்றார்கள். இது தமது ஆதரவாலர்களுக்கு நம்பிக்கை ஊட்டி இருக்கும் வாக்குகளை பாதுகாக்க மேற்கொள்ளும் ஒரு முயற்சி என்பதனை குடி மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து சஜித்-ரணில் கூட்டணி அமைப்பதில் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. கடந்த 2019 ஜனாதிபத் தேர்தலில் 5564239 வாக்குகளைப் பெற்ற சஜித் 2020 பொதுத் தேர்தலில 2771984. வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொண்டார். எனவே வருகின்ற பொதுத் தேர்தலில் அனுரதரப்பு தனிக்குதிரையாகத்தான் களத்தில் இருப்பார்கள்.

வடக்கு கிழக்கில் தமிழர்கள் தனியாக வருவார்கள். இன்று சஜித்துடன் இருக்கின்ற மலையகக் கட்சிகளும் பெரும்பாலும் பொதுத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்னரோ அனுரவுடன் இணைந்து போக அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றன.

முஸ்லிம்களைப் பொறுத்த வரை அனுர தரப்பு புதிய பல முகம்களை நிச்சயமாக நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வருவார்கள். இந்த தேர்தலில் அது தெளிவாகி விட்டது. கிழக்கில் கூட அனுர தரப்பு வேட்பாளர்கள் ஆசனங்களை சுலபமாக பெற்றுக் கொள்வார்கள்.

இன்று அவர்களுக்குக் கிடைத்திருக்கின்ற வாக்குகள் இரட்டிப்பாக மாற இடமிருக்கின்றது. ஹக்கீம் ரிசாட் ஹிஸ்புல்லாஹ் அதாவுல்லா இதற்குப் பின்னர் அனுரவுக்கு எதிராக விசமத்தன பிரச்சாரங்களை மேற்கொள்ள வாய்ப்பில்லை. அவர்கள் ஏற்கெனவே சரணாகதி அடைந்து விட்டார்கள். அலி சப்ரி அரசியலை விட்டே ஓடி விட்டார்.

ரணிலுக்குக் கிடைத்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி வாக்குகளும் மொட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக வந்த வாக்குகளும்தான். இதில் மொட்டு வாக்குகள் 15 இலட்சம் வரை இருக்கும். சஜித்-ரணில் கூட்டணி அமைந்தாலும் அதனுடன் வேட்பாளர் பங்கீடு தொடர்ப்பில் பெரும் இழுபறி வரும்.அப்போது மேலும் பலர் அங்கிருந்து வெளியேறிவிடுவார்கள்.

இன்று ரணிலுடன் இருப்போர் திரும்ப மொட்டு அணிக்குத் தாவ இடமிருக்கின்றது. எனவே கூட்டல் கழித்தல் கணக்குப்படி அனுர தரப்பை பொதுத் தேர்தலில் இலகுவாக வெற்றி கொள்ள முடியும் என்ற சஜித்-ரணில் கணக்கு மொண்டசூரி-பால்போத்தல் கணக்காகத்தான் இருக்கும். இது பற்றி தகவல்களை நாம் விரைவில் மாவட்ட ரீதியில் விரிவாகத் தர இருக்கின்றோம்.

2024 ஜனாதிபதித் தேர்தலில் ஆசனங்களை கணக்குப் பார்த்தால் ஏறக்குறைய அது பின்வருமாறு அமைகின்றது.

அனுர                  106      ஆசனங்கள்

சஜித்                    079      ஆசனங்கள் 

ரணில்                 037      ஆசனங்கள்

நாமல்                   002      ஆசனங்கள்

அரியநேந்திரன் 002      ஆசனங்கள்

திலித் 001ஆசனம்

மொத்தம்       225      ஆசனங்கள்

 

வருகின்ற 2024 பொதுத் தேர்தலில் முடிவுகள் பின்வருமாறு அமையவே அதிக வாய்புக்கள்  இருக்கின்றன.

அனுர          140      ஆசனங்கள்

சஜித்           041      ஆசனங்கள் 

ரணில்          011      ஆசனங்கள்

தமிழ்தரப்பு     020      ஆசனங்கள்

நாமல்          008      ஆசனங்கள்  

இதர           005      ஆசனங்கள்

மொத்தம்       225      ஆசனங்கள்

மொட்டுக் கட்சியில் இன்று ரணிலுடன் இருப்போரில் கணிசமானவர்கள் மீண்டும் மொட்டுக் கட்சிக்குத் தாவ இடமிருக்கின்றது.

அப்படியான நிலையில் அது ரணில் தரப்பு எண்ணிக்கையில் மேலும் கடுமையான தாக்கங்களைச் செலுத்தும். ரணில் தனித்து நின்றால் 2020 தேர்தல் முடிவுதான் அவருக்கு மீண்டும் வரும்.

Previous Story

அநுரவுக்கு வெறும் 3 இடங்கள்; அடுத்து என்ன? - BBC

Next Story

அரசியல் குடும்ப பின்னணி இல்லாத முதல் பெண் பிரதமர்