ஜம்மு காஷ்மீரில் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை

இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத இயக்கமான ‘ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி’ தலைவர் யாசின் மாலிக்குக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது.

யாசின் மாலிக்

தீவிரவாதம் தொடர்பான வழக்கில் அவர் குற்றவாளி என கடந்த 19-ம் தேதி டெல்லி என்.ஐ.ஏ. சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அவருக்கான தண்டனையை நீதிபதி பிரவீன் சிங் இன்று அறிவித்தார்.

தீவிரவாதத்துக்கு நிதி அளித்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) இந்த வழக்கைத் தொடர்ந்திருந்தது. கடுமையான சட்டமாக கருதப்படும் சட்ட விரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (UAPA) உள்ளிட்டவற்றின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. தன் மீதான குற்றச்சாட்டுகளை யாசின் மாலிக் மறுக்கவில்லை.

இந்நிலையில், அவருக்கு மரண தண்டனை விதிக்கவேண்டும் என்று தேசியப் புலனாய்வு முகமை வாதிட்டது. ஆனால், அவருக்கு ஆயுள் தண்டனையே விதிக்கப்பட்டுள்ளது.

குற்றச்சாட்டுகள் என்ன?

இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்தது, தீவிரவாதத்துக்கு நிதியுதவி செய்தது, குற்றச்சதி செய்தது, சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை வைத்து வழக்குத் தொடுத்திருந்தது தேசியப் புலனாய்வு முகமை. இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் யாசின் மாலிக் ஏற்றுக்கொண்டார். சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் பிரிவுகள் 16, 17, 18, 20 உள்பட பல சட்டப்பிரிவுகளின் கீழ் அவர் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன தண்டனைகள்?

இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனியாக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 10 வெவ்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் தனித்தனியாக 10 ஆண்டு சிறைவாசம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகள் அனைத்தையும் அவர் ஒரே நேரத்தில் அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர அவருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா – பாகிஸ்தானை எதிர்த்த ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி

யாசின் மாலிக்

ஜம்மு காஷ்மீர் விடுதலை இயக்கத் தலைவர் யாசின் மாலிக்

ஜம்மு காஷ்மீர் முழுவதிலும் இருந்து இந்தியா, பாகிஸ்தான் இரண்டுமே வெளியேறவேண்டும் என்று வலியுறுத்தி தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டுவந்தது யாசின் மாலிக் உருவாக்கிய ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி.

1989 வரையில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்ட இந்த அமைப்பு, பிறகு சில ஆண்டுகள் கழித்தும் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டது.

ஆனால், பிறகு ஆயுதப் போராட்டத்தைக் கைவிடுவதாக மாலிக் அறிவித்திருந்தார். பேச்சுவார்த்தை மூலம், அமைதி வழியில் தீர்வு காணப்படவேண்டும் என்று யாசின் மாலிக் பிறகு கூறத் தொடங்கினார். ஆனால், இந்தியா, பாகிஸ்தான் இரண்டு நாடுகளிடம் இருந்தும் காஷ்மீர் விடுதலை அடையவேண்டும் என்பதை யாசின் மாலிக் தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

1966ம் ஆண்டு ஸ்ரீநகரில் பிறந்தவரான யாசின் மாலிக், தற்போது திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்பும் பல முறை சிறை சென்றவரான யாசின் மாலிக் முதல் முதலில் கைதாகி சிறை சென்றபோது அவருக்கு வயது 17.

1980ல் இந்திய பாதுகாப்புப் படையினர் வன்முறையில் ஈடுபட்டதைப் பார்த்துதான் தாம் ஆயுதம் எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

1983ம் ஆண்டு ஸ்ரீநகரில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடந்த சர்வதேச கிரிக்கெட் போட்டியை சீர்குலைக்க முயன்றதாக கைது செய்யப்பட்டு 4 மாதம் சிறையில் வைக்கப்பட்டபோது யாசின் மாலிக் வெகுவாக அறியப்பட்டவர் ஆனார்.

காஷ்மீர் பண்டிட்டுகளை குறிவைத்து நடந்த தாக்குதல்களுக்கு ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜே.கே.எல்.எஃப்) குற்றச்சாட்டுக்கு உள்ளானது.

Previous Story

USA பள்ளிகளில்  8 பயங்கர துப்பாக்கிச் சூடுகள்

Next Story

ஞானசார ஓட்டம்?