நீதிமன்ற உத்தரவை அவமதிக்கின்றார் மஹிந்த?

அமைதியான ஆர்ப்பாட்டங்கள் மீது ஆளும் கட்சி ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு (Mahinda Rajapaksa) வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டு அவரது கடவுச் சீட்டை நீதிமன்றில் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், இதுவரை இதுவரை அதனை அவர் செய்யவில்லை கோட்டை நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டது.

இந்த தகவல் ( 25-05-2022) கோட்டை நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனும் கடவுச் சீட்டை நீதிமன்றுக்கு அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட மா அதிபர் சார்பில் இந்த விசாரணைகளை மேற்பார்வைச் செய்யும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன இதனை கோட்டை நீதிவான் திலின கமகேவின் கவனத்துக்கு கொண்டு வந்தார்.

இதேவேளை, முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், ரேனுக பெரேரா எனும் நபரும் தமது கடவுச் சீட்டுக்கள் அழிவடைந்துவிட்டதாக சி.ஐ.டி.க்கு அறிவித்துள்ளதாகவும், வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்ட பட்டியலில் உள்ளடங்கும் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட மூவர் எங்கு இருக்கின்றார்கள் எனபதே தெரியாமல் சி.ஐ.டி.யினர் தேடி வருவதாகவும் அவர் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.

2022 மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர்களான பவித்ரா வன்னி ஆரச்சி, ஜோன்ஸ்டன் பெர்ணன்டோ, காஞ்சன ஜயரத்ன, நாமல் ராஜபக்ஷ, ரோஹித்த அபே குணவர்தன, சி.பி. ரத்நாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான சஞ்ஜீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோர ஆகியோரும் ரேனுக பெரேரா ஆகிய 9 பேருக்கும் நீதிமன்றம் வெளிநாடு செல்ல தடை விதித்தது.

அத்துடன் அமைதி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடாத்த சென்ற கும்பலில் இருந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்த, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ ஆகியோரின் வெளிநாட்டு பயணமும் தடை செய்யப்பட்டுள்ளது.

இதனைவிட, அமைதி ஆர்ப்பாட்டங்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்கள் பதிவான பிரதேசத்தின் பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த நிலையில், கடமையை சரியாக செய்து வன்முறைகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறப்படும் மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் வெளிநாட்டுப் பயணமும் நீதிமன்றால் தடை செய்யப்பட்டது.

வன்முறைக் கும்பலுடன் வந்ததாக அடையாளம் காணப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சனத் நிசாந்தவுடன் ஒன்றாக சினேகபூர்வமாக கலந்துரையாடியவாறு முன்னேறும் புகைப் பட சான்றுகள் இருக்கும் நிலையில் அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனைவிட இந்த விசாரணைகளுக்கு அவசியமான சாட்சியாளர்கள் 7 பேரான ( காயமடைந்தவர்கள், கண் கண்ட சாட்சியாளர்கள்) நோனா மொரின் நூர், எட்டம்பிட்டிய சுகதானந்த தேரர், கல்பாயகே தொன் அமில சாலிந்த பெரேரா, சேதானி சத்துரங்க, பீரிஸ்லாகே அமில ஜீவந்த, கொடித்துவக்குகே ஜகத் கொடித்துவக்கு , மொஹம்மர் ஷேர்மி ஆகியோரினதும் வெளிநாட்டுப் பயணங்கள் கடந்த மே 12 ஆம் திகதி தடை செய்யப்பட்டன.

இந் நிலையில் இன்று ( 25) நீதிமன்றங்களில் விடயங்களை முன் வைத்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் அய்ஷா ஜினசேன, ‘ கடந்த 12 ஆம் திகதி 24 பேருக்கு, சட்ட மா அதிபரின் கோரிக்கைக்கு அமைய இந்த நீதிமன்றம் வெளிநாட்டு பயணத் தடை விதித்தது. அவர்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றில் ஒப்படைக்க இதன்போது உத்தர்விடப்பட்டது.

இருப்பினும், இதுவரை மஹிந்த ராஜபக்ஷ, நிசாந்த ஜயசிங்க, அமித்த அபேவிக்ரம, புஷ்ப லால் குமார, மஹிந்த கஹந்தகம, திலிப் பெர்ணான்டோ, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோர் இதுவரை தங்களது கடவுச் சீட்டுக்களை நீதிமன்றுக்கு பாரப்படுத்தவில்லை.

பவித்ரா வன்னி ஆரச்சி, காஞ்சன ஜயரத்ன, நாமல் ராஜபக்ஷ, சஞ்சீவ எதிரிமான்ன, சம்பத் அத்துகோரள, சி.பி. ரத்நாயக்க , ரோஹித்த அபேகுணவர்தன உள்ளிட்டோர் கடவுச் சீட்டுக்களை இதுவரை கையளித்துள்ளனர்.

சனத் நிசாந்தவின் கடவுச் சீட்டு பிரிதொரு வழக்குத் தொடர்பில் சிலாபம் நீதிமன்றில் உள்ளது. ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ மற்றும் ரேனுக பெரேரா ஆகியோர் தங்களின் கடவுச் சீட்டுக்கள் அழிவடைந்துவிட்டதாக சி.ஐ.டி.யிடம் தெரிவித்துள்ளனர்.

சாட்சியாளர்கள் மூவர் தங்களிடம் கடவுச் சீட்டுக்களே இல்லை என தெரிவித்துள்ளதுடன் சாட்சியாளரான அருட் தந்தை பீரிஸ்லாகே அமில ஜீவந்த அடுத்த வாரம் கடவுச் சீட்டை ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார்.

நிசாந்த ஜயசிங்க, திலிப் பெர்ணான்டோ மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களின் இருப்பிடங்களில் இருந்து மறைந்து வாழும் நிலையில், அவர்களை கண்டுபிடிக்க சி.ஐ.டி.யினர் அனைத்து வேலைகளையும் ஒதுக்கிவிட்டு தேடி வருகின்றனர். ‘ என அறிவித்தார்.

Previous Story

USA துப்பாக்கிச்சூடு:  முழு விவரம்

Next Story

21வது திருத்த சட்டவரைவு: ஒப்புதல் பெறுமா?