நஜீப் பின் கபூர்
நன்றி:16.08.2026 ஞாயிறு தினக்குரல்
‘நீதிபதிகளின் பதவிக் காலத்தை நீடிக்கின்ற
தனதுநிலைப்பாட்டில் ஜனாதிபதி உறுதி.!
ஹிட்லர் பாணியில் ஒரு கருத்துக் கணிப்புக்கு
அரசு தயாராகின்றதா என்ற ஒரு சந்தேகம்!
நீதித்துறை பொலிஸ் அரச நிறுவனங்கள்
மீதான அச்சுறுத்தல்களுக்கு இந்தக் கணிப்பை
பாவிக்கவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.’

பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட ஜனாதிபதி-சட்டத்தரணிகள் சந்திப்பு கடந்த வாரம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. அப்போது தனது நிலைபாட்டில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உறுதியாக இருப்பது தெரிந்தது. பேச்சுவார்த்தைகளின் போது இருதரப்பினரும் தத்தமது நிலைப்பாட்டை விட்டுக் கொடுக்காத ஒரு நிலை. சட்டத்தரணிகள் அரசாங்கத்தின் நிலைப்பாட்டுக்கு எதிரான தமது பரப்புரைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துக் கொண்டு வருகின்றனர்.
ஒரு கட்டத்தில் ஜனாதிபதி நான் நிரந்தரமாக அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று பதவிக்கு வந்தவன் அல்ல. எந்த நேரத்திலும் வேண்டுமானால் நான் அதிகாரித்தை விட்டு இறங்குவதற்குத் தயாராகவே இருக்கின்றேன். அதற்காக மக்கள் நலன்களுக்கான நியாயமான எனது நடவடிக்கைளில் இருந்து நான் ஒரு போதும் பின்வாங்கப் போவதில்லை என்றும் அங்கு அடித்துக் கூறி இருக்கின்றார்.அந்தக் கதைகள் அப்படி இருக்க…
புரட்சிகள் சதிகள் எல்லாம் கடும் போக்காளர்களின் தெரிவுகள். அப்படி இருக்க ஜனநாயக வழியில் தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிக்கின்ற ஜேவிபி-என்பிபி. அப்படியான தெரிவுகளை மேற்கொள்ள முனையாது என்று சிந்திப்போரும்நாட்டில் இருக்கலாம். ஆனால் அப்படியான கருத்துக்களில் உண்மை கிடையாது. அதற்கு நமது அரசியலில் நடந்த ஒரு வரலாற்று நிகழ்வை மட்டும் சற்று நினைவு கூர்ந்தால் போதுமானதாக இருக்கும் என்று நாம் நம்புகின்றோம். இதனைப் படித்துப்பார்த்தால் அடா கடவுளே இவர்களும் இப்படிப்பட்ட மனிதர்களா என்று சிந்திக்க வைக்கும் என்று நாம் நம்புகின்றோம்.
நமது அரசியலில் டட்லி சேனநாயக்கா என்பவரை அனைவருக்கும் தெரியும்.அவர்வலதுசாரி ஐக்கிய தேசியக் கட்சிக்காரர். மனிதன் மிகவும் சாதுவானவர். நல்ல ஜனநாயகவாதி. நமது முதல் பிரதமர் டீ.எஸ். சேனாநாயக்காவின் மகனும் கூட. 1962 ல் ஆண்டு அப்போதய பிரதமர் ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்காவுக்கு எதிரான ஒரு சதி முயற்சி நாட்டில் நடந்தது. அதில் பாதுகாப்புத் துறையினர் பலர் சம்பந்தப்பட்டு பின்னர் கைதாகி சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.
இந்த சதி அல்லது புரட்சி வெற்றி பெற்றிருந்தால் இராணுவத்தின் சார்பில் பிரதமராக பதவி ஏற்க இந்த டட்லி சேனாநாக்க தயாராக இருந்தார். இது நமது கண்டுபிடிப்பல்ல ஜே.ஆர்.ஜெயவர்தன 1962ல் நடந்த இந்த சதிப் புரட்சி பற்றி பிற்காலத்தில் தனது சுயசரிதை எழுதும் போது அதில் இந்தத் தகவலைக் கூறி இருந்தார். இதிலிருந்து நமது வாசகர்கள் பல செய்திகளைப் புரிந்து கொள்ள முடியும்.
பதவியில் இருக்கின்ற அரசாங்கம் மீது எதிர்க் கட்சிகள் நெருக்கடிகள் தொந்தரவுகள் கொடுப்பதும் விமர்சனங்களை மேற்கொள்வதும் இயல்பானவைதான். ஆனால் நீதித்துறை பொலிஸ் அரச நிறுவனங்கள் மீது எதிர்க் கட்சிகள் இன்று தொடர்ச்சியாக அச்சுறுத்தல் செய்து கொண்டு வருகின்றன. முன்னையதை நியாயப்படுத்துவதும் பின்னயதை ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் நமது நிலைப்பாடாக இருக்கின்றது.
இது பற்றி இந்த வாரம் விரிவாக ஆராயலாம் என்று எதிர் பார்க்கின்றோம். ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க் கட்சிகளின் கடமைதான் அரசாங்கம் மீதான ஆரோக்கியமான விமர்சனங்கள். இது குடி மக்களுக்கு நிச்சயம் நன்மை பயக்க உதவும். அதே எதிர்க் கட்சிகள் மேற்சொன்ன நிறுவனங்கள் மீது மக்கள் மத்தியில் அவநம்பிக்கைகளை ஏற்படுத்துவதும் அரசாங்கத்தை சீர்குழைக்கின்ற நடவடிக்கையாகத்தான் பார்க்க வேண்டும்.
அதற்கு முன் அரசு எதிரணிகள் குடிமக்கள் என்ற மூன்று பாத்திரங்கள் பற்றி சற்று சுருக்கமாகப் பார்ப்போம். அரசு பற்றி பேசும் முன்னர் தற்போதய அரசு பதவிக்கு வந்த அரசியல் சமூகப் பின்னணி பற்றி சற்றுப்பார்ப்போம். நாம் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டி இருந்த ஜேவிபி-என்பிபி. எரிமலை பூமியைப் பிளந்து கொண்டு தீப் பிளம்புகளைக் கக்குவது போலத்தான் அதிகாரத்துக்கு வந்தது.
அதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத ஒரு மன நிலையில்தான் நாமும் இன்றும் இருக்கின்றோம். இதில் ஆரோக்கியமான பக்கங்கள் நிறையவே இருப்பது போல ஆபத்துக்களும்இதில் புதைந்திருக்கின்றன என்பதுதான் எமது நிலைப்பாடு. இப்படியான ஒரு செல்வாக்கு நாம் மேற்சொன்ன சக்திகளுக்கு எப்படி வந்தது. அதனை அவர்கள் தொடர்ந்து பாதுகாத்துக் கொள்வார்களா என்ற சந்தேகம் நமக்கு தொடர்ச்சியாக இருந்து வருகின்றது.
இதுவரைகாலமும் சம்பிரதாய பிரபுத்துவ அல்லது வாரிசு அரசியலுக்குப் பழகிப்போய் இருந்த அல்லது பக்குவப்பட்டிருந்த சமூகம் அதிலிருந்து எரிமலை பூமியைப் பிளப்பது போல எப்படி ஏன் வெளியே வந்தது என்பது நுணுக்கமாக ஆராயப்பட வேண்டிய ஒன்று. இது நம்மை விட பதவியில் இருக்கின்ற அரசு செய்யவேண்டிய ஒன்று. அத்துடன் நாம் இங்கு விவாதிக்கின்ற சில கருத்துக்களை நமது வாசகர்கள் எந்தளவுக்குப் புரிந்து கொள்வார்கள்.?
மேலும் இது பாமர மக்களால் எந்தளவுக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பதிலும் நமக்கு பல சந்தேகங்கள் இருக்கினறன. ஆனால் நமது வாசகர்களில் கணிசமானவர்களுக்கு நல்ல அரசியல் புரிதலும் அறிவு மட்டமும் இருப்பதையும் நாம் அறிவோம். எனவே எமது முயற்சிகள் வீண்போக மாட்டாது என்று நாம் நம்புகின்றோம்.
நமது அரசியலில் அரசு இருக்கின்றது அது எப்படியான பின்னணியில் அதிகாரத்துக்கு வந்தது என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் விரிவாகப் பேசி இருக்கின்றோம். அதே போன்று எப்படியாவது அதிகாரத்தைக் கைப்பற்றி பதவிக்கு வந்து விட வேண்டும் என்று சிந்திக்கின்ற எதிர்க் கட்சிகளும் இங்கு இருக்கின்றன. அதில் பல்வேறு பட்ட குழுக்கள் பிரிவுகள் இருந்தாலும் அனேகமாக அவர்கள் அனைத்துத் தரப்பினரும் இன்று ஓரணியில் அணிசேர்ந்திருக்கின்றார்கள்.
இது நாட்டு நலனுக்கான ஒரு கூட்டணியல்ல முற்றிலும் தன்னலத்துக்கான கூட்டணி. கூடிய விரைவில் இந்த மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்திருக்கின்ற அரசை வீழ்த்தினால்தான் நாம் தப்பலாம் அல்லது வாழ் நாள் முழுதிலும் கம்பி எண்ணிக் கொண்டிருக்க வேண்டும் என்ற அச்சத்தில் இருப்போர்தான் இந்தக் கூட்டணியில் இருக்கின்றார்கள். இதுதான் இன்றைய எதிர்க் கட்சிகள் நிலை.
இதற்கு மத்தியில் நாட்டில் இருக்கின்ற தீர்க்கமான ஒரு சக்திதான் குடி மக்கள். இந்தக் குடி மக்களில் பல இனங்கள் சமயங்களைச் சேர்ந்தவர்கள் இருக்கின்றனர். அதில் அவர்களின் உணர்வுகளும் கலாச்சாரப் பாரம்பரியங்களும் இருக்கின்றன. அத்துடன் இன்று நாட்டில் பல அரசியல் கட்சிகள் அமைப்புக்களும் இருக்கின்றன. அதில் தேசிய கட்சிகள் பிராந்தியக் கட்சிகள் சிறுபான்மைக்கட்சிகள், இன ரீதியான கட்சிகள் சில்லறைகள் என்றும் பல குழுக்களும் இருக்கின்றன. நாம் குறிப்பிட்ட தேசிய கட்சிகளில் எந்தளவுக்கு தேசிய சிந்தனைகள் கொள்கைகள் பின்பற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதும் சிந்திக்க வேண்டிய ஒன்றாக இருக்கின்றன. சுதந்திரக் கட்சியின் பின்னணியை சற்று சிந்தித்துப் பாருங்கள்.!
ராஜபக்ஸாக்களின் மொட்டுக் கட்சி முற்றிலும் இனவாத சிந்தனையில் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. ரணிலின் ஐதேக. மற்றும் சஜித்தின் ஐம.சக்தி கூட இன்று இனவாதத்தை முன்னிறுத்திப் பயணிப்பதை நாம் அவதானிக்க முடியும்.ஆனால் வேடிக்கை என்ன வென்றால் இவற்றில் சிறுபான்மை அரசியல்வாதிகளும் கட்சிகளும் இவற்றுடன் கூட்டணியில் இருக்கின்றன. மிகப் பெரிய ஆச்சரியம் என்ன வென்றால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசில் அசித பெரேரா, விமலவீர திசாநயக்க போன்றவர்கள் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்திருக்கின்றனர்.
எனவே தேசியம் என்பதும் இன ரீதியான கட்சிகள் சுலோகங்கள் கொள்கைகள் என்பதெல்லாம் வெறும் மாயை. மக்களை ஏமாற்றிப் பிழைக்க வைத்திருக்கின்ற ஏற்பாடுகள். இவற்றை குடிமக்கள் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரம் தூய்மையான சிந்தனைகள் கொள்கைகள் கோட்பாடுகளுடன் நாட்டுக்காக தனது சமூகத்துக்காக கட்சிகளை உருவாக்கியவர்களும்நாட்டில் இருந்திருக்கின்றார்கள் என்பதனை நாம் இங்கு சொல்லி ஆக வேண்டும். ஆனால் இன்று அனைத்தும் ஏமாற்றுகள் என்ற அளவில் அரசியல் செயல்பாடுகள் போய்க் கொண்டிருக்கின்றன.
ஹிட்லர் தனது செல்வாக்கு நாட்டில் கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்த நாட்களில் ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டு அதனை தனது அடுத்த கட்ட நகர்வுக்காக பாவித்துக் கொண்டார். அது போல ஒரு நிலைதான் இன்று நமது நாட்டிலும் தோன்றி இருக்கின்றதோ என்று நமக்கு சிந்திக்கத் தோன்றுகின்றது. நாட்டில் அரசு வலுவாக இருக்கின்றது.
குடிகள் மத்தியில் ஜனாதிபதி அனுர மீது மிகுந்த நல்லெண்ணம் பொதுவாக இருக்கின்றது. அதே நேரம் அரசியல் ரீதியில் ஒரு முப்பத்து ஐந்து சதவீதமானவர்கள் மாற்றுக் கருத்துக்களுடன் இருக்கின்றார்கள். பொதுத் தேர்தல் முடிவுகளும் அப்படித்தான் அமைந்திருந்தன என்பதை நாம் அறிவோம். இந்த நிலையில் எதிரணிகள் அனைத்தும் ஓரணியில் நின்று இன்று அரசுக்குத் தொந்தரவுகளைக் கொடுத்து வருகின்றன. ஆனால் நமது நாட்டில் எதிர்க் கட்சிகள் மிகவும் பலயீனமாக இருக்கின்ற ஒரு காலமாக இதனைக் குறிப்பிட வேண்டும்.
இப்படி என்னதான் அரசு செல்வாக்குடன் வலுவாக இருந்தாலும் அதற்கு சில தொந்தரவுகள் இருந்து வருவதை மறுக்க முடியாது. இந்த நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கின்ற பிரதான பௌத்த பீடங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மாற்றமாக அவ்வப்போது சிந்திப்பதாகவும் நமக்குத் தோன்றுகின்றது. இதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது.
இந்த விவகாரத்தில் அரசு நேரடியாக ஒரு போதும் பௌத்த பீடங்களுடன் மோதாது. ஆனால் அதற்கு ஒரு பதில் கொடுக்க வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது என்பது நமது கணக்கு. மேலும் கூச்சல் போடுகின்ற எதிர்க் கட்சிகளுக்கு தக்க பாடம் கற்றுக் கொடுக்க வேண்டிய தேவை அரசுக்கு இருக்கின்றது. குடிமக்கள் தம்முடன்தான் இருக்கின்றார்கள் என்பதனை அரசு தெரிந்து வைத்துள்ளது.
கொள்ளையர்கள் கொலைகாரர்கள் குற்றவளிகளுக்கு தண்டனை ஈஸ்டர் தாக்குதலுக்கு நீதி தமது அரசியல் செயல்பாடுகளுக்கு குடிமக்கள் அங்கிகாரம் என்ற அனைத்துக்கும் ஒரு கல்லில் மாங்காய் குழையையே பறிப்பது போல அரசு ஒரு கருத்துக் கணிப்புக்குப்போய் மக்கள் அங்கிகாரத்தைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அனைத்து எதிர்க் கட்சிகளையும் சில காலத்துக்குப் பெட்டிப்பாம்பாக்கி விடலாம்.
இதனைத்தான் நாம் ஹிட்லர் பாணியிலான அரசின் ஜனநாயகப் புரட்சி என்று அறிமுகம் செய்கின்றோம். அப்படியான ஒரு முடிவை அனுர அரசு எடுக்குமாக இருந்தால் இன்று அரச நிருவாகத்தை சீர்குழைத்து ஆட்சியைப் பிடிக்கலாம்; என்று எதிர்பார்ப்போருக்கு அது நல்ல பாடமாக அமையும்.
நீதிபதிகளின் வயதை நீடிக்கும் விவகாரத்தில் எதிரணியினரும் சட்டத்தரணிகளில் ஒரு தரப்பினரும் மேற்கொள்கின்ற போராட்டங்கள், அரசு தீர்மானங்களுக்கு மாற்றமாக இருக்கின்றது. ஆனால் பதவியில் இருக்கின்ற அரசு இதற்காக மக்கள் அங்கிகாரத்தைப் பெற்றிருக்கின்றது என்பதுதான் அரசின் நிலைப்பாடாக இருக்கின்றது.
அதே போன்று சிறைச்சாலைகளில் இன்று நடந்து கொண்டிருக்கின்ற சீர்குழைவு நடவடிக்கைகளுக்குப் பின்னால் ஒரு சதி இருப்பதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ஸ, நாமல் ராஜபக்ஸ மற்றும் ஷசிந்திர ராஜபக்ஸ போன்றவர்கள் கூட இப்படியான கருத்துக்களை ஊடகங்களுக்கு முன்னால் பேசி சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தனர்.
எனவே வன்முறைக்கு ஊக்கமளித்தல் சொத்துக்களை சேதமாக்கள் போன்ற நிகழ்வுகள் சிறைச்சாலைகளுக்கு அப்பால் ஏனைய துறைகளுக்கும் பரவலாம் என்று எதிர்பார்க்க முடியும். எனவே நாம் குறிப்பிடுகின்ற ஒரு கருத்துக்கணிப்புக்கு அரசு செல்லுமாக இருந்தால் ஒரு எழுபது சதவீதமான ஆதரவு அரசுக்குக் கிடைக்கலாம் என்று எதிர்பார்க்க முடியும். அப்படியான ஒரு தீர்மானத்தை ஆட்சியாளர்கள் எடுப்பார்களாக இருந்தால் அரசுக்குத் தொந்தரவு கொடுத்து பணிய வைக்கலாம் என்று எதிர்பார்க்கின்ற எதிர்க்கட்சிகளுக்கு சம்மடி அடியைக் கொடுக்கலாம்.
மாகாணசபைத் தேர்தல் ஒன்றுக்குப் போய் தமது ஆதரவை நிரூபிப்பதை விட அதிகளவு அறுவடையை அரசு மீதான ஒரு கருத்துக் கணிப்பில் பெற்றுக் கொள்ள முடியும். இதற்கு நீதிபதிகளின் வயதை நீடிக்கின்ற விடயத்தில் உள்ள முரண்பாடுகளை அரசு பயன்படுத்திக் கொள்ள முடியும். இது பற்றிய பொது மக்களின் கருத்து என்பது சதவீம் அரச நிலைப்பாட்டுக்கு ஆதரவாக இருக்கின்றது.தூக்குத் தண்டனை விவகாரத்திலும் இதே நிலைதான்.





