தென் ஆப்பிரிக்க அதிபருக்கு ஓமிக்ரான்?

ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் கொரோனா அச்சுறுத்தி வரும் நிலையில், அந்நாட்டின் அதிபர் சிரில் ரமபோசாவுக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் லேசான பாதிப்புகளுடன் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு ஏற்பட்டுள்ளது ஓமிக்ரான் பாதிப்பா என்பது குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லைஉலகெங்கும் கடந்த சில மாதங்களாகச் சற்று வைரஸ் பாதிப்பு குறைந்து வந்ததால், கொரோனா பெருந்தொற்று முடிவுக்கு வரத் தொடங்கிவிட்டதாகவே பலரும் கருதினர், இந்தச் சூழலில் கடந்த நவ.26ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. ஓமிக்ரான் எனப் பெயரிடப்பட்டுள்ள இதை உலக சுகாதார அமைப்பு கவலைக்குரிய கொரோனா வகையாகப் பட்டியலிட்டுள்ளது.

ஓமிக்ரான் கொரோனா

இதையடுத்து உலக நாடுகள் பல புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளன. இருப்பினும், இதுவரை 50க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த ஓமிக்ரான் கொரோனா பரவியுள்ளது. இந்த ஓமிக்ரான் டெல்டாவை விட வேகமாகப் பரவும் திறன் உள்ளதாகக் கூறப்படுகிறது. தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பிறகு வைரஸ் பாதிப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தென் ஆப்பிரிக்க அதிபருக்கு கொரோனா

இந்தச் சூழலில் தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுக்கு நேற்று கொரோனா கண்டறியப்பட்டது. அவருக்கு லேசான பாதிப்பு மட்டுமே ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது லேசான அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிபர் சிரில் ரமபோசா ஏற்கனவே 2 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்டவர்.

எப்படி ஏற்பட்டது

கடந்த 2 நாட்களுக்கு முன் கேப் டவுனில் முன்னாள் அதிபர் எஃப்.டபிள்யூ டி கிளெர்க்கிற்கு நடந்த அஞ்சலி நிகழ்ச்சிக்குப் பின்னரே ரமபோசாவுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் பின்னர் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததிலேயே அவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதிபர் ரமபோசா தற்போது கேப் டவுன் நகரில் சுய தனிமையில் உள்ளார். இதையடுத்து அதிபரின் பணிகளைத் துணை ஜனாதிபதி டேவிட் மபுசா கவனிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேக்சின் முக்கியம்

தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை என்றும் அனைவரும் கொரோனா வேக்சின் எடுத்துக் கொண்டு பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அதிபர் ரமபோசா வலியுறுத்தியுள்ளார். மேலும், சமீப நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்,

ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம்

முன்னதாக கடந்த வாரம் அதிபர் ரபோசா மற்றும் தென் ஆப்பிரிக்க உயர் அதிகாரிகள் 4 பேர் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பயணம் செய்தனர். அந்த பயணத்தினத்தை முடித்துக் கொண்டு திரும்பிய போது நடத்தப்பட்ட சோதனையில் நெகடிவ் என்றே முடிவுகள் வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரம் நடைபெறும் அந்நாட்டின் தேசிய கொரோனா கவுன்சில் கூட்டத்தில் அதிபர் ரமபோசா கலந்துகொள்ள உள்ளார். இந்தச் சூழலில் அவருக்கு வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், அந்த கவுன்சில் கூட்டத்தில் அவர் கலந்து கொள்வாரா எனத் தெளிவாகத் தெரியவில்லை.

தென் ஆப்பிரிக்கா கொரோனா

தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரான் கண்டறியப்பட்ட பிறகு வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்குச் சனிக்கிழமை 17,164 பேருக்கு மட்டுமே கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 37,875 பேருக்கு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தென் ஆப்பிரிக்க அதிபருக்கும் கொரோனா கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous Story

திடீரென சிங்கப்பூர் சென்ற ஜனாதிபதி!

Next Story

மிஸ் யுனிவர்ஸ் பட்டம் கிடைத்தது எப்படி: உங்கள் வாழ்க்கையின் லீடர் நீங்கள்தான்.!