சீன தூதுவரின் பயணமும் இந்திய மீனவர் கைதும் ?

-ரஞ்சன் அருண் பிரசாத்-

இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், அண்மையில் வடப் பகுதிக்கான பயணத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், அவரது பயணம் நிறைவு பெற்ற அடுத்த தருணத்திலேயே தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.இலங்கையின் வடக்கு மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ள போதிலும், இந்தியாவிற்கு அருகாமையில் உள்ள யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளுக்கு மாத்திரமே சீன தூதுவர் பயணம் மேற்கொண்டிருந்தார்.

வட மாகாணத்திலுள்ள ஏனைய மாவட்டங்களான வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி ஆகிய பகுதிகளுக்கு அவர் பயணம் மேற்கொள்ளாதிருந்தமை, பலரது மத்தியில் பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், இந்தியா தொடர்பிலேயே அங்கு அதிக கவனம் செலுத்தியிருந்தார்.தனது யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கான பயணத்தின் போது, பருத்தித்துறை பகுதிக்கு சென்ற சீன தூதுவர், ”இந்தியாவிற்கு எவ்வளவு தூரம்?” என அங்கு பாதுகாப்பு கடமைகளில் இருந்த இராணுவத்திடம் கேள்வி எழுப்பினார்.

”30 கிலோ மீட்டர்” என இராணுவ அதிகாரியொருவர் பதிலளித்த நிலையில், குறித்த பகுதியிலிருந்து ட்ரோன் கேமரா ஒன்றை பறக்கவிட்டு, அந்த பகுதியை கண்காணித்திருந்தமையையும் காணக்கூடியதாக இருந்தது. இதையடுத்து, யாழ்ப்பாணம் நூலகத்திற்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், யாழ்ப்பாணம் நூலகத்தின் ”இந்தியன் கார்னர்” என்ற பிரிவிற்கும் சென்று, அங்கும் விடயங்களை ஆராய்ந்திருந்தார்.அதனைத் தொடர்ந்து, மன்னார் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட சீன தூதுவர், மன்னார் வழியாக பாக்கு நீரிணைக்குள் கடற்படைக்கு சொந்தமான படகில் பயணம் மேற்கொண்டிருந்தார்.ராமர் பாலம் என்று அழைக்கப்படும் மணல் திட்டுக்களில் மூன்றாவது மணல் திட்டை சீன தூதுவர் உள்ளிட்ட குழுவினர் அப்போது பார்வையிட்டனர்.

வடக்கு மீனவர்களுக்கு  உதவி

வடக்கு மாகாணத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை, யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியிருந்தார்.அதனைத் தொடர்ந்து, வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலுள்ள மீனவ சமூகத்திற்கு சுமார் 20 மில்லியன் ரூபா பெறுமதியான வாழ்வாதார உதவிகளை இலங்கைக்கான சீன தூதுவர் வழங்கியிருந்ததாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.

மீனவர்களின் நல் அபிப்பிரயத்தை பெற்றுக்கொள்வதற்காகவே சீனா இவ்வாறான உதவித் திட்டங்களை வழங்கியிருந்ததாக தமிழன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான ஆர்.சிவராஜா தெரிவித்திருந்தார். ”இந்தியா தொல்லை. ஆனால் சீனா அப்படியில்லை. பொருளாதார ரீதியில் உதவிகளை வழங்குகின்றார்கள். இந்திய மீனவர்கள் எம்மை அடிக்கின்றார்கள். சீனா எமக்கு உதவி செய்கின்றது என்றே வட பகுதி மீனவர்கள் எண்ணுவார்கள். வட பகுதி மீனவர்களுக்கு இந்தியா இன்று வரை இவ்வாறான உதவிகளை செய்யவில்லை என வட பகுதி மீனவர்கள் எண்ணுவார்கள் என்பதற்காகவே சீனா உதவிகளை செய்கின்றது,” என அவர் கூறினார்.

தமிழக மீனவர்கள் அதிரடி கைது

யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கான பயணத்தை சீன தூதுவர் கடந்த 17ம் தேதி நிறைவு செய்த நிலையில், அடுத்த நாளான 18ம் தேதி இரவு யாழ் மாவட்டத்திற்கு சொந்தமான நெடுந்தீவு பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த 43 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதன்பின்னர், மன்னார் பகுதியில் 19ம் தேதி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்; இவ்வாறு 48 மணித்தியாலங்களில் இரு வேறு சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களுக்கு சொந்தமான 8 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இவ்வாறான நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு சீன தூதுவர் பயணம் மேற்கொண்டு, பயணத்தை நிறைவு செய்த பின்னரான நாட்களில், அதே பிரதேசங்களில் தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டமை தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.சீன தூதுவரின் பயணத்தில் இணைந்துக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்து

இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டமைக்கும், சீன தூதுவரின் வடக்கு விஜயத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிபிசி தமிழுக்;கு தெரிவித்தார்.இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு தொடர்ச்சியாக ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக்கொள்ளும் நோக்கிலேயே, சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர் எனவும் அவர் கூறினார்.

இதேவேளை, வட மாகாணத்தில் ஐந்து மாவட்டங்கள் காணப்படுகின்ற நிலையில், இந்தியாவிற்கு அருகிலுள்ள இரண்டு மாவட்டங்களை மாத்திரம் இலக்கு வைத்து, ஏன் சீன தூதுவர் பயணம் மேற்கொண்டார் என டக்ளஸ் தேவானந்தாவிடம் கேள்வி எழுப்பியபோது,”இது பலர் ஊகிக்கின்ற விடயமாக காணப்படுகின்றது. அதில் உண்மை இல்லை. இந்தியாவிற்கும், சீனாவிற்கும், பூகோள அரசியல் நலன்கள் இருக்கும் தானே?

அதற்கு நாங்கள் துணை போக போறது இல்லை. எங்களுக்கு தேவை, எங்கள் நாட்டிற்கும், மக்களுக்குமான உதவி. மற்றது பக்கத்தில் உள்ள நாடுகளுடன் நல்லெண்ணம். இந்தியா தானே எங்களுக்கு பக்கத்துல இருக்கின்றது. அதனால, இந்தியாவோட நல்லெண்ணம் வைத்திருப்பது தானே எங்கட விருப்பமா இருக்க முடியும்” என அவர் கூறினார்.

சீன தூதுவரின் கருத்து

”சீனாவும், இந்தியாவும் சிறந்த நண்பர்கள். சிறந்த பங்காளர்கள். சிறந்த அயலவர்கள். சீனாவும், இந்தியாவும், இலங்கையுடன் நட்பை பேண முடியும் என நான் நினைக்கின்றேன். இரு தரப்பினராலும் தமிழ் சமூகத்திற்கு அனுகூலங்கள் கிடைக்க முடியும்” என இலங்கைக்கான சீன தூதுவர் குய் சென் ஹாங், யாழ்ப்பாணம் விஜயத்தின் போது ஊடகவியலாளர்களிடம் தெரிவித்திருந்தார்.

சீன தூதுவரின் வடக்கு விஜயத்தின் பின்னரே, இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்ட போதிலும், அவரது வடக்கு விஜயத்திற்கும், இந்திய மீனவர்களின் கைதுக்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என இலங்கை அரசாங்கத்தை அங்கம் வகிக்கும் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான அங்கஜன் இராமநாதன் தெரிவித்திருக்கிறார்.

Previous Story

கொரோனா+அலைபேசி+ஆன்லைன்:பெற்றோர்+குழந்தைகள் எழுதப்படாத ஒப்பந்தம்?

Next Story

ஓமிக்ரான்: ஒரே நாளில் டபுள் -usa