சோனியா காந்தியின் தாய் மரணம்

சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ வயது மூப்பு காரணமாக காலமானதாக காங்கிரஸ் கட்சி அறிவித்து இருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக பதவி வகித்து வரும் சோனியா காந்தியின் தந்தை கடந்த 1983 ஆம் ஆண்டு காலமானார். அவரது தாயார் பாவ்லா மைனோ 90 வயதை கடந்து இத்தாலி நாட்டில் வசித்து வந்தார்.

இவரை சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் அடிக்கடி இத்தாலிக்கு சென்று சந்தித்து வந்தனர். இந்த நிலையில் பாவ்லா மைனோவுக்கு நோய்வாய்பட்டு உடல் நிலை மோசமடைந்ததாக இத்தாலியிலிருந்து தகவல் வந்தது
இத்தாலியில் மரணம்

இத்தாலியில் மரணம்

அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 23 ஆம் தேதி பாவ்லா மைனோவை காண சோனியா காந்தி இத்தாலிக்கு சென்றிருந்தார். அவருடன் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் இத்தாலிக்கு சென்றனர். இந்த நிலையில், கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி பாவ்லா மைனோ உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது இறுதிச் சடங்கு நேற்று இத்தாலியில் நடைபெற்று இருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் ட்வீட்

இது தொடர்பான அறிவிப்பை காங்கிரஸ் கட்சியின் தலைமை இன்று வெளியிட்டு இருக்கிறது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டரில் பதிவிட்டு உள்ளதாவது, “சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோ இத்தாலியில் உள்ள தனது வீட்டில் கடந்த ஆகஸ்டு 27 ஆம் தேதி சனிக்கிழமை காலமானார். அவருக்கு நேற்று இறுதிச்சடங்கு செய்யப்பட்டது.” என்றார்.

காங்கிரஸ் இரங்கல்

காங்கிரஸ் இரங்கல்

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தாய் பாவ்லா மைனோவின் மரணத்துக்கு காங்கிரஸ் குடும்பம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. அவரது ஆன்மாவுக்காக பிரார்த்திப்பதுடன், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்காக துணை நிற்போம்.” என்று பதிவிட்டு உள்ளது.

இத்தாலியில் பிறந்த சோனியா

இத்தாலியில் பிறந்த சோனியா காந்தி, முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர் இந்தியாவின் குடியுரிமையை பெற்ற அவர், ராஜீவ் காந்தி மரணமடைந்து 7 ஆண்டுகள் கழித்து கடந்த 1998 ஆம், ஆண்டு காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது.

Previous Story

கோர்பச்சேவ் காலமானார்

Next Story

உளவியல் நிபுணருக்கு உயரிய விருது