பாக். இடம் அமைதிப் பேச்சு:வேறு வழி இல்லை-பரூக் அப்துல்லா

முன்னாள் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் ஃபரூக் அப்துல்லா காஷ்மீர் மாநிலத்தில் முன்னதாக இரு காவல்துறையினர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் கருத்து தெரிவித்துள்ளார். பாக்., இடம் பேச்சுவார்த்தை நடத்துவது தவிர வேறு வழி இல்லை என அவர் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் அவ்வப்போது பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் அத்துமீறி தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. இதன் காரணமாக ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் அடிக்கடி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர்.

முன்னதாக காஷ்மீரின் பந்திப்போரா பகுதியில் இரண்டு காவலர்கள் மீது பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த பரூக் அப்துல்லா பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தானிடம் பேச்சுவார்த்தை நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று கூறியுள்ளார்.’சமீபத்தில் 2 போலீசார் கொல்லப்பட்டதை அடுத்து நாங்கள் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்று நினைக்கிறீர்களா?’ என காட்டமாக பத்திரிகையாளர்களிடம் கேள்வி எழுப்பிய பரூக் அப்துல்லா, இது ஒரு சோகமான நிகழ்வு என்றும் இதில் அரசியல் கேள்விகள் வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார் இஸ்லாமியர்கள் நமாஸ் தொழுகை பொது இடங்களில் மேற்கொள்வது குறித்து விமர்சித்து கருத்து தெரிவித்திருந்தார். பொது இடங்களில் இஸ்லாமிய தொழுகை நடத்துவது குறித்து பரூக் அப்துல்லா கூறுகையில் இதற்காக தனியாக அவர்களுக்கு இடம் கட்டிக் கொடுக்க முடியுமா என கேள்வி எழுப்பினார். இஸ்லாமியர்களும் இந்தியர்கள்தான், எனவே அவர்கள் பொது வெளியில் தொழுகை நடத்துவது தவறல்ல என்று தெரிவித்துள்ளார்.

மேலும் காஷ்மீர் மாநில கட்சிகள் மீதான மத்திய பாஜ., அரசின் விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. சீனாவுடன் இந்தியாவின் எல்லை மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும் இந்திய எல்லையை ஒட்டி சீன கம்யூனிச அரசு கிராமத்தை அமைத்து வருவதாகவும் இதற்கு மத்திய பாஜ., அரசு தீர்வு கண்ட பிறகு தங்களிடம் கேள்வி எழுப்பவேண்டும் என்றும் காரசார பதிலளித்தார்.

Previous Story

வன்முறையாளர் கூடாரமாகின்றது பாராளுமன்றம்!!

Next Story

அமெரிக்கா சூறாவளி : பலி  120