தூண்டிலும்   ரணிலும்!

-நஜீப் பின் கபூர்-

இதுவரை நமக்கு மீனை வசல்படியில் கொண்டு வந்து தந்தார்கள். நாம் அதனை சமைத்துச் சுலபமாக சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். இப்போது அப்படி வாசல்படியில் மீனைக் கொண்டு வந்து கொடுத்தவர்கள் இதன் பின்னர் மீன் கிடையாது தூண்டிலைத்தான் எம்மால் தர முடியும் என்று சொன்னால் நிலமை என்னவாக இருக்க முடியும்.

இது வார்த்தையோ கிண்டலோ கிடையாது நமக்கு இது வரை கடன் கொடுத்த நாடுகள் நேரடியாகவே இலங்கைக்கு அந்த வார்த்தைகளைத்தான் கூறி விட்டன. குறிப்பாக சீனா நேரடியாகவே இதனை சொல்லி விட்டது. இந்தியாவும் இதற்கு மேல் ஓசிச்சாப்பாடு போட முடியாது என்று சொல்லி விட்டது.

பங்காளதேசும் இதன் பின்னரும் நாம் கொடுத்த குறுகிய காலக் கடனை தொடர்ச்சியாக நீடிக்க முடியாது. எனவே அவசரமாக எங்கள் கடன்களைத் திருப்பித் தந்து விடுங்கள் என்று நச்சரிக்கத் துவங்கி இருக்கின்றது. இதற்கு முன்னர் இலங்கை உலக நாடுகளிடம் கடன் கேட்டு நச்சரித்துக் கொண்டிருந்தது.

இப்போது கொடுத்த நாடுகளும் நிறுவனங்களும் கடனைத் திருப்பித்தா என்று கேட்பது இலங்கைக்கு நச்சரிப்பாகத் தெரியும். ஆனால் அதற்காக கொடுத்த கடனை சும்மா விட்டுக் கொடுக்க யாரும் விரும்புவார்களா என்ன? இந்த செய்தியிலிருந்து நமக்கு இதன் பின்னர் யாரும் கடன் தரப் போவதில்லை என்பது தெளிவாகி இருக்கின்றது.

நாட்டில் அன்னியச் செலாவானி பற்றாக்குறை. ஏற்றுமதித் துறையில் பாரிய வீழ்ச்சி உள்நாட்டு உற்பத்தியில் நம்பகத் தன்மையற்ற நிலை. நிதி நெருக்கடியால் விவசாய உபகரணங்கள் உரவகை விதைகளின் இறக்கு மத்தியில் கடும் பாதிப்பு. அரச ஊழியர்களுக்கு சம்ளம் கொடுக்க பியகம அச்சகத்தை நம்பி இருக்குத் மத்திய வங்கி. இந்த பின்னணிகளின் மத்தியில் அடுத்த நகர்வு என்பது என்னவென்று ஆட்சியாளர்களுக்குத் தெரியாது.

2023 வரவுகள் என்பது அவர்களது கனவுகள் கற்பனைகள். இதனை நாம் கடந்த வாரம் தெளிவாகச் சொல்லி இருந்தோம்.  உலகத்தில் உள்ள எல்லோரையும் தெரியும் குறிப்பாக மேற்கு நாட்டுத் தலைவர்கள் எல்லோரும்  ஜனாதிபதி ரணிலிலுடன் நெருக்கமானவர்கள்- அவரது சகாக்கள் என்று சொல்லி மனிதன் அதிகாரத்துக்கு வந்தார். சொன்ன படி எதுவுமே நடக்கவில்லை. குறைந்தது அவர் அதிகாரத்துக்கு வந்த நாட்களில் யாருமே அவருக்கு வார்த்தைக்குக் கூட ஒரு வாழ்த்தையேனும் சொல்ல வில்லை. இதிலிருந்து நட்பு புரிந்திருக்கும்!

இப்போது பிரச்சனையைத் தீர்க்கின்றேன் என்று வந்தவர் ஒட்டுமொத்தப் பிரச்சனையையும் தனது தலையில் கொட்டிக் கொண்டார். இது அவருக்கு அசிங்கமாகவோ கேவலமாகவோ இல்லை. எப்படியோ அதிகாரம் மிக்க ஜனாதிபதிப் பதவில் ஒரு நாள் ஏனும் தான் இருந்து விட்டேன் என்பதில் அவர் தனிப்பட்ட வரலாற்றில் ஒரு பதிவை அவர் உருவாக்கிக் கொண்டு விட்டார். எனவே நாடு அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருக்கின்றது அல்லது பாதளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

இந்த நிலையில் தூண்டிலுடன் மீன் பிடிக்கப் போக வேண்டி இருக்கின்றது. பொருளாதார ரீதியில் மீன் கிடையாது தூண்டிலைப் பிடி என்பது இன்றைய நிலையில் கைகளையும் கால்களையும் கட்டிப் போட்ட ஒருவனை எழுந்து ஓடு என்று கோட்டால் நிலமை என்னவாக இருக்கும்.? இதனை ஒவ்வொரு இலங்கைக் பிரசையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கடந்த வாரம் இந்த வரவு செலவுத் திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கின்ற புள்ளி விபரங்கள் கணக்குகள்-தகவல்கள் போலியானவை நம்பகத் தன்மையற்றவை என்று நாம் உறுதிபட  சொல்லி இருந்தோம். நமது கணிப்பை நூறுவீதம் சரி கண்டிருக்கின்றார் ஜேவிபி. அணுரகுமார திசாநாயக்க.  அவரது நாடாளுமன்ற உரையில் இது தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. அடுத்து எதிரணியினரும் சில ஊடகங்களுயும் வரவு செலவத் திட்டம் வாக்கொடுப்பில் தோல்வி அடையும் ஆளும் தரப்பில் இருந்து பலர் எதிரணிக்கு வர இருக்கின்றார்கள் என்றும் சொல்லி இருந்தன.

வரவு செலவு அறிக்கைளை அவர்கள் எதிர்த்து வாக்களிப்பார்கள் என்றும் கணக்குச் சொல்லி இருந்தார்கள். ஆனால் நாம் இப்படி நடக்க வாய்ப்பு கிடையாது பெரும் பாலான மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னலம் காரணமாக என்னதான் முரண்பாடுகள் இருந்தாலும். வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்க மாட்டார்கள் என்றும் சொல்லி இருந்தோம் அதுவும் அச்சொட்டாக நடந்திருக்கின்றது.  தற்போது நமது நாடளுமன்ற செயல்பாடுகள் முற்றிலும் உறுப்பினர்களின் தன்னலதை மையமாகக் கொண்டுதான் நகர்கின்றன.

இதில் மக்கள் நலன்கள் என்பது மருந்துக்குக் கூடக் கிடையாது.இதனால் இது மக்களது நாடாளுமன்றமா என்றும் கேள்ளிவிகள் எழுகின்றன. இந்த வரவு செலவு திட்டம் வெற்றி பெற்றிருப்பதும் இதனால்தான். 2024ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இதே பின்னணியில் சமர்ப்பிக்கப்பட்டாலும் நிலமை இதுவாகத்தான் இருக்கும்.

ஆனால் அரசு ஆட்சியை தொடர்வது என்பது வயிற்றுக்காக மனிதன் கயிற்றில் கயிற்றில் ஆடுகின்ற விளையாட்டாகத்தான் இருக்கின்றது. மக்கள் எவ்வளவு தூரம் பொருமையாக இருப்பார்கள் என்பதில்தான் முடிவும் இவர்கள் அதிகாரத்தில் இருப்பதும் தீர்மானமாகும். சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் பல மோசமான பதிவுகளை நாடு எதிர்காலத்தில் சந்திக்கும் என்பது மட்டும் உறுதி.

மக்கள் என்னதான் அடங்கி ஒடுங்கி இருக்க நினைத்தாலும் வருமையும் பட்டினியும் அவர்களைத் தெருவில் இருக்கி விடும். அதன் பின்விளைவுகளை நாடு விரைவில் பார்க்கும் என்பது நமது அவதானமாக இருக்கின்றது. தூண்டிலை எடுத்துக் கொண்டு காட்டிலும் மேட்டிலும்தான் மீனைத் தேட வேண்டிய நிலையில் அரசு இருக்கின்றது.

கடல்களிலும் நீர் நிலைகளிலும் ஆட்சியாளர்களுக்கு மீன் கிடையாது. இதனால்தான் நமது காட்டிலும் மேட்டிலும் மீன்பிடி என்ற இந்தக் கதை அமைகின்றது.  இதற்கிடையில் அடுத்து அதிகாரத்துக்கு வருவதுயார் என்ற கேள்வி. ஆனால் இந்த விவகாரத்தில் இத்தனை அனர்த்தங்கள் அழிவுகள் நடந்தும் மக்கள் இன்னும் பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றுதான் நாம் நினைக்கின்றோம்.

ஹிட்லர் பாத்திரத்தில்  வருகின்ற ஜனாதிபதி!

இன்று நாட்டில் பிரதான பேசு பொருளாக அமைந்திருப்பது கடந்த புதன் கிழமை  ஜனாதிபதி ரணில் நாடாளுமன்றத்தில் தெரிவித்த சில கருத்துக்கள். இதன் பின்னர் மக்கள் வீதிக்கு வந்தால் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன் இராணுவத்தைக் கொண்டுதான் அடக்குவேன்.

இராணும்தான் அவர்களுக்குப் பதில் கொடுக்கும் என்று கடும் தொனியில் ஜனாதிபதி ரணில் கூறிவிட்டார். எந்தச் சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்தைக் கலைக்க மாட்டேன் எனவும் அவர் சூழுரைத்திருந்தார். புதியதோர் அரசாங்கம் பதவிக்கு வந்தாலாவது தமது நெருக்கடிகளுக்குத் தீர்வுகள் கிடைக்கும் என்று நம்பி  எதிர்பார்த்த மக்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லாது போய்விட்டது.

தேர்தல் முறையில் மாற்றத்துக்குப் பின்னர்தான் இதன் பின்னர் எந்தத் தேர்தலும் நடக்கும் என்றும் அவர் தெளிவாக சொல்லி விட்டார். எனவே உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்கும் இப்போதைக்கு வாய்ப்புக்கள் கிடையாது என்பதும் உறுதியாகி விட்டது. நாம் மேற்சொன்ன அனைத்தும் ஒரு ஜனநாயக நாட்டுக்கு ஏற்புடைய கருத்துக்கள் அல்லது.

இவை அனைத்தும் மக்கள் எதிர் பார்ப்புக்களுக்கு விழுந்த சம்மட்டி அடி என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. இப்போது கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் அதிகாரிகளும் உள்ளாட்சித் தேர்தல் நிச்சயம் உரிய நேரத்துக்கு நடந்தே தீரும் என்று மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளும் வேரோடு சாய்த்து விடப்பட்டிருக்கின்றது.

இப்படி மக்களை அமைதிப்படுத்தி வைத்திருப்பதற்காக அவ்வபபோது அரசாங்கம் தமது அடியாட்களை வைத்துக் கதைகளைச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அடுத்து மக்களின் ஜனாநாயக உரிமைகளை அரசு நசுக்கிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் பிரதான எதிர்த் தரப்பு அதற்கு எதிராக என்ன நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது? அப்படி எந்த உறுப்படியான நடவடிக்கைகளையும் எடுப்பதற்கு சஜித் தலைமையிலான அந்த அணிக்கு திரணி கிடையாது என்பது எமது வலுவான நிலைப்பாடாகும். எனவே ரணில் போடுவதுதான் சட்டம்.

அதே நேரம் முன்னாள் மொட்டுக் கட்சியின் முக்கிஸ்தரும் சட்டத்துறைப் பேராசிரியருமான ஜீ.எல்.பீரிஸ் உள்ளாட்சித் தேர்தலை அரசு தள்ளிப் போட்டால் நாம் நீதி மன்றத்துக்குப் போவோம் என்று சொல்லி இருந்தார். இப்போது தேர்தலுக்கு நீதி மன்றத்துக்குப் போய்த்தான் தீர்வு என்ற நிலை. இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மை பற்றி முழு உலகிற்குமே நன்றாகத் தெரியும். எனவே சட்டவல்லுனர் அங்கு போய் என்னதான் சாதிக்கப் போகின்றார் என்று நாம் கேட்க வேண்டி இருக்கின்றது.

மக்கள் அரசுக்கு எதிராக வீதிக்கு வந்தால் இராணுத்தைக் கொண்டு அடக்குவோன். உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் கிடையாது. அரசுக்கு எதிராக என்னதான் மக்கள் கோஷங்களைப் போட்டாலும் நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் மாட்டேன் இது உறுதி என்று ஜனாதிபதி ரணில் பேசி இருப்பது முற்றிலும் அவரது வார்த்தைகள் அல்ல இது ராஜபக்ஸாக்களினதும் ஆளும் மொட்டுக் கட்சியினரதும் வார்த்தைகள்கள் தான் இவை.

இதே கருத்தை ராஜபக்ஸாக்களில் எவராவது சொல்லி இருந்தால் அதற்கு உள்நாட்டில் மட்டுமல்ல சர்வதேச அரங்கிலும் இந்த நேரம் பெரும் எதிர்ப்புக்கள் விமர்சனங்கள் கிளம்பி இருக்கும். அந்த வேகம் ரணில் விடயத்தில் இல்லை என்பதும் எமது அவதானம். ஆனால் ரணில் இந்த அனைத்து நடவடிக்கைளின் பின்னணியில் ராஜபக்ஸாக்கள்தான் இருக்கின்றார்கள் என்பதனை சர்வதேசம் புரிந்து கொள்ள வேண்டும். கிளிப் பிள்ளையின் வேலையைத்தான் தற்போதய ஜனாதிபதி ரணில் இன்று செய்து கொண்டிருக்கின்றார்.

சர்வதேசம் இலங்கையில் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப் பட வேண்டும் என்று கோட்டுக் கொண்டிருக்கின்ற இந்த நேரத்தில் ரணில் இப்படி ஹிட்லர் பாணியில் மக்களுக்கு எதிராக எச்சரிக்கை விடுத்துக் கொண்டிருப்பதை சர்வதேசம் எப்படிப் பார்க்கப் போகின்றது என்று நாம் இனி வருகின்ற நாட்களில் அவதானிக்க வேண்டும். இலங்கைக்கு சர்வதேசம் உதவ வேண்டுமானால் நாட்டில் மக்களின் ஜனநாயக உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை சர்வதேசம் விடுத்துக் கொண்டிருக்கின்ற போது ரணிலின் இந்த சர்வாதிகாரச் செயல்பாடுகள் புரிந்து கொள்ள முடியாதிருக்கின்றது.

சீனா மீன் கிடையாது தூண்டிலைப் பிடி என்று நேரடியாகவே சொல்லி இருக்க மேற்கு நாடுகள் நாட்டில் ஜனாநாயகம் மதிக்கப்பட்hல்தான் உதவி என்று கட்டளைகளைப் போட இங்கு நடக்கின்ற நிகழ்வுகள் புதிராக இருக்கின்றது. ராஜபக்ஸாக்களும் அவர்களுக்கு விசுவாசமான மொட்டுக் கட்சி விசுவாசிகளும் இன்றும் நாடாளுமன்றத்தில் பலமாக இருப்பதையே கடந்த வரவு செலவு வாக்கொடுப்பு வெளிக் காட்டுகின்றன.

வேடிக்கை என்னவென்றால் மொட்டு அணியிலிருந்து வெளியே வந்தவர்கள் சிலர் மீண்டும் அரச ஆதரவாளர்களாக மாறி இருக்கின்றார்கள். வருகின்ற அமைச்சரவையில் இவர்களுக்கு நிச்சயம்  அமைச்சுக்கள்.! இதனை துமிந்த திசாநாயக்காவின் செயல்பாடுகள் காட்சிப் படுத்துகின்றன.

நாட்டில் என்னதான் வருமை பட்டிணிச் சாவு என்று வந்தாலும் மக்கள் வீட்டோடு நின்று கொள்ள வேண்டும். வெளியில் தலைகாட்டினால்  துப்பாக்கிதான் பேசும் என்பதுதான் ஜனாதிபதி ரணிலில்  கதையில் நாம் புரிந்து கொள்ள முடிகின்றது. கதை அப்படி இருக்க இரணுவப் பலத்தைக் கொண்டாவது ஆட்சி தொடரும் என்பதனைத்தான் இவை காட்டுகின்றது.

இதனால் ஏதோ வழியில் அரசு நீடித்து நிலைக்கும் என்பதால் இதன் பின்னர் ஆளும் தரப்புக்கு தாவுகின்றவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று நாம் எதிர் பார்க்கின்றோம்.! இது என்ன கதை என்று கேட்க்கின்றீர்களா?

இந்த அரசாங்கம் இன்னும் இரண்டு மூன்று வருடங்களுக்கு நிலைக்கத்தான் போகின்றது என்று தெரிந்தால் எதிரணியில் இருக்கின்றவர்கள் ஆளும் தரப்புடன் ஒட்டிக் கொண்டால்தான் எதையாவது பிடுங்கிக் கொள்ள முடியும். அல்லது இந்த இரண்டு மூன்று வருடங்களும் வீனாகிப் போய்விடும் என்று அவர்கள் கணக்குப்போட  நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஆளும் தரப்பிலுள்ள முரண்பாட்டாளர்களும் என்னதான் மனக்குறைகள் இருந்தாலும் பதவியில் இருக்கின்ற அரசுடன் ஒட்டிக் கொண்டு மிஞ்சி இருக்கின்ற காலத்தை ஓட்டத்தான் விரும்புவார்கள். நாம் கடந்த வாரம் சொன்னது போல தன்னலம் காரணமாக அரசின் வரவு செலவு அறிக்கைக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆதரவைக் கொடுத்திருக்கின்றார்கள்.

அரசு வரவு செலவு திட்டத்தில் தோற்கப் போகின்றது என்றெல்லாம் கதைகளைச் சொன்னவர்கள் இன்று வாயடைத்து நிற்கின்றார்கள். அரசுக்கு 116 பேர் ஆதரவு. எதிராக 109 பேர் என்றும் நமக்குக் கணக்குச் சொன்னவர்களும் இருந்தார்கள். ஆனால் என்ன நடந்தது அரசுக்கு 121 வாக்குகளும் எதிரணிக்கு 84 வாக்குகளும் கிடைத்திருக்கின்றது.

எனவே அரசு மிகத் தெளிவான பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்றது. இருபது பேர் காணாமல் போய் இருக்கின்றார்கள். தேவையான இந்த நேரத்தில் நாடாளுமன்றத்தில் காணாமல் போனவர்களையும் ரணில்-ராஜபக்ஸா ஆதரவானவர்கள் என்று நாம் கணக்குச் சொன்னால் அது தவறாகாது என்று எண்ணுகின்றோம்.

நன்றி: 27.11.2022 ஞாயிறு தினக்குரல்

Previous Story

அல்ஜீரியாவை அசைத்த இஸ்மாயில் படுகொலை: 49 பேருக்கு மரண தண்டனை!

Next Story

'ஐஸ்' விற்றால் இலங்கையில் மரண தண்டனை - புதிய சட்டம்!