உடைந்து போன ஏசி யூனிட்.. கிட்டத்தட்ட தப்பிய ஹமாஸ் தலைவர்!
தெஹ்ரான்: இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாக மோதல் தொடர்ந்து வருகிறது. இதற்கிடையே ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேவை கொலை செய்ய இஸ்ரேல் திட்டமிட்டிருந்த நிலையில், உடைந்து போன ஏசி யூனிட்டால் அந்த திட்டம் கிட்டத்தட்ட தோல்வி அடைந்திருக்கும் சூழல் உருவானதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நாம் பார்க்கலாம்.

இஸ்ரேல் திட்டம்:
அப்படி ஹமாஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஹனியேவை கொல்ல இஸ்ரேல் திட்டமிட்ட நிலையில், அது எப்படி கிட்டத்தட்ட தோல்வியில் முடியும் சூழல் உருவானது என்பது குறித்த தகவலை அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த ஜூலை 31ம் தேதி இந்தச் சம்பவம் நடந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு ஹனியே சென்றிருந்த போது அவரை தீர்த்துக்கட்ட இந்தத் திட்டம் போடப்பட்டு இருந்தது. இருப்பினும், கடைசி நேரத்தில் திடீரென ஹமியா தனது ரூமை விட்டு வெளியேறி இருக்கிறார். இதனால் எங்கு தங்கள் திட்டம் தோல்வியில் முடிந்துவிடுமோ என்று இஸ்ரேல் அஞ்சியிருக்கிறது. இது குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
ஹனியே:
கடந்தாண்டு அக். மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் படை நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டது. முக்கிய ஹமாஸ் தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் தீர்த்துக்கட்டி வந்தது. அதன்படி இஸ்ரேலின் டாப் ஹிட் லிஸ்டில் ஹமாஸ் தலைவர் ஹமியாவின் பெயர் இருந்தது.
இஸ்மாயில் ஹமியா என்னதான் கத்தாரில் வாழ்ந்தாலும், அவரை கொன்றால் அங்கு வைத்துக் கொன்றால் பணயக்கைதிகள் பேச்சுவார்த்தைக்கு அது ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இஸ்ரேல் வேறு திட்டங்களைப் போட்டது.
அதன்படி துருக்கி, மாஸ்கோ அல்லது தெஹ்ரானில் வைத்து ஹமியாவை கொல்லச் செய்ய இஸ்ரேல் திட்டமிட்டது. இருப்பினும் துருக்கி அல்லது ரஷ்யாவில் வைத்துக் கொன்றால் அது ராஜதந்திர சிக்கலை உருவாக்கும் என்பதால் அந்த நாடுகள் நிராகரிக்கப்பட்டன.
ஈரான் உடன் ஏற்கனவே பிரச்சினை இருப்பதால், அதற்கு மேல் நிலைமை மோசமாகிவிடாது என்பதற்காக ஈரான் தலைநகர் தெஹ்ரான் இதற்கு இறுதி செய்யப்பட்டது.
திட்டம் என்ன:
ஹனியே அடிக்கடி வடக்கு தெஹ்ரான் உள்ள சாதத் அபாத் என்ற பகுதியில் அமைந்துள்ள இஸ்லாமிய புரட்சிகர காவல்படைக்கு (IRGC) சொந்தமான விருந்தினர் மாளிகையில் தங்குவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அங்குக் கடுமையான பாதுகாப்பு இருந்தபோதிலும், இஸ்ரேல் உளவுத்துறை அங்கு இறங்கி வேலை செய்தது. இதனால் எல்லாமே திட்டமிடப்பட்டது போல நடந்தது.
முதலில் கடந்த மே மாதம் ஈரானின் முன்னாள் அதிபர் இப்ராஹிம் ரைசியின் இறுதிச் சடங்கின் போதே ஹனியே கொல்ல திட்டமிடப்பட்டது. இருப்பினும் சில காரணங்களால் அப்போது அந்தத் திட்டம் கைவிடப்பட்டது.
இருப்பினும் ஜூலை மாதம் இறுதியில் ஈரானின் அதிபராக மசூத் பெசெஷ்கியான் பதவியேற்ற நிலையில், அந்த நிகழ்ச்சியில் ஹனியே கலந்து கொண்டார். அப்போது அவரை கொல்ல திட்டமிடப்பட்டது.
ஏசி யூனிட்
ஹனியேவின் அறையில் ஐஇடி வெடிமருந்தை நிறுவுவது திட்டமாகும். இஸ்ரேல் எல்லாவற்றையும் பக்காவாக திட்டமிட்டு இருந்தது. இருப்பினும், ஐஇடி வெடிகுண்டை வெடிக்க இஸ்ரேல் தயாராக இருந்த போது திடீரென அந்த ரூமில் ஏசி ரூம் பழுதானது. இதனால் அந்த ரூமில் இருந்து ஹனியே வெளியேறிவிட்டார்.ஏசி பழுதானதால் எங்கு ஹனியே வேறு அறைக்கு மாற்றப்படுவாரோ என்று இஸ்ரேல் அஞ்சியது.
ஒருவேளை அப்படி ரூம் மாற்றப்பட்டால் இஸ்ரேலின் பல மாத திட்டம் வீணாகிவிடும். இதனால் அங்கு என்ன நடக்கிறது என்பதை இஸ்ரேல் துல்லியமாகக் கண்காணித்து வந்தது. இருப்பினும், கொஞ்ச நேரத்திலேயே ஏசி யூனிட் சரி செய்யப்பட்டதால் ஹனியே மீண்டும் அந்த ரூமிற்கு திரும்பினார்.
இதையடுத்து திட்டமிட்டபடி அதிகாலை 1:30 மணிக்கு ஐஇடி குண்டை இஸ்ரேல் வெடிக்கச் செய்தனர். இதில் ஹனியே உடனடியாக கொல்லப்பட்டார். ஈரான் காவல் படையைத் தாண்டி இஸ்ரேல் ஊடுருவித் தாக்குதல் நடத்திய சம்பவம் ஈரானுக்குத் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது