நெருக்கடிகளும் பரிகாரங்களும் ஏமாற்றங்களும்

-நஜீப் பின் கபூர்-

நமது நாட்டில் இந்த வாரம் பேச வேண்டிய எத்தனையோ தலைப்புக்கள் குவிந்து கிடக்கின்றன. எதனைப் பற்றிப் பேசுவது எதனைத் தவிர்ப்பது என்பதனைத் தீர்மானிப்பது கூட சற்றுச் சிரமமாக இருக்கின்றது. எனவே பல விவகாரங்களை இந்தக் கட்டுரையில் நாம் பேசுலாம் என்று எதிர்பார்க்கின்றோம்.

எனவே ஒரு சம்பார் பாணியிலான ஒரு பார்வையையே நாம் இந்த வாரம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எதிர்பார்க்கின்றோம். பொருளாதார நெருக்கடி, சர்வகட்சி மாநாடு, இந்திய இலங்கை உடன்பாடும் சீனாவின் மிரட்டல்களும், அரசுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்படாத போராட்டங்கள், தமிழ் தரப்புக்களுக்கான ஜனாதிபதி அழைப்பு என்ற தலைப்புக்களில் சில விடயங்களைப் பார்ப்போம்.

நாட்டில் பொருளாதார நெருக்கடிகளை நாம் சொல்லி மக்கள் தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அதனை இந்த நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு பிரசையும் ஏன் கருவில் உள்ள சிசுகூட உணர்கின்றது. இதற்க்கு நல்ல உதாராணம் தான் பட்டிணிச்சாவில் இருந்து தப்பிக்க மக்கள் இந்தியாவுக்கு ஒடுகின்ற நிகழ்வுகள்;.

நாம் அறிந்த வரலாற்றுக் குறிப்புக்களின் படி 1950 களில் இருந்து 1965 வரையிலான காலப் பகுதிகளில் இந்தியாவில் வாழ வழியில்லாது மக்கள் இலங்கைக்குப் பிழைப்புத் தேடிக் ஓடி வந்தார்கள். அப்படித் வருவோருக்கு கள்ளத்தோனி என்று வேறு நாமமும் அன்று சுட்டப்பட்டதாக வரலாறுகள் தெரிவிக்கின்றன.

இன்று இலங்கையிலிருந்து பசிக் கொடுமையால் இந்தியாவுக்குத் தப்பியோடுகின்ற மக்களை அவர்கள் என்ன பொயர் சொல்லி அழைக்கப் போகின்றார்களோ தெரியாது. இது புதிய வரலாற்றுப் பதிவு. 1970களில் ஸ்ரீமா அம்மையார் காலத்திலும் நாட்டில் ஒரு பட்டணி நிலை வந்தது.

சுதந்திரக் கட்சி ஆட்சி காலத்தில் ஸ்ரீமா உள்நாட்டு உற்பத்தி பெருக்கத்திற்காக பொருட்களின் இறக்குமதி தொடர்பாக கடும் போக்குடன் நடந்து கொண்டதால்தான் அன்று அந்த நிலை வந்தது. அக்காலப் பகுதியில் மிகமோசமாக மலையகத் தமிழர்கள் பாதிக்கப்பட்டனர். அவர்கள் நகரங்களுக்கு வந்து வீதியில் சாப்பாடு தேடுகின்ற ஒரு கொடுமையான நிலை அன்று ஏற்பட்டிருந்தது.

வேற்று கிரக அமைச்சர்கள்

ஆனால் அந்தக் காலத்தில் ஆட்சி செய்த ஸ்ரீமா அம்மையார் நாட்டு மக்களின் செல்வத்தைக் கொள்யடித்தார் என்று இன்று வரை ஒருவர் கூட அவர் மீது குற்றம் சாட்டவில்லை. ஆனால் இன்று கதை அதற்கு முற்றிலும் மாற்றமானது. நேரடியாகச் சொல்வதானால் ஆட்சியில் இருக்கின்ற ராஜபக்ஸாக்களின் நடவடிக்கைளக்தான் நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடிகளுக்கு முக்கிய காரணம் என்று ஆளும் தரப்பில் இருப்பவர்களே தற்போது விமர்சனம் பண்ணுகின்ற நிலை. நாம் அறிந்தவரை சமகாலத்தில் இந்தளவுக்கு குடிமக்களிடத்தில் ஏச்சும் திட்டும் வாங்குகின்ற தலைவர்கள் உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

மக்கள் ஆட்சியாளர்களின் பெயர்களைச் சொல்லியே முகத்தில் ஏசுகின்ற காட்சிகளையும் தலைவர்கள் வீதியில் போகும் போது ஹூ…வைக்கின்ற காட்சிகளும் நமது நாட்டில் அன்றாட நிகழ்வுகளாகி இருக்கின்றன.  அதற்காக தலைவர்கள் வெக்கப்படுவதாகவும் தெரியவில்லை. இந்தளவுக்கு எரிபொருள், சமயல் எரிவாயு, பால்மா அத்தியவசிய  பொருட்களுக்காக மக்கள் இரவு பகலாக தெருவில் இருக்கின்றார்கள்.

இது பற்றி அமைச்சர்களைக் கேட்டால் நான் அப்படியான எந்தக் காட்சிகளையும் காணவில்லை என்று குறிப்பாக அமைச்சர் காமினி லொகுகே கூறி இருந்தார். அதே போன்று எஸ்.பி. திசாநாயக்க தற்போது நாட்டில் பொருட்களின் விலையேற்றம் பற்றிப் போதும் போது உலக நாடுகளுடன் ஒப்பு நோக்கின்ற போது நமது நட்டில் பொருட்களின் விலை ஒன்றும் மோசம் கிடையாது என்றுபேசுகின்றார்.

கடவுளே, இவர்கள் மாற்றுக் கிரகங்களில் இருந்து பூமிக்கு வந்தவர்களா என்றுதான் நாம் கேட்க்க வேண்டி இருக்கின்றது. நாட்டில் இருந்து ஆயிரக் கணக்கானவர்கள் போர் காலத்தில் இடம் பெயர்ந்தது போல தமிழகத்திற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடம் பெயர அதிக வாய்ப்புக்கள் உருவாகி இருக்கின்றன.

அதே போன்று இளவயதினர் இந்த நாடு வாழ்வதற்கு உதவாது வெளியே போனால்தான் தன்னையும் குடும்பத்தையும் பராமறிக்க முடியும் என்று சிந்தனையுடன் கடவுச்சீட்டுக்களுடன் ஓடித்திரிவதை நாம் பார்க்கின்றோம். டொலர் பற்றக்குறை காரணமாக பாடசாலை மாணவர்களின் பரீட்சைகளை உலகில் ஏதாவது ஒரு நாடு தள்ளி வைத்தது என்று நாம் எங்காவது செய்திகளில் இதுவரை படித்திருக்கின்றோமா? எனவே நாட்டின் பொருளாதாரா நெருக்கடிகளின் உச்சத்தை நாம் முன்பு ஒரு முறை சொல்லி இருந்ததைப் போல் வார்த்தைகளில் வடிக்க வேண்டியதில்லை.

மணமகள் இல்லாத கல்யாணம்

சு.கட்சியின் வேண்டுகோளின் பேரில் கூட்டப்பட்ட சர்வகட்சி மாநாடு பற்றி இப்போது பார்ப்போம் இந்த நாட்டை நெருக்கடிக்கு யார்தான் ஆளாக்கினார்களோ அவர்கள் தலைமையில்தான் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் முயற்ச்சிகளும்; நடக்கின்றன.

இதில் பங்கு பற்றியவர்களைப் பற்றி இப்போது பார்ப்போம். ராஜபக்ஸாக்களின் மொட்டு அணி, கூட்டத்துக்கு கோரிக்கை விடுத்த சு.கட்சி. சு.கட்சியினர் சமகால அரசியலில் இரட்டை வேடம் போட்டுக் கொண்டிருக்கின்றனர் என்றுதான் நாம் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றோம்.

இதற்கான காரணங்கள் என்ன என்று  பார்ப்போம். மைத்திரிக்கு தன்மீது ஈஸ்டர் தாக்குதலுக்கான வழக்குகள் போடப்படலாம். தன்னைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விடுவார்கள் என்ற அச்சம் காரணமாக அவர் ஒரு நிலைப்பாட்டை எடுக்க முடியாது அச்சத்தில் இருக்கின்றார். மக்களிடத்தில் பேசும் போது மைத்திரி அரசை விமர்சித்தாலும் ஆளும் தரப்பிலிருந்து அவர் எக்காரணம் கொண்டும் வெளியே போகத் தயாராக இல்லை. இதற்கு மற்றும் ஒரு காரணமும் இருக்கின்றது.

உண்மையிலேயே சு.கட்சி இன்று பல பிரிவுகளாக பிளவு பட்டிருக்கின்றது. பதவியில் இருப்போர் கடைசி நிமிடம் வரை அரசில் ஒட்டிக் கொண்டிருக்க விரும்புகின்றார்கள். நிமல் சிரிபால, எஸ்.பி., மஹிந்த அமரவீர போன்றவர்கள். இன்றும் பலர் மதில் மேல் பூனையாக இருக்கின்றார்கள்.

பாராளுமன்றத்திற்கு வெளியே உள்ள அமைப்பாளர்களில் 95 சதவீதமானவர்கள் கட்சி வெளியேறி மக்கள் மத்தியில் செல்வதற்கு இது மிகவும் சரியான நேரம் என்று கருதுகின்றனர். ஆனால் தலைவர் மைத்திரி தனக்கு எதும் ஆபத்துக்கள் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் அதனைத் தவிர்க்கின்றார் என்பதுதான் எமது வாதம்.

மேலும் தம்முடன் இருக்கின்ற சு.கட்சியினர் இந்த நேரத்தில் நடந்து கொள்ளும் முறை தவறு என்று விமல், வாசு, கம்மன்பில கருதுகின்றனர். அவர்கள் கூட வெளியேற்றப்படாமல் இருந்தால் இன்றும் ஆளும் தரப்பில்தான் இருந்திருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகங்களும் கிடையாது. ஆளும் தரப்பில் இருந்து கொண்டு அரசை விமர்சிக்கின்ற கட்சிகள் முற்றும் முழுதாக சந்தர்ப்பவாத அரசியலைத்தான் செய்து கொண்டு வருகின்றன. இதனை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சர்வ கட்சி மாநாட்டை நாடாளுமன்றில் இருக்கின்ற சஜித் தலைமையிலான பிரதான எதிர் கட்சி, அணுர குமார தலைமையிலான ஜேவிபி. நிராகரித்தன. வாசு, விமல், கம்மன்பில அணிகள் பகிஸ்கரித்தாலும் அவர்கள் சார்பில் இரண்டு பேர் திஸ்ச விதாரண, அதுருலியே தோரர் அங்கு போய் இருக்கின்றார்கள்.

அத்துடன் மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில்தான் அங்கு பிரதான பாத்திரம். அவர் பற்றி நாம் ஏதும் பேசுவது வேஸ்ட். பகிஸ்கரித்தவர்களில் ஜீவன் தலைமையிலான தொண்டா அணியும் இடம் பெற்றிருப்பது சிறப்பம்சமாகப் பார்க்க முடியும்.

எனவே இது மணமகள் இல்லாத கல்யாண வீடு என்றுதான் இந்த மாநாட்டை நாம் அடையாலப்படுத்த முடியும். எனவே  பிள்ளை பிறப்பதற்கு எந்த வாய்ப்பும் கிடையாது. இதில் நமக்குள்ள மிகப் பெரிய ஆச்சர்யம் என்னவென்றால் தமிழர் தரப்பில் மூத்த தலைவர்கள் கூட அங்கு பிரசன்னமாகி இருந்ததுதான்.

இதற்கு முன்னர் தேசிய அரசாங்கம் ரணில் பிரதமர் என்ற கருத்துக்களை தெற்கு பேரின ஊடகங்கள் சொல்லி வந்தபோது அப்படி ஏதுவும் நடக்க வாய்புக் கிடையாது என்று நாம் அடித்துச் சொல்லி இருந்தோம். இந்த சர்வ கட்சி மாநாடு கவனத்தை திசை திருப்பும் மற்றுமொரு முயற்ச்சி இதில் ஆகப்போவது ஏதுவும் கிடையாது என்பதனை நாம் உறுதிபட சொல்லி வைக்கின்றோம்.

மொத்தத்தில் செல்லாக் காசுகள் கூடிக் கலைந்திருக்கின்றன. இதில் நாங்கள் மூத்த தலைவர்கள் என்று கருதி இருந்த பலரும் போய் உற்கார்ந்திருந்தது நமக்கு ஜீரணிக்க சற்றுக் கஷ்டமாக இருக்கின்றது. அவர்கள் அங்கு போனதற்கும் நமக்கு நியாயங்களை சொல்லக் கூடும்.

உடன்பாடுகளும் மிரட்டல்களும்

நமது நிதி அமைச்ச பீ.ஆர். இந்தியா போய் ஒரு பில்லியன் கடன் பெற்றுவந்திருக்கின்றார். இது இன்னும் ஓரிரு மதங்களுக்கு பொருளாதார நெருக்கடிக்கு ஒரு சிறிய கவசத்தைக் கொடுக்கக் கூடும். ஆனால் நாம் கடந்த வாரம் சொன்னது போல இது எந்தவகையிலும் தீர்வுகிடையாது.

இந்த உடன்பாட்டில் மறைக்கப்பட்ட பக்கங்கள் நிறையவே இருக்கம் என்று சொல்லி இருந்தோம் அதுவும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்திருக்கின்றது.

இலங்கையின் வான் பரப்பை மொத்தமாக விற்றுவிற்றார்கள். கடற்படை இரகசியங்கள் வெளியாகின்ற விடயங்களும் இந்த உடன்பாட்டில் இடம் பெற்றிருக்கின்றது என்று சொல்லி செல்வாக்கான எல்லே குனவனச தேரர் போர்ப் பிரகடனம் செய்திருக்கின்றார்.ஊடகங்கள் முன் கண்ணீர் வடிக்கின்றார். இந்த அரசை பதவியில் அமர்த்திய பங்காளிகளில் இவரும் ஒருவர்.

இந்த உடன்பாட்டிற்கு கடந்த 22ம்திகதிதான் அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டிருக்கின்றது. ஆனால் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குனரத்ன கடந்த 15ம் திகதியே இந்தியாவுடன்  இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கின்றார் என்று தற்போது குற்றம் சாட்டப்படுகின்றது.

இது எந்தளவுக்கு பிழையான முன்னுதாரணம். இதுபோன்று அமெரிக்காவுடனான ஒப்பந்தமும் அமைந்திருந்தது. இந்திய இலங்கை உடன்பாடு சீனாவுக்குப் பெரிய வலியைக் கொடுத்திருக்கின்றது. எனவே சுதந்திர வர்த்தக உடன்பாடு என்று அது இலங்கையைத் தற்போது  மிரட்டிக் கொண்டிருக்கின்றது. நாம் கடந்த கட்டுரையில் சொன்னது போல வடக்கு கிழக்கு இந்தியாவுக்கு தெற்கு சீனாவுக்கு. எல்லாவற்றையும் ஏலத்தில் போட்ட பின்னர் தலைவர்கள் அமெரிக்காவுக்கு என்றுதான் கதை முடியப் போகின்றது போலும்.!

இருட்டறையில் ஊசி தேடல்

இந்த கொதி நிலை அரசியல், பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் திடீரென்று ஜனாதிபதி தமிழ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார். சிலர் போவதற்கும் இன்னும் சிலர் இல்லை நாங்கள் போக மாட்டோம் என்று நிற்கின்றார்கள்.

ஜனாதிபதி தழிழர் பிரச்சினைக்குத் தீர்வு கொடுக்க விரும்பி இருந்தால் அவர் செல்வாக்காக-ஜனரஞ்சமாக இருந்த நேரத்தில் அதனைப் பண்ணி இருக்க வேண்டும். இப்போது அவருக்கு கிடைத்த 69 இலட்சம் வாக்குகளும் காணாமல் போய் மக்கள் ஆளை விரட்டுவதற்காக தெருவில் இறங்கி நிற்க்கின்ற நேரத்தில் இந்த சந்திப்பால் என்னதான் நடக்கப் போகின்றது என்று நாம் தமிழ் தலைவர்களிடத்தில் கேட்க வேண்டி இருக்கின்றது.

அப்படித்தான் அழைப்பை ஏற்றுப் போனவர்கள் அதற்கு முன் ஏன் அழைத்தீர்கள், என்ன சொல்ல வருகின்றீர்கள், ஏதாவது தீர்வுத் திட்டங்கள் வைத்திருந்தால் அதனை முன் கூட்டியே தமிழர் தரப்புக்கு அறியக் கொடுத்து அந்த சந்திப்பில் போய் கலந்து கொண்டிருந்தால் எந்தத் தவறும் கிடையாது.

ஆனால் இருட்டறையில் காணாமல் போன ஊசியைத்தான் தமிழ் தலைவர்கள் அங்கு போய்த் தேடி இருக்க  வேண்டும் இதுதானா தமிழ் தலைவர்களின் அரசியல் முதிர்ச்சி என்று கேட்கத் தோன்றுகின்றது.

அடுத்து தமிழர்களுக்கு அரசியல் தீர்வு குறித்து சம்பந்தன் ஐயா போன்ற தலைவர்கள் பல சந்தர்ப்பங்களில் காலக்கெடு சொல்லி இருந்ததும் நமக்கு நன்றாகவே ஞாபகத்தில் இருக்கின்றது. மேலும் புதிய அரசியல் யாப்பில் தீர்ப்பு என்றும் சிலர் கதை விட்டார்கள் இந்த கொதி நிலை அரசியல் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் அப்படி ஏதும் நல்ல காரியங்கள் நடக்க வாய்ப்பு இருக்கின்றதா என்று மூத்த தலைவர்களிடத்தில் நாம் கேட்க்கின்றோம்.

நம்மைப் பொறுத்து நெருக்கடியான இந்த நேரத்தில் இந்தியா மற்றும் சர்வதேசத்தின் நல்லெண்ணத்தை பெற்று காய் பறிக்க அரசு நடத்தும் விளையாடல்தான் இது.

பூனைக்கு மணி கட்டுவது!

சர்வதேசமும் இந்திய ஊடகங்களும் இலங்கையில் ஒரு மக்கள் புரட்சி நடப்பதற்கான வாய்ப்புக்கள் பற்றி அடிக்கடி செய்திகளை சொல்லி வருகின்றன. மக்கள் தன்னிச்சையாக சாலைகளில் இறங்கி தமக்குத் தேவையான அத்தியவசியப் பொருட்களைக் கேட்டுப் போராட்டங்களை நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள். இது தவிர சஜித் அணியினரும் ஜேவிபினரும் பெரும் பேராட்டங்களை ஆங்காங்கே நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்தப் போராட்டகள் தான் ஓரளவுக்கு நம்பிக்கைக்குறியதாகப் பார்க்கப்பட்டாலும் இந்த இரு அணிகளும் ஒருங்கிணையாத வரை மக்களுக்கு ஏதும் நன்மைகள் வரப் போவதில்லை. இதில் சஜித் தலைமையில் இருக்கின்ற அணியில் பல ஊழல் பேர்வளிகளும் அந்த அணியில் உட்கட்சி பூசல்களும் நிறையவே இருக்கின்றன.

மேலும் உணர்வு பூர்வமான அரசியல் அந்தக் கட்சியிலும் இல்லை. எனவேதான் மதுவுக்காக கூட்டத்துக்குப் போனவர்கள்தான் அதிகம். போகும் போது தடை.! வரும் போது தாராளம் என்று அது நடந்திருக்கின்றது.

இந்த நிலையால் உடனடியாக அரசுக்கு எந்த ஆபத்துக்களும் கிடையாது என்பதுதான் எமது கருத்து. மேலும் வடக்கு கிழக்கில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கான மக்கள் உணர்வுகள் பெரிதாக இல்லை. இதில் தமிழ் முஸ்லிம் அரசியல் காட்சிகள் கூத்துப் பார்க்கின்ற கூட்டமாகத்தான் இருக்கும்.

அதிலும் முஸ்லிம் தனித்துவத் தலைவர்கள் எரியும் வீட்டில் ஏதாவது பிடுங்குவதற்கு இருக்கின்றனவா என்றுதான் தேடுவார்கள். ஜேவிபி தேன் கூட்டிற்குக் கல் எறிய நேரம் பார்த்து இருந்தாலும், இரு சந்தார்ப்பங்களில் அது களத்தில் இறங்கி  தனது உறுப்பினர்கள் பல்லாயிரம் பேரை இழந்திருக்கின்றது. அதனால் அவர்களும் மக்கள் தமாகவே முதலில் வீதிக்கு வரட்டும் பார்ப்போம் என்று இருக்கின்றார்கள்.

நன்றி:ஞாயிறு தினக்குரல் 27.03.2022

 

Previous Story

சவுதி எண்ணெய் கிடங்கு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்

Next Story

பாக். இன்று பிரம்மாண்ட பேரணி !! இம்ரான் கான்: தலைவிதி நாளை!!!