பதற்றம்: அமெரிக்கா- ஈரான்

மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றத்தை உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிப்பதாக ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடந்த வாரம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணம் செய்தார். பாலஸ்தீனம், அமீரகம், சவுதி உள்ளிட்ட நாடுகளுக்கு அரசியல் ரீதியாக அவர் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணத்தில் அமெரிக்கா – மத்திய கிழக்கு நாடுகள் இடையே உள்ள உறவுக் குறித்து பைடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில், பைடனின் இந்தப் பயணத்தை ஈரான் கடுமையாக விமர்சித்துள்ளது.

இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நஸர் கனானி வெளியிட்ட அறிக்கையில் , ”ஈரானோபோபியா (ஈரான் குறித்து அச்சம்) மூலம் பிராந்தியம் முழுவதும் பதற்றங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்க அமெரிக்கா மீண்டும் முயற்சிக்கிறது.

அணுகுண்டை முதலில் பயன்படுத்திய நாடு அமெரிக்கா. ஆனால், அமெரிக்காவோ மற்ற நாடுகளின் அணுசக்தி விவகாரங்களில் தொடர்ந்து தலையிடுகிறது; ஆயுத மோதல்களைத் தொடங்கியுள்ளது. பிராந்தியத்தில் ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கும் ஈரான் ஒப்புக்கொண்டால், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இணைவதில் அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதாரத் தடைகளை சிலவற்றை நீக்குவதாகவும் ஜோ பைடன் முன்னரே தெரிவித்தார்.

எனினும், அணு ஆயுத ஒப்பந்தத்தில் இதுவரை எந்த முடிவும் இரு நாடுகளிடையே எட்டப்படாமல் உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவை ஈரான் விமர்சித்துள்ளது கவனத்துக்குரியது.

Previous Story

ஜனாதிபதித் தேர்தல்: டலஸ்-ரணில் நேரடிப் போட்டி!

Next Story

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வெற்றி ?