சாண் ஏற முழம்    சறுக்கும் ஈரான் அணுக் கனவு!

-யூசுப் என் யூனுஸ்-

இந்த விவகாரத்தை பார்க்கும் முன்னர் ஈரான் வரலாறு பற்றி சற்றுப்பேச வேண்டி இருக்கின்றது. ஈரான் வரலாறு என்பது பாரசீகத்தின் வரலாறு என்றும் எடுத்துக் கொள்ள முடியும். பாரசீகம் உலகிற்குக் கற்றுக் கொடுத்த எத்தனையோ நாகரிகங்கள் இன்றும் பதிவிலும் வழக்கிலும் இருக்கின்றன. பிற்காலத்தில் மத்திய கிழக்கில் குறிப்பாக மன்னர் முகம்மது றோசா ஷா பகலவி

(37) வருட ஆட்சிக் காலத்தில் இந்த நாடு மத்திய கிழக்கின் குட்டி அமெரிக்கா என்ற நிலையில்தான் உலகத்தாரால் பார்க்கப் பட்டது. அங்கே மேற்கத்திய கலச்சாரப் பாரம்பரியங்கள் அப்போது கொடிகட்டிப் பறந்து கொண்டிருந்தது. இது இஸ்லாத்தை அடிப்படையாகக் கொண்ட நாட்டு மக்களிடத்தில் பெரும் கோபத்தை ஏற்படுத்தி இருந்தாலும் ஷா வின் இரும்புக் கரங்களின் முன்னால் குடிமக்களால் அன்று ஏதும் பண்ண முடிய வில்லை.

நாட்டில் ஆயத்துல்லாக்கள் அரசுக்கு எதிரக குரல் எழுப்பிய போது பல்லாயிரக் காணக்கானவர்கள் ஷா படைகளினால் அவ்வப்போது அன்று கொன்று குவிக்கப்பட்டிருந்தனர். இங்கு நாம் ஆயத்துல்லாக்கள் என்று சொல்வது அந்த நாட்டிலுள்ள மதக் குருமார்களேயாகும். அவர்களை அந்த நாட்டில் அப்படித்தான் அழைக்கின்றார்கள். இன்று அவர்களில் ஆதிக்கம்தான் ஈரானில் எல்லாத் துறைகளில் உச்சத்தி இருக்கின்றது. அவர்களின் மூத்த தலைவருக்கத்தான் அரசியலிலும் உச்ச அதாவது சுப்ரிம் பவர் என்ற அதிகாரம். அவரது விருப்பங்களுக்கு மாற்றமாக நாட்டில் எந்தத் தீர்மானங்களும் எடுக்க முடியாது. அதனைத் தான் ஈரானிய அரசியல் யாப்பும் இன்று சொல்லுகின்றது. இவர்களில் ஒருவர்தான் ஆயத்துல்லா கொமெய்னி என்பவர். ஷா காலத்தில் இவர் அரசுக்கு எதிரான பண்ணிய பரப்புரைகளுக்காக அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் டசன் கணக்கில் அரச படைகளினால் கொல்லப்பட்டார்கள்.

இந்தப் பின்னணியில்தான் நாம் மேற் சொன்ன ஆயத்துல்லா ரூகுல்லா மூசவி கொமெய்னி பிறப்பு 1902. பிரான்சுக்குத் தப்பி ஓட வேண்டி வந்தது. அங்கிருந்து அவர் தொடர்ந்து ஈரானில் இருந்த தனது ஆதரவலர்கள் மூலம் அரசுக்கு எதிராக போரட்டங்களை  வழிநடாத்திக் கொண்டிருந்தார். இதனால் நாட்டில் பெரும் கிளர்ச்சிகள் வெடித்தன. ஷாவின் படைகளினால் போராட்டக்காரர்களை அடக்க முடியவில்லை.

மக்கள் போராட்டத்தின் முன் தாக்குப் பிடிக்க முடியாத நிலையில் படையினர்கள் சாரி சாரியாக ஆயுதங்களுடன் வந்து கிளர்ச்சி காரர்களுடன் இணைந்து கொண்ட போது பதவியில் இருந்த ரீஸா ஷா நாட்டிலிருந்து அமெரிக்காவுக்குத் தப்பியோட வேண்டி வந்தது. 1979ல் புரட்சி வெற்றி பெற்றதும் பிரான்சில் இருந்த தமது ஆன்மீகத் தலைவர் நாடு வருவதைப் பார்க்க பல மில்லியன் மக்கள் விமான நிலையத்தை பல நாட்கள் முற்றுகையிட்டிருந்தனர். வயது முதிர்ந்த மனிதன் கோமெய்னி (77) ஹீரோவாக மீண்டும் ஈரானுக்கு வந்திறங்கிய காட்சிகள் இன்றும் உலக வரலாற்றுப் பதிவுகளில் மறக்க முடியாத காட்சிகளாக இருந்து வருகின்றன.

அன்று முதல் இன்னுவரை ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளாக அதிகாரத்தில் இருக்கின்றது அவரது அரசு. எத்தனையோ சதிகள் வன்முறைகளைப் பாவித்து இந்த இஸ்லாமிய அரசை பதவியில் இறக்க அமெரிக்க-இஸ்ரேல் தன்னால் முடியுமான அனைத்தும் செய்து பார்த்த போதும் அவை ஏதும் வெற்றி பெறவில்லை. ஒரு முறை நாடாளுமன்றமே குண்டு தாக்குதலுக்கு இலக்கானது. நூற்றுக் கணக்கான உறுப்பினர்கள் அதில் மடிந்தார்கள்.

ஷா காலத்தில் ஈரான் இஸ்ரேலின் மிகப் பெரிய நட்பு நாடு. இன்று அந்த நிலை தலை கீழாக மாறி இருக்கின்றது. பிராந்தியத்தில் ஈரான் மிகப் பெரிய இராணுவ வலமை மிக்க நாடாக தன்னை வளர்த்துக் கொண்டிருக்கின்றது. உலக தரவரிசையில் அது பன்னிரெண்டாவது இடத்துக்கு முன்னேறி இருக்கின்றது. மேலும் தனது தேவைகளுக்குத் வேண்டி நவீன ஆயுதங்களைக் கூட அவர்களே சொந்தமாக உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களது ஆயுதங்கள் நட்பு நாடுகளுக்கும் அவர்களுக்கு ஆதரவான கிளர்ச்சிக் குழுக்களுக்கும் வழங்கப்பட்டு வருகின்றது.  இவர்களைப் பலயீனப் படுத்துவதற்காக அமெரிக்க கடுமையான பொருளாதார தடைகளை விதித்தாலும் அதற்கு முகம் கொடுத்து வருகின்றது ஈரான்.

இப்படியாக தன்னை சவால்களுக்கு மத்தியில் வளர்த்துக் கொண்டிருக்கும் ஈரானின் மிகப் பெரிய கனவு அணு குண்டாக இருக்கின்றது. ஆனால் அவர்கள் அணு குண்டுகளைத் தயாரிப்பது தனது கொள்கைக்கு முறனானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்காவே நாம் இது விடயத்தில் இறங்கி இருக்கின்றோம் என்று ஈரான் இன்றுவரை சொல்லிக் கொண்டிருக்கின்றது. அதனை மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்க-இஸ்ரேல் நம்பத் தயாராக இல்லை. ஆனாலும் அது அணுச் செரிவூட்டல்களைத் தொடர்ச்சியாக அதிகரித்து வந்திருக்கின்றது என்பதுதான் ஆயுதம் தொடர்பான நிபுணர்களின் பொதுவான கருத்தாக இருந்து வருகின்றது. அதிகமாக அணுச் செரிவூட்டல்களைச் செய்கின்ற போது அது சுலபமாக அணுகுண்டு தயாரிக்கின்ற இலக்கை எட்டி விடும் என்பதுதான் யதார்த்த நிலை.

ஈரான் அணு குண்டை தயாரித்து விட்டால் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் இருப்பு கேள்விக்குறியாவதுடன் அமெரிக்காவுக்கு சர்வதேச ரீதியில் இது பெரும் பின்னடையவாகவும் அமைந்து விடும்.  எனவே இந்த அணு குண்டு தயாரிப்பில் அல்லது அணுச் செரிவூட்டலுக்கு எதிராக முடியுமான அனைத்துத் தடைகளையும் அமெரிக்காவும் இஸ்ரோலும் செய்து கொண்டிருக்கின்றது. ட்ரம்ப் காலத்தில் ஈரானுக்கு எதிரான ஒரு போரைத் துவங்கி அதன் முழுகொழும்பை முறித்துப் போட மொசாட் சதிகளைச் செய்தாலும் அமெரிக்க பாதுகாப்பு வட்டாரங்கள் அப்படி ஒரு போரைத் துவங்கினால் அது பெரும் அழிவுக்கு வழிவகுப்பதுடன் பொருளாதார ரீதியில் அமெரிக்காவுக்குப் பாரிய பின்டைவை கொண்டு வரும்.

இதனைப் பயன்படுத்தி சீனா, ரஷ்யா இந்திய போன்ற நாடுகள் அமெரிக்காவை விட எவ்வளவோ தூரம் முன்னுக்குச் சென்று விடும் என்பதை அமெரிக்க நிருவாகத்தில் உயர் மடத்தில் இருந்தவர்கள் தெரிந்து வைத்திருந்ததால் அந்தப் போரை ட்ரம்பால் முன்னெடுக்க முடியாது போனது. இது இஸ்ரேலுக்கு கவலையான ஒரு செய்தியாக அன்று இருந்தது. மேலும் ஈரானில் ஆட்சிக் கவிழப்பு முயற்ச்சிக்காக பல ரில்லியன் டொலர்களைச் செலவு செய்தாலும் அந்த விடயத்திலும் ஈரானின் எதிரிகளுக்கு நல்ல செய்திகள் கிடைக்கவில்லை. அந்த முயற்ச்சிகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதற்கு சியோனிஷ ஊடகங்கள் கடினமாக உழைத்துக் கொண்டிருக்கின்றன.

ஈரானில் இஸ்லாமிய அரசு உருவான போது அதற்கு எதிராக செயல்பட்டவர்கள் பெரும் தொகையானவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினார்கள். இன்னும் பலர் அரசியல் காரணங்களுக்காக ஈரானில் இருக்கின்ற அரசாங்கத்தக்கு எதிராக வெளி நாடுகளில் இயங்கி வருகின்றார்கள். அதே போன்று மத்திய கிழக்கிலுள்ள சவுதி அரேபிய போன்ற நாடுகள் பிராந்திய வல்லாதிக்ம் தொடர்பான அச்சத்தில் இருப்பதால் அவர்களும் ஈரானுக்கு எதிராக சியோனிச கூட்டுடன் இணைந்து செயலாற்றுகின்ற ஒரு நிலை தற்போது காணப்படுகின்றது. இதனால்தான் இஸ்ரேலுடன் பகைமை பாராட்டிக் கொண்டிருந்த பல அரபு நாடுகள் இன்று  நல்லுறவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

இதற்கு சுன்னி-ஷீயா பேதமும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. அன்று இஸ்ரேலை தமது மிகப் பெரிய எதிரியாகப் பார்த்தவர்கள் இன்று ஈரானை அந்த இடத்தில் வைத்துப் பார்க்கின்றார்கள். இதனால்தான் இன்று அந்தப் பிராந்தியத்தில் இஸ்ரேல் நட்பு நாடுகள் என்று பல அரபு நாடுகள் இருக்கின்றன. இதனால் பலஸ்தீனப் பிரச்சனை அங்கே வலுவிழந்த நிலையில் இருக்கின்றது என்றுதான் சொல்ல வேண்டும். என்றாலும் ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ் போன்ற அமைப்புக்கள் ஈரானின் ஆயுதங்களுடன் களத்தில் இருக்கின்றன. அரபு நாடுகள் அவர்களைக் கைவிட்டு விட்டது என்ற நிலை. இது இஸ்ரேலுக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி.

அதே போன்று பிராந்தியத்தில் மற்றுமொறு வலிமையான இராணுவத்தை வைத்திருக்கின்ற எகிப்துக் கூட இன்று இஸ்ரேலுடன் நெருக்க உறவில் இருக்கின்றது. இஸ்ரேலுடன் இராஜிக உறவுகளைத் தூண்டித்திருந்த பல அரபு நாடுகள் இன்று அதனுடன் நெருக்கமான இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நமக்குத் தெரிந்த தகவல்களின் படி பல மத்திய கிழக்கு நாடுகள் இஸ்ரேலுடன் இரகசிய பாதுகாப்பு உடன்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஏற்கொனவே நூற்றுக்கானக்கான இஸ்ரேல் முகவர்கள் இன்று அங்கு களப் பணிகளில் இறங்கி இருக்கின்றன. இது மக்கள் மத்தியில் ஆரோக்கியமாகப் பார்க்கப்படா விட்டாலும் ஆட்சியாளர்கள் தங்களது அரசியல் இருப்புக்காக இப்படி நடந்து கொண்டு வருகின்றார்கள்.

சில தினங்களுக்கு முன்னர் தப்லிஹ் என்ற பிரச்சார இயக்கத்தை சவுதி தடை செய்ததும் அதனை பயங்கரவாத இயக்கமாக மக்கள் மத்தியில் பரப்புரைகளைப் பண்ணுவதும் இந்தப் பின்னணியில்தான். சவுதியில் இளவரசர் சல்மான்தான் இன்று உத்தியோகப் பற்றற்ற வகையில் அதிகாரத்தில் இருக்கின்றார். அவருக்கு இன்று இஸ்ரேல் மிகப் பெரிய நண்பர். அரசை விமர்சித்த நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகையாளர் ஜமாயல் கசோக்கி துருக்கியிலுள்ள சவுதித் தூதுவராலயத்தில் வைத்து துண்டு துண்டாக உயிருடன் அறுக்கப்பட்டதும் இந்தப் பின்னணியில்தான்.

ஈரானுடன் மோதி அழிவுகளை ஏற்படுத்திக் கொள்வதை விட ஈரானுக்குள்லே சதிகளைச் செய்து அங்கு பெரிய அழிவுகளைச் ஏற்படுத்துவதில் அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பெரு வெற்றிகளை அடைந்திருக்கின்றது. ஈரான் அணுச் செரிவூட்டல்கள் மீதான தாக்குதல்கள் மற்றும், பெரும் எண்ணிக்கையான அணு விஞ்ஞானிகளின் கொலைகள் எல்லாம் உள்ளுர் ஆட்களைப் பாவித்து இஸ்ரோல் நடாத்திய வெற்றிகரமான தாக்குதல்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கள் கிடையாது. தற்போதய அமெரிக்கா அதிபரின் மத்திய கிழக்கு சர்வதேச கொள்கை காரணமாக இஸ்ரேல் மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதல்களையே தற்போது ஈரானுக்குள் ஊடுருவி நடத்தி வருகின்றது.

இதனைவிடப் பெரிய தாக்குதல்களை ஈரானுக்குள்லேயே  நடத்துகின்ற வல்மை இன்னும் இஸ்ரேலுக்கு இருக்கின்றது என்று நாங்கள் நம்புகின்றோம்.  ஈரானுக்கு எதிராக செயலாற்றுகின்ற இஸ்ரேல் ஏஜெண்டுகளின் பல பிரிவினர்கள் இருக்கின்றார்கள். மொசாட் நேரடி மேற்கொள்ளும்  நடவடிக்கைகள், மொசட் கூலிப்படைகளை வைத்து நடத்துக்கின்ற தாக்குதல்கள் மற்றும் நடவடிக்கைகள். சிஐஏயும்-மொசாடும் இணைந்து நடத்துக்கின்ற நடவடிக்கைகள். வெளிநாட்டில் இயங்குகின்ற ஈரான் பிரசைகளையே வைத்து செயல்படும் பிரிவுகள் அரபு நாடுகளில் இயங்குகின்ற குழுக்கள் என்று பல பிரிவுகள் இதில் அடங்குகின்றன.

அண்மையில் நடத்த அணு செரிவூட்டல் மையங்கள் மீதான தாக்குதல்களை மேற் கொண்டவர்களுக்கே இதன் பின்னால் இருந்து தம்மை இயக்கியதே மொசாட் என்பது காலங் கடந்துதான் தெரிய வந்திருக்கின்றது. மேலும் ஈரானின் பெருளாதார மற்றும் ஆயுத உற்பத்தி நிலையங்களில் பணிபுரிகின்ற பலர் பணத்துக்காக இப்படியான தாக்குதல்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதனையும் ஈரான் கண்டறிந்துள்ளது. ஈரான் அணு குண்டின் தந்தை என்று வர்ணிக்கப்படட்ட மொஹ்சென் பக்ரிசாதே கொலை கூட இப்படிப் பட்ட ஒன்றாகத்தான் இருந்தது. மேலும் செல்வாக்கான இராணுத் தளபதி கஷிம் சுலைமானி படுகொலைக்கு ட்ரம்ப் நிருவாகம் பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும் அது இஸ்ரேல் நலன்களுக்காக மேற் கொள்ளப்பட்ட ஒரு பாதுகாப்பு ஏற்பாடுதான். என்னதான் ஈரான் அணுச் செரிவூட்டல் மையங்களை பாதுகாப்பாக வைத்திருக்க முயன்றாலும் மொசட் அதற்குள் சுலபமாக ஊடூருவி விடுகின்றது.

ஆனால் ஈரானும் விட்ட பாடில்லை அது இன்று குறுகிய காலத்தக்குள் அணு குண்டை தயாரிக்கின்ற எல்லைக்குள் வந்து விட்டது. இன்று உலகில் அணு ஆயுதங்களை தயாரிக்கின்ற நாடுகளின் பட்டியலில் ஈரான் பத்தாவது இடத்துக்கு முன்னேறி இருக்கின்றது. சீனா ரஷ்யா இந்திய என்பவற்றின் நிலைப்பாடுகள் இந்த விவகாரத்தில் ஈரானுக்கு வாய்பாக இருக்கின்றது. பைடனின் பெரிய கனவு பிராந்திய ரீதியில் அமெரிக்காவின் வல்லாதிக்கத்தை நிலை நாட்டுவதை விட என்றும் ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை விட அமெரிக்காவை தொடர்ந்து முன்னணியில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான் அவரது எதிர்பார்ப்பாக இருக்கின்றது. அதற்குக் காரணம் சீனா இன்று அதற்குப் பெரிய சவால். ரஷ்யாவையும் புட்டின் தூக்கி விட்டிருக்கின்றார். இன்று ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நல்ல உறவு. அடுத்து செல்வாக்கான இந்தியா கூட முழுமையாக அமெரிக்க பக்கம் சாயத் தயாராக இல்லை.

ஈரான் அணு விவகாரப் பேச்சு வார்த்தையில் இருந்து ட்ரம்ப் தன்னிச்சையாக வெளியேறி ஈரான் மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தது. இதன் மூலம் ஈரான் அணுச் செரிவூட்டல் கட்டுப்பாட்டில் இருந்து தானும் விலகி விதிக்ப்பட்ட தடையையும் மீறி எத்தனையோ படி அணுச் செரிவூட்டல் விவகாரத்தில் முன்னுக்குப் போய் விட்டது. ஈரான் தனது இலக்கை நோக்கி விரைவாகப் பயணிக்கின்றது. காலம் மிகவும் குறைந்த இடைவெளியில் இருக்கின்றது. அது அணு ஆயுதத் தயாரிப்பில் தொன்னுறு சதவீதம் முன்னேறி விட்டது. இன்னும் காலம் கடத்துவதையே அவர்கள் விரும்புகின்றார்கள்.

இதனால் தன் மீது விதிக்கபட்ட பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகின்றது ஈரான். அமெரிக்காவோ புதிய விதிகள் பற்றியே முதலில் பேச வேண்டும் என்று எதிர் வாதம் புரிகின்றது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைக் காரணம் காட்டி ஏற்கெனவே இணக்கப்பட்ட விதிகள் பல வற்றை ஈரான் மீறிச் சென்று விட்டது.

தற்போது ஈரானில் பதவியில் இருக்கின்ற இப்ராஹீம் ரயீசி ஒரு கடும் போக்காளர் அவர் விட்டுக் கொடுக்க வேண்டியது ஒப்பந்தத்தை மீறியவர்கலே அல்லாமல் நாமல்ல என்று வாதம் புரிகின்றார். இதற்கிடையில் இஸ்ரேல் ஈரானில் இருந்து களவாடப்பட்ட அணுச் செரிவூட்டல் தொடர்புடைய புதிய ஆவனங்களுடன் அமெரிக்க நிருவாகத்தை தெளிவூட்டி அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பாக இந்த நாட்களில் ஆராய்ந்து கொண்டிருக்கின்றது.

பைடனின் ஈரானுக்கான சிறப்புத் தூதுவர் ராபர்ட் மால்லே ஈரான் ஒப்பந்தத்துக்குள் திரும்புவதற்கான அத்தனை விட்டுக் கொடுப்புக்களுக்கும் அமெரிக்கா தயாராக இருக்கின்றது என்று ஒரு முறை சொல்லி இருந்தார். அதே நேரம் பேச்சுவார்த்தைக்கான கதவுகள் என்றும் திறந்து வைத்திருக்க நாம் தயாராக இல்லை என்றும் அவர் ஈரானை எச்சரித்தும் இருந்தார்.

அமெரிக்க அரச செயலாளர் ஈரான் நல்லெண்ணத்துடன் பேச்சுவார்த்தை மேசைக்கு வந்து தனது அணுசக்தி திட்டத்தை பெட்டியில் போட்டுப் பூட்டி வைக்க வேண்டும். அல்லது அதற்கு மாற்று ஏற்பாடுகளும் தங்களிடம் இருப்பதாக ஒரு ஊடகச் சந்திப்பில் சொல்லி இருந்தார். ஈரான் பாதுகாப்புக் கருதி நூற்றுக் கணக்கான இடங்களில் அணுச் தற்போது அணுச் செரிவூட்டல்களை மேற்கொண்டு வருகின்றது. அனுமதிக்கப் பட்டதை விட எத்தனையோ மடங்கு யுரேணியம் தற்போது ஈரான் வசம் இருக்கின்றது. அது தனது இலக்கை எட்ட ஒரு சிறு தொழிநுட்பப் படி மட்டுமே இன்னும் எஞ்சி இருக்கின்றது என்றும் கருதப்படுகின்றது.

அணு குண்டு தயாரிப்புக்குத் தேவையான செழுமையூட்டப்பட்ட யுரேனியம், உலோகம் என்பவற்றை தயாரிக்கும் பணிகளை ஏற்கெனவே ஈhரன் துவக்கி இருக்கின்றது. சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் ஆய்வாளர்கள் ஈரானிய அணுசக்தி மையங்களைப் பார்வையிடுவதற்கான அனுமதியையும் பெரும்பாலும் ஈரான் கட்டுப்படுத்தி விட்டது. ஈரான் அணு பேச்சு வார்த்தை விவகதாரத்தில் பின்னணியை உணர்வுபூர்வமாக அவதானிக்கின்ற போது  அது நல்லவிதமாக  இல்லை என்று குறிப்பிடுகின்றார் அலசல் ஜேம்ஸ் லாண்டேல் என்ற செய்தியாளர்.

ஈரான் ஒரு நல்ல முடிவுக்கு வராவிட்டால் இஸ்ரேல் இராணுவத் தாக்குதலையோ அல்லது சைபர் தாக்குதலையோ நடத்த அமெரிக்க மறைமுக ஒத்துழைப்பை வழங்க முடியும் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது. ஆனால் இவை இரண்டுக்கும் மாற்றமான ஒரு வழியில்தான் இஸ்ரோல் இந்த விவகாரத்தைக் கையாளும் என்று நாம் நம்புகின்றோம்.

ஈரான் ஜனாதிபதி இப்ராஹீம் ரயீசி நிலைப்பாடு இன்னும் புதிராக இருப்பதாக நம்பப் படுகின்றது. அவர் காலத்தை கடத்தி கதையை முடிக்கப் பார்க்கின்றாரா என்னவோ தெரியாது. எனவே ஈரான் அணு விவகாரம் பனி மூட்டல்களுக்குள் சிக்கி இருப்பதாகத்தான் தெரிகின்றது இதனால் என்ன நடக்கின்ற என்பது தெளிவில்லாம் இருக்கின்றது.

இதற்கிடையில் இந்த அணு விகாரத்தில் இன்னுமொரு புதிய கதை பேசப்பட்டு வருகின்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கின்ற வட கொரியா ஈரான் போன்ற நாடுகளுக்கு பெரும் தொகைப் பணப் பறிமாற்றலுக்காக அணு குண்டுகளை விற்பனை செய்யும் அபாயமும் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. இது அணு குண்டு வரலாறு பற்றிய ஒரு புதிய அத்தியாயமாக அமையவும் இடமிருக்கின்றது என்று கருத முடியும். மத்திய கிழக்கிலுள்ள பணக்கார நாடுகள் சந்தையில் பொருட்களை வாங்குவது போல் ஒரு நிலை வந்தால் என்ன ஆவது.? குரங்கின் கையில் கொடுக்கப்பட்ட பூமாலை நிலைதான் இது. ஆனால் ஈரான் சுயமாக அணுகுண்டு தயாரிப்பதில்தான் முனைப்புடன் இருக்கின்றது என்பது வேறு விடயம். இது அதனுடைய கௌரப் பிரச்சனையாகவும் இருக்கின்றது. கடைசியல் ஈரான் இலக்கை எட்டிப் பிடிக்குமா இஸ்ரோல் அதனைத் தட்டி விடுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

-நன்றி: ஞாயிறு தினக்குரல்.

Previous Story

பிரேசில் காட்டுத் தீ:1.7 கோடி உயிரினங்கள் பலி

Next Story

ஈஸ்டர் தாக்குதல்:ரிஷாட் எதிராக ஆதாரங்கள் இல்லை