ஜனாதிபதி அனுரா ஆயுள் போராளியா?

நஜீப் பின் கபூர்

04.01.2026 ஞாயிறு தினக்குரல்

தலைமறைவு வாழ்வும்  பகிரங்க அரசியலும்!

அனுர அதிர்ஸ்டவசமாகவே வெற்றி பெற்றார்!

அரசு அனுர என்ற தனியாளில் தங்கியுள்ளதா!

fgth34qw

சுதந்திரத்துக்கு பின்னரான அரசியலைப் பார்க்கின்ற போது இதுவரை அதிகாரத்தில் இருந்த தலைவர்கள் அனைவரும் போல சம்பிரதாய கட்சிகளில் இருந்துதான் பதவிகளுக்கு வந்திருக்கின்றார்கள். அந்த வரிசையில் தற்போதய ஜனாதிபதி அனுர சற்று முரண்பாடான ஒரு அரசியல் பின்னணியில் இருந்து அதிகாரத்தைக் கைப்பறியவர் என்றுதான் நாம் கருதுகின்றோம். எனவே அனுர சம்பிரதாய அரசியலில் இருந்து எந்தவகையில் வேறுபடுகின்றார் என்பதனை இப்போது பார்ப்போம்.

தனிமனிதன் என்ற வகையில் அவரது வாழ்க்கையை சிறுபராயம் தலைமறைவு அரசியல் பகிரங்க அரசியல் என்று இதனை நாம் வகுத்துக் கொள்ள முடியும். இயற்பெயர் திசாநாயக்க முதியன்சேலாகெதர அனுரகுமார திசாநாயக்க. இவரது தந்தை திசாநாயக்க நில அளவைத் திணைக்களத்தில் ஒரு சிற்றூழியராக ஒரு தமிழ் நில அளவையாளரின் கீழ் கடமையாற்றி வந்திருக்கின்றார். இவரது பூர்வீகம் மலையகம். தந்தையின் தொழில் நிமித்தம் இவர் நாட்டில் பல இடங்களில் வாழ வேண்டி ஏற்பட்டிருக்கின்றது. அந்த வகையில் அனுர பிறப்பிடம் (24.11.1968) மாத்தளை-கலேவெல.

பின்னர் (1972 முதல்) அனுராதபுர மாவட்டம்-தபுத்தேகம இவர்களது வாழ்விடமாக மாறுகின்றது. கொழும்பு அனுராதபுரம் ரயில் பயணத்தில் வரும் தம்புத்தேகம ரயில் நிலையத்துக்கு அருகாண்மையில் கொழும்பு பக்கமாக இவரது வீடு அமைந்திருக்கின்றது. தபுத்தேகம மத்திய கல்லூரியில் இவரது பாடசாலை. மாணவராக இருந்த காலத்திலே அனுர ஜேவிபி அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்கின்றார். தான் உயர் கல்வி கற்கின்ற நாட்களில் தம்புத்தேகம தபால் நிலையத்தில் தங்கி தமது சகாக்களுடன் கல்வியைத் தொடர்ந்திருக்கின்றார். தனது ஆசிரியையின் கணவர் தபால் நிலைய அதிபராக இருந்த காரணத்தால் அந்த ஆசிரியை தனது மாணவர்களுக்கு விடுதியில் தங்க வைத்து  கல்வி போதித்திருக்கின்றார்.

அவர்கள்தான் கல்லூரியில் விஞ்ஞான பிரிவில் பரீட்சைக்குத் தோற்றுகின்ற முதல் அணி என்பதால் ஆசிரியர்கள் தியாகத்துடன் தமது மாணவர்களை வழி நடாத்திக் கொண்டிருந்தனர். ஆனால் பாடங்களுக்கு உரிய ஆசிரியர்கள் இல்லாத போதிலும் பல நெருக்கடிகளுடன் மாணவர்கள் அங்கு பரீட்சைக்குத் தயாராகிக் கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் தான் நாட்டில் 1988-1989 அரசியல்  போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தது. அப்போது அனுரகுமார படித்துக் கொண்டிருந்த தபுத்தேகம மத்திய கல்லூரிக்குள் அதிரடியாகப் புகுந்த படையினர் அனுர வகுப்பில் படித்துக் கொண்டிருந்த பலரை அதே இடத்தில் சுட்டுக்கொன்;றார்கள்.

அந்த நேரம் கல்லூரியின் பின்புறமாக மதில் மேல்ஏறி குதித்ததால் அனுர தனது உயிரைப்பாதுகாத்துக் கொண்டார். அதனைத் தொடர்ந்து தலைமறைவு வாழ்கையைத் தொடர வேண்டி வந்தது. அப்போது அவரது ஆசிரியை ஒருவர் அவரை தனது வீட்டில் மறைத்து வைத்து பாதுகாத்திருக்கின்றார். 88-89 வன்முறையில் அனுரவின் குடும்ப உறவுகள் சாகாக்கள் எனப்பலர் அப்போது கொல்லப்பட்டனர். அவர்களது வீடும் தீக்கரையாக்கப்பட்டது.

உயர்தர பரீட்சையில் சித்தியடைந்த அனுரகுமார  முதலில் பேராதனை பல்கலைக்கழகத்திலும் பின்னர் களணி பல்கலைக்கழகத்திலும் கல்வியைத் தொடர்ந்து 1995ல் பௌதீகவியல் பட்டதாரியானார். அனுர பல்கலைக்கழகத்தில் கல்வி பயில்கின்ற நேரத்திலும் அவரை படைத்தரப்பினர் தேடிக்கொண்டிருந்தனர். அதனால் அவர்  தலைமறைவு வாழ்க்கையில் இருந்தார்.

இந்த நாட்டில்  ஜனரஞ்சகமான பௌதீகவியல் டியூசன் ஆரிசியரான திஸ்ஸ ஜனநாயக்க என்பவர் சொன்ன ஒரு கதை இது. சற்றுக் கேளுங்கள். பல்கலைகழகத்தில் எனக்கொரு ரூம்மேட் இருந்தார். அவர் அரவிந்த திசாநாயக்க. எமக்கு  அடுக்குக் கட்டில் ஒன்றுதான் அப்போது தரப்பட்டிருந்தது. நான் கீழ்தட்டிலும் எனது சகா மேல் தட்டிலும் இருப்போம். நான் வகுப்புக்கு செல்ல தயாராகும் அதிகாலையில்தான் எனது சகா  ஜன்னல் வழியாக உள்ளே குதித்து வந்து உறங்க ஆரம்பிப்பார். அவர் ஒரு நாளும் வகுப்புகளுக்கு வரமாட்;டார்.

இரவில் வெளியேறி கள்ளத்தனமாக அதிகாலையில் வந்து நுழைவதால் அவர் எப்போது வருவார் போவார் என்பது எனக்குத் தெரியாது. அவர் வரும் வரை நான் பார்த்துக் கொண்டிருப்பதும் சாத்தியமில்லை. இது தினம் நடக்கின்ற வேலை. அதனால்  ஜன்னலை அவர் வந்து இறங்குவதற்கு வசதியாக திறந்து வைத்துவிட்டுதான் நான் வழக்கமாக உறங்கிவிடுவேன். ஆனால் அவர் எங்கு போகின்றார் வருகின்றார் என்பதை நான் தெரிந்து வைத்தே இருந்தேன். அவர் தனது அரசியல் செயல்பாடுகளுக்காகத்தான் இரவு நேரங்களில் தன்னை முழுமையாக கட்சிக்கு அர்ப்பணித்திருந்தார்.

அன்று என்னுடன் அரவிந்த திசாநாயக்க என்ற பெயரில் தலைமறைவு வாழ்க்கை நடாத்திய எனது சகாதான் இன்று எமது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க. இப்படி அந்த டியூசன் ஆசிரியர் தனது வகுப்பை நடாத்திக் கொண்டிருந்த ஒரு சமயம் தனது மாணவர்களுக்கு இந்த செய்தியை முதலில் சொல்லி இருந்தார். மிகவும் வறுமைப்பட்ட ஒரு குடும்பத்தில் பிறந்த அனுர தனது வாழ்க்கையை ஓட்ட மிகவும் போராட வேண்டி இருந்தது. சிறுவனாக பாடசாலையில் படித்துக் கொண்டிருக்கின்ற நாட்களில் கொழும்பு-அனுராதபுரம்-யாழ் ரயில்களில் ஏறி இவர் பயணிகளுக்கு சிறுபொருட்களை வியாபாரம் செய்து வந்திருக்கின்றார்.

Sri Lanka News | Breaking News & Top Stories in Sri Lanka | ONLANKA

அப்போது சில நேரங்களில் தமது ஆசிரியர்கள் ரயிலில் இருப்பார்கள். அந்த நேரம் எமக்கு தர்மசங்கடமாக இருக்கும். தமது நிலையை அனுரகுமாரவே ஒரு முறை பகிரங்க மேடையிலே சொல்லி இருந்தார். உயர்தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழக பிரவேசத்துக்கு காத்திருந்த நாட்களிலும் பின்னர் பேராதனை பல்கலைக்கழகத்தில் இருந்த நாட்களில் ஹாரிஸ்பத்துவ தொகுதியில் இருக்கும் நுகவெல விகாரையில் இவர் சில காலம் டியூசன் ஆசிரியராகவும் வேலை பார்த்திருந்தார். இதுவரை அனுர பிழைப்புக்காகவே போராட வேண்டிய ஒரு நிலை இருந்து வந்திருக்கின்றது.

ஒரு ஊடகக்காரன் என்ற வகையில் நாம் பலமுறை ஜேவிபி. தலைவர்கள் அனைவருடனும் போல நேருக்கு நேர் தனிப்பட்ட சந்திப்புக்களை நடாத்தி இருக்கின்றோம். குறிப்பாக முன்னய தலைவர் சோமவன்ச, டில்வின் போன்ற முக்கிய தலைவர்களுடன் சந்தித்து போட்டி எடுத்து அவற்றை நமது தினக்குரல் வார இதழில் எழுதியும் இருக்கின்றோம். அப்போது ஜேவிபி. தலைவர்கள் தமது தலைமறைவு வாழ்கை பற்றி இதுவரை எவருக்கும் சொல்லாத பல தகவல்களை எமக்குச் சொல்லி இருந்தனர். அவற்றையும் நாம் வார இதழில் முன்பு பதிந்திருந்தோம்.

நாம் அப்படி பெலவத்தைக்குப் போய் வருகின்ற நாட்களில் இந்த அனுரகுமாரவையும் அங்கு பார்த்திருக்கின்றோம். ஆனால் அன்று இன்றளவுக்கு ஒரு முக்கிய தலைவராக இருக்காத காரணத்தால் நாம் அவரை அன்று கண்டு கொள்ளவில்லை. நமது நினைவு சரியாக அமையுமாக இருந்தால் அனுரகுமார முதல் முறையாக 1988 ல் மத்திய மாகாண முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட்டிருக்கின்றார். அதன் பின்னர் 1994ல் கட்சியின் மாணவ பிரிவின் தேசிய அமைப்பாளராகவும்  1995ல் ஜேவிபி மத்திய குழு உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். அதே  1995ல் அவர் பௌதீகவியல் துறை பட்டமும் பெற்றார்.

2000ல் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் 2004ல் குருனாகல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகி 2004-2005.02.02 வரை சந்திரிகா அரசில் அமைச்சராகவும் அனுர கடமை பார்த்திருக்கின்றார். 2015-2018 களில் எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதான அமைப்பாளராகவும்  இவர் இருந்தார். 2014ல் நடந்த கட்சியின் போராளர் மா நாட்டில்  அனுரகுமார திசாநாயக்க ஜேவிபி தலைவராக நியமிக்கப்பட்டிருக்கின்றார். அன்று முதல் அனுரகுமார தனது ஆளுமையை கட்சியை வழிநடாத்துவதில் காட்சிப்படுத்தி வருகின்றார்.

2019 நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அனுரவை என்பிபி தனது வேட்பாளராக களமிறங்கி அந்தத் தேர்தலில் குறைந்தது ஒரு மில்லியன்-பத்து இலட்சம் வாக்குகளை எதிர்பார்த்தனர். இதனை அவர்களின் முக்கிய தலைவர்களே அன்று நம்மிடம் கூறி இருந்தனர். ஆனால் 418553 வாக்குகள்தான் இவர்களுக்குக் கிடைத்தது. செல்லுபடியான மொத்த வாக்கில் இது 3.16 சதவீதம். இது மாபெரும் பின்னடைவு. தனிப்பட்டரீதியில் அவர்களது கூட்டங்களையும் பிரசாரங்களையும் நாம் பின் தொடர்ந்ததால் இது நமக்கும் ஜீரணிக்க கஸ்டமாக இருந்தது. இந்த தேர்தல் முடிவு அவர்களது அரசியல் வரலாற்றில் நம்பமுடியாத ஒரு பின்னடைவாகவும் பார்க்கப்படுகின்றது.

முதல் முறையாக 1982ல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஜேவிபி தலைவர் றோஹன விஜேவீர போட்டியிட்ட போதே அவர் 273428 வக்குகளைப் பெற்றிருந்தார். அன்றைய வாக்களிப்பில் இது 4.19 சதவீதம். எனவே 2019ல் நாம் சொல்கின்ற பின்னடைவை இதிலிருந்து மதிப்பீடு செய்து கொள்ள முடியும். அதனால் இன்று அனுர ஆளுமைதான் வெற்றியின் இரகசியம் என்ற தர்க்கமும் ஏற்புடையதாகஇல்லை.

2024 ஜனாதிபதி தேர்தலில் அனுரகுமார வெற்றி பற்றி நாம் விரிவாக சொல்ல வேண்டியதில்லை. அது அனைவரும் அறிந்தது. அதானால்தான் இந்தத்தேர்தல் முடிவை நாம் ஒரு அதிஸ்ட சீட்டிலுப்பில் வந்த பரிசு-வெற்றி என்று இதனை நமது கட்டுரைகளில் தொடர்ச்சியாக சொல்லி வருகின்றோம். இந்த ஐந்து வருட (2019-2024) இடைவெளியில் மக்கள் மனங்களில் ஜேவிபி-என்பிபி பற்றி ஒரு மனமாற்றமும் நல்லெண்ணமும் ஏற்பட பிரதான காரணமாக அமைந்திருந்தது காலிமுகத்திடல் அரகலயேதான். அதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. அந்தப்போராட்ட அறுவடையே  இன்றுவரை அனுர தரப்பினர் அனுபவித்து வருகின்றார்கள். எதிர்காலத்தில் இதனைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வது எப்படி என்பது அவர்களின் செயல்பாடுகள்தான் தீர்மானிக்கும்.

இப்போது அரசின் செயல்பாடுகள் தொடர்பாகப்பார்ப்போம். நாட்டில் ஜனாதிபதி அனுர மீது மக்கள் மத்தியில் ஒரு நல்லெண்ணம் இருக்கின்றது இதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. இதனை எதிர்க்கட்சிகளும் ஒரு நயவஞ்சக மனதுடன் ஏற்றுக்கொள்கின்றன. எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் அரசுக்கு இருக்கின்ற பெரும்பான்மை முன்னே செய்வதறியாது திக்குமுக்காடி நிற்கின்றன. அந்தப் பெரும்பான்மை அவர்களை ஒட்டுமொத்தமாக கட்டிப் போட்டிருக்கின்றது. இதனால்தான் என்பிபி. அரசுக்கு அனுபவம் போதாது. நாங்கள் தான் வித்துவான்கள். எங்களுக்குத்தான் அரசாங்கம் செய்த பாண்டித்தியம் இருக்கின்றது. அதனால் எங்களையும் இணைத்துக் கொண்டு அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும் என்று ஊடகங்கள் முன்னே எதிரணியினர் கூச்சல் போடுகின்றனர். ரணில் மீண்டும் நாடாளுமன்றம் வரும் கதைகளும் பேசப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி அனுர அடிக்கடி நாடாளுமன்றம் வந்து ஒட்டுமொத்த எதிரணியினரையும் சுவரில் சாத்தி கண்ணத்தில் அறைவது  போல அதிரடி காட்டி வருகின்றார். அதனால் என்பிபி. இயலாமையை ஜனாதிபதி அனுர நாடாளுமன்றம் வந்து சரி செய்கின்றார். அல்லது அவர்கள் பூசிக்கொள்ளும் சேற்றை கழுவிடத்தான் ஜனாதிபதி நாடாளுமன்றம் வருகின்றார் என்று எதிரணி விமர்சித்துக் கொண்டு வருகின்றனர். இது எதிர்க்கட்சியினரின் வயிற்றெரிச்சலைத்தான் காட்டுகின்றது. இதில் நமக்குப்புலப்படும் விடயம் ஜனாதிபதி அனுர இதுவரை அந்தக் கதிரையில் அமர்ந்த மிகவும் ஆளுமை மிக்க ஒரு மனிதன் நல்ல பேச்சாளர். அவருக்கு ஈடுஇணை கிடையாது. அதனால்தான் என்பிபிக்குள் இன்னும் எத்தனையோ திறமைசாலிகள் செயல்பாட்டாளர்கள் இருந்தாலும் அவர்கள் அனுர முன்னால் காணாமல் போய்விடுகின்றார்கள்.

நாடாளுமன்றத்தில் டசன் கணக்கான திறமைசாலிகள் என்பிபி தரப்பில் இருக்கின்றார்கள். சுமாரான என்று இன்னும் பல டசன் கணக்காணவர்களும் அங்கு இருக்கின்றார்கள். நாடாளுமன்றத்துக்குப் பொறுத்தமில்லாதவர்கள் என்றம் ஒரு ஐம்பது பேர்வரை அங்கு இருக்கின்றார்கள் என்பது எமது கணிப்பு. அதே நேரம் கடந்த காலங்களில் இவர்களை விடவும் மோசமானவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் நமது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்தும் செய்து வந்திருக்கின்றார்கள். அன்றும் இன்றும் இது மக்கள் தெரிவு என்பதால் விமர்சனங்களுக்கு மத்தியிலும் இந்தத் தெரிவை நாம் கொச்சைப்படுத்துவதும் ஏற்புடையதல்ல என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டி இருக்கின்றது.

ஏற்கெனவே நோய்வாய்ப்பட்டிருந்த பொருளாதாரத்தை தன்னால் மீட்nடுக்க முடியும் என்ற நம்பிக்கையை ஜனாதிபதி அனுர மக்களுக்குக் கொடுத்திருந்தார். ஆனால் மரத்தால் விழுந்தவனை மாடு மோதியது போல இன்று ஜனாதிபதி அனுரவும் அவரது என்பிபி அரசும் பேரழிவுக்கு முகம் கொடுக்க வேண்டி வந்திருக்கின்றது. இது நமது அரசியல் பொருளாதாரத்துறைகளில் மிகப் பெரிய காயத்தை உண்டு பண்ணி விட்டது. இதனை மக்கள் எப்படி எதிர்கொள்ளப் போகின்றார்கள் என்பதில்தான் அவர்களின் தலைவிதி தீர்மானிக்கப்படும்.

அத்துடன் ஜனாதிபதி என்னதான் உச்ச அதிகாரத்தில் அமர்ந்தாலும் அவர்  சுகபோகங்களை அனுபவிக்கின்றார். உறவுகளுக்கு அள்ளிக் கொடுக்கின்றார் ஊழல் மோசடியில் ஈடுபடுகின்றார் என்று எவரும் இதுவரை கைநீட்டவில்லை. எனவே தனது பதவிக்காலம் முழுதிலும் அவர் இந்த நற்பெயரைப் பாதுகாத்துக் கொள்வார் என்று ஒரு நம்பிக்கைதான்  நாட்டில் இருக்கின்றது. சிறுபராயம்  தலைமறைவு வாழ்க்கை அதிகாரமிக்க ஜனாதிபதி பதவிகளை வகித்தாலும் அவை அனைத்தையும் ஒரு போராளி நிலையிலே அனுர எதிர்கொள்கின்றார்.

அதே நேரம் தொடர்ந்தும் அனுரவை ஹீரோவாக உச்சியில் வைத்துக் கொண்டு இந்த அரசாங்கம் நகர்வதும் ஆரோக்கியமானதல்ல என்பதனையும் இங்கு சொல்லி வைக்க வேண்டும். அது அவர்களின் பலயீனமாகவும் அமைந்து விடும். அதே நேரம் ஜேவிபி. செயலாளர்தான் இந்த அரசாங்கத்தின் கோட்பாதார் என்ற ஒரு குற்றச்சாட்டும் சொல்லப்பட்டு வருகின்றது. இது ஒன்றுக்கென்று முரணானது. இங்குதான் இந்த அரசாங்கம் தொடர்பான எதிரணி ஊடகங்களின் நயவஞ்சக பரப்புரைகள் வெளிச்சத்துக்கு வருகின்றன.

Previous Story

யூத இஸ்ரேலின் இஸ்லாமிய நாடு

Next Story

හරිනිගේ ලිංගිකත්වය ඔසවාගෙන යන්නේ කවුද ?