ஈரான் நாட்டில் மிகப் பெரிய மக்கள் போராட்டம் வெடித்திருந்த நிலையில், அதில் அமெரிக்கா தலையிடலாம் என்றும் சொல்லப்பட்டது. இதற்கிடையே இதைச் சதிப் புரட்சி எனக் குறிப்பிட்டுள்ள ஈரான் தலைவர் கமேனி, இதை தாங்கள் முறியடித்துவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும், அமெரிக்கர்கள் ஈரான் மீது தாக்குதல் நடத்தினால் அது பெரிய பிராந்தியப் போராக மாறும் என்றும் எச்சரித்துள்ளார்.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த சில வாரங்களாகப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அங்குள்ள கமேனி அரசுக்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். வன்முறையை ஒடுக்க கமேனி அரசு ராணுவத்தைப் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாக அங்குப் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.

ஈரான் விவகாரம்
ஈரான் போராட்டத்தை வைத்து அமெரிக்காவும் கூட மிரட்டல் விடுத்து வருகிறது. அதாவது ஈரானில் அமைதியாகப் போராடும் மக்கள் மீது கமேனி அரசு வன்முறையைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது என்றும் தாக்குதல்களை நிறுத்தவில்லை என்றால் அமெரிக்கா தலையிடும் என்றும் அதிபர் டிரம்ப் எச்சரித்து இருந்தார்.. இதற்கிடையே ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
அதில் ஈரானில் நடந்த நாடு தழுவிய போராட்டங்களை ஒரு சதிப்புரட்சி என்றும் ஆட்சியைக் கைப்பற்ற நடந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். ஈரான் நாட்டின் காவல் துறை, அரசு அலுவலகங்கள் மற்றும் இஸ்லாமிய புரட்சிகரப் பாதுகாப்புப் படை மையங்களையும், அரசு அதிகாரிகளையும் அழிப்பதே இதன் நோக்கம் என்று அவர் குற்றம் சாட்டினார்.
சதி புரட்சி
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், “சமீபத்தில் நடந்த போராட்டம் ஒரு சதிப்புரட்சியைப் போலவே இருந்தது. நிச்சயமாக, அந்த முயற்சியை முறியடித்துவிட்டோம். இந்தப் போராட்டத்தில் போராட்டக்காரர்கள் காவல் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், IRGC மையங்கள், வங்கிகள் மற்றும் மசூதிகளைக் குறிவைத்துத் தாக்கினர் குரான் பிரதிகளை எரித்துள்ளனர். இதுபோன்ற சம்பவங்களை ஏற்கவே முடியாது” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவுக்கு மிரட்டல்
மேலும், கமேனி அமெரிக்காவுக்கும் நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார். ஈரானின் மீது நடத்தப்படும் எந்தவொரு தாக்குதலும் பிராந்தியப் போராக மாறும் என்று கமேனி எச்சரித்தார். இது குறித்து அவர் மேலும், “அமெரிக்கர்கள் இதை தெரிந்து கொள்ள வேண்டும்: அவர்கள் போரைத் தொடங்கினால், இந்த முறை அது ஒரு பிராந்தியப் போராக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டார்.
என்ன காரணம்
ஈரான் நாட்டின் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றதே அங்குப் போராட்டம் உச்சமடையக் காரணமாகும். ஈரான் பொருளாதாரம் மோசமடைந்து, நாட்டின் நாணயம் மதிப்பிழந்ததால், கடந்த டிசம்பர் மாத இறுதியில் அங்குப் பணவீக்கம் உச்சம் தொட்டது. இதனால் மக்கள் வீதிக்கு வந்த நிலையில், போராட்டம் பெரிதாக வெடித்தது. அங்குத் தலைமைக்கு எதிரான போராட்டமாக இது மாறியது.
இந்த விவகாரத்தில் பல நூறு பேர் கொல்லப்பட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் இதுவரை பல ஆயிரம் பேர் கைதும் செய்யப்பட்டுள்ளனர். ஈரானில் இதுபோல தேசத்துரோகம் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பதால் பல ஆயிரம் பேருக்கு மரணதண்டனைகள் விதிக்கப்படக்கூடும் என்ற கவலையும் எழுந்துள்ளது.





