நஜீப் பின் கபூர்
(நன்றி 10.08.2025 ஞாயிறு தினக்குரல்)
“தற்போது பொருளாதாரம் சிறப்பாக நகர்ந்து கொண்டிருக்கினறது என்பதற்கான புள்ளி விபரங்களையும் ஜனாதிபதி அங்கு தெளிவுபடுத்தினார். மற்றுமொரு இடத்தில் எம்மை விட சிறப்பான ஒரு ஆட்சியை மக்களுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்கின்றவர்கள் எவராது இருந்தால் எழுந்து நின்று அதனை எனக்கு விளக்குங்கள் என்று அவர் சவால்விடுத்தார். அப்போதும் எதிரணியினர் அனைவரும் மௌணித்து நின்றார்கள்.”

எமது அரசியல் தலைவர்களின் கதைகளை நாம் நிறையவே பார்த்திருக்கின்றோம் ஆய்வுகளுக்கும் உற்படுத்தியும் வந்திருக்கின்றோம். அவை நாம் பிறப்பதற்கு முன்னையவை பின்னைவை என வகைப்படுத்தலாம். அப்படியான உரைகளில் உச்சம் தொட்ட அதிரடியான உரையை நாம் கடந்த வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் நேரடியாக அவதானிக்க முடிந்தது.
ஜனாதிபதி அனுராவின் அந்த உரை அறிவுபூர்வமாகவும் சிநேகபூர்வமாக விளிப்புணர்வூட்டுவதாக மட்டுமல்ல எச்சரிக்கை கலந்ததாகவும் இருந்தது. நமது கருத்துக்கு ஆதாரம், ஜனாதிபதி அனுர ஒருமணி நேரத்துக்கும் மேலாக உரையாற்றும் போது எதிரணினர் கூட அங்கு பெட்டிப் பாம்பாக அடங்கி நின்றதை அவதானிக்க முடிந்தது.
ஆனாலும் ஜனாதிபதி அனுர இடையிடையே எதிரணியினரையும் தனது உரையில் சினேகபூர்வமாக இணைத்துக் கொண்டு சபையைக் கலகலப்பாக்கியது அரசியல் விமர்சகர்கள் என்றவகையில் நமக்குப் புது அனுபவமாக இருந்தது என்பதனையும் இங்கு சுட்டிக் காட்டி இது அவருக்கே உள்ள அசாதாரண ஆளுமை என்பதனையும் வஞ்சகமின்றி சொல்லித்தான் ஆகவேண்டும்.
இப்போது கருவுக்குள் வருவோம். இப்படி ஒரு பீடிகையை நாம் இங்கு பதிவதற்கு ஒரு காரணமும் இருக்கின்றது. அதனைப் பிரிதொரு இடத்தில் நாம் சுட்டிக் காட்டி இருக்கின்றோம்.
தமது அரசியல் கொள்கைகளுடன் இணக்கமில்லாதவர்களின் கருத்துக்களுடன் முட்டி மோதி அவர்களைப் பலயீப்படுத்தி ஆட்சியைக் கைப்பற்றுவது என்று ஒருமுறைதான் ஜனநாயக நாடுகளில் நடந்து வருகின்றது.

இதனைத்தான் நாம் பெரும்பாலும் பார்க்கக் கூடியதாகவும் இருக்கின்றது. என்றாலும் பல இடங்களில் இரவோடு இரவாக ஆட்சியாளர்களை விரட்டிவிட்டு அதிகாரத்தில் அமர்வதும் கூட நடந்திருக்கின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியைப் சேர்ந்த டட்லி சேனாநயக்க பிரதமராக இருந்து போது 1953ல் அவரது அரசுக்கு எதிராக ஹர்த்தால் நடந்தது. அவ்வேளை பிரதமர் டட்லி பதவியை விட்டு ஓடி துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கப்பலில் ஏறிப்பாதுங்கிக் கொண்டதாக கதைகள் இருக்கின்றன.
அது போன்றே கோட்டபே ராஜபக்ஸவும் மக்களின் எதிர்ப்புக்குத் தாக்குப்பிடிக்க முடியாது உயிரைப் கையில் பிடித்துக் கொண்டு பின்கதவால் மாலைத் தீவுக்கு ஓடியதையும் நாம் நேரில் பார்த்தோம்.

உலக அரசியலை எடுத்துக் கொண்டாலும் பதவியில் இருக்கின்ற ஆட்சியாளர்களை விரட்டிவிட்டு அதிரடியாக கதிரையில் அமர்ந்து கொண்ட நிகழ்வுகளும் நிறையவே நடந்திருக்கின்றன. அவற்றில் மக்கள் போராட்டங்கள் இராணுச் சதிகள் விடுதலைப் போர்கள் புரட்சிகள் என்று பலவகைகளில் அது அமைகின்றது. எனவே நாடுகளில் எந்த நேரத்திலும் அல்லது ஒரு சம்பவம் அல்லது பல நிகழ்வுகள் காரணமாக பதவியில் இருக்கின்ற அரசாங்கத்தை மக்கள் தூக்கி வீசுவார்கள்-வீசமுடியும்.
குடிகளின் உணர்வுகள் வெடித்துச் சிதறுகின்ற போது சட்டமோ சம்பிரதாயமோ அரசியல் யாப்போ அதற்கு தாக்குப்பிடிக்க முடியாது போகும். அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவை அங்கு கோமா நிலைக்கு சென்றுவிடும். அப்படியான நிலமைகள் எது என்பதனைக் காலமும் சம்பவங்களும்தான் தீர்மானிக்கின்றன.
தற்போது மிகப் பெரும்பான்மையுடன் என்பிபி. அதிகாரத்துக்கு வந்திருக்கின்றது. எனவே இவர்களை விரட்டி தாம் அதிகாரத்துக்கு வந்து விட வேண்டும் என்று துடிக்கின்றவர்களும் அவர்களை ஆதரிக்கும் சிறு கூட்டமும் நாட்டில் இருந்து வருகின்றது.
நமது பார்வையில் இன்று இதற்கு வாய்ப்புக்கள் மிகவும் கம்மி. பதவியில் இருக்கின்ற அனுர குமார சம்பிரதாய அரசியல் பரம்பறையில் அதிகாரத்துக்கு வந்த ஒரு மனிதனல்ல. எனவே அவரிடம் பணப்பலமோ சம்பிரதாய தனிநபர் அரசியல் பின்புலமே கிடையாது.
என்றாலும் கொள்கை ரீதியில் பக்குவப்பட்ட ஒரு பலமான செயலணி இன்று அவருக்குப் பின்னால் இருக்கின்றது. எனவே அரசியல் களத்திலிருந்து இவர்களை எடுத்த எடுப்பில் சுவரில் பட்ட பந்து திரும்பி வருகின்ற வேகத்தில் வீழ்த்துவது என்பதும் நடக்கக் கூடிய ஒரு காரியமாக நமக்குத் தெரியவில்லை. என்றாலும் அப்படி எதிர்பார்க்கின்ற பல குழுக்கள் நாட்டில் இருந்து வருகின்றன.

ஜனாதிபதி அனுர குமாரவின் பாதுகாப்புக் குறித்து பல மட்டங்களில் கவலைகளும் எச்சரிக்கைகளும் இருந்து வருகின்றன. இதனை நாமும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக் காட்டி இருக்கின்றோம்.
தற்போது அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற பல நடவடிக்கைகளினால் மிகவும் அச்சத்துக்கும் பயத்துக்கும் கோபத்துக்கும் ஆளாகி இருப்பவர்களினால் இன்று அவருக்கு ஆபத்துக்கள் இருக்கின்றன. அதே நேரம் அவரது அசாதரண ஆளுமையும் அவரது அரசியல் எதிரிகளுக்கு பெரும் சவாலாக இருந்து வருகின்றது. அதில் கூட அவருக்கு அச்சுறுத்தலுக்கு இடமிருக்கின்றது.
அதே போன்று போதை வியாபாரிகள் பாதாள உலகத்ததார். அரசியல்வாதிகளுக்கு ஊழல் புரிய துணை நின்று தாமும் வருமானம் ஈட்டிய அதிகாரிகள் பாதுகாப்புத் தரப்பினர் குற்றக் கும்பல்கள் என்ற ஒரு பெரும் பட்டாலம் இந்த அனுராவுக்கு எதிரான உணர்வுகளுடன் இருக்கின்றன என்பதுதான் யதார்த்தம். அரசியல் புரிகின்றவர்கள் இதனை அறிந்து கொள்வார்கள்.
மேற்சொன்ன பின்புலத்தின் அடிப்படையில் சிந்திக்கின்ற போது இன்றைய அரசியல் சூழ்நிலையின் அடிப்படையில் இந்த அரசை வீட்டுக்கு அனுப்பிவைப்பது என்பது பிஞ்சில் கல்லெறிந்து பழத்தை பறித்துக் கனிய வைக்கின்ற முயற்ச்சி. நாம் முன்பு சொன்ன டட்லி மற்றும் கோட்டா விரட்டப்பட்டது விழ இருந்து மாம்பழத்துக்கு கல்லெறிந்த கதைகள்.
அதனை அனுரவுடன் ஒப்பிடுவது அரசியல் முதிர்ச்சியற்றவர்களின் கணக்கு. நாம் முன்பு ஒரு முறை சொன்னது போல புதிய அரசை கையேற்க ஏதாவது ஒரு அரசியல் இயக்கம் அல்லது தலைவர் நாட்டில் இன்று இருக்கின்றதா என்பதனை எண்ணிப்பாருங்கள். பலமான அரசாங்கத்தின் முன்னே இன்று எதிரணியினர் தமக்குள் ஒரு தெருச்சண்டையைத்தான் நடாத்திக் கொண்டு வருவதை நமக்குப் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது.
நமது அரசியல் யாப்புப்படி ஏதேனும் காரணங்களினால் அனுர வீழ்த்தப்பட்டாலும் நாடாளுமன்றம்தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும். கடும் போக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிளிப்பிள்ளைபோல கட்டுண்டு இருக்கின்ற இடத்தில் அனுரவை வீழ்த்துவது எந்தளவுக்கு சாத்தியம்.? அப்படி சிந்திப்பவர்களை மனநலம் பதிக்கப்பட்ட ஒரு கூட்டமாகத்தான் நாம் இன்று அடையாளப்படுத்த முடியும்.
நாம் கடந்த வாரம் சொன்னது போல பிரதான அரசியல் எதிரிகளான சஜித் நாமல் ரணில் போன்றவர்கள் அரசியல் களத்தில் நோயாளிகளாக எதிரும் புதிருமாக பயணித்து வருகின்றார்கள். எனவே அவர்கள் பலயீனப்பட்ட எதிர்க் கட்சிக்கு முதலில் வைத்தியம் பார்க்கின்ற நிலையில் நாம் இருக்கின்றோம் என்பதனைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று கம்மன்பில விமல் வீரவன்ச சம்பிக்க திலித் போன்றவர்கள்தான் ஊடகங்களுக்கு முன் வந்து எதையாவது போசிக் கொண்டிருக்கின்றார்கள். இவர்கள் கோமளிகள் என்பது மக்களுக்குத் நன்றாகத் தெரியும். எனவே மக்கள் இவர்களை ஒரு போதும் கண்டு கொள்ள மட்டார்கள். பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் இவர்கள் இன்று செல்லாக் காசு.
ஏதாவது இசுவை கொண்டு வந்து அன்றாடம் ஊடகங்களில் தமது முகங்களை செய்திகளில் காட்சிப்படுத்துகின்ற ஒரு நாடகத்தைதான் இவர்கள் இன்று அரங்கேற்றி வருகின்றார்கள். சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித்தை போய் சந்தித்திருந்தார்கள். இன்னும் ஒரு குழு ரணிலைப் போய் சந்தித்து புதிய கூட்டணி பற்றி எதிரும் புதிருமாக பேசி இருக்கின்றனர்.
எனது உயிரைப் பறித்துவிட வேண்டும் என்று பலருக்கு எதிர்பார்ப்பும் விருப்பம் இருக்கின்றது. ஆனால் அதனை இலகுவாக கொய்துவிட முடியாது. இப்படி ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரும் பதவிக்கு வந்த பின்னரும் பல இடங்களில் பேசி இருக்கின்றார். இதே போன்று அவரது பாதுகாப்புக் குறித்து பலரும் அக்கரையுடன் கருத்துக்களைச் சொல்லி வருகின்றார்கள்.
யதார்த்த நிகழ்வுகைளப் பார்க்கின்ற போது ஜனாதிபதி பாதுகாப்பில் பல ஓட்டைகள் இருப்பது தெளிவாகத் தெரிகின்றது. அதனைப் பிரிதொரு இடத்தில் நாம் விரிவாகச் சொல்லி இருக்கின்றோம். மாலைதீவுக்குப் போக வந்த ஜனாதிபதியை வழியனுப்ப வந்த ஜனாதிபதி மெய்ப்பாதுகாவலர்கள் பார்த்த வேலையை ஒருமுறை எண்ணிப்பாருங்கள். அது எதனைச் சுட்டிக்காட்டி இருக்கின்றது.

தனது ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் தான் தற்கொலை தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக கூறிய முன்னாள் ஜேவிபி. நாடாளுமன்ற உறுப்பினர் நந்தன குனதிலக்க அத்தாக்குதலை யார்மீது நடத்துவது என்று அங்கு சுட்டிக்காட்டவில்லை. மேலும் தான் ஆயுதப் பயிற்ச்சி பெற்ற ஒருவன் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இது அரசியல் வட்டாரங்களில் ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளப்பட்டு ஏலனமாக விமர்சிக்கப்பட்hலும் முன்னாள் ஜேவிபி ஜனாதிபதி வேட்பாளாரான அவரது இந்தக் கருத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர் தற்கொலைத் தாக்குதலை யார் மீது நடத்தப் போக்கின்றார் என்று மீண்டும் கேள்வி எழுப்ப வேண்டி இருக்கின்றது. அவரது அந்தக் கருத்து-சிந்தனை மிகவும் ஆபத்தானது.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த வரி இந்த அரசுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுக்கும் என்று எதிரணியினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் அது அப்படி அமையவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த எதிரணியின் ஒரு தரப்பினர் அரசுக்கு வாழ்த்துச் சொல்லி தம்மை சுதாகரித்துக் கொள்ள நாமல் போன்றவர்கள் ஏதோ ட்ரம்புடன் இரகசிய உடன்பாடுகளைச் செய்து கொண்டுதான் அனுர அரசு இந்த சலுகையை அவரிடம் பெற்றதாகச் குற்றம் சாட்டி வருகின்றார். இது ஒரு பட்சோந்திதனம்.
இதற்கும் ஜனாதிபதி சுவரில் சாத்திக் கொடுப்பது போல எதிரணி பொருளாதார விட்பண்ணர்களுக்கும் கோமாளிகளுக்கும் தக்க பதில் கொடுத்திருந்தார். அதில் பலர் மூக்குடைபட்டு அங்கு நெழிந்ததை அவதானிக்க முடிந்தது.
சில்லறை விடயங்களைத் தூக்கிப்பிடிக்கின்ற எதிர்க்கட்சியினர் அரசுக்கு எதிரான கருத்துக்களை விதைக்க முனைகின்றனர். அப்படி ஒரு கதையை சற்றுக் கேளுங்கள் கடந்த ஆறாம் திகதி மகரகம இளைஞர் சேவை மன்றத்தின் முன்னால் நடந்த ஒரு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை தாக்க வசு வண்டியில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஊழியர்கள் அங்கு போய்க் கொண்டிருக்கின்றார்கள் என்று தனக்குத் தகவல் கிடைத்திருக்கின்றது என நாடாளுமன்ற வரப்பிரசாதங்களைப் பவித்து அங்கு அந்த வசுவண்டி இலக்க்ததையும் தருகின்றேன் என்று சபையில் சொன்னார் தயாசிரி தயாசேக்கர.
இந்தக் கதையைத் தேடிப் பார்தத் போது கடந்த ஆட்சி காலத்தில் தற்காலிகமாக வேலைக்கு அமர்த்தப்பட்டு ஏமாற்றப்பட்ட ஒரு தரப்பினர் ஒரு பேச்சுவார்த்தைக்காக தமது அமைச்சுக்குப் போனதை வைத்துக் கொண்டுதான் தயாசிரி இந்த தப்பான தகவலை அங்கு சொல்லி இருக்கின்றார்.

இதற்குத் துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பதில் கொடுகும் போது தயாசிரி சபையிலிருந்து ஸ்கெப்பாகி இருந்தார். இது பற்றி தேடிப்பார்த்த போது தயாசிரிக்கு தவறான தகவலைக் கொடுத்து அவரை மூக்குடைய வைத்த ஒரு செய்தி இது என்று தெரிகின்றது. அண்மை காலங்களில் இது போன்று பல சந்தர்ப்பங்களில் இந்த தயாசிரி மூக்குடைபட்டார்.
ஜனாதிபதி தனதுரையில் ஓரிடத்தில் இந்த அரசு ஒரு வாரம் கூட நீடிக்காது என்று சொன்னவர்கள் ஆகஸ்டில் அரசு விழும் என்று சொன்னார்கள். இப்போது திசம்பரில் என்று சொல்லி இருக்கின்றார்கள் என்று கேள்வி எழுப்ப எதிரணியில் ஒரு குரல் நாம் இந்த திசம்பர் என்று சொல்லவில்லையே என்றது. அப்படியானால் ஏதாவது ஒரு திசம்பரிலா என அனுர திருப்பிக் கேட்க முழு எதிரணயினரும் மௌனித்தனர்.
மேலும் தனிப்பட்ட ரீதியில் எவரையும் தண்டிக்கும் எண்ணம் எங்களுக்குக் கிடையாது. அதற்காக மக்கள் சொத்துக்களைக் கொள்ளையடித்தவர்களை விட்டுவைக்கவும் நாம் தயாராக இல்லை. அவர்களுக்கு தண்டனை என்ற விடயத்தில் நாம் உறுதியாக இருக்கின்றோம் என்றும் அனுர குறிப்பிட்டார். ஈஸ்டர் தாக்குதல் அரசியல் படுகொலைகளுக்கும் நிச்சயம் நியாயம் வழங்குவோம் என்று அவர் மீண்டும் உறுதி செய்தார்.
தற்போது பொருளாதாரம் சிறப்பான நகர்ந்து கொண்டிருக்கினறது என்பதற்கான புள்ளி விபரங்களையும் ஜனாதிபதி அங்கு தெளிவுபடுத்தினார். மற்றுமொரு இடத்தில் எம்மை விட சிறப்பான ஒரு ஆட்சியை மக்களுக்குக் கொடுக்க முடியும் என்று சொல்கின்றவர்கள் எவராது இருந்தால் எழுந்து நின்று அதனை எனக்கு விளக்குங்கள் என்று அவர் சவால்விடுத்தார். அப்போதும் எதிரணியினர் அனைவரும் மௌணித்து நின்றார்கள்.
இந்த நிகழ்வுகளை அவதானிக்கின்ற போது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நொண்டிக் குதிரைகளுடன்தான் களத்தில் நிற்கின்றார் என்பது தெளிவாகத் தெரிகின்றது அதே நேரம் அவரே எதிரணியினருக்கு இப்படியும் ஒரு ஆலோசனையையும் வழங்கி இருக்கின்றார்.
எம்மை விட முன்னேற்றமான ஒரு வேலைத்திட்டத்தை மக்கள் முன் சமர்ப்பித்து அதனுடாக எம்மை பலயீப்படுத்த முடியும், எனவே அந்த முயற்சிகளை பரீட்சார்த்துப் பார்க்கும்படி அவர் எதிரணியினரைக் கேட்டுக் கொண்டார்.





