பாணந்துறை சூடு: அதிர்ச்சி தகவல்கள்!

பாணந்துறையில் உள்ள வைத்தியசாலை ஒன்றிற்கு முன்னால் அடையாளம் தெரியாத குழுவினரால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

இச்சம்பவம் இன்று (27-01-2022) வியாழக்கிழமை காலை பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் குறித்து தெரியவருவதாவது, மக்கள் பார்த்துக்கொண்டிருந்த போது, பணந்துறை கேதுமனி மகளிர் வைத்தியசாலைக்கு சொந்தமான அம்பியூலன்ஸ் வாகன சாரதி மீது இனந்தெரியாத நபர்களால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, மர்ம நபரின் துப்பாக்கி செயலிழந்ததால் சாரதி உயிர் தப்பியுள்ளதாக இச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாா் தெரிவித்துள்ளனர்.

மேலும், துப்பாக்கியிலல் இருந்த செயலிழக்காத தோட்டா ஒன்று அம்பியூலன்ஸ் வாகனத்துக்கு முன்னாள் உள்ள சாரதி இருக்கைக்கு அருகிலுள்ள கதவின் கீழிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, குறித்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் அம்பியூலன்ஸ் வாகனத்துக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் சாரதிக்கு காயம் எதுவும் ஏற்பட்டிருக்கவில்லை. திடீரென வைத்தியசாலையின் முன்னால் இடம்பெற்ற இச் சம்பவத்தால், அங்கிருந்த மக்கள் கடும் பதற்றம் அடைந்துள்ளனா்.

குறித்த அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதி நோய்வாய்ப்பட்ட பெண் ஒருவரை அழைத்துக்கொண்டு பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு இன்று காலை 11.45 மணயளவில் வருகை தந்துள்ளாா். அந்த சந்தர்ப்பத்தில் இரண்டு மோட்டாா் சைக்கிள்களில் நால்வர் வருகை தந்துள்ளனா்.

அம்பியுலன்ஸ் வாகனம் வைத்தியசாலைக்குள் நுழைந்தவுடன், நபரொருவர் அம்பியூலன்ஸ் வாகன சாரதியின் கதவுக்கு அருகில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளாா்.

இன்னுமொரு நபரொருவர் வைத்தியசாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் பாதுகப்புக்காக இருந்துள்ளதாக பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

இரண்டு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் துப்பாக்கி செயலிழந்ததால் ஒரு தோட்டா செயலிழந்திருக்கவில்லை என இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸாா் குறிப்பிட்டுள்ளனா்.

குறித்த அம்பியூலன்ஸ் வாகனத்தின் சாரதி களுத்துறை, உதுரு தொடுபொல வீதியை சேர்ந்தவர் என பொலிஸாா் மேலும் குறிப்பிட்டுள்ளனா்.

கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வலானை குற்றப்புலனாய்வு பிரிவினூடாக ஹொரணை, தின்ஹேனபுர பிரதேசத்தில் போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போது, 42 கோடி ரூபா பெறுமதியான 42 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. அந்த சம்பவத்தின் காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸாா் சந்தேகம் வெளியிட்டுள்ளனா்.

Previous Story

சதி1962

Next Story

43 வருடங்களுக்குப் பிறகு திருத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டம்