பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியாவை முந்திய அமெரிக்கா!

-க.போத்திராஜ்-

பாகிஸ்தான்

ஐபிஎல் டி20 தொடர் கடந்த இரண்டு மாதங்களாக இந்தியாவில் நடந்தது. ஒரு சூப்பர் ஓவர் கொண்ட ஆட்டம்கூட நடக்கவில்லை. ஆனால், டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கி 11 ஆட்டங்களே நடந்துள்ள நிலையில் 2-ஆவது சூப்பர் ஓவர் ஆட்டம் நடந்துள்ளது.

டல்லாஸ் நகரில் நேற்று நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவை எளிதாக பாகிஸ்தான் வென்றுவிடும் என்றுதான் ரசிகர்கள் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இந்த முடிவு கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ரசிகர்களுக்கும், அணியினருக்குமே அதிர்ச்சியாக இருந்தது. கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டும், முதல் போட்டியில் மோசமான தோல்வியை பாகிஸ்தான் சந்தித்துள்ளது.

அமெரிக்க அணி(யுஎஸ்ஏ) சர்வதேச கிரிக்கெட்டுக்கு வந்த சில ஆண்டுகளில் பெற்ற மிகப்பெரிய வரலாற்று வெற்றி இதுவாகத்தான் இருக்க முடியும். பாகிஸ்தானின் பேட்டர்களை தங்கள் பந்துவீச்சால் திணற வைத்து, பந்துவீச்சாளர்களுக்கும் சவாலாக இருந்த அமெரிக்க அணி திறன்மிக்க அணியாகத் தன்னை வெளிப்படுத்தியுள்ளது.

டல்லாஸ் நகரில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அமெரிக்க அணி.

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. 160 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய அமெரிக்கா 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்து சூப்பர் ஓவருக்கு ஆட்டத்தைக் கொண்டு சென்றது.

சூப்பர் ஓவரில் அனுபவம் வாய்ந்த அணிபோல் செயல்பட்ட அமெரிக்கா அணி ஒரு ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 18 ரன்கள் சேர்த்தது. பாகிஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 13 ரன்கள் சேர்த்து 5 ரன்களில் தோல்வி அடைந்தது.

இந்த வெற்றியின் மூலம் குரூப் ஏ பிரிவில் அமெரிக்கா அணி 2 போட்டிகளில் 2 வெற்றி 4 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்ததாக அயர்லாந்து அணியை மட்டும் பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வென்றுவிட்டால் சூப்பர்-8 சுற்றுக்குள் அமெரிக்கா செல்வதற்கு வாய்ப்புள்ளது.

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

பாகிஸ்தானுக்கு சிக்கல்

பாகிஸ்தான் அணி தனது முதல் லீக் ஆட்டத்திலேயே அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்திய அணியுடன் ஒரு ஆட்டம், கனடா, அயர்லாந்து ஆகிய அணிகளுடனான ஆட்டங்களில் கட்டாயம் வென்றால்தான் சூப்பர்-8 சுற்றுக்குள் செல்ல முடியும்.

அமெரிக்கா தனது 3-ஆவது லீக் ஆட்டத்தில் அயர்லாந்து அணியை வெல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் பாகிஸ்தான் அணி சூப்பர்-8 சுற்றுக்குச் செல்ல வாய்ப்புள்ளது.

ஒருவேளை அயர்லாந்து அணியை அமெரிக்கா வென்றுவிட்டால் 6 புள்ளிகளுடன் நிற்கும். பாகிஸ்தான் அணி தனது மீதமிருக்கும் 3 ஆட்டங்களிலும் கண்டிப்பாக வெல்ல வேண்டும். இல்லாவிட்டால், லீக் சுற்றோடு வெளியேற வேண்டியிருக்கும்.

அமெரிக்க அணியின் கேப்டன் மோனக் படேல் கூறுகையில் “பாகிஸ்தானை வீழ்த்தியது மிகப்பெரிய சாதனை. முதல்முறையாக அந்த அணியுடன் மோதி வெற்றி பெற்றோம். சூழலை நன்கு பயன்படுத்திக்கொண்டு 160 ரன்களுக்குள் சுருட்டினோம். எங்களாலும் அந்த ரன்களை எட்ட முடிந்தது, என்னுடைய பங்களிப்பும், அணியின் பங்களிப்பும் மகிழ்ச்சியளிக்கிறது.”

உலகக் கோப்பையில் இதுபோன்ற வாய்ப்பு ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்காது எனக் கூறிய மோனக் படேல், “பாகிஸ்தானுக்கு எதிராக ஒவ்வொரு பந்தையும் அர்ப்பணிப்புடன் வீச வேண்டும் என்று திட்டமிட்டோம், அணியின் ஒட்டுமொத்த உழைப்பால்தான் வெற்றி சாத்தியமானது” எனத் தெரிவித்தார்

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

வெற்றிக்குக் காரணமான இந்திய வம்சாவளியினர்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மோனக் படேல் 38 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு முக்கியக் காரணமாகி ஆட்டநாயகன் விருது வென்றார். இவர்தவிர பந்துவீச்சில் சௌரப் நேத்ரவால்கர், ஹர்மீத் சிங், நோதுஸ் கென்ஜி ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினர்.

அதிலும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான நேத்ரவால்கர் பிரதான ஆட்டத்திலும், சூப்பர் ஓவரிலும் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு சவாலாகத் திகழ்ந்தார். 4 ஓவர்கள் வீசிய நேத்ரவால்கர் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சௌரவ் நேத்ரவால்கர் மும்பையைச் சேர்ந்தவர். படிப்புக்காக அமெரிக்கா வந்து இங்கு செட்டில் ஆகிவிட்டார். தற்போது ஆரக்கிள் நிறுவனத்தில் பணியாற்றிக்கொண்டே, அமெரிக்க தேசிய கிரிக்கெட் அணியில் இடம் பெற்று, சூப்பர் ஓவரில் வெல்லக் காரணமாக இருந்தார்.

டெல்லியில் பிறந்த நிதிஷ் குமார்தான் சூப்பர் ஓவரில் சிறப்பாக பேட் செய்து அமெரிக்கா வெல்லக் காரணமாக அமைந்தார்.

அது மட்டுமல்லாமல் அமெரிக்க அணியில் இடம் பெற்றுள்ள ஹர்மீத் சிங் 2012ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் இந்திய அணியில் இடம் பெற்றவர். அப்போது பாபர் ஆசமும், ஹர்மீத் சிங்கும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் நேருக்கு நேர் விளையாடியுள்ளனர்.

அதன்பின் ஏறக்குறைய 12 ஆண்டுகளுக்குப் பின் 2024 டி20 உலகக் கோப்பைத் தொடரில் அமெரிக்க அணியில் இடம் பெற்று மீண்டும் ஹர்மீத் சிங்கும், பாபர் ஆசமும் மோதியுள்ளனர்.

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

பாகிஸ்தானின் மோசமான பந்துவீச்சு, பேட்டிங்

பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சும், பேட்டிங்கும் நேற்று மோசமாக இருந்தது. பாபர் ஆசம்(44), சதாப்கான்(40) சேர்த்த ஸ்கோர்தான் அதிகபட்சம். மேல்வரிசை, நடுவரிசை பேட்டர்கள் யாரும் சிறப்பாக பேட் செய்யவில்லை. டெய்லெண்டர் பேட்டர் அப்ரிதி 23 ரன்கள் சேர்த்தார். இவரும் ஆட்டமிழந்திருந்தால் 145 ரன்களில் பாகிஸ்தான் அணி முடங்கியிருக்கும்.

பாகிஸ்தான் அணியில் உலகத் தரம்வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தபோதிலும் அவர்களால் அமெரிக்க பேட்டர்களின் மன உறுதியைச் சிறிதுகூட உடைக்க முடியவில்லை. சராசரியாக 130 கி.மீ வேகத்தில் பந்துவீசிய அமெரிக்க பந்துவீச்சாளர்கள் பாகிஸ்தான் பேட்டர்களுக்கு சிம்மசொப்னமாகத் திகழ்ந்தனர். அமெரிக்காவின் தரமான சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சைச் சமாளித்து ஆடமுடியாமல் பாகிஸ்தான் பேட்டர்கள் திணறினர்.

குறிப்பாக பாகிஸ்தானின் அனுபவம் மிக்க பந்துவீச்சாளரான முகமது அமிர், சூப்பர் ஓவரில் 3 வைடு பந்துகளை வீசினார், ரிஸ்வான் ஒரு ஓவர்த்ரோ வீசி ரன்களை வழங்கி தோல்விக்கு முக்கியக் காரணமாகினார்.

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

சூப்பர் ஓவரில் தங்களின் வெற்றிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் அமெரிக்க பேட்டர்கள் திருடிக்கொண்டனர். பாகிஸ்தான் அணியின் ஒழுங்கற்ற பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் ஆகியவை சூப்பர் ஓவரில் அமெரிக்கா 18 ரன்கள் சேர்க்க உதவியது.

அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் கடைசி பந்தில் சதாப்கான் ஒரு சிக்சர் அடித்திருந்தால் 2-ஆவது சூப்பர் ஓவருக்கு ஆட்டம் சென்றிருக்கும். ஆனால் கடைசி பந்தில் அவர் ஒரு ரன் எடுக்கவே அமெரிக்கா வெற்றி பெற்றது.

அனுபவம் குறைந்த அமெரிக்க அணியிடமே தோற்றுவிட்ட நிலையில் அடுத்ததாக வரும் 9ஆம் தேதி இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி என்ன செய்யப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது. பாகிஸ்தான் அணிக்கு 2024 உலகக்கோப்பையில் கிடைத்த மிகப்பெரிய தோல்வியாகவும், பின்னடைவாகவும் இது அமைந்துள்ளது.

பிரதான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு சிம்மசொப்னமாக இருந்து பந்துவீசிய சௌரப் நேத்ரவால்கர் சூப்பர் ஓவரிலும் பந்துவீசி பெரிய தலைவலியை ஏற்படுத்தினார். நேத்ரவால்கர் சூப்பர் ஓவரில் பந்துவீசிய விதம் அற்புதமாக இருந்தது. மிதவேகப் பந்தாக வீசியபோதிலும் லைன் லென்த்தில் மாற்றாமல் பிட்ச் செய்து பாகிஸ்தான் பேட்டர்களை திணறவிட்டார்.

பாகிஸ்தான் கேப்டன் கூறியது என்ன?

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் கூறுகையில், “பேட்டிங்கில் முதல் 6 ஓவர்களை நாங்கள் தவறவிட்டோம். எங்களுக்கான தருணத்தைப் பிடிப்பதற்குள் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தோம். பந்துவீச்சிலும் நாங்கள் பவர்ப்ளே ஓவருக்குள் விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.”

“சுழற்பந்துவீச்சாளர்களாலும் முடியவில்லை. அமெரிக்கா அணி பந்துவீச்சு, பேட்டிங், ஃபீல்டிங் என மூன்றிலும் சிறப்பாகச் செயல்பட்டது. அதனால்தான் அவர்கள் வென்றனர். ஆடுகளத்தில் ஈரப்பதம் லேசாக இருந்தது, அதனால்தான் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைத்தது. அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பாகச் செயல்படுவோம்,” என்று தெரிவித்தார்.

சூப்பர் ஓவரில் என்ன நடந்தது?

அமெரிக்க, பாகிஸ்தான் அணியும் 159 ரன்கள் சேர்த்து ஆட்டம் டையில் முடிந்த நிலையில் சூப்பர் ஓவருக்கு சென்றது. சூப்பர் ஓவரில் அமெரிக்கா பேட் செய்தது. ஆரோன் ஜோன்ஸ், ஹர்மீத் சிங் பேட் செய்தனர். முகமது அமீர் வீசிய முதல் பந்தில் ஜோன்ஸ் பவுண்டரியும், 2வது பந்தில் 2 ரன்களும், 3வது பந்தில் ஒரு ரன்னும் சேர்த்தார்.

நான்காவது பந்தை ஹர்மீத் எதிர்கொண்டார். அமீர் வைடாக வீசியதில் 2 ரன்களும், அடுத்த பந்தில் ஒரு ரன்னும் எடுத்தனர். 5வது பந்திலும் அமீர் வைடாக வீசவே 2 ரன்கள் கிடைத்தது. 5வது பந்தில் ஜோன்ஸ் 2 ரன்களும், கடைசி பந்தில் மீண்டும் அமீர் வைடாக வீசவே, ஓவர் த்ரோ மூலம் 3 ரன்களும் கிடைத்தது. கடைசி பந்தில் ஜோன்ஸ் 11 ரன்னில் ஆட்டமிழக்கவே 18 ரன்களை அமெரிக்கா சேர்த்தது.

பாகிஸ்தானின் இப்திகார், பாபர் ஆசம் 19 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கினர். நேத்ரவால்கர் வீசிய முதல் பந்தில் இப்திகார் ரன் எடுக்கவில்லை. 2வது பந்தில் இப்திகார் பவுண்டரி விளாசினார். நேத்ரவால்கர் 3வது பந்தை வைடாக வீசிய நிலையில் அடுத்த பந்தில் இப்திகார் ஆட்டமிழந்தார். 3 பந்துகளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 14ரன்கள் தேவைப்பட்டது.

அடுத்து வந்த சதாப்கான் ஸ்ட்ரைக்கை சந்தித்தார். நேத்ரவால்கர் 4வது பந்தை வைடாக வீசிய நிலையில் அடுத்த பந்தில் லெக்பை மூலம் 4 ரன்கள் கிடைத்தது. 5வது பந்தில் சதாப்கான் 2 ரன்கள் எடுத்தார். கடைசி ஒரு பந்தில் பாகிஸ்தான் வெற்றிக்கு 7 ரன்கள் தேவைப்பட்டது. சிக்சர் அடித்தால் மீண்டும் 2வது சூப்பர் ஓவருக்கு தயாராக வேண்டியிருந்தது.

ஆனால், கடைசி பந்தில் நேத்ரவால்கர் தாழ்வாக வீசவே அதை சதாப்கான் பவுண்டரி அடிக்க முயன்றும் ஒரு ரன் மட்டுமே கிடைத்தது. இதனால் 5 ரன்களில் அமெரிக்கா வென்றது.

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

நேத்ரவால்கர், கென்ஜியின் பந்துவீச்சு

அமெரிக்க அணியின் வெற்றிக்கு இடதுகை வேகப்பந்துவீச்சாளர் நேத்ரவால்கரும், சுழற்பந்துவீச்சாளர் கென்ஜியும் முக்கியக் காரணம். பவர்ப்ளே ஓவருக்குள் பாகிஸ்தான் அணியின் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடி கொடுத்தனர்.

அதிலும் நேத்ரவால்கர் பந்துவீச்சில் ரிஸ்வான் அடித்த ஷாட்டில் ஸ்டீவன் டெய்லர் பிடித்த கேட்ச் மிகவும் கடினமானது. நோதுஷ் கென்ஜி பந்துவீச வந்தபின் உஸ்மான் கான் விக்கெட்டை வீழ்த்தவே பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை பவர்ப்ளே ஓவரில் இழந்தது. அது மட்டுமல்லாமல் பக்கர் ஜமான் விக்கெட்டையும் அலிகான் பந்துவீச்சில் பறிகொடுத்து தடுமாறியது.

பவர்ப்ளே ஓவர்களில் கென்ஜி, நேத்ரவால்கர், ஹர்மீத் சிங் ஆகிய 3 பேரும் மாறி மாறி பந்துவீசி பாகிஸ்தான் பேட்டர்களை திணறவிட்டனர். 15 ஓவர்களுக்குப் பின்புதான் அமெரிக்க பந்துவீச்சு சற்று பின்தங்கியது. மற்றவகையில் அமெரிக்க பந்துவீச்சு அனுபவம் மிக்கதாக இருந்தது.

நடுப்பகுதி ஓவர்களில் கென்ஜி பந்துவீச அழைக்கப்பட்டபின் செட்டில் ஆன பேட்டர் சதாப் கான்(40) விக்கெட்டையும், ஆசம் கான் விக்கெட்டையும் வீழ்த்தி பாகிஸ்தான் சரிவுக்குக் காரணமாக அமைந்தார். நேத்ரவால்கர், கென்ஜி இருவரும் சேர்ந்து 8 ஓவர்கள் வீசி 48 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

டி20 உலகக்கோப்பை USA vs PAK: சூப்பர் ஓவரில் வரலாறு படைத்த அமெரிக்கா, சிக்கலில் பாகிஸ்தான்

அமெரிக்க அணியின் பேட்டிங் எப்படி இருந்தது?

பவர்ப்ளேவில் பாகிஸ்தான் 3 விக்கெட்டுகளை இழந்து 30 ரன்கள் சேர்த்தநிலையில், அமெரிக்க அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 44 ரன்கள் சேர்த்தது.

பாகிஸ்தான் அணி 9.1 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய நிலையில் அமெரிக்க அணி 6.4 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டியது. பாகிஸ்தான் 100 ரன்களை 13.2 ஓவர்களில் எட்டியபோது, அமெரிக்க அணி 12.2 ஓவர்களில் எட்டியது. பேட்டிங்கில் கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் அமெரிக்கா சிறப்பாகப் பயன்படுத்தியது.

அதிலும் கேப்டன் மோனக் படேல், 38 பந்துகளில் அரைசதம் அடித்து வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார். ஆன்ட்ரீஸ் கோஸ், மோனக் இருவரும் 2வது விக்கெட்டுக்கு 68 ரன்கள் சேர்த்து வெற்றிக்கு வலு சேர்த்தனர். கடைசி நேரத்தில் ஆரோன் ஜோன்ஸ் 2 சிக்சர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 36 ரன்கள் சேர்த்தார். நிதிஷ் குமாரின் (14) பேட்டிங்கும், விடாமுயற்சியும் சூப்பர் ஓவருக்கு அழைத்துச் சென்றது.

Previous Story

BJP பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸால் ஆட்சி அமைக்க முடியுமா?

Next Story

மீண்டும் சிறப்பான ஆட்சி வழங்குவேன் -மோடி உறுதி