ஜனாதிபதி  விலகினால்: அரசியலமைப்பு கூறுவது !

பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி பதவி விலகினால் அரசியலமைப்பின் சரத்து 40(1)(a) இன் பிரகாரம் என்ன செய்யவேண்டும் என்பதை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட் (YLS Hameed)  குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் ஒரு பாராளுமன்ற உறுப்பினரை எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகத் தெரிவு செய்யவேண்டும். அவ்வாறு தெரிவுசெய்யப்படுபவர் ஒரு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படத் தகுதியானவராக இருத்தல் வேண்டும்.

சரத்து 31(2) இன் பிரகாரம் “மக்களால்” இரு முறை ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் அதன்பின்னர் “ மக்களால்” ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட தகுதியற்றவராவார் எனவும் அவர் கூறியுள்ளார். இது குறித்து சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட் (YLS Hameed)  மேலும் கூறுகையில்,

நாட்டின் சமகால விடயங்கள் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

ஜனாதிபதிப் பதவி வெற்றிடமாகும்போது பாராளுமன்றத்தால் தெரிவுசெய்யப்படுபவர் ஏற்கனவே இருமுறை மக்களால் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டவராக இருக்கக்கூடாது.

40(1)(b) இன் பிரகாரம் புதிய ஜனாதிபதி அவ்வாறு வெற்றிடம் ஏற்பட்டதிலிருந்து ஒரு மாதத்திற்கு பிந்தாத காலப்பகுதிக்குள் தெரிவுசெய்யப்பட வேண்டும். அவ்வாறு புதிய ஜனாதிபதி பதவியேற்கும்வரை பிரதம அமைச்சர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

அவ்வேளை பிரதமர் பதவியும் வெற்றிடமாக இருந்தால் அல்லது பிரதமர் செயற்படமுடியாத நிலையில் இருந்தால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

அதேசமயம் இரு முறை “மக்களால்” ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக செயற்படலாமா என்றால் , அதற்குரிய பதில் “ஆம்” என்பதாகும். ஏனெனில் நாடாளுமன்றத்தால் எஞ்சிய காலப்பகுதிக்கு ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்படுபவர்தான் ஜனாதிபதிப் பதவிக்கு மக்களால் தெரிவுசெய்யப்படும் தகுதி உடையவராக இருத்தல்வேண்டும்.

அந்தக் குறுகிய காலத்திற்கான பதில் ஜனாதிபதியானவர் பாராளுமன்றத்தால் “தெரிவு” செய்யப்படுவதில்லை. பிரதமராக இருப்பதால் பதில் ஜனாதிபதியாக அரசியலமைப்பின் பிரகாரம் செயற்படுபவர்.

எனவே, ஏற்கனவே, இரு முறை ஜனாதிபதியாக மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர் பதில் ஜனாதிபதியாக செயற்பட எதுவித சட்டத்தடையும் இல்லை என்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளர் நாயகம் சட்டத்தரணி வை எல் எஸ் ஹமீட்  (YLS Hameed) தெரிவித்துள்ளார்.

Previous Story

போராட்ட களத்தில் ஆயுதம் ஏந்தி  பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் !

Next Story

HOT NEWS