பொதுத்தேர்தலுக்கு எதிரான மனு தள்ளுபடி 

நவம்பர் 14ஆம் திகதி பொதுத் தேர்தலை  நடத்தும் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.நீதியரசர்களான ப்ரீத்தி பத்மன் சூரசேன, சிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர்நீதிமன்ற நீதியரசர் குழாம், மனு தொடர்பில் முன்வைக்கப்பட்ட வாதங்களை பரிசீலித்த நிலையில், குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரித்துள்ளது.

தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படை

வாதங்களின்போது தேர்தல்கள் சட்டத்தின் அடிப்படையில், ஜனாதிபதியால் தேர்தலுக்கான திகதி சரியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான, மேலதிக மன்றாடியார் நாயகம் விராஜ் தயாரத்ன முன்வைத்த உண்மைகளை கருத்திற்கொண்டே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுப்படி செய்த உயர்நீதிமன்றம் | High Court Dismissed Against General Election

2024, நவம்பர் 14 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்தும் முடிவை எதிர்த்து, அக்டோபர் 21 ஆம் திகதி, சிவில் சமூக ஆர்வலரும், நாம் ஸ்ரீலங்கா தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான ர்.ஆ பிரியந்த ஹேரத் மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.

சட்டமா அதிபர், ஜனாதிபதியின் செயலாளர், தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்கள் மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.

முன்னதாக, நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தின் 10வது பிரிவின்படி, வேட்புமனுக்களை ஏற்கும் காலம் அக்டோபர் 4 முதல் அக்டோபர் 11 வரை அறிவிக்கப்பட்டது.

ஐந்து வார கால அவகாசம்

நாடாளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின்படி, ஐந்து வாரங்களுக்குக் குறையாமலும், வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நாளிலிருந்து ஏழு வாரங்களுக்கு மிகாமலும் வாக்குப்பதிவுக்கான திகதி திட்டமிடப்பட வேண்டும் என மனுவில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

பொதுத்தேர்தலுக்கு எதிரான மனுவை தள்ளுப்படி செய்த உயர்நீதிமன்றம் | High Court Dismissed Against General Election

அதன்படி, அக்டோபர் 11 ஆம் திகதி வேட்புமனு தாக்கல் முடிவடைந்தவுடன், ஐந்து வார கால அவகாசம் நவம்பர் 15 ஆம் திகதி முடிவடையும் என்றும், நவம்பர் 29 ஆம் திகதி ஏழு வார காலம் நிறைவடையும் என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எனவே அதற்கு முன்னதாக 14ஆம் திகதி தேர்தலை நடத்தும் முடிவின் மூலம் மக்களின் இறையாண்மை மற்றும் அரசியல் சாசனம் மீறப்படுவதாக உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மனுதாரர் கோரியிருந்தார்.

Previous Story

நாடாளுமன்ற உறுப்பினர்களது தனிப்பட்ட ஊழியர்கள்-ஹரினி 

Next Story

காஸா போர்: பாலத்தீன மக்கள் எதிர்பார்க்கும் ஆதரவை அரபு நாடுகள் வழங்காதது ஏன்?