பாகிஸ்தான் வெள்ளம்; 100 கி.மீ. நீளத்திற்கு உருவான  ஏரி

பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் சிந்த் மாகாணத்தில் இண்டஸ் ஆற்றில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், அதனை சுற்றியுள்ள கரையோர பகுதிகள் நீரில் மூழ்கி போயுள்ளன.

பாகிஸ்தானின் வெள்ள பாதிப்புகளை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் மோடிஸ் செயற்கைக்கோள் புகைப்படங்களாக எடுத்து உள்ளது.

இதன்படி, கனமழைக்கு முன்பு விளைநிலங்களாக இருந்த பகுதி மிக பெரிய உள்நாட்டு ஏரியாக மாறி காட்சியளிக்கிறது. ஏறக்குறைய 62 மைல்கள் (100 கி.மீ.) தொலைவுக்கு இந்த ஏரி நீண்டு காணப்படுகிறது. இந்த புகைப்படம் கடந்த ஆகஸ்டு 28-ந்தேதி எடுக்கப்பட்டது.

கடந்த ஆண்டு இதே நாளில், இந்த செயற்கைக்கோள் எடுத்த புகைப்படத்தில் ஆறு மற்றும் அதன் கால்வாய்கள் சீராகவும், கட்டுப்படுத்தப்பட்டும் இருந்தது. ஆனால், இந்த ஆண்டில் ஏற்பட்ட பருவமழை பாதிப்பினால், வெள்ள பெருக்கு ஏற்பட்டு அதிர்ச்சி தரும் வகையிலான இந்த உருமாற்றம் நடந்துள்ளது.

பாகிஸ்தானில் 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கனமழை மற்றும் வெள்ள பாதிப்புகள் தொடர்ந்து, மக்களை மீள முடியாத நிலைக்கு கொண்டு சென்று விட்டுள்ளது. கடுமையான மழைப்பொழிவு, வெள்ளம் ஆகியவற்றை முன்னிட்டு நாடு முழுவதும் தேசிய அவசர நிலையை அறிவித்து, மீட்பு நடவடிக்கைகளை அரசு துரிதப்படுத்தி வருகிறது. அந்நாட்டில் தொடர்ந்து மீட்பு, நிவாரண மற்றும் மறுகுடியமர்த்தும் பணிகள் நடந்து வருகின்றன.

பாகிஸ்தானில், கனமழையால் மொத்த உயிரிழப்பு 1,162 ஆகவும், 3,554 பேர் காயமடைந்தும் உள்ளனர். கடந்த ஜூனில் இருந்து 3.3 கோடி பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Previous Story

புத்தளம்: நான்கு பிள்ளைகளை பெற்றெடுத்த இளம் தாய்

Next Story

UK: மனைவி குறித்த 18 ஆண்டு கால இரகசியத்தை போட்டு உடைத்த ரிஷி சுனக்!