‘சிலரின் நெருக்கடிக்கு நாங்கள் தீர்வல்ல’ 

“தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் 52 ஆண்டுகால அனுபவம் உள்ள அ.தி.மு.க உடன் பயணிப்பது குறித்து த.வெ.க தலைவர் விஜய் ஆராய்ந்து முடிவெடுக்கும் காலம் உருவாகும்” – அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ள இந்த வரிகள், பேசுபொருளாக மாறியுள்ளது.

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி

கூட்டணிக்கு அ.தி.மு.க அழைப்பதை த.வெ.க எப்படிப் பார்க்கிறது? கூட்டணி தொடர்பாக அ.தி.மு.க-வுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளதா?

மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. அதில் அ.தி.மு.கவின் தற்போதைய நிலை குறித்து த.வெ.க தலைவர் விஜய் பேசினார்.

அவர் பேசும்போது, “எம்.ஜி.ஆர் தொடங்கிய அ.தி.மு.கவை கட்டிக் காப்பது யார்? இன்று அந்தக் கட்சி எப்படி உள்ளது?” எனக் கேள்வி எழுப்பிய விஜய், “அப்பாவித் தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாமல் வேதனையில் உள்ளனர். 2026 சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப் போட வேண்டும் என அந்தத் தொண்டர்களுக்கு நன்றாகவே தெரியும்.” எனக் கூறினார்.

“பொருந்தா கூட்டணியாக பா.ஜ.க கூட்டணி உள்ளது. அவர்களுடன் தி.மு.க மறைமுக உறவு வைத்துக் கொண்டிருக்கிறது,” எனவும் த.வெ.க தலைவர் விமர்சித்தார்.

இருந்த போதிலும், செப்டெம்பர் 27-ஆம் தேதி கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்துக்குப் பிறகு இந்த நிலை மாறியது. த.வெ.கவுக்கு ஆதரவாகவும் தமிழ்நாடு அரசுக்கு எதிராகவும் அ.தி.மு.க நிர்வாகிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

‘விஜய் பேசத் தொடங்கிய உடன் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. செருப்பு வீசப்படுகிறது. போலீஸ் தடியடி நடத்துகிறது. இவற்றைப் பார்த்தால் சந்தேகம் இருப்பதாக சமூக ஊடகங்களில் பேசுகிறார்கள்’ என, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி

‘இதோ பாருங்கள்…கொடி பறக்கிறது’

தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அ.தி.மு.க பிரசாரக் கூட்டத்தில் த.வெ.க கொடியை சிலர் ஏந்தியபடி நின்றனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘இதோ பாருங்கள்…கொடி பறக்கிறது… பிள்ளையார் சுழியைப் போட்டுவிட்டார்கள்.” எனக் கூறினார்.

கொடி குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியது குறித்து த.வெ.க தரப்பில் இருந்து விளக்கம் எதுவும் வெளிவரவில்லை. கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியன்றும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கரூர் கூட்ட நெரிசல் மரணத்தை முன்வைத்து தி.மு.க-அ.தி.மு.க இடையே விவாதம் நடந்தது.

“தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கையை எடுத்திருந்தால் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம்” என, அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

தொடர்ந்து சட்டசபையில் பேசிய அவர், “கரூரில் விஜய் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பதைக் காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்குத் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பை வழங்கியிருக்க வேண்டும்.” எனவும் தெரிவித்தார்.

இவையெல்லாம், அ.தி.மு.க கூட்டணிக்குள் தமிழக வெற்றிக் கழகத்தைக் கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்கப்பட்டது. இந்தநிலையில், செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 21) கூட்டணி குறித்த பேச்சை அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளிப்படையாகவே முன்வைத்துள்ளார்.

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி

ஆர்.பி.உதயகுமார் பேசியது என்ன?

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூர் சம்பவத்தில் பல்வேறு தரப்பட்ட கோரிக்கைகளை ஆய்வு செய்து சி.பி.ஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விசாரணை எந்தளவில் செல்லும் என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.” எனக் கூறினார்.

“கரூர் விவகாரத்தில் உண்மை வெளியில் வர வேண்டும்” எனக் கூறிய ஆர்.பி.உதயகுமார், “சதிச்செயலில் ஈடுபட்டது யார் என்பதை அறிந்து கொள்ளவும் உயிரிழப்புக்கு யார் காரணம் என்பதை த.வெ.க தலைவரும் எதிர்க்கட்சியான நாங்களும் தெரிந்து கொள்வதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படும்,” எனத் தெரிவித்தார்.

“கரூர் சம்பவம் தொடர்பாக காவல்துறையும் முதலமைச்சரும் தெரிவித்த கருத்துகள் முரண்பாடாக உள்ளன,” எனவும் அவர் கூறினார்.

அ.தி.மு.க உடன் தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி வைப்பது குறித்து செய்தியாளர் ஒருவர் கேட்டபோது, “உங்கள் வாக்கு பொன்னாக மாறட்டும். தி.மு.கவை வீழ்த்தும் சக்திகள் ஒன்றிணைய வேண்டும் என்பது மக்களின் விருப்பமாகவும் தொண்டர்களின் விருப்பமாகவும் உள்ளது.” எனக் கூறினார்.

“தி.மு.க என்ற வலிமை வாய்ந்த கட்சியை வீழ்த்த வேண்டும் என்றால், அதை வீழ்த்துவதையே லட்சியமாகக் கொண்டு கட்சியைத் தொடங்கி உள்ள த.வெ.க தலைவர், இதுதொடர்பாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்,” எனக் கூறிய ஆர்.பி.உதயகுமார், “சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்தவர்கள் தான் மக்கள் பணியை செய்ய முடியும்.” எனத் தெரிவித்தார்.

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி
ஆர்.பி.உதயகுமார் (கோப்புப்படம்)

‘ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது’

“சரியான நேரத்தில் தவறான முடிவெடுத்தவர்கள் எல்லாம் மக்கள் செல்வாக்கை இழந்து அரசியலில் அடையாளம் இல்லாமல் போன வரலாற்றை த.வெ.க தலைவர் தெரிந்து கொள்ளலாம்” எனக் கூறிய ஆர்.பி.உதயகுமார், ஆந்திர அரசியல் நிலவரத்தை மேற்கோள் காட்டிப் பேசினார்.

“ஆந்திராவில் சிரஞ்சீவி தனிக்கட்சியைத் தொடங்கியபோது சரியான முடிவை எடுக்காததால் கட்சியைக் கலைத்துவிட்டார். இன்று பவன் கல்யாண் துணை முதலமைச்சராக பதவியேற்றதற்கு சரியான முடிவை எடுத்தது தான் காரணம்” எனக் கூறுகிறார், ஆர்.பி.உதயகுமார்.

தொடர்ந்து பேசிய அவர், “தொண்டர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு 52 ஆண்டுகால அனுபவம் உள்ள அ.தி.மு.க உடன் பயணிப்பது குறித்து ஆராய்ந்து அவர் முடிவெடுக்கும் காலம் உருவாகும்.” என்கிறார்.

“75 ஆண்டுகால கட்சியான தி.மு.க, கூட்டணி பலத்துடன் இருப்பதாக முதலமைச்சர் கூறுகிறார். கூட்டணி தான் பலம் என அவர் கூறுகிறார். மீண்டும் ஒருமுறை தி.மு.க ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழக வெற்றிக் கழகத்தை ஆண்டவன் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது.” எனவும் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.

‘சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தலைமையில் கூட்டணி அமையும்’ என, அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசி வரும் நிலையில், த.வெ.க-வுக்கு அ.தி.மு.க வைத்துள்ள வேண்டுகோள் அரசியல் ரீதியாக பேசுபொருளாக மாறியுள்ளது.

‘விஜய், எப்படி சமாளிக்கப் போகிறார்?’

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி
பத்திரிகையாளர் ஷ்யாம்.

“தி.மு.க கூட்டணியை எதிர்கொள்வதற்கான வலிமை, அ.தி.மு.க கூட்டணிக்கு இல்லை என்பதை அ.தி.மு.க உணர்வதாகவே இதைப் பார்க்க முடியும்” எனக் கருத்து தெரிவிக்கிறார், மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்.

“ஒருவரிடம் போதிய பலம் இருந்தால் துணைக்கு ஆட்களை அழைக்க வேண்டிய அவசியம் இல்லை” எனக் கூறிய அவர், “த.வெ.கவுக்கு எவ்வளவு வாக்குகள் உள்ளன என்பது இன்னும் நிரூபிக்கப்படவில்லை. அக்கட்சியில் விஜய் என்ற நபர் மட்டுமே முக்கிய முகமாக இருக்கிறார்.” என்கிறார்.

தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய ஷ்யாம், “நட்சத்திர அந்தஸ்தை தவிர அக்கட்சிக்கு வேறு எந்தச் செல்வாக்கும் இல்லை. அக்கட்சிக்கு அடிப்படைக் கட்டமைப்பு இல்லை என்பது கரூர் நெரிசல் மரணங்களுக்குப் பிந்தைய காட்சிகள் உணர்த்தியுள்ளன.” என்கிறார்.

கரூர் விவகாரத்தில் த.வெ.கவுக்கு சட்ட நெருக்கடிகள் அதிகரித்துள்ளதாகக் கூறும் ஷ்யாம், “மரணங்களுக்கு சதிக் கோட்பாட்டை அ.தி.மு.க முன் வைத்தது. அதைப் பின்பற்றியே விஜய் சென்றார். கரூர் விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்த அறுபது நாட்களுக்குள் குற்றப் பத்திரிகையை சி.பி.ஐ தாக்கல் செய்ய வேண்டும்.” எனக் கூறுகிறார்.

“குற்றப் பத்திரிகையில் யார் மீது குற்றம் சுமத்தப் போகிறார்கள் என்பது முக்கியம். இதன்பிறகு வரக் கூடிய சட்டப் பிரச்னையை விஜய் எப்படி சமாளிக்கப் போகிறார் எனத் தெரியவில்லை,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

த.வெ.கவை அ.தி.மு.க எதிர்பார்ப்பது ஏன்?

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி

“விஜயின் திரைக் கவர்ச்சியை தேர்தலுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு அ.தி.மு.க திட்டமிடுகிறது. ஆனால், சினிமாவில் இதுபோன்று எத்தனையோ விஷயங்களை பார்த்துவிட்டுத் தான் விஜய் வந்துள்ளார். அ.தி.மு.கவுக்கான பதிலை தேர்தல் நெருக்கத்தில் தான் அவரிடம் எதிர்பார்க்க முடியும்,” எனவும் ஷ்யாம் குறிப்பிட்டார்.

த.வெ.கவை தங்கள் பக்கம் யார் கொண்டு வரப் போகிறார்கள் என்பது தான் பிரதான போட்டியாக உள்ளதாகக் கூறுகிறார், மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணணன்.

“கரூர் சம்பவத்துக்குப் பிறகு மிகவும் குழப்பமான மனநிலையில் விஜய் இருக்கிறார். டி.டி.வி.தினகரன் உள்பட சிலரை ஒதுக்க வேண்டும் என்பதற்காக த.வெ.க கூட்டணி குறித்து அ.தி.மு.க பேச வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஆந்திர அரசியலில் துணை முதலமைச்சர் பதவியை பவன் கல்யாண் பெற்றதை த.வெ.க உடன் ஆர்.பி.உதயகுமார் ஒப்பிடுவது குறித்துப் பேசும் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம், “தான் எதிர்கொண்ட முதல் தேர்தலில் தனித்து தான் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி போட்டியிட்டது.” என்கிறார்.

“த.வெ.கவுக்கு துணை முதலமைச்சர் பதவியைத் தருவதற்கு அ.தி.மு.க தயாராக இருக்கிறது என்றால் ஆட்சியில் பங்கு கொடுப்பதற்கு தயாராக இருப்பதாகவே பொருள்படுகிறது. இது அ.தி.மு.கவின் அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானது,” எனக் கூறுகிறார், ஷ்யாம்.

‘தி.மு.கவுக்கு பாதிப்பு இல்லை’

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “சட்டப் பேரவைத் தேர்தலில் எங்கள் கூட்டணிக்கு பல கட்சிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. பலம் வாய்ந்த வெற்றிக் கூட்டணியை அமைப்போம். அ.தி.மு.க தனித்து ஆட்சியமைக்கும்” எனக் கூறினார்.

இதனை மேற்கோள்காட்டிப் பேசிய ஷ்யாம், “தனிப் பெரும்பான்மையுடன் அ.தி.மு.க வெற்றி பெறும் என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார். கூட்டணிக்குள் த.வெ.க வந்தால் இந்த முழக்கம் அடிபட்டுப் போகும்.” என்கிறார்.

“அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களால் தனித்தனியாக பிரசாரம் செய்ய முடியும். ஆனால், விஜய் வராவிட்டால் தவெக-வால் தனியாக பிரசாரம் செய்ய முடியாது. மழைக்காலம் வந்துவிட்டதால் தெருமுனைப் பிரசாரக் கூட்டத்தை த.வெ.க நடத்தவும் வாய்ப்புகள் இல்லை,” எனவும் அவர் குறிப்பிட்டார்.

“பா.ஜ.க பக்கம் த.வெ.க போவதற்கான வாய்ப்புகள் குறைவு” எனக் கூறும் ஷ்யாம், “பிகார் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால் இங்கும் அதேபோன்ற சூழலை உருவாக்கும் வேலைகள் தொடங்கப்படலாம். இதனால் தி.மு.கவுக்கு பெரிதாக எந்தப் பாதிப்பும் வரப் போவதில்லை,” என்கிறார்.

இதே கருத்தை முன்வைக்கும் மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன், “பா.ஜ.க என்ன முடிவை எடுக்கும் என யாருக்கும் தெரியாது. பிகார் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கவே வாய்ப்புகள் உள்ளன.” எனக் கூறுகிறார்.

“சட்டமன்றத் தேர்தலில், ‘விஜய் தனியாக நின்று சிறுபான்மை வாக்குகளையும் பட்டியல் சமூக வாக்குகளையும் பிரித்தால் போதும்’ என பா.ஜ.க நினைக்கிறது. கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதைவிடவும் பா.ஜ.க என்ன கணக்கில் உள்ளது என்பது முக்கியம்” எனவும் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

‘த.வெ.க வந்தால் வெற்றி என்ற நிலை இல்லை’ – அ.தி.மு.க

தவெக, அதிமுக கூட்டணி, விஜய், எடப்பாடி பழனிசாமி
அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளரான பாபு முருகவேல்

ஆனால், “கூட்டணிக்கு த.வெ.க வந்தால் தான் அ.தி.மு.க வெற்றி பெறும் என்ற நிலை இல்லை” எனக் கூறுகிறார் அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் இணைச் செயலாளரான பாபு முருகவேல்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” 2014 நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் தனித்துப் போட்டியிட்டு அ.தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது” என்கிறார்.

“தி.மு.கவை வீழ்த்த விரும்பும் கட்சிகள் ஓரணிக்குள் வரலாம் என, அ.தி.மு.க பொதுச்செயலாளர் கூறியுள்ளார். அந்தக் கூட்டணிக்கு அ.தி.மு.க தலைமை தாங்கும்” எனவும் பாபு முருகவேல் குறிப்பிட்டார்.

துணை முதலமைச்சர் பதவி ஒப்பீடு குறித்து விளக்கம் அளிக்கும் பாபு முருகவேல், “ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியை அகற்றும் புள்ளியில் சந்திரபாபு நாயுடுவும் பவன் கல்யாணும் இணைந்தனர். தி.மு.கவை வெளியேற்ற நினைப்பவர்கள் அ.தி.மு.க கூட்டணிக்கு வரலாம். தேர்தலுக்குப் பிறகு யாருக்கு என்ன பதவி என்பதை எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார்.” என்கிறார்.

உதயகுமாரின் கருத்து சரி தான் – பாஜக

ஆர்.பி உதயகுமாரின் கருத்தை வரவேற்று பேசிய பாஜகவின் மாநில துணை பொதுச் செயலாளர் நாராயணன் திருப்பதி, “திமுக என்றைக்குமே தனியாக நின்றதே இல்லை, கூட்டணியாக தான் உள்ளது. திமுக கூட்டணியை வீழ்த்த வேண்டுமென்றால் அதற்கு எதிராக பலமான கூட்டணி உருவாக வேண்டும் என நாங்கள் கூறி வருகிறோம்.

உதயகுமார் கூறியது சரி தான். திமுகவிற்கு வலு இருக்கிறதென்றால் தனியாக நிற்கட்டும். திமுக வலுவாக இருக்கிறது என்பதைப் போன்ற பிம்பத்தை உருவாக்கக்கூடாது. கூட்டணி இல்லாத அதிமுக பலவீனமானது என்றால், கூட்டணி இல்லாத திமுக அதைவிட பலவீனமானது.” எனத் தெரிவித்தார்.

‘சிலரின் நெருக்கடிக்கு நாங்கள் தீர்வல்ல’ – சி.டி.ஆர்.நிர்மல்குமார்

கூட்டணிக்கு அ.தி.மு.க அழைப்பு விடுத்துள்ளது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரிடம் பிபிசி தமிழ் பேசியது.

“கரூர் சம்பவத்தால் மிகுந்த வேதனையில் இருக்கிறோம். அங்கு எதிர்பார்க்காமல் 41 உயிர்கள் பறிபோயுள்ளன. அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,” எனக் கூறுகிறார்.

“அரசியல் ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் எவ்வளவு நெருக்கடிகள் வந்தாலும் அதனைச் சமாளிக்கவும் எதிர்கொள்ளவும் தயாராக இருக்கிறோம்.” எனவும் சி.டி.ஆர்.நிர்மல்குமார் தெரிவித்தார்.

கூட்டணிப் பேச்சு குறித்துப் பதிலளித்த அவர், “சிலர் தங்களின் நெருக்கடிக்கு எங்களைத் தீர்வாக பார்க்கிறார்கள். அதற்கு ஊகத்தின் அடிப்படையில் தான் பேச வேண்டும்” என்று மட்டும் பதில் அளித்தார்.

Previous Story

சீனா தொழிநுட்பம்! China’s New Project That Shocked the World

Next Story

மலேசியா - அழகும் கண்டிப்பும்! 😲 ஆசியாவின் அதிசய நாடு!