சவுதி 10 வருடத்தில் முதல் உபரி நிதி பட்ஜெட்

FILE PHOTO: General view in Riyadh, Saudi Arabia, June 21 2020. REUTERS/Ahmed Yosri/File Photo

கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள் கடந்த 10 வருடத்தில் அதிகப்படியான நிதியியல் பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். ஆம், OPEC நாடுகளின் முக்கிய வர்த்தகப் பொருளாக இருக்கும் கச்சா எண்ணெய் விலை 110 டாலரில் இருந்து 45 டாலர் வரையில் குறைந்த காரணத்தால் அதிகளவிலான வருமானத்தை இழந்தது.மேலும் OPEC நாடுகளில் ஆடம்பர வாழ்க்கை முறை மற்றும் அதிகப்படியான செலவு செய்யும் பழக்கம் அரசுகளுக்கு இருக்கும் காரணத்தால் கடுமையான நிதி நெருக்கடி உருவானது. ஆனால் தற்போது நிலைமை மாறியுள்ளது…

சவுதி அரேபியா

OPEC நாடுகளில் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி நாடான சவுதி அரேபியா நிர்வாகத்திலும், வர்த்தகத்திலும் பல மாற்றங்களைக் கொண்டு வந்தது. அதில் முக்கியமாக ஆடம்பர மற்றும் வீண் செலவுகளைப் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்ற முடிவைக் கொண்டு வந்தது.

கச்சா எண்ணெய் தேவை மற்றும் உற்பத்தி

இந்த முடிவுக்கு ஏற்றார் போல் கொரோனாவுக்குப் பின்பு கச்சா எண்ணெய் தேவை மற்றும் உற்பத்தியில் பல மாற்றங்கள் ஏற்பட்ட காரணத்தால் இதன் விலை பெரிய அளவில் அதிகரித்தது. இதனால் சவுதி அரேபியாவின் வருவாய் பெரிய அளவில் அதிகரித்தது, இதன் வாயிலாக 10 ஆண்டுகளில் முதல் முறையாகச் சவுதி உபரி பட்ஜெட்-ஐ இந்த வருடம் தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிதி பற்றாக்குறை அளவு

இந்த வருடம் சவுதி அரேபியாவின் நிதி பற்றாக்குறை அளவு அந்நாட்டு ஜிடிபி-யில் 2.7 சதவீதம் இருக்கும் எனக் கணிக்கப்பட்டு இருந்தாலும், சவுதி அரசு 90 பில்லியன் ரியால் அதாவது 23.99 பில்லியன் டாலர் தொகை கிட்டதட்ட ஜிடிபி-யில் 2.5 சதவீதம் உபரியாக வைத்திருக்கும் எனக் கணித்துள்ளது.

முகமது பின் சல்மான்

கச்சா எண்ணெய் விலை 2014ல் சரிய துவங்கிய பின்பு சவுதி அரேபியா கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டது, இந்த நிலையைச் சமாளிக்கத் தான் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு செலவுகளையும் ஆடம்பரங்களையும் பெரிய அளவில் குறைக்க வேண்டும் என்று திட்டமிட்டது மட்டும் அல்லாமல் பல புதிய வர்த்தகத்திற்கும் வழிவகைச் செய்துள்ளது.

955 பில்லியன் ரியால் செலவின திட்டம்

சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் தலைமையிலான அரசு அடுத்த வருடம் 955 பில்லியன் ரியால் அளவிலான செலவுகளைச் செய்யத் திட்டமிட்டு வருகிறது. இது கடந்த வருடத்தை விடவும் 6 சதவீதம் குறைவான செலவின திட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ராணுவத்திற்குச் செலவு செய்யும் தொகையும் 2021 அளவில் இருந்து 10 சதவீதம் குறைவான தொகையைச் செலவிடத் திட்டமிட்டு உள்ளது.

1.045 டிரில்லியன் ரியால் டார்கெட்

நடப்பு ஆண்டில் சவுதி அரேபியாவின் வருவாய் 849 பில்லியன் ரியால் இருந்து 930 பில்லியன் ரியால் ஆக உயர்ந்து 10 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. இந்த 10 சதவீத வருவாய் உயர்வுக்கு மிக முக்கியக் காரணம் கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்ட உயர்வு தான். அடுத்த வருடம் 1.045 டிரில்லியன் ரியால் அளவிலான வருமானத்தை பெறும் என எதிர்பார்க்கிறது.

Previous Story

சமூகத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டாம் - இம்ரான் Mp 

Next Story

இந்தோனேசியா நிலநடுக்கம்: மக்கள் அலறியடித்தபடி  ஓட்டம்