பிராந்திய நலன் காக்க பகிரங்க அழைப்பு

நஜீப் பின் கபூர்

‘பிராந்திய நலன்களைப் பாதுகாக்க தமிழ் பேசும் சமூகங்கள் வியூகங்களை வடிவமைக்க வேண்டும்’

சுதந்திரத்துக்கு முன்பிருந்தே இலங்கை அரசியலில் தெற்கிற்கும் வடக்கிற்குமிடையே வரையப்படாத தெளிவான கோடு ஒன்று மொழி, சமய, கலச்சரர மற்றும் அரசியலில் ரீதியாக இருந்து வந்திருகின்றன. அதில் சில காயங்கள் வந்த போதும் தற்போதும் அந்த நிலை தொடர்கின்றது. அதே சமூகப் பின்னணியைக் கொண்ட கிழக்குத் தமிழர்கள் வடக்கு அரசியல் உணர்வுகளுடன் மிக நெருக்கமாக இருந்த போதிலும் தெற்கு அரசியலுடனும் உறவுகளைப் பேனியும் நிராகரித்தும் வந்திருக்கின்றனர் என எடுத்துக் கொள்ள முடியும்.

கிழக்கில் முஸ்லிம் சமூகத்தினர் கணிசமாக வாழ்வதால் அவர்கள் தமிழ் அரசியல் அமைப்புக்களுடன் இனக்க அரசியல் செய்த சந்தர்ப்பங்கள் நிறையவே துவக்க காலத்தில் இருந்தன. பின்பு தெற்கு அரசியல் சக்திகளுடன் அவர்கள் வலுவான உறவுகளை வளர்த்துக் கொண்டார்கள். அஷ்ரஃப் வருகையுடன் கிழக்கில் முஸ்லிம் அரசியல் வரைபடம் தலை கீழாக மாறியது. இது எந்தளவுக்கு தாக்கத்தை செலுத்தியது என்றால் தெற்கு குறிப்பாக கொழும்பை மையமாக வைத்து அரசியல் செய்த முஸ்லிம் அரசியல் தலைமைகளைக் கூட இது செல்லாக் காசாக்கி விட்டது.

தனது தனித்துவக் கோஷங்களுடன் அஷ்ரஃப் முன்னெடுத்த அரசியல் தெற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்குப் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் அஷ்ரஃபின் ஆளுமைக்கு முன்னால் அவர்களால் தாக்குப்பிடிக்க முடிவில்லை. அவர் மரணம் வரை இந்த நிலை தொடர்ந்தது. தான் அதிகாரத்தில் இருந்த காலத்தில் அவர் கிழக்கிற்கு மட்டுமல்ல தெற்கு முஸ்லிம்களுக்கும் பல நல்ல காரியங்களைச் செய்திருந்தார். கிழக்கில் இன்றும் அதன் சின்னங்களை காண முடிகின்றது.

அவர் மரணத்துக்குப் பின்னர் கிழக்கு மு.கா. தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஹக்கீம் தலைமைப் பதவியை ஏற்றார். ஒரு கட்டத்தில் தனக்குத் தலைமைத்துவம் கிடைக்கா விட்டால் கட்சியை சின்னா பின்னாப்படுத்திப் போடுவேன் என்று ஹக்கீம் அன்று கலாட்ட பண்ணியதை கட்சி முக்கியஸ்தர்கள் மட்டுமல்ல நாமும் பார்க்கக் கூடியதாக இருந்தது. எப்படியோ அதிகாரத்துக்கு வந்த ஹக்கீம் பிற் காலத்தில் தனிப்பட்ட ரீதியிலும் கட்சி அரசியலிலும் பல நெருக்கடிகளை சந்தித்த போதிலும் இன்று வரை அவர் கட்சித் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்காமல் இருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமைப் பதவியை சாகும் வரை தன் வசம் வைத்திருக்க ரணில் என்னென்ன உத்திகளைக் கையாண்டாரோ அதே பாணியில் தலைமைப் பதவியை தொடர்ந்து தன்வசம் வைத்திருக்க ஹக்கீமும் ஏற்கெனவே வலுவான வியூகங்களை வடிவமைத்து விட்டார். அஷ்ரஃப் மீண்டும் பிறந்து வந்தாலும் கட்சித் தலைமையை ஹக்கீமிடமிருந்து மீளப்பெற்றுக் கொள்ள முடியாது. அதிகூடிய பாதுப்பு வலயத்துக்குள் தற்போதய மு.கா. தலைமைப் பதவி இருக்கின்றது. கிழக்கில் இருக்கின்ற பிரதேசவாதமும் ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கு மேலதிக பாதுபாப்பாக இருந்து வருகின்றன.

இன்று எப்படி மக்களால் ரணில் நிராகரிக்கப் பட்டிருக்கின்றாரோ அதே போன்றுதான் முஸ்லிம் சமூகத்திலும் ஹக்கீம் நிலை இருக்கின்றது. அரசியல் அரிச்சுவடிகளே தெரியாதவர்களை எல்லாம் மத்திய, செயற்குழு உறுப்பினராக்கி அவர் தனித்துவ அரசியல் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றார். இன்று மு.கா. செயற்குழுவில் இருக்கின்றவர்கள் எல்லோரும் போல் ஹக்கீம் விசிரிகள். அவருக்காக கூஜா தூக்குவதற்கு என்றே நியமிக்கப்பட்டவர்கள். அங்கு சமூக அரசியலுக்கோ சிந்தனை ரீதியிலான கருத்துகளுக்கோ அரவே வாய்ப்புக்கள் கிடையாது. இவர்களை வைத்துக் கொண்டு சமூகம் என்ன அரசியல் மாற்றத்தை அந்தக் கட்சியில் இருந்து எதிர்பார்க்க முடியும்.

தான் அதிகாரம் மிக்க அரச பதவிகளில் இருக்கின்ற காலத்தில் செயற்குழுவில் இருந்தவர்களுக்கு ஏதாவது வகைளில் கொடுப்பனவுகள் அல்லது சப்பி விசுகின்ற முள்ளைக் கொடுத்து விட்டால் இவர்கள் மு.கா. தலைமையைத் தொடர்ந்தும் பாதுகாத்துக் கொண்டிருப்பார்கள் என்பது தலைவருக்கு நன்றாகத் தெரியும். எனவே தான் ஹதுன்ஹெத்தி கோப் குழுத் தலைவராக இருந்த காலத்தில் இப்படி ஹக்கிமிடமிருந்து பணம் பெற்றவர்களின் பட்டியல் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டது.

அந்த விவகாரங்கள் அப்படி இருக்க இப்போது நாம் விடயத்துக்கு வருவோம். தற்போது கிழக்கு முஸ்லிம் அரசியல் மீண்டும் வங்குரோத்து நிலைக்குப் போய் விட்டது. அல்லது முடமாகி விட்டது. இதனால் அங்கு வாழ்கின்ற முஸ்லிம் சமூகம் இன்று பெரும் நெருக்கடிகளுக்கு இலக்காகி நிற்கின்றது. உரிமைகளை வென்று தருகின்றோம். என்று பேசினார்கள். ராஜபக்ஸாகள் இனவாதம் பற்றி முஸ்லிம் சமூகத்தை பயமுறுத்தி ஒட்டு மொத்த வாக்குகளையும் கொள்ளையடித்து பதவிக்கு வந்து, இன்று அதே ராஜபக்ஸாக்களின் கையாட்களாக இவர்கள் மாறி இருக்கின்றார்கள். தலைவரின் ஆசீர்வாதத்துடன்தான் இவை எல்லாம் நடந்தது என்று வேறு வாக்குமூலம் கொடுத்திருக்கின்றார்கள்.

இன்று தமிழ் பிரதேசங்களில் மட்டுமல்ல முஸ்லிம் பிரதேசங்களும் பெரும் அச்சுருத்தலுக்கும் ஆக்கிரமிப்புக்களுக்கும் இலக்காகி வருகின்றது. இவற்றை நாம் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமானால் இரு சமூகங்களும் இணைந்து அதற்கான ஒரு வேலைத் திட்டத்தை நாம் வடிவமைக்க வேண்டும். இதற்காக தமிழ் பேசுகின்ற சமூகங்கள்; புதிய அரசியல் வியூகங்களை வடிவமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இப்படி நமக்கு கருத்துத் தெரிவிக்கின்றார் முன்னாள் மு.கா. பொதுச் செயலாளரும் ஐக்கிய சமாதானக் கூட்டடைப்பின் தலைவருமான ஹசனலி அவர்கள்.

அரசு சொல்லுகின்றபடி மாகாணசபைத் தேர்தல் வருமாக இருந்தால் அதனை பிராந்திய நலன்களைப் பாதுகாக்கின்ற ஒரு தேர்தலாக சிறுபான்மை சமூகங்கள் பார்க்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அவர்கள் தமக்குள் வகுத்துக் கொள்ள வேண்டும். தேசிய கட்சிகளின் நிகழ்ச்சி நிரலைத் தூக்கிப் பிடித்துக் கொண்டு இந்தத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கில் சிறுபான்மை சமூகங்கள் களத்தில் இறங்குவது முற்றாக தடுக்கப்பட வேண்டும். அல்லது அந்த முகவர்களை சமூகம் முற்றாக நிராகரிக்க வேண்டும்.
சமூகத்தை பாதுகாக்கப் போனவர்கள் இன்று அரசின் ஏஜெண்டுகாளாக மாறி கோடாறிக்காம்பாக நிற்பதை குறிப்பாக முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். வருகின்ற தேர்தலில் இவர்கள் புதிய கதைகளுடன் பிரதேச அபிவிருத்தி, தொழில் வாய்ப்பு என்றெல்லாம் பேசிக் கொண்டு மக்களை ஏமாற்ற நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. இந்த அரசியல் வியாபாரகளிடம் பெரும் தொகையான பணமும் அரச அனுசரணைகளும் இருக்கின்றன என்பதும் தெரிந்ததே.
இந்தத் தேர்தலில் பிராந்திய மற்றும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களைப் பாதுகாக்க தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள், சிவில் அமைப்புக்கள், புத்திஜீவிகள் தமது பங்களிப்பை வழங்க வேண்டும் என்றும் ஹசனலி தமிழ் முஸ்லிம் சமூகங்களுக்கு பகிரங்க அழைப்பு விடுக்கின்றார். இதற்காக இங்குள்ள தமிழ் பேசும் சமூகத்தினர் ஐக்கியப்பட வேண்டும் என்பது அவரது வாதமாக இருக்கின்றது.
முஸ்லிம் சமூக நலன்களைக் காக்கப் போன நமது பிரதிநிதிகள் இன்று அரசின் அடிவருடிகளாகி சமூகத்துக்குத் துரோகம் இளைத்து வருகின்றார்கள். இவர்களையும் இவர்களது தலைமைகளையும் சமூகம் இந்தத் தேர்தலில் தூக்கி எறிந்து அவர்களுக்கு நல்ல பாடத்தை கற்றுக் கொடுக்க கிழக்கு முஸ்லிம் சமூகம் முன்வர வேண்டும் எனவும் ஹசனலி மேலும் கேட்டுக் கொள்கின்றார். தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைவதன் மூலமே அடக்கு முறையிலிருந்தும் ஆக்கிரமிப்பிலிருந்தும் விடுபட முடியும் என்பது அவரது வலுவாக வாதமாக இருக்கின்றது

Previous Story

வாராந்த அரசியல்

Next Story

அப்துல் கதிர்க் கான்