டொலருக்குத் திண்டாட்டம் ரூபாவுக்கு கொண்டாட்டம்

நஜீப் பின் கபூர்

அண்மையில் சில பௌதத் தேரர்கள் நமது ஜனாதிபதி ஜீ.ஆருக்கு லங்காதிஷ்வர பத்ம விபூஷன விருது கொடுத்து கௌரவித்திருக்கின்றார்கள். அவர் நிலை நாட்டிய எந்த சாதனைக்கு இந்த விருது வழங்க்கப்பட்டது என்பதனைப் புரியமல் மக்கள் பெரும் குழப்பத்தில் இருக்கின்றார்கள் அல்லது ஆச்சர்யத்தில் இருக்கின்றார்கள். ஏறக்குறைய இதே போன்று ஒரு பெயரில் பாரதத்தில் பத்ம பூஷன விருது இந்தியாவில் நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருவது நாம் அறிந்ததே.

அப்படி இருக்க நமது நாட்டிலும் அதே பேரில் இப்போது லங்காவையும் சேர்த்துக் கொண்டு ஒரு விருது வழங்கப்படும் நிகழ்வு துவங்கி இருக்கின்றது. இது காப்பிய ஒருஜீனலா கொடுத்தவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். அது பற்றி எமக்கு எந்த விமர்சனமும் கிடையாது.

இந்த நாட்டில் பௌத்த தேரர்கள் அரசியல் செய்வது ஒன்றும் புதிய விவகாரம் அல்ல. தான் ஆதரித்த வேட்பாளர் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் ஊடக தான் இருக்கின்ற விகாரைக்கு அல்லது தனக்குத் தேவையான ஏதையாவது சுரண்டிக் கொள்வது அல்லது தனக்கு வேண்டியவருக்கு அதன் மூலம் ஏதாவது செய்து கொடுப்பது அல்லது சுற்று வட்டாரத்திலுள்ள அரச காணிகளை விகாரையுடன் இணைத்துக் கொள்வதுதான் இந்த தேரர்களின் அரசியலில் இதுவரை நடந்து வந்திருக்கின்றன.

இது அவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகின்ற ஒரு வரப்பிரசாதம். அது பற்றியும் கவலை இல்லை. மக்கள் கடுமையாக ஜனாதிபதி ஜீ.ஆரை. விமர்சனத்துக்கு ஆளாக்கி இருக்கின்ற ஒரு நேரத்தில் இப்படி ஒரு விருதைக் கொடுத்து ஏன் உச்சாகப்படுத்தி இருக்கின்றார்கள் என்று சிந்தித்துப் பார்த்ததால் அவர்களுக்கு அல்லது பேரினத்தாருக்கு ஏதாவது ஆக வேண்டிய காரியம் திறைமறைவில் அரங்கேரி இருக்க அதிக வாய்ப்புக்கள் இருக்கின்றது. எனவே இந்த விருதை நாம் எச்சரிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.

நமக்குத் புரிகின்ற கணக்கப்படி இதன் பின்னர் மீண்டும் ஜனாதிபதி ஜீ.ஆர். இப்படியான ஒரு உயர் பதவிக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு. எனவே அவர் அதிகாரத்தில் இருக்கின்ற போதே ஏதாவது ஒரு பெரிய கொடுக்கல் வாங்கள் இந்து விருதுக்குப் பின்னால் மறைந்திருக்க வேண்டும் என்று நாம் நம்புகின்றோம்.

ஒன்று ஈழத் தமிழர் உரிமைகள் அல்லது முஸ்லிம்களின் தனியார் சட்டங்கள் போன்ற வற்றில் ஏதாவது விபரிதங்கள் நடந்திருக்க அல்லது அதற்கான கட்டத்தை எட்டி இருக்க வேண்டும் என்ற ஒரு சந்தேகம் நமக்கு இருக்கின்றது. நம்மை விட அரசியல் தலைமைகள் இந்த விடயத்தை சற்றுத் தேடிப் பார்த்தால் நல்லது. இது சமூகத்தின் பெயரைச் சொல்லிக் கொண்டு அரசியல் செய்பவர்களின் கடமையும் கூட.

ஞாயிற்றுக் கிழமை சந்தைக்குப் போய் வாங்கிய பொருட்களுக்கு பகிரங்கமாக கணக்குப் பார்த்ததால்  இராஜங்க அமைச்சர் சுசில் பிரேம்ஜயந் பதவியில் இருந்து விரட்டியக்கப்பட்டிருக்கின்றார். துவக்கத்திலே தனக்கு இராஜங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்ட போது சுசில் அதிர்ச்சியிலும் அதிர்ப்பிதியிலும் இருந்தார் என்பதும், நாடாளுமன்றத்தில் பல சந்தர்ப்பங்களில் அவர் அரசை கடும் தொனியில் விமர்சித்திருந்ததும் நமக்கு நினையில் இருக்கலாம். ஆனால் வாசு, விமல், கம்மன்பில போன்றவர்கள் தொட்டிலையும் ஆட்டிக் கொண்டு பிள்ளையையும் கில்லிவிடுவது போல ராஜபக்ஸாக்களுடன் விசுவாசமாக இருந்து கொண்டு அரசை விமர்சித்து வருகின்றார்கள்.

அதேபோன்று யுகதனவிய அமெரிக்க ஒப்பந்தத்துக்கு எதிராக இந்த மூன்று பேரும் நீதி மன்றம் போய் இருந்தார்கள். அதனை ஜனாதிபதி விமர்சனம் செய்திருந்தார். இளையவரான அமைச்சர் நாமல் கூட வாசு போன்றவர்கள் இப்படி நடந்து கொள்வதாக இருந்தால் பதவில் இருந்து இராஜினாமாச் செய்து விட்டுத்தான் இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று சொல்லி இருந்தார். மேலும் அவர்கள் சொல்கின்ற படி நாங்கள் ஒருபோதும் வெளியே போக மாட்டோம் இந்த அரசை பதவிக்குக் கொண்டு வந்தவர் நாங்கள் என்று வாசு கூறி வருகின்றார்.

இந்த அரசு பதவியில் இருக்கும் வரை அதில் ஒட்டிக் கொண்டிருப்பதுதான் இவர்களுடைய நோக்கம் என்பது தெளிவு. நாம் மேற்சொன்ன மூவரும் ஒட்டுண்ணிகள் போல் அரசியல் செய்பவர்கள். இவர்களுக்கு என்று தனி வாக்கு வங்கிகள் கிடையாது. அடுத்தவர் வாக்கில்தான் இவர்கள் நாடாளுமன்றம் வருவது வழக்கம்.

தற்போது இருக்கின்ற ஜனாதிபதியை வேட்பாளராக்கக் கூடாது அவர் ஒரு இராணுவ அதிகாரி இவர் ஜனநாயகத்துக்குப் பொருந்த மாட்டார் என்றெல்லாம் பெரிய இசுவை அன்று அரசியல் களத்தில் வாசு பேசி வந்தார். ஜீ.ஆர்.தான் வேட்பாளர் என்றதும் வாசு பெட்டிப் பாம்பு போல வாய் அடைந்துக் கொண்டார். என்னதான் வாசு நெடுநாள் செஞ்சட்டை அரசியல் செய்தாலும் இன்று அவர் ஒரு செல்லாக்காசாக அல்லது கோமளியாகத்தான் வலம் வந்து கொண்டிருக்கின்றார்.

அதே போன்று நமது முன்னாள் பிரதமர் இராத்னசிரி விக்கிரமநாயக்காவின் மகன் விதுர விக்கிரமநாயக்க இந்த அரசாங்கம் மீது அவ்வப்போது கடும் விமர்சனங்களைச் செய்து அரசு பெயிலாகி விட்டது என்றெல்லாம் பேசினாலும் அவரும் தனக்கு ஒரு கனதியான அமைச்சை எதிர்பார்க்கின்றார் எனபது தெளிவு. தற்போது அமைச்சரவையில் உள்ள உதவாக்கரைகளை நீக்கிவிட்டு நல்லதொரு அமைச்சை நியமித்துக் கொண்டால் ஏதாவது செய்யலாம் என விதுர சொல்லி இருந்தார். எனவே அவர் என்ன எதிர்பார்க்கின்றார் என்பதும் புரியக் கூடியதே.

இதே போன்ற நாம் கடந்வாரம் எஸ்.பி. அரசுக்கு மிகுந்த விசுவாசம் காட்டுவது ஏதாவது ஒரு கனதியான அமைச்சைப் பெற்றக் கொள்ளத்தான் என்று சொல்லி இருந்தோம். நாம் சொன்ன படி சுசில் பதவி இவருக்குப் போக அதிக வாய்ப்பு. இதற்கு முன்னரும இதே போன்ற ஒரு அமைச்சை எடுத்து எஸ்.பி. மாணவர்களுடன் மோதிக் கொண்டு மூக்குடைபட்டதும் தெரிந்ததே. அந்த அமைச்சு தனது கைக்கு வந்தால் அவர் பெரியவரைத் திருப்திப்படுத்த தனது அமைச்சு சார்ந்த விவகாரங்கில் மோதல் போக்கை கடைப்பிடிக்கவும் அதிக வாயப்பு இருக்கின்றது.

தேர்தலும் கிடையாது புதிய யாப்பும் வராது என்று நாம் கடந் வாரம் எழுதி இருந்தோம். அந்தத் துறையில் அரசின் சார்ப்பில் பேச வல்ல அமைச்சர் தினேஷ் குனவர்தன நாம் சொன்ன அதே கருத்தை சில நாள் கடந்த பின்னர் யாப்பு வந்த பின்னர் தான் தேர்தல் என்று தற்போது உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.  கண்ணுக் கொட்டிய தூரத்தில் தேர்தலும் இல்லை யாப்பும் இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

அரசில் இருக்கின்ற பலர் தமக்க அதிகாரத்தில் இருக்கின்றவர்கள் தொந்தரவு செய்யவார்கள் என்பதால் கடைசி நிமிடம் வரை அங்கே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு முனைகின்றார்கள். இந்தப் பட்டியலில் நாம்  முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மற்றும் செயலாளர் தயாசிரி போன்றவர்களையும்  கூட சேர்த்து விடலாம் அதில் எந்தத் தப்பும் கிடையாது.

இப்போது டொலருக்குத் திண்டாட்டம். ரூபாவுக்குக் கொண்டாட்டம். என்ற கதைக்கு வருவோம். இந்த நாட்டில் தற்போது டொலருக்கு வரலாற்றில் என்றுமில்லாத ஒரு பஞ்சம் ஏற்பட்டிருக்கின்றது. இதனால் இன்று கொழும்பு மற்றும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தில் வந்திறங்கி இருக்கின்ற அத்தியவசியப் பொருட்களைக் கூட அங்கே இருந்து வெளியே எடுக்க முடியாதிருக்கின்றது.

தற்போது மூன்று வாரங்களுக்குத் தேவையான சமயலறை எரிவாயு ஹம்பாந்தோட்டைத் துறை முகத்தில் இருக்கின்றது. ஆனால் அவற்றை வெறியே எடுத்து அனுப்ப டொலர் தேவைப்படுகின்றது என்று ஒரு அதிகாரி பகிரங்கமாகத் தெரிவித்தார். அதே போன்றுதான் நாட்டில் இன்று பால் மா தட்டுப்பாடு நிலவுகின்றது. அந்தப் பாலும் கொழும்புத் துறைமுகத்தில் ஓரளவு இருக்கின்றது. டொலர்களைச் செலுத்தாமல் அவற்றையும் வெளியே எடுத்து விநியோகிக முடியாத நிலையில் அரசாங்கம் இருக்கின்றது.

இந்த வேடிக்கையை சற்றுப் பாருங்கள்: தங்களின் பக்கட்டில் பணம் இல்லை, எனவே அடுத்தவன் பக்கட்டில் இருக்கின்ற பணத்தை தனது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டு ஒருவன் தன்னிடமும் காசு இருக்கின்றது என்று பம்மாத்துக் காட்டுவது போல அரசாங்கம் சீனாவிடம் ஒரு தொகை யுவனை வாங்கி தன்னுடைய பணம் போல அதாவது அன்னியச் செலாவானி கையில் இருப்பது போல காட்ட முனைகின்றது.

இதில் நடக்கப் போவது என்ன? அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு வேண்டுமானால் சீனாவிலுள்ள சில பொருட்களை வாங்கிக் கொள்ள முடியும். அதே போன்று இந்தியாவிலிருந்து எங்களுக்கு கொடுப்பதற்கு காசு இல்லாவிட்டாலும் பசியைப் போக்கிக் கொள்ள ஏதாவது மாவு சீனி பருப்பு எரி பொருள் எனத் தந்துதவுங்கள் என்று அரசு கெஞ்சிக் கொண்டிருக்கின்றது.

கேட்பது போல அவர்களும் தங்களால் முடிந்ததைக் கொடுக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம். அதுவும் ஏதோ வகையில் கடன். கொடுக்க வேண்டிய பணம். என்பதனை இந்த நாட்டு மக்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். இல்லாத டொலர்களை உண்டு என எப்படிக் காட்ட முடியும். இந்தக் கடன்கள் கூட எம்மைப் பெரிய ஆபத்தில் மாட்டி விடப் போகின்றது. அதில் எந்த மாற்றுக் கருத்துக்களும் கிடையாது. இந்த சின்ன விடயங்களை விளங்கிக் கொள்ள ஒரு மனிதன் பெரும் பொருளாதார நிபுணராக இருக்க வேண்டிய அவசியமில்லை. நாம் மேலே சொன்ன உதாரணப்படி மாற்றான் பணத்தை தனது பக்கட்டில் எவ்வளவு காலத்துக்குத்தான் போட்டுக் கொண்டு நாடகமாட முடியும் என்று ஒருவர் யோசித்தால் பதில் கிடைத்து விடும்.

இந்தப் பின்னணியில் நமது நிதி அமைச்சர் பி.ஆர். வரவு செலவுத் திட்டத்தில் கொடுக்காத சில சலுகைகளை தற்போது வழங்கி இருக்கின்றார். இது என்ன கதை என்று பார்ப்போம.; வரவு செலவுத் திட்டத்தில் அந்தப் பணத்தைக் கொடுத்திருந்தால் அது அதிகாரிகளின் கண்டு பிடிப்பு என்று போய்விடும். மேலும் ஜனாதிபதி, பிரதமர் பங்கு என்றும் வந்து விடும். எனவே ஏதோ இது பி.ஆர். பக்கட்டில் இருந்து கொடுக்கின்ற பணம் போல இதனை அவர் காட்ட முனைகின்றார்.

சாரி, இந்த பணம் எங்கிருந்து வருகின்றது.? டொலருக்குத் திண்டாடுகின்ற ஒரு நாட்டில் அணை உடைந்த வெள்ளம் போல ரூபா துல்லிக் குதித்துக் கொண்டு வருகின்றது.! அரச ஊழியர்களுக்கு 5000 ரூபா. ஓய்வூதியக்காரர்களுக்கு 5000 ரூபா. போரில் காயப்பட்ட படையினருக்கு 5000ரூபா.  சமூர்தி உதவி பெறுவோருக்கு 1000ரூபா.  தனியார் ஊழியர்களுக்கும் என்று உச்சரிக்கப்படுகின்றது. தோட்டத் தொழிலாளருக்கும் ஏதேவாம்…! என்று பெரும் தொகைப் பணம் ஜனவரி முதல் கிடைக்க இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார்.

பியகமயிலுள்ள காசு அச்சடிக்கும் இயந்திரம் இரவு பகலாக இந்தப் பணத்தை அச்சடித்துக் குவித்துக் கொண்டு வருகின்றது. இதனால் நடக்கப் போவது என்ன? நாட்டில் பெரும் பணவீக்கம் ஏற்படப் போகின்றது. இந்தப் பணத்தைக் கொடுத்து ஏதாவது வெளி நாட்டிலிருந்து பொருட்களை கொள்வனவு செய்ய முடியுமா? யார்தான் இந்தப் பணத்தக்கு சாமான்களை நமக்கத் தரப் போகின்றார்கள். எவ்வளவுதான் உள்நாட்டில் பணத்தை அடித்து மலைபோல குவித்தாலும் அது சர்வதேச அரங்கில் செல்லாக் காசுதான். நாம் பல முறை சொல்லி இருப்பது போல சிம்பாபேயில் ஒரு பாணை வாங்க பாணைப் போன்று பெரிய பல பொதிகளைத் தூக்கிக் கொண்டுதான் கடைக்குப் போக வேண்டும் என்று நிலை இங்கும் வர இருக்கின்றது என்பது தெளிவு.

-நன்றி ஞாயிறு தினக்குரல் 09.01.2022

Previous Story

சிக்கிய மோதி: நேரில் பார்த்தவர்கள் தகவல்கள்

Next Story

நாங்க ரெடி நீங்க...?