தெளிவான பிளவுகளும் தெளிவற்ற ஐக்கியமும்!

*****நஜீப் பின் கபூர்*****

(நன்றி: 31.08.2025 ஞாயிறு தினக்குரல்)

நாட்டில் பிரபுக்களுக்கும் சிவிலியன்களுக்கும் இடையே பனிப்போர்

சானியைக் கழுதை எனத்திட்டிய ரணில் அவர் காலடியிலே மண்டி

அணுரகுமார ஜனாதிபதியாக வந்த பின்னர் நடைபெற்ற எல்பிடிய உள்ளூராட்சித் தேர்தலில் அரசின் செல்வாக்கு சரிந்தது. அதனால் பொதுத் தேர்தலில் நமக்குத்தான் வெற்றி என்று பிரதான எதிரணியான சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கதை சொல்லிக் கொண்டு வந்தது.

அதன் பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தலில் என்பிபி. மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்று அதிரடி காட்டி இருந்தது. பின்னர் மீண்டும் உள்ளாட்சித் தேர்தல் நடக்க எல்பிட்டிய முடிவுகளுக்குச் சமமான ஒரு நிலைதான் அங்கு வந்தது. இது உள்ளாட்சித் தேர்தல் முறையில் வருகின்ற ஒரு இயல்பு நிலை. இது பற்றி நாம் அந்த்தத் தேர்தலுக்கு முன்பே பல முறை சொல்லி இருந்தோம்.

ஆனால் இந்த அரசு பதவிக்கு வந்த பின்னர் நாட்டில் மிகவும் கொதிப்பான ஒரு அரசியல்  சூழ்நிலையை நாம் பார்த்தது முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதும் அதனைத் தொடர்ந்த சலசலப்புக்களும்தான் என்பது நமது கருத்து. இதுவரை எதிரும் புதிருமாக நின்று அரசியல் செய்து வந்த அனைத்து குறிப்பாக தெற்கு எதிர்க்கட்சிகள் ரணில் விவகாரத்தில் ஓரணியில் ஐக்கியப்பட்டது இன்று பெரிய இசுவாகப் பார்க்கப்படுகின்றது.

உண்மையில் இவர்கள் கொள்கை ரீதியில் மக்களின் நலன்களை மையமாகக் கொண்டு ஐக்கியப் பட்டிருக்கின்றார்களா என்று கேட்டால் நிச்சயமாக அது அப்படியாக இல்லை என்பதுதான் நமது பதிலாக இருக்கின்றது. அவர்களின் இந்த ஐக்கியம் இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் என்பதனை பொருத்திருந்து பொது மக்களுக்குப் பார்க்க முடியமாக இருக்கும். அதனால்தான் நாம் இதனைத் தெளிவான பிளவும் தெளிவில்லாத ஐக்கியமும் என்று சுட்டிக் காட்டுகின்றோம்.

ரணில் கைது செய்யப்பட்ட பின்னர் ஏறக்குறைய அனைத்துக் எதிர்க் கட்சிகளும் ஓரணியில் இணைந்து ரணில் விடுதலைக்காக பேசி இருந்ததுடன். நமக்கு ரணில் கைது செய்யப்பட்டதன் மூலம் அணுரகுமார ஒரு நல்ல வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றார். அதற்காக நாம் அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் சிலர் சொல்லி இருந்தனர்.

அங்கு பேசுகின்றவர்கள் ரணில் செய்தது குற்றமாக இருந்தாலும் மென்மையாக அரசு இதனைத் கையாண்டிருக்க வேண்டும் என்று பேசி இருந்தார்கள். மு.கா. தலைவர் ஹக்கீம் ஒரு படி மேல் சென்று இதனை நாகரிகம் இல்லாத செயல் என்று விமர்சித்திருந்தார். கைது செய்யாமல் வழக்கை முன்னெடுத்திருக்கலாம் என்பதும் அவர்கள் கருத்தாக இருந்தது. இவர்கள் மீதும் குற்றச்சாட்டுக்கள் கிடப்பில் இருக்கின்றன. அதனால்தான் ரணில் மீது இவர்களுக்கு இந்த நேசம்.

எனவே சராசரி மனிதர்களுக்கு ஒரு சட்டமும் பிரபுக்களுக்கு  இந்த நாட்டில் சலுகையான சட்டங்களும் இருக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் எதிர்பார்ப்பாக இருப்பது அங்கு தெளிவாகப் பார்க்க முடியுமாக இருக்கின்றது. நம்மைப் போன்றவர்கள் சொகுசாக வாழ்வதால் கீழ்மட்டத்தில் இருந்து அதிகாரத்துக்கு வந்திருக்கும் என்பிபி. காரர்கள் தாங்கிக் கொள்ள முடியாதவர்களாக இருக்கின்றார்கள் என்ற தயாசிரி ஜயசேக்கர  பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் வேறுபாடான சட்டங்கள் அவசியம் இருக்க வேண்டும் என்பது அவர் பேச்சின் கருப்பொருளாக இருந்தது.

அது இன்று கண்டனத்துக்கு இலக்காகி வருகின்றது. தமிழ் தரப்பில் சுமந்திரன் ஹக்கீமுக்கு சமாந்திரமாக ரணில் விசுவாசக் கருத்துச் சொல்லி இருந்தாலும் எதிரணி கூட்டத்தில் சுமந்திரன் கலந்து கொள்ளவில்லை. தமிழ் தரப்பினர் ரணில் கைது விவகாரத்தை வேடிக்கை பார்க்கின்ற ஒரு விவகாரமாகத்தான் எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.

என்பிபி. தனது தேர்தல் பரப்புரைகளிலும் கொள்கைப் பிரகடணத்திலும் ஊழல் மோசடி விடயங்களில் நாம் என்ன செய்யப் போகின்றோம் என்பதனைத் தெளிவாக முன்பே எழுத்து மூலமாகவே சொல்லி இருந்தனர். அதனால்தான் மக்கள் அவர்களுக்கு இந்தளவு வாக்களித்து அவர்களை வெற்றி பெறச் செய்திருந்தனர். எனவே அவர்கள் அதனை செய்ய பின்னடித்தால் மக்களின் கோபத்துக்கும் கண்டனங்களுக்கும் இலக்காவார்கள். இதனால் அவர்கள் அரசு, சொல்வதை செய்து கொண்டிருக்கின்றது.

இதற்கு முன்னர் ரணில் பற்றி மஹிந்த, தினேஸ், சஜித், நாமல், ஹிருனிகா, பவித்ரா போன்றவர்கள் எப்படி எல்லாம் கடும் வார்த்தைகளில் பேசி இருந்தார்கள் என்பதனை ஊடகங்கள் ரிப்பீர்ட் செய்கின்ற போது தேர்தல் மேடைகளில் பேசியது வேறு இது வேறு என்று இப்போது கதை சொல்ல வருகின்றார்கள். சஜித் கூட சில தினங்களுக்கு முன்னர் இதனையே சொல்லி இருக்கின்றார். ஆனால் என்பிபி. தேர்தல் மேடைகளிலும் அதற்கு வெளியிலும் அதிகாரத்தை கையில் வைத்திருக்கின்ற நேரத்திலும் ஒன்றைத்தான் பேசியும் செய்தும் கொண்டிருக்கின்றது.

இதிலிருந்து பொதுமக்கள் எதிரணியில் இருக்கின்ற அனைவரும் போல சந்தர்ப்பவாதிகள். தமது பிரபுத்துவ நலன்களுக்குத்தான் முன்னுரிமை கொடுத்து வருவதை இப்போது நேரடியாக பார்த்தும் வருகின்றோம். இதனால் குடிமக்கள் அவர்கள் மீது இன்று கோபத்தில் இருப்பதும் தெளிவகத் தெரிகின்றது.

அரசியல் வியாபாரிகள்,  பாதாள உலகத்தார், போதை வியாபாரிகள், அரசியல் டீல்காரர்கள், தன்னலக்காரர்கள், வாரிசு அரசியல் வாதிகள் என்ற அனைவரும் இன்று ஒரணியில் திரண்டிருக்கின்றனர். எனவே இவர்களின் கூட்டணி பஞ்சபாதகர் கூட்டணி என்று  விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.  சமகால அரசியலை ரணில் கைதுக்குப் பின்னரா அரசியல் என்று எடுத்துக் கொண்டால் அங்கே ஒரு ஐக்கியம் தெரிகின்றது. ஆனால் அதற்குள் மிகவும் மோசமான பிளவுகளும் வெட்டுக் கொத்துக்களும் இருக்கின்றன என்பதனை நாம் உறுதியாக சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

ரணில் கைதைத் தொடர்ந்து சஜித் கூட்டணியில் இருக்கின்ற சில தனித்துவத் தலைவர்கள் அவரிடம் சென்று  ரணில் விவகாரத்தில் கலந்து ஒத்துழைக்குமாறு கட்டாயப்படுத்தி இருக்கின்றார்கள். அப்போது அவர்கள் முகத்திற்கே சில கடும் வார்த்தைகளை சஜித் பேசி தனது நிலைப்பாட்டைத் அவர்களுக்கு சொல்லியும் இருக்கின்றார்.

எனவேதான் முதலில் நடந்த எதிரணிக் கூட்டத்தை சஜித் தவிர்த்திருந்தார். ஐக்கிய தேசியக் கட்சி செயலாளர் தலதா மற்றும் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன போன்றவர்கள் சஜித்தை நேரடியாக சந்தித்து மிகவும் வினையமாக வேண்டிக் கொண்டதால்தான் 26ம் திகதிய நிகழ்வுகளுக்கு சஜித் போய் இருக்கின்றார்.

அத்துடன் தனது அணியில் இருந்து ரணில் ஆதரவுக் கூட்டங்களுக்கு போகின்றவர்கள் அங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதனை சஜித் விலங்கு மாட்டி விட்டுத்தான் அங்கு அனுப்பி இருந்தார். அப்படிப் போன ஒருவர் சீனாவை சீண்டி ஒரு நெருக்கடியையும் கட்சிக்கு ஏற்படுத்தி இருந்தார் என்றும் தெரிகின்றது. நாம் முன்பு ஒரு முறை சொல்லி இருந்தது போல சம்பிரதாய ஊடகங்களும் சமூக ஊடகங்களும் உப்புச் சப்பில்லாத செய்திகளை ரணில் விவகாரத்தில் இன்றும் சொல்லிக் கொண்டிருந்தன-இருக்கின்றன.

அவை எந்தளவுக்கு கோமாளித்தனமான கதைகளாக இருந்தன என்பததை அரசியல் அறிவுள்ளவர்களுக்குப் புரியும். ஆனால் பொதுமக்களின் கனிசமானவர்கள் காற்றில் வரும் எல்லாச் செய்திகளையும் காதில் வாங்கிக் கொண்டு சந்தைப்படுத்தி வருகின்றார்கள்.

இவர்களுக்காக அனுதாப்படுவதைத் தவிர ஏதும் பண்ண முடியாது. ஆனாலும் அவர்கள் ஆதிக்கம் செலுத்துவோர் மத்தியில் இந்த செய்திகள் சில வேளைகளில் தாக்கங்களை ஏற்படுத்தலாம் அல்லது ஏற்படுத்தாமலும் போகலாம்.

ஆடிப்போன ரணில்!

கடந்த 22ம் திகதி வெள்ளிக் கிழமை (22.08.2025) சிஐடி.க்கு வாக்குமூலம் கொடுக்கப் போய் இருந்தார் முன்னாள் ஜனாதிபதி ரணில். ஐந்து மணி நேரம் வரை நடந்த அந்த வாக்குமூலத்தைக் கொடுத்துவிட்டு  வெளியே போய்விடலாம் என்று நினைத்த ரணில் அப்படியானால் நான் போய் வரவா என்று சிஐடி அதிகாரிகளிடம் கேட்டிருக்கின்றார்.

அப்போது அவர்கள் மென்மையான புன்னகையுடன் இல்லை இல்லை உங்களை கைது செய்ய வேண்டி இருக்கின்றது. நீங்கள் போக முடியாது என்று சொன்ன போது ரணில் ஆடிப்போய் தனக்கு ‘வொஸ்ரூம்’ போக வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டிருகின்றார்.

சிஐடி அதிகாரிகள் அவரைக் கழிவறைக்கு அழைத்துக் கொண்டு போய் இருக்கின்றார்கள். திரும்பி வந்தவர் தடுமாற்றத்துடன் எனக்கு சிஐடி பணிப்பாளர் சானி அபேவிக்ரமவை சந்தித்துப் பேச வேண்டும் என்று கேட்டிருக்கின்றார். பக்கத்தில் இருந்தவர் ரணிலின் இந்த வேண்டுகோள்ளை எடுத்துக் கொண்டு சானியிடம் போக, சாரி அழைத்து வாருங்கள் என்று அவரும் ஓகே சொல்லி இருக்கின்றார்.

அங்கு போனவர் கதிரையில் அமர வைக்கப்பட்டு உங்களுக்கு என்ன நடக்க வேண்டும் என்று கேட்கப்பட்டதாகத் தகவல். ஏன் என்னை கைது செய்கின்றீர்கள் என்று ரணில் கேட்ட போது சட்டத்தை விளக்கமாக எடுத்து விளக்கி இருக்கின்றார் சானி. இனி எதும் நல்லது நடக்கப் போவதில்லை என்பது ரணிலுக்குப் புரிந்து விட்டது. சுஜிவ சேமசிங்ஹவின் பணமோசடி விவகாரம் தொடர்பாக தன்னை சந்திக்குமாறு ரணில் கேட்டிருக்கின்றார்.

அங்கு போன சானியிடம் சுஜிவ விவகாரத்தை விட்டுவிடுமாறு மீண்டும் கேட்க, தன்னால் அப்படி சட்டத்துக்கு முரணாக நடந்து கொள்ள முடியாது என்று சானி அன்று அதிகாரத்தில் இருந்த ரணில் முகத்திற்கே திருப்பிச் சொன்ன போது கழுதையே வெளியே போ என்று திட்டி சானியை அவமாப்படுத்தி ரணில் விரட்டி இருந்ததும் தெரிந்ததே. இதனை நாம் முன்பும் ஒரு கட்டுரையில் சொல்லி இருந்தோம். எனவே ரணில்-சானி உறவை புரிந்து கொள்ள முடியும்.

மீண்டும் சிஐடி விசாரணைக்கு வருவோம். இப்போது ரணிலை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தும் பணி துவங்கியது. கோட்டே நீதிமன்றம் அழைத்துவரப்பட்ட ரணிலை வெளியில் எடுத்து கொண்டு போக தங்களால் ஆனா அனைத்து முயற்சிகளையும் கதைகளையும் கோட்டே நீதிபதியிடம் அவரது சட்டத்தரணிகள் எடுத்துரைத்தனர். ஆனாலும் அவை நம்பகத் தன்மையற்ற வாதங்களாக இருந்தது.

அத்துடன் அதில் குழறுபடிகளும் இருந்தன. மேலும் ஏற்கெனவே ரணிலிடம் வேலை பார்த்த செயலாளர்கள், அதிகாரிகள் கொடுத்திருந்த வாக்குமூலங்கள் ரணிலுக்குப் பெரும் ஆப்பாக அங்கு அமைந்திருந்தது. இந்த நேரத்தில்தான் அங்கு மின்சாரம் அணைந்து மற்றுமொரு குழப்ப நிலையும் அங்கு வந்தது. நீண்ட  விவாதத்துக்குப் பின்னர் ரணிலுக்கு 26ம் திகிதி வரை தடுப்புக்காவல் என்ற தீர்ப்பு உறுதியானது.

இப்படி ஒரு நிலை ரணிலுக்கு வரும் என்று எவரும் கனவிலும் எதிர்பார்த்திருக்கவில்லை. ரணில் ஒரு நாளாவது கைது செய்யப்பட்டால் தான் காதை அறுத்துக் கொள்வேன் இதனை அறுத்துக் கொள்வேன் தெருவில் நிர்வணமாக ஓடிக் காட்டுவேன் என்றெல்லாம் வார்த்தைகளைக் கக்கி  மூக்குடைபட்டவர்கள் இன்று அந்தக் கதைகளுக்கு புதுவிளக்கம் சொல்லி சமாளித்து வருகின்றனர். பலர் ஊடகங்களைக் கண்டு தலைதெரிக்க ஓடி ஒழிந்தும் வருகின்றார்கள்.

எப்படியும் இன்று பொதுக் கூட்டணியில் ஒன்றிணைந்திருப்பவர்கள் அனைவரும் போல பஞ்சபாதக குற்றச்சாட்டுக்களுக்கு இலக்காகி இருப்பவர்களே. அந்த ஊடக சந்திப்பில் அமர்ந்திருந்தவர்கள் முகங்களை ஒரு முறை எண்ணிப்பாருங்கள். அப்போது இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது  உங்களுக்குப் புரியும்.

எனவே இவர்கள் கூட்டணி விவகாரத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருப்பது ரணிலுக்கு வந்திருக்கின்ற நிலை நாளை நமக்கு வரப்போகின்றது என்பதனை முன்கூட்டி அறிந்து வைத்திருப்பதால் இவர்கள் இப்படி எல்லாம் நடந்து கொள்கின்றார்கள். இவர்கள் குற்றம் அற்ற புனிதர்கள், பொதுமக்கள் பணத்தை கையாடாதவர்கள் என்றால் எற்காக இவர்கள் அச்சப்பட வேண்டும்? ரணிலுக்கும் இது பொருந்தும்.

ஜனாதிபதி ரணில் கைதுக்கு  இரு ஜனாதிபதிகள் கண்டனம் தெரிவித்திருந்தார்கள் என வஜிர அபேவர்தன சொல்லி இருந்தார். இது பற்றி நாம் சிரிகொத்தவை தொடர்பு கொண்டு  விளக்கம் கோட்டால் அந்த ஜனாதிபதிகள் யார் என்பது பற்றிய தகவல்களை அவர்கள் நமக்குச் சொல்லவில்லை.

வஜிர அபேவர்தன கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை அவர்களிடம் கேட்ட போது தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. எனவே நூறு இலட்சம் வாக்குகளைப் பெற்று ரணில் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவார் என்று சொன்னது போல ஒரு கதைதான் இதுவும் என்று நமக்கு புரிந்தது.

ஆனால் ஹெரிக் சோல்ஹெய்ம் ரணில் கைதுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார். இவர் ஒரு காலத்தில் நோர்வேயில் செல்வாக்கான ஒரு இராஜதந்திரிதான். இப்போது அவர் செல்லாக்காசு. அவரும் மோசடிக் குற்றச்சாட்டுக்கு இலக்காகி பதவி பறிக்கப்பட்ட ஒரு மனிதன். எனவே அந்த வகையில் இவர் ரணிலின் சகாதான்.

ஹெரிக் சோல்ஹெய்ம் புலிகளிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களுக்காக பேசுகின்ற ஒரு மனிதன் என்றார் மஹிந்த ராஜபக்ஸ. தனித்துவ முஸ்லிம் தலைவர் ஒருவர் இவர் புலிகளின் முகவராகத்தான் பேச்சுவார்த்தைகளில் செயல்பட்டார் என்று நம்மிடமே சொல்லி இருந்தார்.

ரணில் கைது நமது அரசியல் வரலாற்றில் 200 வருடங்களுக்கு பின்னர் நடக்கின்ற ஒரு முக்கிய நிகழ்வாக இந்தக் கைது அமைகின்றது. இது குடிமக்களுக்கும் பிரபுக்களுக்கும் (கொள்ளையர்களுக்கும் ஊழல் பேர்வலிகளுக்கும்) இடையிலான ஒரு போராட்டமாக இருப்பதால் இதனை விசாரிக்கின்ற நீதிபதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் கூட இன்று அச்சுருத்தல் என்ற நிலை காணப்படுகின்றது. இதுதான் மிகப் பெரும் ஜனநாயகத்தின் மீதான  அச்சுறுத்தல்.

Previous Story

කිඹුල් රාජිතට ඇරියා

Next Story

අනුර රනිල්ට ලබා දුන් අමතක නොවන පාඩම...!