முதன்முறையாக பிரதமர்
பதவிக்கு பெண் தேர்வு!

ஜப்பான் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. இந்நிலையில், அந்நாட்டின் முதல் பெண் பிரதமராக சனே டகைச்சி தேர்வாகியிருக்கிறார். இவர் நாட்டை நெருக்கடியிலிருந்து மீட்பாரா? என்று எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி ஆட்சியில் இருக்கிறது. இக்கட்சியின் தலைவர் மற்றும் ஜப்பானின் பிரதமராக இருந்த ஷிகெரு இஷிபா ஓராண்டுக்கு பிறகு பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.
ஆனால், ஜப்பான் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் லிபரல் ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே வேறு வழியின்றி கடந்த மாதம் ஷிகெரு தனது பதவியை ராஜினாமா செய்திருந்தார்.
இதனை அடுத்து அவர் சார்ந்திருக்கும் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று டோக்கியோவில் நடைபெற்றது.
இதில் முன்னாள் பொருளாதார பாதுகாப்பு அமைச்சர் சனே டகைச்சி, வேளாண் அமைச்சர் கொய்சுமி உள்ளிட்டோர் போட்டியிட்டு இருந்தனர். முதல் கட்டமாக கட்சிக்குள் நடைபெற்ற வாக்கெடுப்பில், சனே வெற்றி பெற்றார்.
உட்கட்சி தேர்தலில் அவர் 183 வாக்குகளை பெற்று கொய்சுமியை வீழ்த்தி உள்ளார். இதனை அடுத்து லிப்ரோ ஜனநாயக கட்சியின் தலைவராக சனே நேற்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவர் ஜப்பான் நாட்டின் முதல் பெண் பிரதமராக பதவி ஏற்பார் என்று சொல்லப்படுகிறது. பிரதமராக பதவியேற்ற பிறகு நாடாளுமன்றத்தில் அவர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆனால், இவரின் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை.
அதேநேரத்தில் நிதி முறைகேடுகள் தொடர்பாக வாக்காளர்களும் அதிர்ச்சியில் உள்ளனர். இதுபோன்ற சவால்கள் இருந்தாலும் நம்பிக்கை வாக்கெடுப்பில் சனே வெற்றி பெறுவார் என்று கூறப்படுகிறது.
லிப்ரல் ஜனநாயக கட்சி என்பது ஜப்பானின் பழமைவாத கட்சி ஆகும். இப்படிப்பட்ட கட்சிக்குள் இருந்து பெண் ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.
இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த சனே, “இது ஒரு புதிய சகாப்தம்” என்று கூறியிருந்தார். கடந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ச்சியாக தோல்விகளை லிபரல் ஜனநாயக கட்சி சந்தித்திருந்தது.
இக்கட்சியின் தாராளமயக் கொள்கை தற்போது ஜப்பானில் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிக்கு காரணமாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இது தவிர டிரம்ப் விதித்த வரியும் ஜப்பானை நெருக்கடியில் தள்ளியிருக்கிறது.
இதையெல்லாம் சனே எப்படி எதிரகொள்ளப்போகிறார் என்பதே தற்போதைய கேள்வியாக இருக்கிறது.





