‘நீதி’

காட்டுத் தீ

-யூசுப் என் யூனுஸ்-

சேக்கிழாரின் பெரியபுரணம். அங்கே திருவாரூரில் மனுநீதி கண்ட சோழனின் மனம் நெகிழந்து போகும் தேர்க் கதை. துள்ளியோடிய தனது கன்று மன்னன் மகன் ஓட்டி வந்த  தேர் சில்லில் சிக்கிய இறக்க,  தாய்ப் பசு அரண்மனை வாயிலில் ஓடிப்போய் செய்த முறைப்பாடு, அதற்கு சோழ மன்னன் வழங்கிய தீர்ப்பு.! மன்னன்; சொலமான் காலத்து ஒரு பிள்ளை இருதாய்மார் கதை (கிருஸ்தவர்கள் செலமான் என்றும் முஸ்லிம்கள் சுலைமான் என்றும் இதனை வரலாற்றில் நினைவு கூறுகின்றார்கள். இந்த இரு சமயங்களுக்கும் அண்ணன் தம்பி போல் உறவு அதனால்தான் அப்படி) ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்து போனாலும் சோழனும் சொலமானும் நீதியின் குறியீடுகளாக வரலாறு நினைவு கூறிக் கொண்டிருக்கின்றது.

அண்மைக்கால வரலாற்றில் மனிதப் படுகொலைகளுக்காக உலகம் ஹிட்லரை நினைவு படுத்தினாலும் சோழன் செலமான் காலத்து மன நெகில்வுக்கு ஹிட்லர் கதை ஈடில்லை என்பது இந்தக் குறிப்பைப் பதிகின்ற எங்கள் தனிப்பட்ட கருத்து. காரணம் அது போர்காலத்து நிகழ்வுகள். போர் என்று வரும் போது அங்கு அழிவுதான். அதற்காக ஹிட்லர் செயல்களை அங்கிகரிக்கின்றோம் என்பதும் அர்த்தமல்ல. இங்கு நாம் சொல்லப் போவது சமகாலத்து நீதிகளும் அநீதிகளும் அதன் பின் விளைவுகள் தொடர்பான பார்வையுமாகும். போர்களின் போது படுகொலைகள் நடக்கின்றன. அதற்காக நிரபராதிகளாக நிற்க்கின்றவர்களையும் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்களை பரலோகம் அனுப்பி வைப்பதையும் சமகால உலகம் அங்கிகரிக்கவில்லை. எனவே தான் அந்த நிகழ்வுகள் ஜெனீவாவில் போய் நிற்க்கின்றன.

அரசாட்சிகள் செய்கின்ற போது நிருவாகிகளினால் சில தவறுகள்-தப்புகள் நடந்து விடுவதும் இயல்பானதுதான். ஏன் மனித வாழ்வில் கூட அன்றாடம் தவறுகள் கைமோசங்கள் நடந்து வருவதை நாம் பார்த்து வந்திருக்கின்றோம். அவை மன்னிக்கக் கூடியது ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆட்சியாளர்களே திட்டமிட்டு வன்முறைகளை ஏற்படுத்துகின்றார்கள் அதற்காக அடியாட்களை-கொலைக் கும்பல்களை வைத்திருக்கின்றார்கள் அதுவும்  அரச பணத்தில் சம்பளம் என்றால் அது மிகவும் கொடூரமானது. ஏற்றுக் கொள்ளமுடியாதது. இதில்தான் கருத்தடை உள்ளாடைகள், உணவு வகை, பலாத்காரக் கருத்தடை வைத்தியம் என்ற இனரீதியான அடக்கு முறைகள் என்ற கதைகள் நமது வரலாற்றில் பதிவாகி இருக்கின்றன.

இவை அனைத்தும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட மனித குலாம் ஜீரணிக்க முடியாத சதிகள்-அடவடித்தனங்கள் என்பது தற்போது உறுதிப்படுத்தப்படும் போது இதற்கு தலைமை தாங்கியவர்களும் உருவம் கொடுத்தவர்களும் இன்று காணமல் போய் இருக்கின்றார்கள் அல்லது தலைறைவாகி இருக்கின்றார்கள்-மூக்குடைபட்டிருக்கின்றார்கள் என்பதனை நாம் அரசியல் களத்தில் பார்க்கின்றோம். யாரை எல்லாம் வீரர்களாகவும் ஹீரோக்களாகவும் சமூகம் தூக்கித் தலையில் வைத்திருந்ததே அதே சமூகம் அவர்களை துரோகிகளாகவும் அவமானச் சின்னங்களாகவும் இன்று தூற்றிக் கொண்டிருக்கின்றது. இந்த குறுகிய இரு வருடகாலத்தில் இப்படியான ஒரு காட்சி மாற்றம் இந்த நாட்டில் வருமென்று எவராவது கற்பனை பண்ணிப் பார்த்திருப்பார்களா? எனவே தான் இந்த மாற்றத்தின் பின்னால் தர்மம் தனது ஆதிக்கத்தை-பலத்தைக் காட்சிபடுத்தி இருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.

தனி நபர்கள் அரசியல் அரியாசனைகளில் ஏறுவதற்கு இன ரீதியான அபாண்டங்கள் குற்றச்சாட்டுக்கள் பரப்புரைகளை மேற்கொண்டு பிற்காலத்தில் அவை அணைத்தும் மாயை என நிரூபணமாகும் போது அப்படிப் பண்ணியவர்களை மக்களும் தர்மமும் தண்டிப்பதும் சமகாலத்தில் நாம் பார்த்துக் கொண்டிருக்கின்றோம். நாம் பார்த்த மிகப் பெரிய கொடூரம் ஓரினத்தை அழிப்பதற்காக மற்றுமொரு இனத்தை பலிக்கடாவாக்கிய ஈஸ்டர் தாக்குதல் சமகால வரலாற்றில் மனித இனம் மரக்க முடியாத ஒரு சம்பவமாகும். அதற்கான நீதி உள்நாட்டு நீதிமன்றங்களில் கிடைக்காது என்பதனால் பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேத்திடம் நியாயம் கேட்டுப் போய் இருக்கின்றார்கள்.

நாட்டில் நீதிக்கோவை சட்டம் ஓழுங்கு என்றெல்லாம் வடிவமைத்து அதில் சில ஒழுங்குகளையும் ஏற்படுத்தி அதன் மூலம் நீதி வழங்கி  குற்றவாளிகள் கொலையாளிகள் என்று தீர்ப்புச் சொல்ப்பட்டவர்களையும் தமக்கு வேண்டியவர்கள் என்று தோந்தெடுத்து அவர்களுக்கு விடுதலை அல்லது  வழக்கு விசாரணை என்பதே கிடையாது என்று  அதிகாரத்தை  பாவித்து அவர்களுக்கு வழக்குகளில் இருந்து விடுவிப்பு ஏற்பாடுகளும் இந்த நாட்டில் மட்டுமே பார்க்க முடியுமான கட்சிகளாக இருந்து வருகின்றன. எனவேதான் இதனை சர்வதேசம் எற்றக்கொள்ள முடியாது இவற்றில் மாற்றம் வேண்டும் என்று ஆட்சியாளர்களின் களுத்தை இன்று நெருக்கி வருகின்றது.

அந்த மாற்றம் வரைக்கும் சர்வதேசம் உதவிகள்-ஒத்துழைப்புக்கள் கிடையாது என்று வேறு எச்சரிக்கைகள். ஆனால் தவறிலைத்தவர்களே மக்கள் நமக்கு ஆணை தந்திருக்கின்றார்கள் என்று காரணம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். அவர்கள் என்ன சொல்லிக் கொண்டாலும் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் அவர்கள் இன்று வீட்டுக்காவலில் என்ற நிலையில்தான் வாழ்ந்து வருக்கின்றார்கள் இதுவும் தர்மம் கொடுத்த அடியாகத்தான் பார்க்க வேண்டும்.

அவர்கள் என்னதான் தமக்கு மக்கள் ஆதரவு  என்று சொல்லிக் கொண்டாலும் இவர்களுக்குப் புள்ளடி போட்ட 69 இலட்சம் பேரை இன்று நாட்டில் காணவிலை. தற்போது மொத்த மக்கள் தொகையில் வெரும் மூன்றே மூன்று வீதத்தினர்தானாம் இவர்களுக்கு இன்று ஆதரவான நிலைப்பாட்டில் இருக்கின்றார்களாம் என்ற ஒரு நடுநிலைக் கணிப்பு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. வேடிக்கை என்ன வென்றால் இலங்கை சனத் தொகையில் ஏற்குறைய குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கையும் இந்தளவில்தான் இருக்கின்றது என்று அரசதரப்புப் தகவலில் பார்க்க முடிகின்றது.

வன்முறையை விளைத்தவன் வன்முறையையே அறுவடைசெய்ய முடியும் என்ற நியதியில் இன்று தர்மமும் சர்வதேசமும் தனது பிடியை இருக்கி வருகின்றது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. எனவேதான் சதாம், கடாபி தலைமறைவு வாழ்க்கையில் இலங்கை அரசியல்வாதிகளும் அனுபவித்துக் கொண்டு வருகின்றார்கள்.

வெள்ளைக் கொடி படுகொலைகள், வெள்ளை வேன் கடத்தல்கள், லசந்த, விமலராஜன், எகனலிகொட, தாஜூதீன் படுகொலைகள் பில்லின், ரில்லியன் கணக்கில் பொதுமக்கள் சொத்துக்கள் சூரையாடி விவகாரங்கள் எல்லாம் தர்மம் என்ற நீதிமன்றத்தின் முன் கேள்விக்கு இலக்காகி இருக்கின்றது. நீதி செத்துப் போன நாட்டில் அநீதியையும், அராஜகம் தலைவிரித்தாடுக்கின்றது. நாட்டில் தர்மத்தையும் பட்டினியில் இருக்கின்ற குடிகள் உணவையும் கேட்டுப் போர் முரசுகள்  எல்லா இடங்களிலும் தட்டப்பட்டு வருகின்றன.

இதற்கும் துப்பாக்கியல் தான் பதில் என்று கொடுக்கும் நிலையில் அரசாங்கம் எண்ணினாலும் அதற்கான வாய்ப்புக்கள் அவர்களுக்கு கிடையாது  என்று நாம் நம்புகின்றோம். காரணம் ஏற்கெனவே குற்றங்களுக்கான விசாரணை நிலுவையில் இருக்கின்றது. நாட்டில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதனும் அரசுக்கு எதிரான போர் முரசை இன்று கொட்டிக் கொண்டிருப்பதால் நாட்டில் வாழ்கின்ற 23 மில்லியன் மக்களையும் தீர்த்துக் கட்டுவது என்பது நடைமுறைச்சாத்தியம் இல்லாத ஒன்று.

நாம் படித்த பள்ளியில்  எஸ்.யோகநாதன் என்று ஒரு ஆசான் இருந்தார். அவர் ஒரு இடதுசாரி. எழுத்தாளரும் கூட, அவர் அழிவின்றி ஆக்கம் பிறக்காது அழிவிலிருந்துதான் ஆக்கம் மலரும் என்று அடிக்கடி நமக்குச் சொல்லிக் கொண்டிருப்பார். அந்த அழிவுதான் இன்று நாட்டில் நடந்து கொண்டிருக்கின்றதோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

இனவாத் பேசிக் கொண்டிருந்த பேரினத்தாரும் பாதிக்கப்பட்ட சிறுபான்மைச் சமூகங்களும் இன்று நாட்டில் நீதி நேர்மை இன ஐக்கியம் என்று ஓரணியில் திரண்டிருப்பது ஆரோக்கியத்துக்கான நல்ல அறிகுறியாக இருக்கும் என்று நாமும் நம்புகின்றோம். ஆனால் விடிவு எப்போது என்பதுதான் கேள்வி. சோழனும் சொலமானும் நமது மண்ணில் பிறக்கவிட்டாலும் மனிதர்களாக நாம் இங்கு வாழ்ந்து மடிந்து போக மட்டும் நமக்கும் நீதி நியாயம் வேண்டும் அவ்வளவுதான்.

நன்றி:10.07.2022 ஞாயிறு தினக்குரல்

 

 

Previous Story

எரிபொருள் கதை ஏமாறாதீர்!

Next Story

நாட்டிலிருந்து தப்ப ஓடித்திரியும் கோட்டா!