சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு.! ‘வண்ணக் கனவு’

-நஜீப் பின் கபூர்-

கனவுகள் பற்றி பேசுகின்ற போது இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அபுல்கலாம் பற்றித்தான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. ஆனால் நாம் இங்கு சொல்லப் போவது ஈழத் தமிழர்களுக்கு ஜனாதிபதி ரணில் காட்ட முயற்சிக்கும் வண்ணக் கனவுகளைப் பற்றிய கதைகளையே ஆகும். இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகம் குறிப்பாக தமிழர்கள்  கனவு இது என்று நாம் நம்பவில்லை. அவர்கள் அடிப்படை வாழ்வுரிமையைத்தான் இப்போது கோட்க்கின்றார்கள்.

சிறுபான்மை சமூகம் என்று எழுதுகின்ற போது நாம்  குறிப்பாக தமிழர்கள் என்று ஒரு சொல்லைப் பாவித்திருக்கின்றோம். அதற்குக்குக் காரணம் இந்த நாட்டில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகத்தில் முஸ்லிம்களின் அரசியல் உரிமை என்ற விடயத்தில் கட்டுரையாளனுக்கு நிறையவே கருத்து முரண்பாடுகள் இருக்கின்றன. அதனால்தான் அப்படி!

தமிழருக்குக் எதையாவது கொடுத்தால் தமக்கும் தா என்பதுதான் முஸ்லிம்கள் அரசியல் கோஷமாக இருக்கின்றது. அதற்காக அவர்களுக்கு தேவைகள் பிரச்சனைகள் இல்லை என்பது அர்த்தமல்ல. அந்த சமூகமும்  அதன் அரசியல் தலைமைகளும் இன்னும் அரசியல்   ரீதியாக  விளிப்பூட்டப்படவில்லை என்பது கட்டுரையாளனின் தனிப்பட்ட கருத்து. தமது இருப்புக்கு-உரிமைகளுக்கு என்னதான் குந்தகங்கள் வந்த போதும் பேரின சமூகத்துடன் நல்லுறவுடன்தான் அதற்குத் தீர்வு என்று அந்த சமூகத்தின் அரசியல் தலைமைகள் இன்றும் எதிர்பார்த்து வருகின்றன.

இதற்குக் காரணம் அந்த சமூகத்தில் அரசியல் தலைமைகள் அரசிலை ஒரு தன்னலம் சார்ந்த வியாபாரமாக முன்னெடுப்பதுதான் என்பது எமது கருத்து. அரசியல் ரீதியலான ஒரு விளிப்புணர்வு முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் மு.கா.தலைவர் அஷ;ரஃப் காலத்தில் ஏற்பட்டாலும் அவர் மறைவுடன் அவரது அரசியல் இயக்கம் முற்றிலும் தன்னலம் சர்ந்த வர்த்தக அமைப்பாக வெளிப்படையாகவே நகர்ந்ததால் அந்த அரசியல் இயக்கம் பல கூறுகளாக பிளவு பட்டது.

சிற்றரசர்கள் குறு நிலங்களை ஆள்வது போல பிரதேசவாதத்ததை மையப்படுத்திய அரசியல் தலைமைகள் அங்கு தோன்றியது. அவை ஆளும் தரப்புடன் இணக்க அரசியல் செய்ய ஆர்வமாக இருந்தாலும் தற்போதுள்ள கடும் போக்கு இனவாத சக்திகளுடன் அவர்கள் செல்பட முடியாத காரணத்தால் அமைப்பு ரீதியில் தள்ளி நின்றாலும் அவர்களது மக்கள் பிரதிநிதிகள் ஆட்சியாளர்களுடன் தன்னலத்துக்கான நெருக்கமாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதற்கான அங்கிகாரத்தை அந்தத் தலைமைகளே கொடுத்தன என்பதும் அனைவரும் அறிந்த உண்மை.

தமிழருக்கு அரசியல் உரிமைகள் என்று எங்கிருந்தாவது ஒரு ஓசை காற்றில் கேட்டால் முஸ்லிம் அரசியல் வியாபாரிகள் ஐஸ் அல்லது முட்டாய் வியாபாரி வண்டி ஓசை கேட்டு சிறுவர்கள் தெருவுக்கு ஓடிவருவது போல தமது பங்கு என்று அங்கு வந்து நிற்பார்கள். இது நாகரிகம் இல்லாத ஒரு அரசியல் என்பதும் நாம் துனிந்து இங்கு சொல்ல வேண்டி இருக்கின்றது.

இப்போது சுதந்திரத்துக்கு முன்னர் அதாவது 04.02.2013 இலங்கையின் இனப் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு என்று அதிகாரமிக்க பதவியில் இருக்கின்ற ஜனாதிபதி ரணில் பகிரங்கமாக கடந்த சில தினங்களுக்கு முன்பிருந்து பேசி வருகின்றார். அதனை மூத்த தலைவர்கள் பலர் பாராட்டியும் இருந்தார்கள்.  இதனை நாம் வண்ணக் கனவு என்று குறிப்பிட விரும்புகின்றோம். நடை முறையில் இதனை அமுல் படுத்துவதற்கான எந்தப் பின்னணியும் அதிகாரங்களும் ரணிலுக்கு இல்லை. எனவே அவர் சுயாட்சி தருகின்றேன் தனி மாநிலம் தருகின்றேன். ஏன் தனி நாடு கூடத் தருகின்றேன் என்று சொல்ல முடியும்.! இப்படித்தான் ரணிலின் சுதந்திரத்துக்கு முன்பு தீர்வு என்ற கதையும் அமைந்திருக்கின்றது என்று நாம் அடித்துக் கூறுகின்றோம்.

பொதுவாக கனவுகள் கறுப்பு வெள்ளி நிறத்தில் வருவது வழக்கம். ஆனால் சில மனிதர்களுக்கு வர்ணக் கனவுகளும் தெரிவதுண்டு. அப்படிப்பட்ட ஒரு கனவைத்தான் ஜனாதிபதி ரணில் தமிழ் மக்களுக்கு காட்ட முனைகின்றார் என்று நாம் மீண்டும் மீண்டும் கூறுகின்றோம். மூத்த அரசியல்வாதிகளும் அரசியல் விற்பண்ணர்கள் என்று தம்மை காட்டிக் கொள்கின்றவர்களும் ரணிலின் இந்தகக் கதையை நம்புகின்றார்கள். அதற்கு நல்லெண்ணமாக மக்கள் விரோத 2023 வரவு செலவுத் திட்டத்தை கூட எதிர்த்து வாக்களிக்காமல் தாம் தவிர்த்தக் கொண்டதாக ஐயா சுமச்திரன் பகிரங்கமாகவே கூறி இருந்தார். விக்ணேஷ;வரனுக்குக் கூட அதில் நிறையவே நம்பிக்கை இருப்பதும் தெரிகின்றது.

தனி மனிதர்களின் நம்பிக்கைகள் எதிர்பார்ப்புக்கள் பற்றி நமக்கு ஏதும் கூற முடியாது. ஒரு இனத்தின் அரசியல் பிரதிநிதிகள் என்றவகையில் இந்த நம்பிக்கைகள் எதிர்பார்ப்புக்கள் விவகாரத்தில் அவர்கள் இன்னும் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் பேசி இருக்க வேண்டும். இந்த  அவர்களது நம்பிக்கைகள் எதிர்பார்ப்புக்களுக்காக ஒரு இனத்தை சமூகத்தை முட்டால்களாக   அனுமதிக்க முடியாது என்பது நமது வாதம்.

நமது அவதானங்களின் படி தற்போதய ஜனாதிபதிக்கு அரசியல் தீர்வு பற்றிப் பேசுவதற்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. அவர் மக்களால் நிராகரிக்கபட்டவர். நாடாளுமன்றில் ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் வைத்திருப்பவர். அவரது இந்த அரசியல் தீர்வு பற்றிய கருத்தக்கள் தேர்தல் காலங்களில் ராஜபக்ஸாக்கள் மற்றும் மொட்டுக் கட்சியினர் மேற்கொண்டு வந்த பரப்புரைகளுக்கு முற்றிலும் எதிராகவே இருக்கின்றது. எனவே இதற்கு அதிகாரத்தில் இருக்கின்ற மொட்டுக் கட்சினர் ஆதரவு கொடுப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும்.

நெருக்கடியான இந்த நேரத்தில் தனக்கும் தனது அரசுக்கும் சர்வதேச மட்டத்திலும் பக்கத்து இந்தியாவிடமிருந்து ஒரு நம்பிக்கையை-நல்லெண்ணத்தை ஏற்படுத்திக் கொள்ளவே ரணில் சுதந்திரத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு பற்றிய செய்தியை சந்தைப்படுத்தி இருக்கின்றார் என்று நாம் உறுதியாக நம்புக்கின்றோம். இதற்கு முன்பும் நமது ஆட்சியாளர்கள் இப்படி நிறையவே நாடகங்களை நடாத்தி வந்திருக்கின்றார்கள். ரணில் அப்படிப் பேசிக் கொண்டிருக்கின்ற நேரம் ராஜபக்ஸாக்களினதும் மொட்டுக் கட்சினரினதும் முக்கிய தலைவர்களான சரத் வீரசேக்கர காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் என்று எவரும் வாய்திறக்கக் கூடாது என்று சம நேரத்தில் நாடாளுமன்றில் பேசி இருந்தார்.

வரவு செலவு அறிக்கைக்கு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக் கொள்ள இந்த இசுவை ரணில் எடுத்திருக்கலாம். அதே நேரம் அடுத்த நொடியில் பேரினவாதிகளை வைத்து சுதந்திரத்துக்கு முன் அரசியல் தீர்வு என்ற கதைக்கு தீ மூட்டிவிடவும் ஜனாதிபதி ரணிலுக்கு முடியும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கின்றது.

இதற்கு முன்பு பதிமூன்று பிளஷ;, தீபவளி, புத்தாண்டு, தேர்தலுக்குப் பின், புதிய அரசியல் யாப்பில் என்று அவர்கள் எத்தனையோ முறை இனப்பிரச்சனை விவகாரத்தில் தீர்வுக் கதைகளைச் சொல்லி ஏமாற்றி வந்திருக்கின்றார்கள் என்பதனை ஆட்சியார்களும் பேரின சமூகமும் மறந்தாலும் ஈழத் தமிழர்கள் மறந்திருக்க வாய்ப்புக்கள் இல்லை. அப்படி இருக்க நாடாளுமன்றதில் ஒரு ஆசனத்தை வைத்திருக்கும் ஜனாதிபதி ரணில் சுதந்திரத்துக்கு முன்னர் தீர்வு என்று சொல்ல தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அதன் மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கின்றது.!

இது எவ்வளவு தூரம் கோமாளித்தனமானது ஆபத்தானது.? சுதந்திரத்துக்குப் பின்னர் மீண்டும் இனப்பிரச்சனைக்கு தீர்வு இல்லை என்று மீண்டும் உறுதியாக தெரியவரும் போது தமது இந்த அரசியல் தலைமைகள் பின்னால் போய்தான் தமிழ் சமூகம் விமோசனத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் கடவுளே இந்தக் கதையை யாரிடம் போய் சொல்வது.

அடுத்த வேடிக்கை மைத்திரியின் உரைக்கு நாடாளுமன்றத்தில் பதில் வழங்கிய ஜனாதிபதி ரணில் மாகாண அபிவிருத்திக் குழு விடயம் தொடர்ப்பில் தான் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தது  அனைவரும் பார்த்த கேட்ட காட்சிகளாக இருக்க, இப்போது அதற்கு அர்த்தம் அதுவல்ல என்று ஜனாதிபதி செயலகம் புதிய விளக்கமொன்றைக் கொடுத்திருக்கின்றது.

இது அரசுக்கோ தலைவர்களுக்கோ எந்தவொரு விவகாரத்திலும் தெளிவான நிலைப்பாடு கிடையாது என்பதனைத்தான் வெளிப்படுத்தி வருகின்றது. எனவே இவர்களின் கதைகளை நம்பி தாம் சார்ந்த சமூகங்களுக்கு வாக்குறுதிகளைக் கொடுத்து சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது புத்தி கூர்மையான அரசியல்வாதிகளுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

ரணில் கருத்தப்படி இனப்பிரச்சனைக்கு அப்படியான ஒரு அரசியல் தீர்வை ரணில் சொல்கின்றபடி தருவதற்கும் தமிழ் தலைவர்கள் அதனைப் பெற்றுக் கொள்வதற்கும் இன்னும் சரியாக அறுபது (60) நாட்கள் மட்டுமே எஞ்சி இருக்கின்றது என்பதனை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த சுதந்திரத்துக்கு முன்னர் கதையை ஜனாதிபதி ரணில் சொல்லி 48 மணி நேரங்கள் கழிவதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி மாவட்ட அபிவிருத்தி சபையே அனைத்தப் பிரச்சனைக்குமான சிறப்பான தீர்வு என்று சொல்ல உடனே குதித்தெழுந்த ஜனாதிபதி ரணில்  இது மிகச் சிறந்த ஆலோசனை அதனை நான் அமுல்படுத்துகின்றேன். ஆதரவுதாருங்கள் என்று கேட்டபோது ஆம் நிச்சயமாக நாம் பூரண ஒத்துழைப்புத் தருவோம் உறுதி வழங்கினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி.

அப்படியாக இருந்தால் தமிழர் பிரச்சனைக்கு மாவட்ட அதிகார சபைகள் மூலம்தான் தீர்வா என்று நாம் கேள்வி எழுப்புகின்றோம். இந்தக் கேள்வியை தமிழ் தலைவர்கள் எவரும் அங்கு எழுப்பவில்லை ஏன் என்றும் நாம் கேட்கின்றோம். அத்துடன் ரணில் மீது விசுவாசம் தெரிவித்த தலைவர்கள் இதற்குத் தரும் பதில் என்ன?

இந்த ரணில் சொன்ன சுதந்திரத்துக்கு முன்னர் அரசியல் தீர்வு என்ற கதையில் இனிவரும் மாகாணசபைகளில் அந்த மாவட்டத்தில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்வாங்கிக் கொள்வது பற்றிய ஒரு கதையையும் ரணில் சொல்லி இருந்தார். இது மாகாணசபை அதிகாரங்களை மத்திய அரசை வைத்துக் கட்டுப் போடும் ஒரு ஏற்பாடு என்று நாங்கள் நினைக்கின்றோம். இதுகூட வடக்குக் கிழக்கில் இருக்கின்ற நாடளுமன்ற உறுப்பினர்கள் ஈகோ பிரச்சனை காரணமாக சேர்த்தக் கொள்ளப்பட்ட ஒரு தீர்மானமாக இருக்க முடியும்.

இதனை தமிழ் தலைவர்கள் ஜனாதிபதி ரணிலுக்கு முன்வைக்க கதையை அவர் சபையில் பகிரங்கப்படுத்தி இருக்க வேண்டும். மத்திய அரசியல் இருக்கின்ற அதிகாரம் மிக்க தலைவர்கள் மாகாணசபை அமர்வுகளில் பிரசன்னமாகும் போது மாகாணசபையின் தனித்துவத்துக்கு என்ன நடக்கும் என்பதும் தெரிந்ததே. இவற்றுக்கு ஏற்றவாறு திருத்தங்களைச் செய்து சுதந்திரத்துக்கு முன் இனப்பிரச்சனைக்குத் தீர்வு என்பது அலாவுதீனின் அற்புத விளக்கின் புதிய அத்தியாயமாகத்தான் இருக்க முடியும்.

மீண்டும் மாவட்ட அபிவிருத்தி சபைகள் பற்றிய கதைக்கு வருவோம் அதில் மாவட்டத்தில் நாடளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் என்ற அனைவருக்கும்  கலந்து கொள்ளும் வாய்ப்பு முன்பு இருந்தது. அதில் அரச அதிகாரியான மாவட்ட செயலாளருக்கும் கணிசமான செல்வாக்கு இருந்தது.

இப்படி அமைகின்ற போது வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற சிறுபான்மை சமூகங்களின் அரசியல் விருப்பு வெருப்புக்கள் உணர்வுகளுக்கு என்ன நடக்கும் என்றும் நாம் கேள்வி எழுப்புகின்றோம். எனவே நரியிடம் காகம் வடையை பறிகொடுத்த நிலைதான் நடக்கப் போகின். இதற்கு பேரினத் தலைவர்களை நம்பி சமூகத்தை சமூகத்தை ஏமாற்றிய அரசியல் தலைமைகள் தான் பதில் சொல்ல வேண்டும்.

பேரின அரசியல் தலைவர்களின் வஞ்சக நாடகங்களில் சிறுபான்மை அரசியல் தலைமைகள் குறிப்பாக மூத்த தமிழ் அரசியல்வாதிகள் விரும்பியே அந்த நாடகங்களில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்தக் காட்சிகைளைத்தான் தமிழ் சமூகம் தற்போது பார்த்துக் கொண்டு வருகின்றது. இதுதான் சமகால தமிழர்களின் அரசியல் விளையாட்டாக நடந்து கொண்டு போகின்றது.

நன்றி: ஞாயிறு தினக்ககுரல் 04.12.2022

Previous Story

IND vs BAN: முதல் ஒருநாள் போட்டியில் இந்தியாவை வீழ்த்திய வங்கதேசம்

Next Story

ரணில் தொடர்பில் பசில்: பகிரங்க மன்னிப்பும் கோரினார் !