தேவையில்லாத ஆணி!

காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது.

ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அங்கு அமெரிக்கப் படைகளை வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மளமளவென ஒட்டுமொத்த நாட்டை கைப்பற்றினர்

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் ஆப்கனில் மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளனர். ஆப்கன் நாட்டின் தலைவராக ஆப்கன் அமைப்பைச் சேர்ந்த முல்லா ஹாசன் உள்ளார்.

தாலிபான் அரசு

சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகள் புதிதாக அமைந்துள்ள தாலிபான் அரசுடன் இணைந்து பணியாற்றத் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளன. அதேநேரம் உலகின் பெரும்பாலான நாடுகள் இதுவரை தாலிபான் தலைமையை அங்கீகரிக்கவில்லை. ஆப்கன் நாட்டில் தாலிபான்கள் ஆட்சி எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே முடிவு எடுக்கப்படும் என சில நாடுகள் அறிவித்துள்ளன.

நேர்மாறான உத்தரவு

அதேநேரம் ஆட்சியை அமைத்தபோது பிற்போக்குத்தனமாகச் சட்டங்களைக் கொண்டு வர மாட்டோம் என்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாகத் தாலிபான் 2.o இருக்கும் என்றும் தாலிபான் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இதற்கு நேர்மாறாக உள்ளது. இந்த லிஸ்டில் தற்போது இன்னொரு விஷயம் சேர்ந்து கொண்டுள்ளது.

முக்கிய அமைப்புகள் கலைப்பு

அதாவது ஆப்கானின் இரண்டு தேர்தல் ஆணையங்கள், அமைதி மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மாநில அமைச்சகங்களையும் தாலிபான் அரசு கலைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தாலிபான் அரசின் துணை செய்தித் தொடர்பாளர் பிலால் கரிமி, தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் புகார் ஆணையம் கலைக்கப்பட்டுவதை உறுதி செய்துள்ளார்.

தேவையில்லாத அமைப்புகள்

இது தொடர்பாக அவர் கூறுகையில் “ஆப்கானின் தற்போதைய சூழ்நிலைக்கு இவை தேவையற்ற அமைப்புகள். எனவே இவை கலைக்கப்படுகிறது. வரும் காலத்தில் தேர்தல் ஆணையங்கள் தாலிபான் அரசே ஒன்றை உருவாக்கும். அதேபோல அமைதிக்கான அமைச்சகம், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் என மற்ற இரு தேவையில்லாமல் இருக்கும் அமைச்சகங்களும் கலைக்கப்பட்டுள்ளது” என்று அவர் தெரிவித்தார்.

ஆப்கன் அரசு

ஆப்கன் நாட்டில் நடைபெறும் அதிபர், நாடாளுமன்றம் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட நாட்டில் நடைபெறும் அனைத்து வகையான தேர்தல்களையும் நிர்வகிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்கும் இரண்டு தேர்தல் அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இந்த இரண்டையும் தான் தற்போது தாலிபான் அமைப்பு கலைத்துள்ளது.

Previous Story

பிரபல தென்னாப்பிரிக்க பேராயர் டெஸ்மண்ட் டுடு காலமானார்!

Next Story

காதி நீதிமன்றத்தையும், பலதார திருமணத்தையும் இல்லாமல் செய்யவும் -சுபைர்