பாடசாலை கல்வியில் ஊக்கப்படுத்தலின் முக்கியத்துவம்!

-பேகம் ரஹ்மான்-

(சிரேஷட விரிவுரையாளர்
தென்கிழக்குப் பல்கலைக்கழகம்)

மாணவர்களை வளமிக்கவர்களாக மாற்றுவதும் அவர்களை வளம் இழக்கச் செய்வதும் ஆசிரியர்களின் வழிகாட்டுதல்களிலே தங்கியுள்ளது. மாணவர்களின் தலைவிதியை தீர்மானிப்பதில் பாடசாலைகள் மற்றும் வகுப்பறைகள் பெரும் பங்கு வகிக்கின்றது. மாணவர்களின் அறிவுத் திறன்கள் அடையாளப்படுத்தி அதற்கேற்ப அவர்களுக்குரிய பாதைகளை தெளிவு படுத்துவதானது ஆசிரியர்களினது கட்டாயக் கடமையாக இருக்கின்றது. இந்நூற்றாண்டானது மனிதர்களுக்கு சவாலாக அமைந்திருக்கின்ற இக் கால கட்டத்தில் சிறியபிறழ்வுகள் மனித சமூகத்திற்கே அழிவினை ஏற்படுத்தி விடும் என்பதில் ஐயமில்லை. இன்றைய மாணவர்கள் கல்வி கற்பது மாத்திரமன்றி அவர்களுக்கு நடத்தையிலும் மனவெழுச்சிகளிலும் சிறந்த பண்பாடுகளை ஏற்படுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு சமூக உறுப்பினருடைய பொறுப்பாக மாறிவருகின்றது.

மாணவர்கள் என்போர் பெற்றோர்களின் ஆசிரியர்களின் கட்டுப்பாடின்றி வளரும் சூழல் காணப்படுமேயானால் அது மிகவும் பயங்கரமான சூழலாகவே இருக்கும். பொதுவாக இன்று மாணவர்களுக்கான கவர்ச்சிகரமான பொழுது போக்குகளும், அவர்களுக்கு இதற்கு முன்னர் மாணவர்களாக காணப்பட்ட சந்ததிகளுக்கு கிடைக்காத வரையறையற்ற சுதந்திரச் சூழலில் வாழுகின்ற துர்பாக்கிய நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

சுதந்திரம் வரையற்ற சுதந்திரமாக மாறும் போது அது இளைய சமுதாயத்தினை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் இல்லை. ஒவ்வொரு மாணவனதும் பாதுகாப்பு அரண்களாக ஆசிரியர்கள,; பெற்றோர்கள் மற்றும் பெரியவர்கள் சமயத் தலைவர்கள் செல்வாக்கு பெற்று விளங்குகின்றனர். ஒரு குடும்பத்தின் வெற்றி சிறந்த நற் பிரஜைகளை தோற்றுவிப்பதில் தங்கியுள்ளது. ஒரு பாடசாலையின் சமூகத்தின் வளர்ச்சி மாணவர்களுக்கான நேர்த்தியான சந்தர்ப்பங்களை ஏற்படுத்தி அவர்களை உற்சாகப்படுத்துவதில் தங்கியுள்ளது. ஒரு நாட்டினது அபிவிருத்தி மாணவர்களது திறமைகளுக ;கேற்ப சமவாய்ப்புக்களை வழங்குவதில் தங்கியுள்ளது.

மாணவர்களிடம் உறைந்து கிடக்கும் அவர்களது திறமைகளை ஆளுமைகளை நவீன சிந்தனா சக்தியினை தட்டிக் கொடுக்கும் போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். அத்தகைய தட்டிக்கொடுப்புக்களும், கண்டிப்புக்களும் இன்று தூரமாகி விட்டமை கவலைக்கிடமானதே. அது மாத்திரமன்றி இன்றைய மாணவர்கள் இவற்றை எதிர்பார்ப்பதில் இருந்தும் தன்னால் முடியும் என்கின்ற அதீத சுய நம்பிக்கையில் செயற்படுவதனையும் காணலாம். இத்தகைய செயற்பாடுகளில் பெற்றோர்கள் மற்றும் ஆசிர்pயர்கள் அதிககவனம் செலுத்துவது அவசியமாகும். பாடசாலைக் கல்விமுறையில் வினைத்திறனான விளைத்திறனாக கற்றல் கற்பித்தலை ஏற்படுத்துவதில் இந்த ‘ஊக்கப்படுத்தல்’ (Motivation) பாரிய பங்களிப்பினை பெறுகின்றது.

இதனூடாக மாணவர்களை சிறந்த நன்நடத்தை மற்றும் சிறந்த மனவெழுச்சிகளுடன் கூடிய மாணவர்களை தோற்றுவிக்கலாம். மாறாக மாணவர்களை கல்வியில் எவ்விதமாக உற்சாகப்படுத்த முடியும் என்பதனை அறிந்திருத்தல் அவசியமான விடயமாகும். உற்சாகம் என்கின்ற போது மாணவர்களது செயற்பாடுகளில் அவர்களை மேலும் ஆர்வத்துடன் ஈடுபட வைப்பதாக குறிப்பிடலாம். குறிப்பாக மனிதர்களை தன்னுடைய குறிக்கோள்களை இலக்குகளை நோக்கி நகரச் செய்வதற்குரிய உளரீதியான உற்சாகத்தை ஏற்படுத்துவதனை இவ் உற்சாகம் விளக்குகின்றது. மாணவர்களை கல்வியில் உற்சாக மூட்டுதல் என்று குறிப்பிடும் போது அது அவர்களது இலக்குகள் மீதான கவனக் குவிப்பை ஏற்படுத்திகவனச் சிதறல்களில் இருந்தும் அவர்களை பாதுகாப்பதாக அமைகின்றது.

மாணவர்களை இலக்கு சார்ந்த நடத்தைகளுக்குள் (Goal Oriented  Behaviours) வரையறுப்பதனை மாணவர்களது உற்சாகப்படுத்தும் முறையாக குறிப்பிடப்படுகின்றது. இவ்வாறு மாணவர்களை இலக்கு சார்ந்த நடாத்தைகளுக் குற்படுத்தும் போது அவர்களாகவே அவர்களது இலக்குகளுக்கு தேவையான உள ஆயத்தம், ஆர்வம் மற்றும் அவர்களது செயற்பாடுகளில் அவர்களுக்குரித்தான ஒருமித்த நடத்தைகள் மற்றும் அவர்களது இலக்கு நோக்கிய பயணங்களில் அக்கறையுடன் செயற்படக் கூடியவர்களாக உருமாறுகின்றனர்.

மாணவர்களது ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்தல், திறன்களை அபிவிருத்தி செய்தல், ஆர்வத்தை ஏற்படுத்தல், இலக்குகளை தோற்றுவித்தல் மற்றும் மாணவர்களை வகுப்பறை செயற்பாடுகளில் ஈடுபடுத்த வைப்பதனால் அவர்களது சுதந்திர சிந்தனைகள் மற்றும் ஆக்கச் சிந்தனைகள் விருத்தி செய்ய கூடியதாக அமையும்.

அவர்களை கற்றலில் மேலும் கற்க வேண்டும் என்கின்ற தன்னார்வத்தினை ஏற்படுத்தும். உற்சாகப்படுத்தபடாத மாணவர்கள் அவர்களது கல்விச் செயற்பாடுகளில் அதிருப்தி அடையும் நிலையினை அவதானிக்கலாம். அது மாத்திரமன்றி நடத்தைக் கோலங்களிலும் மாற்றம் ஏற்படுவதற்குரிய சந்தர்ப்பங்கள் அதிகம். இத்தகைய மாணவர்கள் சமூக விரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புக்கள் ஏராளம்.

ஏன் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்?

குறிப்பாக மாணவர்கள் என்று வரும் போது அவர்கள் வளர்கினறவர்களாகவும் அவர்களது ஒவ்வொரு செயற்பாடுகளும் சிறந்த விளைவுகளை ஏற்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப் படுகின்றது. அதுமாத்திரமன்றி அவர்களது நடத்தைகள் சமூகத்தில் பாரிய செல்வாக்கினை ஏற்படுத்தும் என்பதிலும் ஐயமில்லை. அவ்வகையில் மாணவர்களது செயற்பாடுகளில் முன்னேற்றம் இன்றி தேக்க நிலைக்குற்படும் பட்சத்தில் அங்கு இயக்கம் மறுக்கப்படுகின்றது. இத்தகைய நிலையிலிருந்தும் அவர்களை உற்சாகப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளாக இந்த ஊக்கம் நிலை பெறுகின்றது.

குறிப்பாக ஒரு வேலையை ஆற்றுவதற்கு வலு எந்தளவிற்கு முக்கியமோ அவ்வாறே மனிதன் தன்னுடைய செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு இந்த ஊக்கமும் அவசியமாகின்றது, குறிப்பாக மாணவர்களை ஊக்கப்படுத்தும் போது அவர்களது ஆற்றல்கள் மற்றும் புதிய விடயங்களை ஆராய்வதில் அவர்களுக்குரிய ஆர்வம் உறுதிப்படுத்தப்படுகின்றது, மாறாக மாணவர்கள் என்ன கற்கிறார்கள் என்றும் அவர்கள் எவ்வகையான இலக்குகளை அடைய வேண்டும் அதற்குரிய முன் ஆயத்தங்கள் எவ்வாறு அமைய வேண்டும் போன்ற விடயங்களில் தெளிவுத் தன்மை ஏற்படுத்தப் படுகின்றது. குறிப்பாக மாணவர்கள் இலக்குகள் நிர்ணயிக்கும் பட்சத்தில் அவ் இலக்கை அடைவதற்குரிய வழிமுறைகளை அவர்களால் தோற்றுவித்துக் கொள்ள முடியும்.

குறிப்பாக கற்றலில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் பட்சத்தில் அதனூடாக எண்ணிலடங்கா நன்மைகளை பெற்றுக் கொள்கின்றனர். அவர்களது இலக்கை அடைவதில் உள்ளமுயற்சிகளை தொடர்ச்சியாக ஏற்படுத்துகின்றனர். மாத்திரமன்றி மாணவர்களது செயல்திறன்களின் (performance) மூலமாக ஆரோக்கியமான விளைவுகளுடைய தாக்குகின்றனர். அத்துடன் முயற்சிகளுடன் கூடிய கற்றல் முறைகள் அதிகரிக்கின்றன. சுருக்கமாக கூறுவதென்றால் மாணவர்கள் மாணவர்களாக இயங்குகின்ற ஒரு சூழலினை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த ஊக்கம் சிறப்புறுகின்றது.
மாணவர்களை எவ்வாறு ஊக்கப்படுத்தலாம்?

1. வளர்ச்சிப் பாங்கான மனநிலை

மாணவர்கள் தங்களிடம் காணப்படுகின்ற அடிப்படை இயலுமைகளினூடாக தாம் ஏற்படுத்துகின்ற கடின உழைப்பு முயற்சி போன்றவற்றினூடாக தங்களை தாங்களே முன்னேற்றிக் கொள்ள முடியும் என்று எண்ணத்தில் மற்றும் மனோநிலையில் ஏற்படுத்துகின்ற மாற்றமே வளர்ச்சிப்பாங்கான மனநிலை என்று குறிப்பிடலாம். ஆறிவினை வளர்த்துக் கொள்ள வழங்குகின்ற முக்கியத்துவத்தினை காட்டிலும் அவர்களது செயற்பாடுகளை நடவடிக்கைகளை அவர்களுடைய ஈடுபாடுகளை அவதானித்து அவற்றுக்கு பாராட்டுதலகள் வழங்குவதனையே குறிப்பிடுகின்றது, அவற்றுக்கான வாய்ப்புக்களையும் உருவாக்கிக் கொடுத்தல் அவசியமாகும். மாணவர்களது முயற்சிகள ;மற்றும் அவர்களது கற்கையில் அவர்கள் காட்டுகின்ற கடினமான செயற்பாடுகள், அவர்களது கவனம் போன்றவற்றை உணர்வுபூர்வமாக ஏற்றுக்கொள்ளும் போது அவர்கள் வலிமை மிக்கவர்களாக உருவாகின்றனர். வளர்ச்சிப் பாங்கினை ஏற்படுத்துகின்ற சூழலினை ஏற்படுத்தும் பட்சத்தில் அங்கு தரமான செயற்பாடுகளை ஏற்படுத்த முடியும். மாணவர்களை வலிமையுடையவர்களாக உருவாக்க முடியும்.

2. மாணவர்களைமுழுமையாகஅணுகும் முறை

பொதுவாக மாணவர்களது ஆரம்பக் கல்விமுறை அல்லது பாடவிடயங்கள் தொடர்பாக அவர்களிடம் காணப்படுகின்ற அறிவாற்றல்கள் தெளிவுத் தன்மையானது தொடர்ந்து வரும் அவர்களுடைய கல்வி செயற்பாடுகளில் தாக்கம் செலுத்தக் கூடியதாக காணப்படுகின்றது. அவ்வகையில் மாணவர்களது இத்தகைய தொடர்ச்சித் தன்மையானது ஆசிரியர்களது வழிகாட்டல்களில் பிரதானமான செல்வாக்கு செலுத்தும் அம்சமாகும். குறிப்பாக மாணவர்களுடைய பாடவிடயங்களினது அறிவாற்றல்களில் சீரான ஓர் போக்கினை பாடசாலை சூழல் எற்படுத்துவதினூடாக அங்கு சிறந்த பிரதிபலன்களை பெற்றுக் கொள்ள முடியும். இத்தகைய கோட்பாடுகள் காரணமாகவே மாணவர் தேர்ச்சி முறைகள் மற்றும் கணிப்பீட்டு முறைகள் இன்று பாடசாலைக் கல்வியில் செல்வாக்கு பெறுகின்றமை குறிப்பிடத் தக்கவிடயம். மாத்திரமன்றி பாடசாலை நிர்வாகக் குழுக்கள், முகாமைத்துவ செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்களுக்கிடையிலான சிறந்த தொடர்பாடல் முறை காணப்படுதல் அவசியம்.

மேலும் பாடசாலையின் வெற்றி பாடசாலையின் எதிர்பார்ப்புக்கள் என்பன மாணவர்களது ஆளுமைமிக்க கல்வி அறிவின் வெளிப்பாடு என்பதனை மாணவர்களுக்கு புரியவைத்தல் கட்டாயக் கடமை ஆகும். பாடசாலையின் வெற்றியின் ஆணிவேராக மாணவர்களது அடைவுகளும், அவர்களதுவினைத்திறனான செயற்பாடுகளுமே என்பதனை மாணவர்களுக்கு புரியவைத்தல். இதனூடாக மாணவர்கள் தங்களது பொறுப்புக்களினை உணர்ந்து செயற்படுவதுடன் அவர்களை பாடசாலை முன்னேற்றத்தின் உந்து சக்தியாக மாற்றப்படுவது அவர்களை மேலும் வலுபெறச் செய்யும் விடயமாகும்.

3. திறமைகளை வெளிப்படுத்துவதற்குரிய சந்தர்ப்பங் அதிகரிக்கச் செய்தல்

ஒவ்வொரு பாடசாலைகளிலும் சிறந்த நன்னடத்தையுடன் கூடிய கொள்கைகள் உருவாக்கப்படுதல் அவசியம். இக்கொள்கை நடைமுறையாக்கமானது, மாணவர்களது முயற்சி மற்றும் அவர்களது நல்வாழ்வினை அபிவிருத்தி செய்வதற்கு உந்துசக்தியாக அமையும். இதன் மூலமாக மாணவர்கள் உணர்வுபூர்வமாக கற்பதற்கு தங்களை முன் ஆயத்தப் படுத்துவதற்கு, சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது, ஒவ்வொரு பாடசாலைகளும் மாணவர்களது சமூகத்திறன்களை வளர்ப்பதற்கு முன்னுரிமை வழங்குதல் அவசியமாகும். அதனூடாக ஏனைய நபர்களுடன் அக்கறையுள்ள, அன்பான மற்றும் மனவெழுச்சி சார்ந்தவர்களாக தங்களது சமூக இடைவினைத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வர்.

இதன் மூலமாக தங்களது நண்பர்களுக்கிடையிலான சுமூகமான தொடர்பாடல்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இச் சமூக செயன்முறையானது மாணவர்களது ஊக்கப்படுத்தும் செயற்பாடுகளில் செல்வாக்கு செலுத்தக் கூடியது. ஒவ்வொரு மாணவனது செயற்பாடுகளும் அவர்களது முன்னேற்றத்துடன் மாத்திரம் முடிவடைவதில்லை என்பதனை உணர்த்தி, சமூக விருத்தியில் நாட்டின் அபிவிருத்தியில் செல்வாக்கு செலுத்துவதனை மாணவர்களுக்கு உணரச் செய்வது இதன் நோக்கங்களில் ஒன்றாகும்.

4. பாராட்டுதல்

அனைத்து விதமான கற்றல் முறைகளும் முயற்சிகளினூடாக அடையக்கூடியது, எனவேமாணவர்கள் வெற்றிகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும். சிறுவர்கள் தற்களது திறமைகளை உணரும் பட்சத்தில் அதனை அபிவிருத்தி செய்யும் செயற்பாடுகளில் அதில் ஆர்வம் உள்ளவர்களாக மாறும் நிலை ஏற்படுகின்றது. இத்தகைய நிலையினை தோற்றுவிப்பதில் பாராட்டுதல் பிரதான இடத்தினை பெறுகின்றது எனலாம்.

5.அனைவருக்கும் பெற்றுக் கொள்ளும் முறை அனைவரும் பங்குபெறச் செய்யும் சூழலிற்கு முக்கியத்தவம் வழங்கல்.

இதன் நோக்கம் அனைவருக்குமான பெற்றுக ;கொள்ளும் சமத்துவ சூழலினை ஏற்படுத்தல். அனைத்து மாணவர்களும் உள்வாங்கப்படுதல். மாணவர்களது அறிவாற்றல் கிரகித்தல் தன்மைக்கேற்ப அவர்களை வேறுபடுத்தி நோக்காது அனைத்து மாணவர்களுக்கும் சம வாய்ப்பளித்தல் அவசியமாகின்றது. மாணவர்களது தனித் திறமைகள் அடையாளப்படுத்தப்பட்டு அவற்றை அவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடிய சூழலினை ஏற்படுத்தி கொடுப்பது அவசியமாகும். குறிப்பாக கல்வியில் ஆர்வம் குறைந்த மாணவர்கள், எழுத்தாக்கத் திறமைகள் உடையவர்களாக காணப்படுவர்.

அத்தகைய மாணவர்களுக்கு அதற்குரிய சந்தர்ப்பத்தினை வழங்குவது அவசியமே. மாணவர்கள் திறமை அறிந்து அவர்களை சுய நம்பிக்கையுடன் மேம்படுத்தல் முக்கியமாகும். மேலும் வெற்றி என்பது தனி நபர்தங்களது திறமைகளில் தேர்ச்சிப் பெறுவதாகவே இருக்கின்றது. பொதுவாக மாணவச் செல்வங்களினது கல்விசார் செயற்பாடுகள் மற்றும் அவர்களது ஆளுமைவிருத்தி செயற்பாடுகளில் பாதிப்பு ஏற்படாதவகையில் சிறப்பாக கையாளும் போது அவற்றை ஊக்கப்படுத்தி மேலும் விருத்தி செய்வதற்குரிய சந்தர்ப்பங்களை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் முன்நின்று செயற்படுத்துவது அவசியம் ஆகும்.

நன்றி: 01.01.2023 ஞாயிறு தினக்குரல்.

Previous Story

ரணில் பற்றி இம்ரான் எம்.பி.!

Next Story

சௌதி: மாதம்  655 கோடி புதிய வரலாறு - ரொனால்டோ