தேசிய  அணியில் கலகெதர ஜப்பார் மாணவன் M.R.M.Afaaz

கலகெதர ஜப்பார் வரலாற்றுச் சாதனை!

இந்தியாவில் நடைபெறவுள்ள SUBROTO CUP

2024 உதைப்பந்தாட்டத் தொடர்…

இந்திய வான் படையினால் அதன் முதலாவது விமானப்படைத் தலபதி எயார் மார்ஷல் சுப்ரோதோ முகர்ஜி நினைவாக 1960 ஆம் ஆண்டு முதல் வருடாந்தாம் புது டில்லியில் ஏற்பாடு செய்யப்படும் பாடசாலைகளுக்கு இடையிலான சர்வதேச உதைப்பந்தாட்டப் போட்டிகளின் 63 ஆவது தொடர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற  ஏற்பாடாகியுள்ள நிலையில் குறித்த போட்டித் தொடருக்கான இலங்கை தேசிய அணித் தெரிவானது இன்றைய தினம் முற்றுப் பெற்றதோடு குறித்த அணியில் கலகெதர ஜப்பார் கல்லூரியின் ஒரு மாணவர் தெரிவாகியுள்ளமை பாடசாலை வரலாற்றின் மாபெரும் ஒரு சாதனையாக கருதப்படுகின்றது.

மேற்படி சர்வதேச சுற்றுப்போட்டிக்கான 15 வயதின் கீழான தேசிய வீரர்கள் குழாத்தை தெரிவு செய்யும் நோக்கில் இலங்கை தேசிய உதைப்பந்தாட்ட சம்மேளனமானது பாடசாலை உதைப்பந்தாட்ட வீர்ர்களை ஒன்றுதிரட்டி மாபெரும் தெறிவுப் பட்டறையொன்றினை  ஏற்பாடு செய்ததோடு அதற்காக ஒவ்வொரு பாடசாலையினதும் மிகத்திறமையான வீர்ர்கள் சிலரை தெரிவு செய்து அனுப்பும்படி கேட்டுக் கொண்டது.

இதனடிப்டையில் குறித்த தெறிவுப் பட்டறையின் ஆரம்ப கட்ட தெரிவுகள் கடந்த 2024.07.05 ஆம் திகதி கம்பஹா பண்டாரநாயக்க விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்தது. மேற்படி தெரிவுப்பட்டறை தொடர்பில் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த வழிகாட்டுதல்களுக்கு அமைவாக கல்லூரி அதிபர் ஜனாப் பஸால், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான அம்ஜாட் முத்தாலிப், றிப்கி மற்றும் பாடசாலை அணியின் பிரத்தியேக பயிற்றுவிப்பாளர் ஜனாப் றிம்ஷாட் கணி ஆகியோரின் முயற்சி மற்றும் தெரிவின் அடிப்படையில் திறமையான ஆறு மாணவர்கள் குறித்த பட்டறைக்காக தெரிவு செய்யப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டனர்.

கம்பஹா பண்டாரநாயக்க விளையாட்டரங்கில் நடைபெற்று முடிந்த ஆரம்ப கட்டத் தெரிவில் நாடளாவிய ரீதியில் பல்வேறு பாடசாலைகளை பிரதிநிதித்துவம் செய்து 650 போட்டியாளர்கள் பங்குபற்றியதோடு குறித்த தெரிவுப்பட்டறையில் தமது திறமைகளை சிறப்பாக வெளிக்காட்டிய 115 வீரர்கள் குறித்த தெரிவுத் தொடரின் 2ம் கட்ட தெரிவிற்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இதனடிப்படையில் ஜப்பார் கல்லூரி சார்பாக பங்குபற்றிய 6 வீரர்களில்

M.R.M.Afaaz,

M.R.M.Raaiz,

M.Shakib Ahamed

 N.A.Aaqib Ahamed

ஆகிய 4 வீரர்கள் தமது திறமைகள் காரணமாக அடுத்த 2ம் கட்ட தெரிவுப் பட்டறையில் பங்கேற்கும் வாய்ப்பைப் பெற்றனர். மேற்படி தெரிவுத் தொடரின் 115 வீரர்களை உள்ளடக்கிய 2ம் கட்ட தெரிவுப் பட்டறையானது இன்றைய தினம் (2024.07.09) தம்புள்ளையில் அமைந்துள்ள “வீர மொஹான் ஜயமஹா” விளையாட்டறங்கில் நடபெற்று முடிந்ததுடன் இன் போது 3 ஆம் கட்ட தெரிவிற்காக திறமையான வீர்ர்களின் பெயர்ப்பட்டியல் 30 ஆக மட்டுப்படுத்தப்பட்டது.

இதனடிப்டையில் மேற்படி 30 போட்டியாளர்களில் ஜப்பார் மாணவர்களான

M.R.M.Afaaz 

N.A.Aaqib Ahamed  ஆகியோர் தெரிவாகினர்.

அதனையடுத்து எதிர்வரும் சர்வதேச SUBROTO CUP-2024 போட்டித் தொடருக்கான இலங்கை தேசிய அணியில் பங்கேற்கும் இறுதி அணியினை தெரிவு செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் இலங்கை கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாடசாலை உதைப்பந்தாட்ட சம்மேளனம் ஆகியவற்றின் பூரண அனுமதியுடன் குறித்த சர்வதேச தொடருக்கான 15 வயதின் கீழான இலங்கை தேசிய  அணியில் இடம்பெறும் வாய்ப்பை செல்வன் M.R.M.Afaaz பெற்றுக் கொண்டதுடன் இது கலகெதர ஜப்பார் கல்லூரியின் உதைப்பந்தாட்டத் துறை வரலாற்றில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

ஜப்பார் பழைய மாணவர் சங்கமானது இவ்வாறான ஒரு வரலாற்றுப் பதிவிற்குக் காரணமான செல்வன் M.R.M.Afaaz மற்றும் அவரது பெற்றோர்களுக்கும், இவ்வாறான திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கு  வாயப்பளித்த கல்லூரி அதிபர் ஜனாப் பஸால், விளையாட்டுப் பொறுப்பாசிரியர்களான அம்ஜாட் முத்தாலிப், றிப்கி மற்றும் பாடசாலை அணியின் பிரத்தியேக பயிற்றுவிப்பாளர்  றிம்ஷாட் கணி ஆகியோருக்கும் இவர்களுக்கான உதவி ஒத்தாசைகளை வழங்கிய விளையாட்டுக் கழகங்கள், சங்கங்கள் மற்றும் ஏனையோருக்கும் தனது பாராட்டுக்களை முன்வைப்பதுடன் எதிர்வரும் சர்வதேச தொடரில் இலங்கையின் கீர்த்தி நாமத்தை மேலோங்கச் செய்ய செல்வன் M.R.M.Afaaz இற்கு வாய்ப்புகள் கிட்ட வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றது.

-Jabbar Past Pupils Association

Previous Story

ஜாமியுல் அஸ்ஹர் குருளை சாரணர்

Next Story

கார்டியன் நியூஸ்(4) 10.07.2024