தேர்தல்களில் முஸ்லிம்கள் நிலை என்ன?

-நஜீப் பின் கபூர்-

முஸ்லிம் தனித்துவ அரசியல்வாதிகள் மீது கடும் அதிர்ப்த்தி!

முஸ்லிம்கள் மத்தியில் என்பிபி. பரப்புரை நத்தை வேகத்தில்!

பெரும்பாலான முஸ்லிம்கள் சஜித் மீது அதித நம்பிக்கையில்!

M H M Ashraff - Alchetron, The Free Social Encyclopedia

ஜனாதிபதித் தேர்தலுக்கும் பொதுத் தேர்தலுக்குமிடையே அதாவது ரணில்-ராஜபக்ஸாக்களிடையே மல்லுக் கட்டல்கள் உச்சத்தில் இருக்கின்ற இந்த நேரத்தில், நாம் கடந்த வாரம் வருகின்ற ஜனாதிபதித் தேர்தலில் தொடர்ச்சியாகத் தம்மை ஏமாற்றி வருகின்ற தெற்கு ஆட்சியாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுப்பது பற்றி சிந்திக்குமாறு வடக்கு கிழக்கு தமிழ் சமூகத்தினருக்கு ஆலோசனையைச் சொல்லி இருந்தோம். அதே போன்று இந்த வாரம் நாம் நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் சமூகத்தினருக்கு சில கருத்துக்களை முன்வைப்பதுடன் அவர்கள் சிந்தனைக்கு சில கேள்விகளையும் எழுப்ப விரும்புகின்றோம்.

இந்த நாட்டில் வாழ்கின்ற இரண்டு மில்லியன் வரையிலான முஸ்லிம்களில் மூன்றில் இரண்டு பங்கினர் அதாவது பன்னிரெண்டு இலட்சம் (1200000) வரையிலான முஸ்லிம்கள் கிழக்கிற்கு வெளியே வாழ்கின்றனர். கிழக்கில் ஏறக்குறைய எட்டு இலட்சம் (800000) முஸ்லிம்கள் வாழ்கின்றனர். இதில் அம்பறை, திருகோணமலை  மாவட்டங்களில் அவர்கள் பெரும்பான்மையாகவும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அவர்கள் இரண்டாம் இடத்திலும் இருக்கின்றார்கள்.

Sajith Premadasa tables SLC letter to ICC over undue interference | ONLANKA News

கிழக்கிற்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களில் விகிதசார அடிப்படையில் புத்தளம் மன்னார் கண்டி கொழும்பு களுத்துறை  மாத்தளை கேகல்லை பொலன்னருவ அனுராதபுரம் குருனாகலை வவுனியா மாவட்டங்களில் அவர்கள் ஏழு சதவீத்துக்கு மேலாக  வாழ்கின்றனர். எனினும் அங்குள்ள குடித்தொகை பொருத்து இந்த அனைத்து மாவட்டங்களில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லை. இதில் வன்னி முல்லைத் தீவு மன்னார் என்பன ஒரு தேர்தல் மாவட்டமாக அமைகின்றது.

கண்டி கொழும்பு களுத்துறை கேகாலை குருனாகலை அனுராதபுரம் பொலன்னருவ புத்தளம் வன்னி  என்பவற்றிலிருந்து முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களில் தெரிவாகி இருக்கின்றார்கள்.   ஒரு சந்தர்ப்பத்தில் முஸ்லிம்கள் இரண்டு தசம் ஐந்து (2.5) சதவீதம் வாழ்கின்ற ஹம்பாந்தோட்டையில் இருந்து கூட ஒரு உறுப்பினர் அதிஸ்டவசமாக வெற்றி பெற்றார். இது ஜேவிபி வாக்களிப்பதை தடுத்த வாய்ப்பால் கிடைத்த பிரதிநித்துவம். இது தவிர கம்பஹ மாவட்டத்தில் இருக்கின்ற முஸ்லிம்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அங்கு ஒரு உறுப்பினரை வென்றெடுக்கும் வாய்ப்பு இருக்கின்றது. ஆனால் அந்த வாய்ப்பை முஸ்லிம்கள் இன்றுவரை பயன்படுத்திக் கொள்ளவில்லை.

சிந்திக்காத ஒரு பக்கம்

இன்று 2024ல் நமது நாட்டில் மக்கள் தொகை 21949268  பேர். இதில் வாக்காளர்கள் 16263888. பேர். இன விகிதாசாரத்தக்கு ஏற்ப நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்று வரும் போது அது ஏறக்குறைய பின்வருமாறு அமைய வேண்டும். அது பற்றிய இன்றுவரை எவரும் சிந்தித்தாகவோ பேசியதாகவோ எமக்குத் தெரியாது. அதனால் இந்த கணக்கையும் இன்று நாம் பார்வைக்கு தருகின்றோம்.

சிங்களவர்கள்    72.2 %    167   பிரதிநிதி

தமிழர்கள்             11.5 %     026  பிரதிநிதி

முஸ்லிம்கள்      10.0 %    022  பிரதிநிதி

மலையகத்தார்  04.3%     010  பிரதிநிதி

மொத்தம்           100%     225  பிரதிநிதி

நாம் இப்படி இந்தக் கணக்கை சொன்னாலும் தேர்தல்களில் இந்த எண்ணிகையை வென்றெடுப்பதிலும் பேனுவதிலும் நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன.  விகிதாசாரத் தேர்தல் முறையால் சிறுபான்மை சமூகங்களுக்கும் சிறு கட்சிகளுக்கும் சில சாதகமான அனுகூலங்கள் இருந்து வருவதையும் நாம் மறுப்பதற்கில்லை. இது பிரேமதாச-அஸ்ரஃப் போட்ட உடன்பாட்டால் வந்த நன்மை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Remembering SLMC Leader M.H.M. Ashraff | Daily FT

நாட்டில் தனித்துவ அரசியல் கட்சிகள் தோன்றும் வரை முஸ்லிம் சமூகத்தில் அரசியல் தலைமைத்துவம் கொழும்பை மையப்படுத்தியே இருந்து  வந்தது. அஸ்ரஃப் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை துவக்கி முஸ்லிம் சமூகத்தில் ஏற்படுத்திய விளிப்புணர்வைத் தொடர்ந்து கொழும்புத் தலைமைத்துவம் ஆட்டம் காணத்து துவங்கியது. அதன் தாக்கம் இன்று வரை இருந்து வருகின்றது.  பிரமேதாச மற்றும் சந்திரிகா காலத்தில்  அரசியல் களத்தில் அஸ்ரஃப் ஹீரோவாக வலம் வந்தார். அவரது மரணத்துக்கும் அதுதான் காரணமாக அமைந்தது என்று சொன்னாலும் பிழையாகாது.

நாம் ஜனாதிபதி, ஆளும் தரப்பு, ராஜபக்ஸாக்கள், எதிரணி, தமிழ் அரசியல் தலைமைகளை என்பவற்றைகூட பெயர் சொல்லி விமர்சனங்களை வழக்கமாக செய்து வந்திருக்கின்றோம். இந்த வரிசையில் இன்று நமது  கட்டுரையில் முஸ்லிம் அரசியல் பற்றிய ஒரு பார்வையைச் செலுத்தலாம் என்று எதிர்பார்க்கின்றோம். இன்று நமது நாட்டில் முஸ்லிம்கள் மத்தியில் டசன் கணக்கில் தனித்துவ அரசியல் கட்சிகள் பதிவாகி இருக்கின்றன. இவற்றில் முதன்மையானது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ். அஸ்ரஃப் மரணத்துக்குப் பின்னர் கட்சித் தலைவர் தொடர்பான முரண்பாடுகள் ஏற்பட்டு முதலில் ஹக்கீம்-பேரியல் இரட்டைத் தலைமைத்துவம் ஒன்று சிறிது காலம் இருந்தது.

தனது பேராசைக்கு (நப்ஸ்சுக்கு- இது ஒரு அரபு சொல்)  தலைமைத்துவம் கேட்கின்றது. அது கிடைக்காமல் போனால்  கட்சியை உடைத்துக் கொண்டு வெளியேறிவிடுவேன் என்று அன்று சொன்னவர்தான் இன்று அந்தக் கட்சியில் அதிகாரத்தில் இருக்கின்றார்கள். அதே போன்று கட்சி செயலாளர் ஹசனலியுடன் ஏற்பட்ட முரண்பாடுகளின் போது செய்த சத்தியங்கள் குர் ஆனில் செய்த சத்தியங்கள் என்று எத்தனையோ ஏமாற்று வேலைகள் தில்லு முல்லுகள் இந்த கட்சித் தலைமைகள் மட்டத்தில் கடந்த காலங்களில் நடந்திருக்கின்றன.

இந்த முரண்பாடு குழறுபடிகளினால் இந்தக் கட்சியில் இருந்த ஹசனலி அதாவுல்லா ரிசாட் அமீரலி  என நிறையப் பேர் வெளியேறி இருக்கின்றனர். ஹக்கீமுடன் முரண்பட்டிருந்த கலாநிதி ஹிஸ்புல்லாஹ் இன்று மீண்டும் கட்சிக்குள் வந்திருக்கின்றார். ஆனால் அவரை தலைவர் ஹக்கீம் கையால்வதில் மிகவும் எச்சரிக்கையுடன் தான் காய் நகர்த்துவார்.

Former Governor Hizbullah blames Zahran for 2015 election loss | Daily FT

வடக்கு கிழக்கு தழிழர்களின் அரசியலில் மண் வசனையுடன் கலந்து ஒரு உணர்வு வலுவாக இருக்கின்றது. அப்படியான ஒரு உணர்வு  கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் குறிப்பாக அம்பாறை மாவடத்திலும் இருக்கின்றது. ஆனால் ஹக்கீமிடம் அந்த வாசனை மருந்துக்கும் கிடையாது. நமது இந்த கருத்தை மு.கா. முன்னாள் செயலாளர் ஒருவரும் நமக்குத் மிகவும் வேதனையுடன் தெரிவித்தார்.  மு.கா. தலைமைத்துவம் அந்த உணர்வுகளைக் கண்டு கொள்ளாது நூலருந்த பட்டம் போல்தான் தலைமை கிழக்கில் அரசியல் செய்து கொண்டிருக்கின்றது.

ஆனால் கிழக்கில்-கட்சிக்குள் ஹக்கீம் வலுவாகத்தான் இருக்கின்றார். இதற்குக் காரணம் முக்கிய பதவிகளில் அவரது கையாட்களும் அடியாட்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஐதேக.வை ரணில் தன்னல அரசியலுக்காக எப்படி தனது பிடிக்குள் இருக்கமாக வைத்திருக்கின்றரோ அதே பாணியில்தான் ஹக்கீமும் கட்சியை தனது கட்டுப்பாட்டில் மு.கா.வை வைத்திருக்கின்றார்.

Sri Lanka: Muslim refugees fear repercussions after jihadist attacks | DW Stories - YouTube

கட்சியில் அரசியல் புரிதலை விட, ஹக்கீம் மீதான விசுவாசம்தான் அங்கு முக்கிய தகைமையாகப் பார்க்கப்படுகின்றது. இதற்கு கிழக்கிலுள்ள பிரதேச வாதம் ஹக்கீமுக்கு நல்ல பக்க துணையாக இருந்து வருகின்றது. அதே போன்று வழக்கமாக இவர்களது பல்டி அரசியல் காரணமாக சமூகத்தின் மத்தியில் மு.கா. செல்வாக்கு இன்று கணிசமான பின்னடைவை எதிர்நோக்கி இருக்கின்றது.

மு.கா. வில் இருந்தவர்கள் கடந்த காலங்களில் மக்கள் விரோத பிரேரணைகளுக்கு நாடாளுமன்றத்தில் வாக்களித்ததால் அவர்கள்  சமூகத்தின் மத்தியில் தமது செல்வாக்கை இழந்துள்ளனர். நாம் இப்படி நடந்து கொண்டது தலைவர் சம்மதத்துடன்தான் என்று அவர்கள் அதற்கு விளக்கம் வேறு கொடுத்திருந்ததும் தெரிந்ததே.

மு.கா. கதைகள் அப்படி இருக்க இப்போது வன்னி தளபதி ரிசாட் பதியுத்தீனில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் செயல்பாடுகள் பற்றிப் பார்ப்போம். இந்தக் கட்சியில் இருக்கின்றவர்களும் மக்கள் விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டதால் அவர்களுக்கும் மக்கள் மத்தியில் கடும் விமர்சனங்கள் இருக்கின்றன.

இவர்களில் புத்தளம் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி செயல்பாடுகள் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப் பெரிய தலைகுனிவைக் கொடுத்திருக்கின்றது. அதனால் இவரை நீக்கி விட்டு அந்த இடத்துக்கு ரிசாட் தரப்பினர் மற்றுமொருவரை நியமிக்க முயன்றாலும் அதற்கு அந்தக் கூட்டணி செயலாளர் சம்மதம் கிடைக்காததால் அந்த முயற்சி கைகூடவில்லை. இதற்குப் பின்னால் பெரும் கொடுக்கல் வாங்கல் இருப்பதாகச் சொல்லப்டுகின்றது. இதனை நாம் முன்பு ஒரு முறையும் சுட்டிக் காட்டி இருந்தோம்.

Sri Lankan Muslims At The Cross-Roads – IV – After Aluthgama/Beruwela - Colombo Telegraph

அடுத்து திகாமடுல்லை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் முசாராப் செல்பாடுகலும் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. இன்று பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போர்க் களத்தில் குதித்திருக்கின்ற ஹூதி போராளிகளை அவர் பங்கரவாதிகளாக அறிவிக்க வேண்டும் என்று பகிரங்கமாக அழைப்பு விடுத்திருக்கின்றார். அவர்களுக்கு எதிராக ஜனாதிபதி ரணில் படைகளை அனுப்பி இருப்பதும் இவரது இந்தக் கருத்தக்குமிடையில் ஒரு நெருக்கமான பிணைப்பு இருக்கின்றது என்றுதான் நாம் சிந்திக்க வேண்டி இருக்கின்றது.

இதுவும் முஸ்லிம் சமூகத்துக்கு ஒரு வலியை கொடுத்த விடயமாகத்தான் இருக்கின்றது. தனிப்பட்ட ரீதியில் வன்னியில் ரிசாட் வலுவாகத்தான் இருக்கின்றார் என்று தெரிகின்றது. ஆனால் அவருடன் இருந்த சிங்கள மக்களில் பெரும்பாலானவர்கள் இன்று அனுராவுக்கு ஆதரவாக மாறி இருப்பதாக வன்னியிலிருந்து ஒரு தகவல். ஆனால் மு.கா.வைப் போலவே  அவரது நாடாளுமன்ற உறுப்பினர்களின் செல்பாடுகளினால் மக்கள் மத்தியில் அந்தக் கட்சி மீதும் அதிர்ப்தி நிலை.

கிழக்கில் வருகின்ற பொதுத் தேர்தலில் திருகோணமலையில் ஹக்கீம் வேட்பாளருக்கும் ரிசாட் வேட்பாளருக்குமிடையில் அதாவது தௌபீக்-மஹ்ரூபுக்குமிடையில் சற்று நெருக்கமான போட்டிக்கு இடமிருக்கின்றது. அதே போன்ற மட்டக்களப்பில் மு.கா.வில் ஹிஸ்புல்லாஹ் இந்த முறை களமிறங்குவதால்  அவர் அங்கு தனிக்குதிரையாகத்தான் இருக்கின்றார். ஆனாலும் மு.கா. தலைமை இவரை கவிழ்த்து விட ஏதாவது பண்ணினாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்பதும் எமது கருத்து.

ஒரு காட்டில் இரு சிங்கங்கள் ராஜாவாக வாழ முடியாது என்ற ‘தியரியில்’ தான் நமது இந்தக் கணக்குக்கும் அமைக்கின்றது. கடந்த காலங்களைவிட கிழக்கில் ரிசாட் அணியில் கரங்கள் சற்று மேலோங்கி இருப்பதாகத்தான் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட ரீதியில் ஹக்கீமை விட முஸ்லிம்கள் மத்தியில்  ரிசாடுக்கு ஒரு வரவேற்பு பரவலாகத் தெரிகின்றது.  அக்கரைப்பற்றை மையமாக வைத்து அரசியல் செய்கின்ற அதாவுல்லாவின் அரசியல் ராஜபக்ஸாக்களுடன் நெருக்க அரசியல் காரணமாக சற்று சிதைவடைந்து காணப்படுகின்றது. இதனால் அவர் கரை சேருவதற்கு என்ன வியூகங்களை வகுக்கப்போகின்றார்  என்பது தெளிவில்லை.

கடந்த முறை புத்தளத்தில் இருந்து ஒரு உறுப்பினரை வென்றெடுக்க கூட்டணி போட்டு அதில் தனது இலக்கை எட்டிய முஸ்லிம் கூட்டணி ஒரு சமூகத் துரோக கூட்டணியாக தன்னை சமூகத்தின் மத்தியில் இனம் காட்டியதால் இந்த முறை அப்படியான ஒரு கூட்டணி வந்தால் அதனை முஸ்லிம்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பதில் நிறையவே சந்தேகங்கள் இருக்கின்றன.

கிழக்கிற்கு வெளியே தனித்துவக் கட்சிகளின் உறுப்புரிமை என்று பார்க்கும் போது கொழும்பில் அவர்களுக்கான வாய்ப்பு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அங்கு முஜீபுர் மற்றும் மரைக்கார் என்ற வலுவான வேட்பளார்கள் இருக்கின்றார்கள். இந்த முறை அவர்கள் கூட்டணித் தலைவர் சஜித் கொழும்பில் களத்தில் இறங்குவதால் அவருக்கு ஒரு விருப்பு வாக்குக்கு இடம் வைக்க வேண்டிய   கட்டாயம் அங்கு இருக்கின்றது. எனவே மூன்றாவது முஸ்லிம் வேட்பாளர் ஒருவருக்கு அந்தக் கட்சியில் நிச்சயம் இடமில்லை. கண்டியிலும் இதே நிலைதான். வழக்கம் போல மு.கா. ஹக்கீம் அங்கு களமிறங்குவார்.

என்னதான் பலயீனமான வேட்பாராக இருந்தாலும் கண்டியில் அடுத்தவர் ஐதேக.சார்பில் ஹலீம். மூன்றாவதாக ஒரு முஸ்லிம் வேட்பாளர் எதிர்பார்க்கப்பட்டாலும் கண்டியில் உள்ள ஐதேக. தலைவர் லக்ஸ்மன் கிரிஎல்ல தனக்கு அல்லது தனது புதல்விக்கு முஸ்லிம்களின் ஒரு விருப்பு வாக்கை எதிர் பார்க்கும் நிலையால் மூன்றாவது முஸ்லிம் வேட்பாளருக்கு இடமில்லை.

இது தவிர களுத்துறை-இம்டியாஸ் கேகல்லை-கபீர் ஹசீம். வருவார்கள் அதே போன்று இன்னும் அனுராதபுரம், குருனாகல போன்ற இடங்களில் இருந்து இன்னும் சிலர் சஜித் தரப்பிலிருந்து வரக் கூடும். மொட்டுக் கட்சியில் இருந்து வரும் எந்த ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பே கிடையாது. ரணில் தரப்பு நிலையும் இதுதான்.

வருகின்ற தேர்தலில் சிங்கள மக்களின் வாக்குகள்  அனுர-சஜித்-மஹிந்த என சிதற வாய்ப்பு இருப்பதால் ஒரு கட்சிக்கு முஸ்லிம்கள் அதிகமாக வாக்களிக்கும் போது அவர்களின் பிரதிநித்துவத்துக்கு ஒரு நல்ல வாய்ப்பும் இருக்கின்றது.  ஆனால் முஸ்லிம்கள் மத்தியில் அனுர அணியினர் தமது கொள்கைகளை இன்னும் உரிய முறையில் எடுத்துச் செல்லவில்லை. அவர்களைப் பொறுத்தவரை இது ஆபத்தாக அமையவும் இடமிருக்கின்றது. அதே நேரம் அனுர மீதான முஸ்லிம் இளைஞர்களின் ஈர்ப்பும் வருகின்ற தேர்தலில் தெளிவாகத் தெரிகின்றது.

Anura Kumara Dissanayake receives life threats . - Sri Lanka News

ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர் பொதுத் தேர்தல் வருமாக இருந்தால் முஸ்லிம் பிரதிநிதித்துவம்  மேலும் ஒன்றிரண்டால் அதிகரிக்கவும் ஒரு சின்ன வாய்ப்பும் இருக்கின்றது என்பது எமது கணக்கு.

அதே நேரம் ஜனாதிபதித் தேர்தல் முன்கூட்டி வருமாக இருந்தால் முஸ்லிம் சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் சஜித்துக்குத்தான் போய்ச் சேரும். முஸ்லிம்களில் பெரும்பாலானவர்கள் சஜித்தான் வெற்றி வேட்பாளர் என எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். ஆனால் களநிலவரம் அப்படியாக இல்லை.

நோன்பு முடிவுற்றதும் முஸ்லிம் பிரதேசங்களில் என்.பி.பி. தனது செயல்பாடுகளைத் துரிதப்படுத்த இருப்பதாக அதன் முக்கியஸ்தர் ஒருவர் நம்மிடத்தில் தெரிவித்தார். அனுர குமார கனடா சென்றிருந்தபோது அவரைச் சந்தித்த முஸ்லிம் சமூகத்தினர் முஸ்லிம் பிரதேசங்களில் இன்னும் என்பிபி. அவர்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தவில்லை என்று சொல்லி இருந்தார்கள். இதனை அனுர குமார திசாநாயக்க சிங்கள ஊடகங்களுக்கும் சொல்லி இருந்தார்.

வடக்கு கிழக்கில் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் மீது அந்த சமூகத்தின் அதிர்ப்தி இருப்பதை விட ஒட்டு மொத்தமாக தனித்துவ முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீது முஸ்லிம் சமூகத்தின் கோபம் பல மடங்கு அதிகமாகவும் விசலமாகவும் இருக்கின்றது. இந்த வாய்ப்பை வருகின்ற தேர்தலில் யார் பயன் படுத்திக் கொள்ளப் போகின்றார்களோ தெரியாது. தன்னல அரசியலுக்காக தமது தனித்துவத் தலைமைகள் சமூகத்தை ஏமாற்றிப் பிழைப்பு நடாத்திக் கொண்டிருக்கின்றார்கள் என்பதனை சிறு குழந்தை கூட நன்கு அறிந்துதான் வைத்திருக்கின்றது.

நன்றி: 31.03.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

பாததும்பற ஐதேக. வலய அமைப்பாளராக M.H.Mமுபாரக் நியமனம்

Next Story

ஆட்டை கடித்து மாட்டை கடித்து.. கடைசியில் ஐநாவையே பதம் பார்த்த இஸ்ரேல்!