டி20 உலகக்கோப்பை 2022: பாகிஸ்தான்-இந்தியா  வாய்ப்பு?

-அஷ்ஃபாக்-

இந்தியா, ஜிம்பாப்வே என அடுத்தடுத்து அதிர்ச்சி தோல்விகளை சந்தித்த பாகிஸ்தானுக்கு அரை இறுதி வாய்ப்பு மங்கிப்போய் இருந்தது. ஆனால் தென்னாப்பிரிக்காவுக்கு நெதர்லாந்து கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்தால், தனது கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றிருக்கிறது பாகிஸ்தான் அணி.
வங்கதேசம்

நடப்பு டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாளுக்கு நாள் பல திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் நிகழ்ந்து வருகின்றன. 2 முறை கோப்பையை வென்ற வெஸ்ட் இண்டீஸால் உலக கோப்பைக்கு தகுதி பெற முடியாமல் போனது, ஆசிய கோப்பையை வென்ற இலங்கையை நமீபியா தோற்கடித்தது, அயர்லாந்திடம் இங்கிலாந்து சறுக்கியது, பாகிஸ்தானை 1 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது, நெதர்லாந்திடம் தோல்வியைத் தழுவி அரையிறுதி வாய்ப்பை தென்னாப்பிரிக்கா நழுவவிட்டது, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அரையிறுதி வாய்ப்பை இழந்தது என நடப்பு தொடரில் சுவாரஸ்யங்களுக்கு பஞ்சமே இல்லாமல் போனது.

“தென்னாப்பிரிக்காவுக்கு என்னதான் பிரச்னை”என ரசிகர்கள் கேள்வி எழுப்பும் அளவுக்கு, அந்த அணியின் நிலைமை கவலைக்கிடமாக மாறியிருக்கிறது.

இந்தியாவை வீழ்த்திய கையோடு புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருந்த தென்னாப்பிரிக்காவை தனது அட்டகாசமான ஆட்டத்தால் வீழ்த்தி அரையிறுதி கனவை கானல் நீராக்கியது நெதர்லாந்து. இதனால் பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே அரையிறுதிக்கான பந்தயம் இன்று சூடுபிடித்தது.

அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்

ஆஸ்திரேலியாவின் அடிலைட் மைதானத்தில், இரு அணிகள் மோதிய கடைசி சூப்பர் 12 ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியிருந்தாலும் மிடில் ஆர்டரின் தடுமாற்றத்தால் வெறும் 127 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

எளிய இலக்குடன் நிதானமாக ஆடிய பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிவாகை சூடி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்தது. தனக்கு பேருதவி செய்த நெதர்லாந்துக்கு பாகிஸ்தான் ஒரு பிரதிபலனையும் செய்திருக்கிறது.

வங்கதேசத்தை வீழ்த்தியதால் புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தை பிடித்து அடுத்த டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும் வாய்ப்பு நெதர்லாந்திற்கு கிடைத்துள்ளது. ஆனால் இது சாத்தியமாக இந்தியாவின் உதவியும் தேவை. இந்தியா ஜிம்பாப்வேயிடம் அதிர்ச்சி தோல்வி அடையாமல் இருக்க வேண்டும்.

மூன்றாவது நடுவரால் ஏற்பட்ட சர்ச்சை

பாகிஸ்தான்

வங்க தேச அணி 73 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த சமயத்தில், பேட்டிங் ஆட வந்தார் கேப்டன் ஷாகிப் அல் ஹசன். சதாப் கான் வீசிய பந்தில் LBW முறையில் நடுவர் அவுட் வழங்கினார்.

இதை வங்கதேசம் அணி டி.ஆர்.எஸ் முறையில் ரிவ்யூ செய்தது. பந்து பேட் எட்ஜில் பட்டது போன்ற திரையில் தெரிந்தாலும், மூன்றாவது நடுவர் பேட் தரையில் பட்டதாக எண்ணி அவுட் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. அவுட் வழங்கிய பின்னும் ஷாகிப் அல் ஹசன் நடுவரிடம் பேசி முறையிட்டார்.

இருப்பினும் முடிவில் எந்த மாற்றமும் செய்யப்படாததால் களத்தில் இருந்து ஏமாற்றத்துடன் திரும்பினார். முக்கியமான ஆட்டத்தில் மூன்றாவது நடுவர் வழங்கிய தீர்ப்பு இணையத்தில் டிரெண்டானது. வங்கதேச ரசிகர்கள் நடுவர்களை கடுமையாக விமர்சித்து பதிவிட்டு வருகின்றனர்.

இதேபோல பாகிஸ்தான் பேட்டிங்கின்போது ஷாகிப் அல் ஹசன் டி.ஆர்.எஸ் எடுப்பதற்கான நேரம் முடிந்ததும் அப்பீல் செய்தார். இதனை நடுவர் ஏற்க மறுத்ததால் ஆவேசம் அடைந்த ஷாகிப், தனது தொப்பியை கழற்றி தரையில் தூக்கி வீசியவாறு கோபத்தை வெளிப்படுத்தினார்.

இந்தியா – பாகிஸ்தான்

இந்திய அணி இன்றைய ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறினால் வரும் 10ஆம் தேதி இங்கிலாந்தை எதிர்த்து அரையிறுதியில் விளையாடும். ஒருவேளை தோல்வியைத் தழுவினால் 9ஆம் தேதி நியூசிலாந்தை எதிர்த்து களமிறங்கும்.

அதே சமயம், அரையிறுதி ஆட்டங்களில் இந்தியா – பாகிஸ்தான் இரு அணிகளுமே வெற்றிபெறும் பட்சத்தில், இறுதிப்போட்டியில் மீண்டும் ஒரு கடும் மோதலை எதிர்பார்க்கலாம். வரும் 13ஆம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் உலகக்கோப்பைக்காக பலப்பரிட்சை நடத்தும். கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது ஆகச்சிறந்த விருந்தாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

Previous Story

பிசுபிசுத்துப் போன பேரணி!

Next Story

சவூதி: தலை வெட்டப்படுவதிலிருந்து தப்பிய, இலங்கைப் பெண்ணின் கண்ணீர் வாக்குமூலம்