செல்வாக்கான அமைச்சுக் கிடைத்தது நிராகரித்து விட்டேன்-இஷாக் ரஹ்மான்

– நூருல் ஹுதா உமர் –

இன்று அமைக்கப்பட்ட அமைச்சரவையில் சக்திமிக்க அமைச்சுப் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு எனக்கு பல  தடவைகள் அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் தான் அரச உயர்மட்ட அழைப்புக்களை முற்றாக நிராகரித்து விட்டதாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இசாக் ரஹ்மான் தெரிவித்தார்.

ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் தொடர்ந்தும் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில், இன்று புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையில் தனக்கு முக்கிய அமைச்சுப் பொறுப்பு ஒன்றைத் தர தீர்மானிக்கப்பட்டுள்ளதால் அதனை ஏற்றுக் கொள்ளுமாறு பல தடவைகள் ஆளும் தரப்பு உயர்மட்டத்திலிருந்து  எனக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டன. இருப்பினும் அவர்களின் அந்த அழைப்பை நான் முற்றாக நிராகரித்தேன்.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாகவும் மற்றும் பல்வேறு வகையிலும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வீதியில் இறங்கி போராடிக்கொண்டிருக்கும் நிலையில் எந்தவொரு அமைச்சுப் பொறுப்பையும் தன்னால் ஏற்க முடியாது என அவர்களிடம் நான் தெளிவாக எத்திவைத்தேன்.

நாட்டில் இன்று எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி அதனைத் தீர்க்க வேண்டும் என்பதுடன் மக்களின் உணர்வுகளை மதித்து மக்கள் பக்கமாக தொடர்ந்தும் செயற்படுவேன். என்மீது முன்வைக்கப்படும் விமர்சனங்கள், குற்றச்சாட்டுகள் தொடர்பிலான உண்மை நிலைமையை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள் என்று தொடர்ந்தும் தெரிவித்தார்.

Previous Story

மஹிந்த பதவி விலகல் கதை ஒரு நாடகம்-அடுத்த சதி! பின்னணியில் விமல்!!

Next Story

GO HOME GOTA வந்த லசந்த மனைவி!