நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்துக்களை வெளியிட்ட செயலை ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் அடங்கிய குழு கடுமையாக விமர்சித்திருக்கிறது.

நூபுர் ஷர்மா
 

இது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் படை அதிகாரிகள் கையெழுத்திட்ட திறந்தவெளி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். ரவீந்திரன், கேரள அரசு முன்னாள் தலைமை செயலாளர் ஆனந்த் போஸ் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டும், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஸ்.ரத்தோர், பிரசாந்த் அகர்வால், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்.எஸ். கோபாலன் மற்றும் எஸ். கிருஷ்ண குமார், தூதர் (ஓய்வு பெற்றவர்) நிரஞ்சன் தேசாய், முன்னாள் டிஜிபிக்கள் எஸ்பி வைத் மற்றும் பி.எல். வோஹ்ரா, லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. சதுர்வேதி (ஓய்வு பெற்றவர்) மற்றும் ஏர் மார்ஷல் (ஓய்வு பெற்றவர்) எஸ்.பி. சிங் ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெ.பி. பார்டிவாலா அடங்கிய அமர்வு, நூபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்தனர். அதில், தமக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிடுமாறு நூபுர் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத நீதிபதிகள், நூபுர் ஷர்மா கருத்து வெளியிட்ட முறையை கடுமையாக விமர்சித்தனர்.

குறிப்பாக, “நூபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளாரா?” என்று கேட்ட நீதிபதிகள், அவர் சிந்திக்காமல் பேசிய பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது என்று கூறினர்.

நீதிபதிகளின் கடுமையான விமர்சனம்

நூபுர் ஷர்மா

உதய்பூர் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு அவருடைய இந்தச் செயல் தான் பொறுப்பு என்றும் நீதிபதிகள் கண்டித்தனர்.

மேலும், “அரசியல் திட்ட நோக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தவிர, ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

“நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள் ‘வருத்தத்தை’ உண்டாக்கும் வகையில் உள்ளன. அதை அவர் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?” என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் நூபுரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களுக்கும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், “இந்த பெண் நாடு முழுவதும் உணர்வுகளை தூண்டிய விதம், நாட்டில் நடப்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு என்று காட்டுகிறது,” என்று குறிப்பிட்டனர்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் உயரதிகாரிகள் குழு எழுதியுள்ள கடிதத்தில், “உச்ச நீதிமன்றம் அதன் “லக்ஷ்மண் ரேகையை” மிஞ்சிவிட்டது. அதுவே இதுபோன்ற திறந்தவெளி அறிக்கையை வெளியிட தங்களை கட்டாயப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர். பரவலான கவனத்தை பெற்றிருக்கும் இந்த கடிதத்தின் முழு விவரத்தை இங்கே வழங்குகிறோம்.

எதிர்வினையாற்றும் முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள்

அக்கறையுள்ள குடிமக்களாகிய நாங்கள், அரசியலமைப்பின்படி அனைத்து அமைப்புகளும் அவற்றின் கடமைகளைச் செய்யும் வரை எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் சமீபத்திய கருத்துகள் லக்ஷ்மண் ரேகையை விஞ்சிய செயல், எங்களை ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட கட்டாயப்படுத்தியுள்ளது.

1) உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா நூபுர் ஷர்மாவின் மனுவில் விடுத்த கோரிக்கையை ஏற்காத நிலையில், அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து செய்தி சேனல்களும் ஒரே நேரத்தில் அதிக ஒலி அளவில் வெளியிட்ட நீதிபதிகளின் கருத்துக்கள், நீதித்துறை நெறிமுறைகளுக்கு ஒத்ததாக இல்லை. நீதித்துறை ஒழுங்கின் ஒரு பகுதியாக இல்லாத அந்த அவதானிப்புகள், நீதித்துறையின் உரிமை மற்றும் நேர்மையின் அடிப்படையிலானவை என்று கூறி அந்த செயலை புனிதப்படுத்திட முடியாது. இத்தகைய மூர்க்கத்தனமான அத்துமீறல்கள் நீதித்துறையின் வரலாற்றில் இருக்கக் கூடாதவை.

2) நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தின் முன் நீதியைக் கேட்டு அணுகினார். காரணம், அது மட்டுமே அவருக்கு நிவாரணத்தை பரிசீலிக்கக் கூடிய ஒரே அமைப்பாக இருந்தது. அவரது மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னையுடன் சட்டரீதியாக எந்த தொடர்பும் இல்லாத அவதானிப்புகள், நீதி வழங்குவதற்கான அனைத்து நியதிகளையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மீறியுள்ளன. நீதி பெறுவதற்கான அணுகல் அவருக்கு அடிப்படையிலேயே மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அது இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, ஆன்மா மற்றும் சாராம்சத்தின் மீதே சீற்றம் கொள்ள வைத்ததாக இருந்தது.

3) நீதிமன்ற நடவடிக்கையின்போது நூபுர் ஷர்மாவை கடுமையான குற்றவாளி என்ற வகையிலேயே நீதிபதிகள் தீர்மானித்தபடி கருத்துக்களை வெளியிட்டனர். அங்கு அது ஒரு பிரச்னையே இல்லை – குறிப்பாக, “நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு அவர் மட்டுமே பொறுப்பு” என்பது போல அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை. உதய்பூரில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கும் அவரது கருத்தே தூண்டுதல் என்றும் ஒற்றை நோக்கத்தை திருப்திப்படுத்துவதற்காக அப்படி நூபுர் பேசியதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது விமர்சனத்தின் உச்சமாகும்.

4) ஒரு எஃப்.ஐ.ஆர் கைதுக்கு வழிவகுக்கும் கருத்தால் நீதித்துறை சமூகம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையவே செய்யும். நாட்டிலுள்ள மற்ற ஏஜென்சிகள் குறித்த அவதானிப்புகள், அவற்றின் விளக்கத்தைக் கேட்காமல் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், உண்மையில் கவலையளிக்கின்றன. ஆபத்தானதாகவும் உள்ளது.

5) நீதித்துறையின் வரலாற்றில், துரதிருஷ்டவசமாக வெளியிடப்பட்ட அந்த கருத்துகளுக்கு மாற்று இல்லை. மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அது அழிக்க முடியாத வடுவாகி உள்ளது. ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவசர திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

6) உதய்பூரில் பட்டப்பகலில் காட்டுமிராண்டித்தனமாகவும் கொடூரமாகவும் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் விசாரிக்கப்படும் வேளையில், அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வெளியான நீதிபதிகளின் அவதானிப்புகள், விரிவாகவே உணர்ச்சிப்பிழம்பை தீவிரமாக்கியுள்ளன.

நீதிபதிகளின் செயலில் நியாயமில்லை

7) தன் முன் இல்லாத ஒரு பிரச்னை மீதான அவதானிப்புகள், அடிப்படையில் முடிவு செய்து விட்டு வெளியிடும் கருத்துக்கள் போல உள்ளன. அப்படி செய்வது இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்தை சிலுவையில் அறைவது போலாகும். இத்தகைய மோசமான அவதானிப்புகளால் ஒரு மனுதாரரை வற்புறுத்தி, விசாரணையின்றி அவரை குற்றவாளி ஆக கருதத் தூண்டுவது அவருக்கு நீதி மறுப்பதற்கு ஒப்பாகும். ஒரு ஜனநாயக சமூகத்தின் அம்சமாக இந்த செயல்பாடு இருக்க முடியாது.

8) நீதித்துறை அத்துமீறல்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் மீது செல்வாக்கை செலுத்தும் வகையில் தங்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கச் செய்வது பகுத்தறிவு மனதையும் குழப்பம் அடையச் செய்யும்.

9) சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் நிலைத்து மலரவும் நீதிக்காக அக்கறைப்படும் மனதை அமைதிப்படுத்தவும் வேண்டுமானால், நீதிமன்ற அவதானிப்புகளை மிகக் கடுமையானதாகக் கருத வேண்டும். அவை திரும்பப் பெற தகுதி வாய்ந்தவையே.

10) உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேவையற்ற மற்றும் வாய்மொழி அவதானிப்புகள் அவசியம் ஏற்படாத போதிலும், இந்த விஷயத்தில் மற்றொரு முக்கியமான அம்சம் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நூபுர் ஷர்மா கூறியதாக வெளியான கருத்துக்கள் தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை டெல்லிக்கு மாற்றுமாறு கோரியே மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனித்தனி வழக்குகள் (எஃப்ஐஆர்) ஒரே குற்றம்சாட்டப்பட்ட விஷயத்துக்காக தொடரப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 20 (2) ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வழக்கு தொடுப்பதையும் தண்டிப்பதையும் தடை செய்கிறது. அரசியலமைப்பின் 20ஆவது விதி, பகுதி IIIஇன் கீழ் வருகிறது. அது அடிப்படை உரிமைக்கு உத்தரவாதம் தருகிறது. இந்திய அரசுக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் எதிரான வழக்கு, கேரள அரசுக்கும் டி.டி. ஆண்டனிக்கும் எதிரான வழக்கு போன்றவற்றில் ஒரே விஷயத்தில் இரண்டாவது முதல் தகவல் அறிக்கை பதிவு தேவையில்லை என்றும் தனி விசாரணை அவசியமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்து உள்ளது. அப்படி செய்வது அடிப்படை உரிமைக்கு உத்தரவாதம் தரும் அரசியலமைப்பு விதி 20(2)-ஐ மீறுவதற்கு ஒப்பாகும்.

11) உச்ச நீதிமன்றம், மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவரது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்து, அவர் தமது மனுவைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது. மேலும், அத்தகைய வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒரே விவகாரம் தொடர்புடைய வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றிக்கவில்லை என்பதை நன்கு அறிந்தபோதும் உச்ச நீதிமன்றம் மனுதாரரிடம் இவ்வாறு கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த கைதட்டலுக்கும் தகுதியற்றது. அது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை மற்றும் கௌரவத்தையும் பாதிக்கிறது என்று கடிதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் கூறியுள்ளனர்.