‘சிறுபான்மையின மத சுதந்திரத்தை அழிக்காதே’ கவனயீர்ப்பு போராட்டம்

-புத்தளம் நிருபர் ரஸ்மின்-

இலங்கையின் முஸ்லிம் தனியார் சட்டங்கள் தொடர்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நேற்று (20) புத்தளம் – கொழும்பு முகத்திடலில் இடம்பெற்றது.

புத்தளத்தில் உள்ள மகளிர் அமைப்புக்களின் பிரதிநிதிகள், பெண்கள், யுவதிகள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த கவனயீர்ப்பில் கலந்துகொண்டனர்.

தனியார் சட்டம் (  முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டம்) எமது அடிப்படை உரிமைஎனும் தொனிப்பொருளில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, “முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து தனியார் சட்டத்தால் ஆளப்பட வேண்டும்”, “சிறுபான்மையினரின் மத சுதந்திரத்தை அழிக்காதே”,முஸ்லிம்களின் திருமண சட்டம் அடிப்படை உரிமை” தனியார் சட்டத்தை நீக்குவது யாப்புக்கு முரண்பாடானது” இது போன்ற மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.

இலங்கையில் முஸ்லிம் தனியார் சட்டமானது மக்களின் நேசத்தை வென்ற தலைவர்களால் போராடிப்பெறப்பட்டதாகும் என ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்த சட்டங்களை பற்றியும் அவற்றை சட்டமாக்கிய தலைவர்கள் பற்றியும் இன்றும் உலகில் பேசிக்கொண்டிருக்கின்றார்கள்.

இச்சட்டங்களே இலங்கை பல மதங்களை கொண்ட மனிதர்கள் வாழும் பன்முக கலாச்சார நாடாக உலகில் பார்க்கப்படுகிறது.

இலங்கையில் இந்த சட்டத்தை முழுமையாக இல்லாமல் ஆக்க வேண்டும் என்று ஒரு தரப்பினரும், சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று இன்னொரு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இதுதொடர்பில் ஒருசில அரசசார்பற்ற அமைப்புக்கள் ஒன்றினைந்து, முஸ்லிம் தனியார் சட்டம் தொடர்பில் பிழையான கருத்துக்களை எடுத்துரைத்து அதனை முழுமையாக இல்லாமல் செய்ய வேண்டும் என்ற வகையில் ஜெனீவாவுக்கு அறிக்கை ஒன்றினை சமர்ப்பித்துள்ளனர்.

எனவே, முஸ்லிம் தனியார் சட்டத்தில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்பட வேண்டுமே தவிர, அதனை முழுமையாக இல்லாமல் செய்வதற்கு ஒருபோதும் அனுமதிக்க கூடாது என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டனர்.

இதனையடுத்து, சர்வதேச மனித உரிமை இயக்கங்கள் அமைப்பின் இலங்கைக்கான ஊடக ஒருங்கிணைப்பாளர் மஹ்ரூப் முஹம்மது ரிஸ்வியிடம் மகஜர் ஒன்றும் ஆர்ப்பாட்டக்காரர்களால் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Previous Story

அரசுக்கு சர்ச்சை ஏற்படுத்திய கம்மன்பில

Next Story

74,000 கோடி கடன் - மேலும் வழங்க வேண்டாம்: மத்திய வங்கி