பாலியல் தொழிலாளியாக இருந்த திருநங்கை அலிஷா வாழ்க்கையில் திடீர் மாற்றம்!

-பிரியங்கா திமான்-

இரவின் இருளில் அலங்கார உடையணிந்து, அலிஷா சாலையில் தன்னை அழைக்கும் ஒரு வாகனத்திற்காகக் காத்திருந்தார். அலிஷா ஒரு பாலியல் தொழிலாளி. இரவில் இந்தச் சாலையில் அவரை அடிக்கடி பார்க்கலாம்.

ஒரு நிருபராக, அலிஷா இருந்த இடத்திலிருந்து சற்றுத் தொலைவில் அதே சாலையில் நிற்கும்போது, என் மனதில் ஒரு பயம் இருந்தது. இரவில் அப்படி ஓர் இடத்தில் நிற்கும்போது எந்தப் பெண்ணுக்கும் ஏற்படக்கூடிய அதே பயம்.

திருநங்கை, பிபிசி

ஆனால் அலிஷா நம் அனைவரிடமிருந்தும் வேறுபட்டவரா? அஞ்சாதவர் போலக் காட்சியளிக்கும் அலிஷாவின் மனதில் பயம் இல்லையா?

இரவின் இருளைக் கடந்து, காலை வெளிச்சத்தில் அலிஷாவிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, “பயம் இருக்கத்தான் செய்கிறது. இரவில் யாரோ ஒருவருடன் செல்லும்போது, உயிரோடு வருவோமா இல்லையா என்பது கூடத் தெரியாது,” என்று கூறுகிறார் அவர்.

பாலியல் வேலை என்பது அலிஷாவின் வாழ்க்கையின் சிக்கலான முடிச்சின் ஒரு பகுதிதான். அவர் அதற்காக வெட்கப்படவில்லை, ஆனால் அது அவர் விரும்பி ஏற்றதும் இல்லை.

ஹரியானா மாநிலம் குருகிராமில் பல ஆண்டுகளாக வசித்து வரும் திருநங்கை அலிஷா. ஆஷூவாக இருந்த அவர், வெளிப்படையாகத் தன் அடையாளத்துடன் வாழ விரும்பி, பின்னர் அலிஷாவாக மாறினார். ஆனால் அதற்கு அவர் கொடுத்த விலை பாலியல் தொழிலில் ஈடுபாடு.

பாட்னாவில் வசிக்கும் அலிஷா, மிக இளம் வயதிலேயே வீட்டைவிட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தனிமையில் வாழ்வதால், இதுவே அவரது வாழ்வாதாரமாக மாறியது.

“நீ ஆணும் இல்லை பெண்ணும் இல்லை”

திருநங்கை, பிபிசி

வீட்டைவிட்டு வெளியேறுவது மிகவும் வேதனையாக இருந்தது, இன்றும் அவரது நினைவில் உள்ளது. “அம்மாவின் புடவை அணிவது, லிப்ஸ்டிக் போடுவது, நெயில் பாலிஷ் போடுவது, வளையல் அணிவது, பெண்களுடன் விளையாடுவது எனக்குப் பிடித்தது. ஆனால், அம்மாவுக்கு அதெல்லாம் பிடிக்காது,” என்று கூறுகிறார் அவர்.

தாயின் பார்வையில் பிறந்தது ஒரு மகன். அவனுக்கு ஆஷு என்று பெயரிட்டார்கள். அவன் எப்போதும் ஆண்களைப் போல் நடந்து கொள்வான் என்றுதான் எதிர்பார்த்தார்கள்.

ஆனால் தனக்கு ஆரம்பத்திலிருந்தே பெண் உணர்வுகள் இருந்ததாக அலிஷா கூறுகிறார். அவனுடைய அம்மா இதை உணர்ந்திருந்தாலும் இது வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்று விரும்பினார். ஆஷுவிடம் எப்போதும் பையன்களைப் போல நடக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.

உண்மையை மறைத்துக்கொண்டு மூச்சுத் திணற வாழ்ந்து வந்த ஆஷு, ஒரு விபத்துக்குப் பிறகு வெளிப்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.

அவருக்கு 13 வயதானபோது அவரது டியூஷன் ஆசிரியர் அவரை பாலியல் வன்புணர்வு செய்ய முற்பட்டபோது, அவரது முழுமையற்ற தன்மையைக் கேலி செய்தார்.

“நீ என்ன என்று உனக்குத் தெரியுமா? நீ ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை. உன்னைப் போன்றவர்களை இந்தச் சமூகம் ஏற்காது,” என்று அவரது ஆசிரியர் கூறியதாக அலிஷா நினைவு கூறுகிறார்.

ஆசிரியர் தன்னிடம் மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும் இதைப் பற்றி யாரிடமாவது சொன்னால், அவரது குடும்ப உறுப்பினர்கள் அவளை வீட்டை விட்டு வெளியேற்றிவிடுவார்கள் என்று மிரட்டியதாகவும் அலிஷா கூறுகிறார்.

ஒருபுறம் பாலியல் வன்கொடுமையின் வலி, மறுபுறம், ஆசிரியரின் கேலி மொழிகள் மற்றும் குடும்பத்தின் அன்பும் அனுதாபமும் இல்லாமை.

அலிஷா மிகவும் வேதனையில் இருந்தார். குடும்பத்தில் தங்கையிடமோ அம்மாவிடமோ ஓரிரு முறை சொல்ல முயன்றும் எதையும் வெளிப்படையாகச் சொல்ல முடியவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழி இல்லாமல் போனது.

திருநங்கை, பிபிசி

ஆஷூ அலிஷா ஆன கதை

ஓர் ஆணின் உருவம் பெற்றிருந்த ஆஷூ, தன்னுடைய பெண் அடையாளத்தை வெளிப்படுத்த அலிஷா ஆனார். ஆனால் அதற்கு அதிக பணம் தேவைப்பட்டது.

நண்பர் ஒருவரின் நம்பிக்கையின் பேரில் டெல்லிக்கு வந்துள்ளார். இங்கே அவர் தன் ‘குரு’வை சந்தித்தார்.

திருநங்கைகள் சமூகத்தில், பெரும்பாலும் குடும்பத்தைவிட்டு தனியாக வாழ்பவர்கள், ஒன்றுகூடி, ஒரு குருவின் நிழலில் தங்குவது வழக்கம்.

“அவரை எங்கள் பெற்றோராகவே கருதுகிறோம், அவரால்தான் நான் இங்கு காலூன்றி நிற்கிறேன். நான் டெல்லிக்கு வந்தபோது அவர்தான் என்னை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தினார்,” என்கிறார் அலிஷா.

முதல்முறையாக அலிஷாவை பாலியல் தொழிலுக்கு அனுப்பியபோது அவருக்கு ரூ.4,000 கிடைத்தது.

அலிஷா கூறுகிறார், “நான் இவ்வளவு பணத்தை முதன்முதலில் பார்த்தது அப்போதுதான். 10 நிமிட வேலைக்கு இவ்வளவு பணம் கிடைத்ததால், நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்!”

ஆனால் இந்த வாழ்க்கை கஷ்டங்கள் நிறைந்தது. அவர்கள் எல்லா நேரத்திலும் பயத்துடனேயே வாழ வேண்டியிருக்கும்.

14-15 வருடங்களாக இப்பணியைச் செய்து வரும் அலிஷா, ‘‘பல நேரங்களில் வாடிக்கையாளர்கள் எங்களிடம் தவறாக நடந்து கொள்வார்கள், அடிப்பார்கள், தகாத வார்த்தைகளில் பேசி சில நேரங்களில் பணப்பையைக்கூடத் திருடுவார்கள்,’’ என்கிறார்.

படிப்படியாக, அறுவை சிகிச்சை மூலம் பெண்ணின் உடலைப் பெறும் அளவுக்குப் பணம் சேர்ந்தது. சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு, நீண்ட சிகிச்சையின் மூலம், ஆஷு முற்றிலும் அலிஷாவாக மாறினார்.

இப்போது அடுத்த கட்டமாக வாழ்க்கைக்கு அதிக அர்த்தம் கொடுக்க வேண்டும். திருநங்கை மற்றும் பாலியல் தொழிலாளி அடையாளங்களுக்கு அப்பால் நகர்கிறது அவரது வாழ்க்கை.

அடையாளத்தைத் தேடி…

திருநங்கை, பிபிசி

அலிஷா வேறு ஏதாவது வேலை தேட முயலாமலும் இல்லை. இதே காலகட்டத்தில்தான் திருநங்கைகளுக்கு இந்தியாவில் அங்கீகாரமும் பல உரிமைகளும் கிடைத்தன.

2014ஆம் ஆண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கி, உச்சநீதிமன்றம் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்பதால் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று திருநங்கைகளுக்கு கல்வி மற்றும் சுகாதார வசதிகளை வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரசியலமைப்பின் 14, 16 மற்றும் 21 வது பிரிவுகளும் நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சமூக அங்கீகாரம் ஆகியவற்றில் சம உரிமையை வழங்குகின்றன.

பின்னர் 2019ஆம் ஆண்டில், திருநங்கைகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது திருநங்கைகளின் இந்த உரிமைகளுக்குச் சட்ட வடிவத்தை அளித்தது.

ஆனால் அடிப்படை உண்மை இன்னும் மாறவில்லை. அலிஷாவுக்கு வேலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்த நிலையிலும், அலிஷா, சிறு வயதில் வீட்டைவிட்டு வெளியேறினாலும், மிகவும் கஷ்டப்பட்டு, டெல்லியில் பள்ளிப் படிப்பை முடித்தார்.

“எங்கு சென்றாலும், முதலில் திருநங்கைச் சான்றிதழ் கேட்கப்படும், வாயிற்காவலர்கூட, பார்த்தவுடன், படிக்கட்டுகளில் இருந்து கீழே இறக்கிவிட்டுவிடுவார்,” என்கிறார் அவர்.

தனது சமூகத்தில் தலைவரானார்

திருநங்கை, பிபிசி

ஆனால் ஓர் இடத்தில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஒரு நிகழ்ச்சிய்யின் போது, அவரது குரு, திருநங்கைகளின் உடல்நலம் மற்றும் பாலியல் பிரச்னைகள் குறித்துப் பணிபுரியும் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கு அவரை அறிமுகப்படுத்தினார்.

அலிஷாவின் பேச்சு மற்றும் தன்னம்பிக்கையால் ஈர்க்கப்பட்ட அவர், அவருக்கு ஒரு வேலை கொடுத்தார். இப்போது அலிஷா ஒரு சுகாதார ஊழியராகத் தனது சமூகத்தில் ஒரு தலைவரைப் போல் இருக்கிறார்.

“குனியக் குனியக் குட்டுவார்கள் என்று சொல்வார்கள்,” என்கிறார் அவர்.

இப்போது அவர் திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்களுக்கு “எய்ட்ஸ்” உட்படப் பல நோய்களைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறார். அவர்களுக்கு மருந்துகளைப் பெற்றுக் கொடுக்கிறார், மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுத் தருகிறார்.

இந்த குருகிராமை மையமாகக் கொண்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமான “சொசைட்டி ஃபார் சர்வீஸ் டு வாலண்டரி ஏஜென்சிஸ்”-ல் அலிஷா ஒரு குடும்ப உணர்வைப் பெறுகிறார்.

திருநங்கைகள் ஒவ்வொரு நாளும் இங்கு கூடி, தங்கள் பிரச்னைகளைத் தீர்ப்பது மட்டுமல்லாமல், பண்டிகைகளையும் மகிழ்ச்சியையும் ஒன்றாகக் கொண்டாடுகிறார்கள்.

திருநங்கை, பிபிசி

இறைவனின் பார்வையில் முழுமையானவர்கள்

இதையெல்லாம் மீறி, “இத்தனை வருடங்களுக்குப் பிறகும், கிராமத்தில் கேட்கும் கிண்டல்கள், இங்கே நகரத்திலும், சாலையில் நடக்கும்போது கூட, அலி, ஒம்போது என்று கேலியாக அழைப்பதைக் கேட்க முடிகிறது,” என்று வேதனை தெரிவிக்கிறார் அலிஷா.

நான் அலிஷாவுடன் இருந்தபோதும், நான் அவரை நேர்காணல் செய்யும் போதும், அவரைப் பார்க்கும் மக்களின் பார்வை முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை நான் உணர்ந்தேன்.

அலிஷாவின் பார்வையிலும் அவர் முழுமையடையாததற்கு இதுவே காரணமாக இருக்கலாம், “ஆண்கள் அல்லது பெண்களின் வரிசையில் நாம் சேர முடியாது, கடவுள் நம்மைப் படைத்தார், ஆனால் நம்மை முடிக்கவில்லை. நாம் இயற்கையால் உருவாக்கப்பட்ட வெறும் பொம்மைகள்.”

வாழ்வதற்கான தைரியத்தைத் தக்க வைத்துக் கொள்ள, அவர் கடவுளை நாடுகிறார். தன்னை கிருஷ்ணரின் நண்பனாகக் கருதுகிறார்.

தலை நிமிர்ந்து நடக்கும் அவர், கடவுள் முன் தலை வணங்குகிறார்.

சமூகம் தன்னை முழுமையற்றதாக உணர வைத்தாலும், கடவுளும் தன்னைப் பரிபூரணமாகவே வைத்துள்ளதாக அலிஷா உணர்கிறார்.

Previous Story

சான் பிரான்சிஸ்கோவில் இந்திய தூதரக வளாகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் குழு- இந்தியா கண்டனம்

Next Story

IFM கடன் அனுமதி OK