தேசிய பேரவை நாடகமும் ஜெனீவா வழக்க நிகழ்வும்!

-நஜீப் பின் கபூர்-

ஒரு மனிதனுடைய அந்திம நாட்களில் அவனது உறவுகள் சுற்றத்தவர்கள் அவனை பழைய நிலைக்குக் கெண்டு வருவதற்காக தங்களால் ஆன அனைத்து முயற்ச்சிகளையும் எடுப்பதை நாம் சமூகத்தில் பார்த்திருக்கின்றோம். சிலர் தேர்ச்சி பெற்ற வைத்திய நிபுணர்களை தேடி ஓடுவதும், இன்னும் சிலர் கடவுளிடம் அவருக்காக விஷேட பிராத்தனைகளில் ஈடுபடுவதும் இன்னும் ஒரு கூட்டம் சூனியம் செவ்வினை என்றும் மந்திர தந்திர வேலைகள் பார்ப்பதையும் நாம் பார்க்கின்றோம்.

இந்த அனைத்து ஓட்டங்களும் முயற்ச்சிகளும் அவரவரது விசுவாசங்கள் நம்பிக்கையின் வெளிப்பாடாகத்தான் அனேகமாக இருந்து வருகின்றன. இப்படித்தான் மரணத்தின் விளிம்பில் இருக்கின்ற நமது தேசத்தை மீட்டெடுப்பதற்காக தற்போதய ஆட்சியார்கள் கடைசி நேர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதற்காக ராஜபக்சாக்கள் பசில் என்ற தமது எழு தலை மாயவித்தைக்கார தம்பியை  நாடாளுமன்றத்துக்குக் கொண்டு வந்து அவருக்கு அதி உயர் நிதி அமைச்சுப் பதவியைக் கொடுத்து அவர் நாடு எதிர் நோக்கி இருக்கின்ற பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு கொண்டுவருவார் என்று பரப்புரை செய்தார்கள்-எதிர்பார்த்தார்கள் ஆனால் அந்த மனிதனுடைய தந்திரங்கள் மந்திரங்கள் எதுவுமே கைகூட வில்லை. நாளுக்கு நாள் நெருக்கடிகள் அதிகரிக்கத் துவங்கியது.

இதனால் அலாவுதீனின் அற்புத விளக்காக எதிர்பார்க்கபட்ட மிஸ்டர் டென்பேர்ஷன்-பசில் அரசியலை விட்டு ஓட்டம் எடுக்க வேண்டி வந்தது. அவர்தான் நாட்டில் நடந்த அனைத்து நெருக்கடிகளுக்கும் காரணம் என்றும் குற்றச்சாட்டுக்களும் வந்தது. அவருடன் கூடவே தனது மூத்த சகோதரன் மஹிந்தவும் அதன் பின்னர் அதிகாரம் மிக்க ஜனாதிபதிப் பதவியில் இருந்த சகோதரன் கோட்டாவும் பதவிகளைத் துறந்து நாட்டிலிருந்தே தப்பி ஓடவேண்டி வந்தது.

பின்னர் பெரும் சர்வதேச இராஜதந்திரி உலகத் தலைவர்கள் அனைவரையும் தெரிந்தவர் பெருவித்தகர் என்ற ஐதேக. தலைவர் ரணிலை அழைத்து மரணப் படுக்கையில் இருக்கின்ற தேசத்தை-ஆட்சியை மீட்டுத் தருமாறு கேட்டு ராஜபக்ஸாக்கள் நாடாளுமன்றத்தில் வெரும் ஒரு ஆசனத்தை மட்டுமே வைத்திருக்கின்ற இந்த மனிதனிடம் அதிகாரத்தை ஒப்படைத்தார்கள்.

இவர்தான் இந்த நேரத்தில் நோயாளிக்கு வைத்தியம் பார்க்க சிறப்பான வைத்திய நிபுணர் என்று எதிர்பார்க்கபட்டது. இவரை அதிகாரத்தில் நிறுத்தி மேற்கத்திய நாடுகளின் நல்லுறவைப் பெற்றுக் கொண்டால் டொலர்கள் நாட்டுக்கு மூட்டை மூட்டையாக வந்து குவியும் என்று எதிர்பார்த்த பலரும் இங்கு இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் நாம் இந்த ரணிலை அன்றும் இன்றும் ஒரு அரசியல் கோமாளியாகவும் நயவஞ்சக்கரராகவும்தான் பார்த்து வந்திருக்கின்றோம்.

பசில் என்ற மந்திர வித்தைக்காரனாலும் நாட்டை மீட்டெடுக்க முடிவில்லை. பெரும் வைத்திய நிபுணர் என்று கொண்டுவரப்பட்ட ரணிலாலும் நோயாளியை சுகப்படுத்த முடியவில்லை. நிலமை இருந்ததை விட மோசமானது. ரணில் அதிகாரத்திற்கு வந்தால் மேற்கு நாடுகள் இலங்கைக்கு கை கொடுக்கும் என்ற எதிபார்ப்புக்கள் வெரும் மாயையாகத்தான் அமைந்தது.

அவரது தனிப்பட்ட செல்வாக்கைப் பயன்படுத்தி இந்த நாட்டுக்கு ஏதாவது  மேற்கத்திய நாடு ஒரு டொலரைக் கொடுத்ததா என்று கேட்டால் இல்லை என்பதுதான் பதில். நாடு தொடந்து அழிவுப் பதையில் வேகமாக நடை போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தக் காட்சிகளைத்தான் நாம் பார்த்தக் கொண்டிருக்கின்றோம்.

பின்னர் ஐஎம்எப் என்ற கடவுள் மீதுதான் இவர்களது காவனம் திரும்பியது. ஐஎம்எப் கடவுளிடம் போகக் கூடாது அவர் கட்டளைகள் -நிபந்தனைகளை ஏற்க்கக் கூடாது என்று ஆளும் மொட்டுக் கட்சியில் இருந்த பலர் கடுயைமாக எதிர்த்தார்கள். குறிப்பாக முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் கப்ரால் வாசு விமல் பேன்றவர்களும் ஆளும் தரப்பில் இருக்கின்ற பொருளாதாரம் என்பதன் அரிச்சுவடியே புரியாத பலரும் இந்த ஐஎம்எப்பை விரோதியாக துரோகியகத்தான் பார்த்தார்கள்.

ஒருபோதும் அங்கே போக மாட்டோம் என்றார்கள். கடைசியில் எந்தக் கடவுளின் காலடியில் விழக் கூடாதோ அந்தக் கோயில் அதாவது ஐஎம்எப் தான் நாட்டை பொருளாதார மீட்சியிலிருந்து மீட்கும் என்று எல்லோருமாகத் தீர்மானம் போட்டு ஐஎம்எப் கடவுளின் காலடியில் போய் சரணடைந்தார்கள்.

இந்த ஐஎம்எப் சாமி நம்ம நாட்டு விவகாரத்தில் கடும் கோபத்தில் இருந்திருக்கின்றார் என்பது அதன் நடவடிக்கையில் இருந்து நமக்குப் பார்க்க முடிந்தது. தனது காலடியில் வந்து வீழ்ந்து கிடக்கும் இலங்கையிடம் அவர் கை கொடுப்பதற்குப் பதில் ஒரு குறுக்கு விசாரணையையே நாடத்தி குடைந்தெடுத்து விட்டார். நீங்கள் சீனா, இந்தியா, போன்ற நாடுகளுடனும் இதர நிறுவனங்களில் இருந்து ஏற்கெனவே பெற்றிருக்கின்ற கடன்களை எப்படி திருப்பிக் கொடுக்கப் போகின்றீர்கள். அதற்கான உங்கள் நிகழ்ச்சி நிரலை எங்களிடம் முதலில் சமர்ப்பனம் செய்யுங்கள் என்று கோட்ட போது சாமி எம் மீது கடும் கோபத்தில் இருக்கின்றது என்பது ஆட்சியாளருக்குப் புரிந்தது.

அது மட்டுமா நாட்டில் அரசியல் ஸ்த்தீரம் ஜனாநாயக உரிமைகள் அமைதிவழிப் போராட்டங்களுக்கு அனுமதி என்று ஒரு நீண்ட பட்டியலைக் கொடுத்து இந்த விடயங்களில் உங்கள் ஏற்பாடுகள் ஒழுங்கு முறைகள் என்ன என்று ஐஎம்எப்பும் சர்வதேமும் நிபந்தனைகளை விதிக்க ஆட்சியாளர்கள் இன்று ஆடிப் போய் இருக்கின்றது.

இந்த நிலையில் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு தனது பாக்கிகள் – செய்ய வேண்டிய ஒழுங்குகள் பற்றி வழக்கம் போல் குறுக்கே வந்து நிற்பது மட்டுமல்லாது கடந்த காலங்களை விடவும் தமது பிடியை இந்தமுறை இருக்கி இருப்பதாகத் தெரிகின்றது. பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும் என்பதுதான் இன்று மொட்டு ஆட்சியாளர்களும் அவர்களை காக்க வந்த ரணிலின் நிலையும் இருக்கின்றது.

இதன் பிந்திய நிலமை ரணிலைப் பதவிக்கு கொண்டு வந்தவர்களே இன்று அவரை பகடக் காய்களாக பாவித்துக் கொண்டிருக்கின்றார்கள். மக்கள் நெருப்பாக கொதித்து நின்ற போது ரணில் தண்ணீராக வந்து அந்த தீச்சுவலைகள் ஓராளவுக்கு தணித்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அந்த தீச்சுவாலை அனல்கள் இன்னும் சாம்பல் படிவுகளுக்குக் கீழே துடிப்புடன் அல்லது உயிர்ப்புடன்தான் இருக்கின்றது என்பதனை ஆட்சியாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இப்போது மக்கள் எதிர்ப்பு ரணில் வருகையாள் திசை மாறிப் போனதால்  ராஜபக்ஸாக்கள் மீண்டும் அரசியலில் தமது பிடியை இருக்கிக் கொள்ள நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதையும் அவதானிக்க முடிகின்றது.

அவர்கள் மொட்டுக் கட்சியைப் புனரமைக்கின்ற முயற்சியில் இறங்கி இருப்பதுடன் ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசான நாமல் ஏதோ வித்தகர் போல இப்போது மொட்டுக் கட்சிக்கு தலைமைத்துவம் கொடுக்கின்ற செயல்பாட்டில் இறங்கி இருப்பதையும் பார்க்க முடிகின்றது. மேலும் ரணில் பதிமூன்றாவது அரசியல் சீர்திருத்தத்துக்கு உயிர் கொடுக்க புதிய பல சீர்திருத்தங்களை விஜேதாச ராஜபக்கஸாவை முன்னிருத்தி செய்ய முயன்றார்.

துவக்கத்தில் அவர் இந்த முயற்சியல் இறங்கிய போது ராஜபக்ஸாக்கள் அமைதியாக இருந்தனர். இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னெடுக்க வேண்டாம் என்று ஜனாதிபதி ரணிலுக்கு நேரடியாகவே சொல்லி இருக்கின்றார்கள். இது ராஜபக்ஸாக்களின் வழக்கமான நயவஞ்சக அரசியலை காட்சிப்படுத்துகின்றது.

தமக்கு தேவைப்படும் போது பாதுகாப்புக்காக இந்தியாவிடம் போய் உதவி கேட்பது பின்னர் காரியம் முடிந்தவுடன் நீ யார் நான் யார் என்று நடந்து கொள்வது. எனவேதான் நாம் வழக்கமாக இந்தியா இலங்கையிடம் குறிப்பாக ராஜபக்ஸாக்களிடம் ஏமாறி வருகின்றது என்று சொல்லி வருகின்றோம். அதே போன்று தமக்கு தேவைப்படும் போது இதே மொட்டுக் கட்சியினரும் ராஜபக்ஸாக்களும் ரணிலை காதைப் பிடித்து வெளியே இழுத்து வீசுவார்கள் என்று நாம் முன்கூட்டியே சொல்லி வைக்கின்றோம். அப்போது ரணிலும் ஏதோ நாம் சிலகாலம் ஜனாதிபதிக் கதிரையில் அமர ராஜபக்ஸாக்கள் உதவினார்கள் என்று நடக்கின்ற காட்சிகளை ஜீரணித்துக் கொள்ள வேண்டி இருக்கும்.

இதற்கிடையில் சர்வகட்சி அரசு, தேசிய அரசு என்றெல்லாம் ரணில் முயன்று பார்த்தார்.

ஆனால் இந்தக் கதைகளை எடுத்த எடுப்பிலே மொட்டு அணியினர் நிராகரித்து விட்டனர். அவர்கள் தயவில் உயிர் வாழ்கின்ற ரணிலும் இதில் அடுத்த கட்டத்தை நகர்த்த முடியாதிருக்கின்றார். அந்த முயற்சிகள் எல்லாம் தோற்றுப் போக இப்போது தேசிய பேரவை என்று ஒரு நாடகத்தை மேடையேற்றி காலத்தை ஓட்ட ரணில் முயன்று வருகின்றனர்.

எடுத்த எடுப்பிலே ரணிலின் இந்த தேசியப் பேரவை நாடகத்தில் பாத்திரம் ஏற்று நடிக்க நாங்கள் ஒருபோதும் தயாரில்லை என்று ஜேவிபி அடித்துக் கூறிவிட்டது. சஜித் தரப்பினரும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கின்றார்கள் என்று தெரிகின்றது. எதிரணியில் இருக்கின்ற ஒரு சில அரசியல் முக்கியஸ்தர்கள் இதில் இணைந்து செயலாற்ற தமது விருப்பை தெரிவித்தாலும் இந்த தேசிய பேரவை ஒரு போதும் வெற்றி பெறாது.

இது காலத்தை கடத்துவதற்காக ரணிலும் மொட்டுக் கட்சியினரும் போடுகின்ற நாடகம் மட்டுமே என்பது நமது கணக்கு. எனவே அரசியல் யாப்பு கதைக்கும் ஆப்பு. தேசிய பேரகை;கும் அதே நிலை. சில நாடுகளில் இப்படி இயங்குகின்ற தேசிய பேரவைகளில் அரசியல் வாதிகளை உள்வாங்காது துறை வாரியன நிபுணர்களுக்குத்தான் அதில் அங்கத்துவம் கொடுக்கபட்டடிருக்கின்றது.

அடுத்து புதிதாக நியமிக்கப்பட்டிருக்கின்ற கோப் குழு உறுப்பினர்களின் பெயர் பட்டியலை ஒரு முறை பாருங்கள். அப்பட்டமாக கப்பம் பெற்றவர்களும் ரயில் வண்டிகளில் தங்கச் சங்கிலிகளை பிடுங்கிக் கொண்டு ஓடியவர்களும் இயற்கை வளங்களைக் கொள்யடித்தவர்கள் அரச பணத்தை களவாடியவர்கள் பொது மக்கள் பணத்தை சூரையாடியவர்கள் சட்டவிரோ செயல்பாடுகளில் ஈடுபட்டவர்களும்தான் இன்று அரசு தரப்பிலிருந்து இதற்கு நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்கள். இது என்ன வேடிக்கை.

சர்வதேச சமூகம் அரசியல் ஸ்திரத்தனம் தூய்மையான அரசியல் செயல்பாடுகள் என்று எதிர்பார்ப்புக்ளை வைத்திருக்கின்ற நேரத்தில் அப்பட்டமான கள்வர்களை ஆளும் தரப்பு இப்படியான குழுக்களுக்கு நியமனம் செய்து அதன் மூலம் உலகத்தாருக்கு சொல்ல வரும் செய்தி என்ன? இதற்கிடையில் தற்போதய மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்ஹ செயல்பாடுகள் மற்றுமொரு கிளர்ச்சிக்கு மக்களைத் தூண்டுகின்ற பாணியில் அமைந்திருக்கின்றது என்று விமல் வீரவன்ச அண்மையில் குற்றம் சாட்டி இருந்தார். எனவே இவர் இன்னும் அரச சார்பு கொள்கையைத்தான் பின்பற்றிக் கொண்டிருக்கின்றார் என்பது தெரியவருகின்றது.

இதற்கிடையில் கொழும்பையும் அரச கேந்திர இடங்களையும் இராணுவ மயாமாக்கி அதன் மூலம் மக்களை அடக்கி வைக்க மொட்டுக் கட்சியின் வேண்டுதல் காரணமாக ரணில் மேற்கொண்ட முயற்சிகள் உள்நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் எழுந்த கடும் எதிர்ப்புக் காரணமாக அதற்கான வர்த்தமானி அறித்தல்களை ஜனாதிபதி ரணில் தற்போது நீக்கி இருக்கின்றார்.

தேசிய பேரவை என்று நாடகமும் இந்த அரசை உயிர்வாழ வைப்பதற்காக ரணிலும் மொட்டுக் கட்சிக்காரர்களும் மரணப்படுக்கையில் இறுதி மூச்சை வாங்கிக் கொண்டிருக்கின்ற அரசை மீட்டெடுக்க மேற்கொள்ளும் இறுதி கட்ட முயற்சிகளாகத்தான் நாம் பார்க்கின்றோம். இலங்கை தொடர்பில் சர்வதேசம் நல்லெண்ணத்துடன் இல்லை என்பது அண்மையில் நடந்த சம்பங்களில் இருந்து அவதானிக்க முடிகின்றது.

கடைசியில் இப்படியான ஒரு நிலை ஏற்பட ஜனாதிபதி ரணிலின் செயல்பாடுகள்தான் காரணம் என்று மொட்டுக் கட்சியினர் குற்றச்சாட்டை முன்வைப்பார்கள.; பதிலுக்கு ரணில் தரப்பு தனது நல்ல திட்டங்களை முன்னெடுப்பதற்;கு மொட்டுக் கட்சியினர் இடம் தரவில்லை அதனால்தான் இந்த நிலை என்று பதில் காரணம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். இதுதான் இன்றைய அரசியல் செயல்பாடுகளின் முடிவாக இருக்கும்.

ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு வழக்கம் போல் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கின்றது. இதில் தமக்குப்படு தோல்வி என்று முன்கூட்டியே புரிந்து கொண்ட நமது வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி கடைசியில் ஐ.நா.வையும் மனித உரிமைகள் அமைப்பையும் சண்டியன் போல் மிரட்டியும் பார்த்தார். ஆனால் அவரது எந்த முயற்சியும் அங்கு எடுபடவில்லை. அதற்காக இலங்கை விவகாரத்தில் மனித உரிமைகள் அமைப்பு பெரிதாக சாதித்து விட்டது என்றும் தம்மட்டம் அடித்துக் கொள்ளவும் முடியாது என்பதுதான் இது விவகாரத்தில் நமது கருத்து.

நன்றி:09.10.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

போதை மாயத்தோற்றத்தை ஏற்படுத்தும் 'ட்ரீமெஷின்'

Next Story

சே குவேரா நினைவு நாள்: புரட்சியாளர் வாழ்க்கை !