சர்ஃபராஸ்VSபிராட்மேன் 

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சர்ஃபராஸ் கான் பேட்டிங் செய்யும்போது, முடிந்தவரை அதிக ரன்கள் எடுப்பதே அவரது எண்ணமாக இருக்கும்.

இந்த 24 வயதான இளம் பேட்ஸ்மேன், முதல் இன்னிங்ஸில் 134 ரன்கள் எடுத்திருந்தார். இதன் காரணமாக மும்பை 374 ரன்கள் என்ற ஓரளவு நல்ல ஸ்கோரை எட்டியது. இருப்பினும், மத்திய பிரதேசத்தின் பேட்ஸ்மேன்கள் முதல் இன்னிங்ஸில் இந்த ஸ்கோர் போதாது என்பதை நிரூபித்தார்கள்.

ஆனால், சீசன் முழுவதும் சர்ஃபராஸ் கானின் ஆட்டம் பேசப்படுவதைப் பார்க்க முடிந்தது. ஃபர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில் அவரது பேட்டிங் சராசரி 82.83 ரன்கள். இதை விட சிறந்த சாதனையை கிரிக்கெட் உலகில் படைத்துள்ள ஒரே ஒரு பேட்ஸ்மேன், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர் டான் பிராட்மேன்.

ஃபர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில் பிராட்மேனின் சராசரி 95.14 ரன்கள். ஃபர்ஸ்ட் க்ளாஸ் கிரிக்கெட்டில் 2000 ரன்களுக்கு மேல் எடுத்த பேட்ஸ்மேன்களில் பிராட்மேனுக்கு அடுத்தபடியாக சர்ஃபராஸ் கான் இருக்கிறார். தொழில்முறை வாழ்க்கையின் ஆரம்ப நாட்களில் இத்தகைய சாதனையை எட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல.

இந்த ரஞ்சி சீசனிலும் சர்ஃபராஸ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் காலிறுதியில் உத்தரகாண்ட் அணிக்கு எதிராக 153 ரன்கள் எடுத்தார். இதன் போது அவர் அறிமுக வீரர் சுவேத் பார்கருடன் நான்காவது விக்கெட்டுக்கு 267 ரன்களின் பார்ட்னர்ஷிப்பை பகிர்ந்து கொண்டார்.

சீசனில் அதிக ரன் எடுத்தவர்

அறிமுக ஆட்டத்திலேயே சுவேத் இரட்டை சதம் அடித்துள்ளார். இந்த சீசனில் அதிகபட்சமாக 6 போட்டிகளில் 937 ரன்கள் குவித்தவர் சர்ஃபராஸ்.

கடந்த சீசனிலும் அவர் 928 ரன்களை குவித்திருந்தார் என்பதை இங்கு நினைவில் கொள்ள வேண்டும். இரண்டு சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் எடுத்த சாதனையை இதுவரை ரஞ்சி வரலாற்றில் இரண்டு பேட்ஸ்மேன்கள் மட்டுமே படைத்துள்ளனர். டெல்லி பேட்ஸ்மேன் அஜய் ஷர்மா 1991-92ல் 933 ரன்களும், 1996-97ல் 1033 ரன்களும், மும்பை முன்னாள் கேப்டன் வாசிம் ஜாஃபர் 2008-09ல் 1260 ரன்களும், 2018-19ல் 1037 ரன்களும் எடுத்துள்ளனர்.

சர்ஃபராஸ் கான் தொடர்ந்து இரண்டு சீசன்களில் அற்புதமாக பேட்டிங் செய்த விதம் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. முந்தைய சீசனில், அவர் எடுத்த 928 ரன்கள் அவரது வலுவான மறுபிரவேசமாக பார்க்கப்பட்டது. ஏனெனில் சர்ஃபராஸ் ஒரு சீசனில் மும்பை அணியில் இருந்து விலகி இருக்க வேண்டியிருந்தது.

சர்ஃபராஸ் கான் இன்று தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். அதன் பெருமை அவருடைய தந்தை நௌஷாத் கானுக்கே சேரும். அவர் மகனின் பயிற்சியாளராகவும் இருக்கிறார். அவர் சர்ஃபராஸ் கானை, 400 பந்துகள் அதாவது 65 ஓவர்களுக்கு மேல் தினமும் வலைகளில் பேட் செய்ய வைக்கிறார். சர்ஃபராஸ் இப்போது மிகவும் ஒழுக்கமான, சிறந்த மற்றும் நம்பகமான பேட்ஸ்மேனாக உருவெடுத்ததற்கு இதுவே காரணம்.

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான இறுதிப் போட்டியின் முதல் இன்னிங்ஸில், தரவரிசையில் கீழே உள்ள பேட்ஸ்மேன்களுடன் இணைந்து அவர் அதிக ரன்களை எடுத்தார். அவர் பவுண்டரிகளை அடிக்க, பலவீனமான பந்துவீச்சுக்காக காத்திருந்தார். மேலும் மும்பையின் முன்னணி பேட்ஸ்மேன்கள் பெவிலியன் திரும்பிய பிறகும் தொடர்ந்து ஸ்கோர் செய்தார்.

சர்ஃபராஸ் கான்

இளம் வயதில் சாதனை

பள்ளி பருவத்தில் விளையாடிய கிரிக்கெட் முதலே, விளையாட்டு பிரியர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார் சர்ஃபராஸ் கான். அவரது வலுவான இன்னிங்ஸ் அப்போதும் விவாதிக்கப்பட்டது.

சிறுவயதிலிருந்தே, தனது தந்தை நௌஷாத்துடன், மும்பையில் உள்ள ஒவ்வொரு மைதானத்திற்கும் சென்று ஹோம் மேட்ச்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளைத் தேடினார். அதுமட்டுமின்றி, அவர் தனது வயதை விட இருமடங்கு அதிகமான பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் விளாசுவார்.

12 வயதில், ஹாரிஸ் ஷீல்டு இன்டர் ஸ்கூல் போட்டியில், சர்ஃபராஸ் 439 ரன்கள் எடுத்தார், மும்பை கிரிக்கெட் உலகில், இந்த இன்னிங்ஸை நினைவில் கொள்ளாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

இதன்பிறகு, 16 வயதுக்குட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டிலும் சர்ஃபராஸ் அதிக ரன்கள் எடுத்தார்.

2014-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தபோது, அவர் 6 போட்டிகளில் 70க்கு மேல் சராசரியில் 211 ரன்கள் எடுத்தார்.

இந்த பேட்டிங் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு நிர்வாகத்தின் கண்ணில் சிக்கியது. 2015இல் அந்த அணி சர்ஃபராஸ் கானை 50 லட்சம் ரூபாய்க்கு வாங்கியது. அப்போது அவருக்கு வயது 17.

இவை அனைத்தும் சர்ஃபராஸின் மன உறுதியை உயர்த்தியது. 2016இல், 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் மீண்டும் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றார். மேலும் இந்த முறை ஆறு போட்டிகளில் சர்ஃபராஸின் மட்டை, 355 ரன்களை குவித்தது.

சர்ஃபராஸின் கேரியரில் எல்லாம் நன்றாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஐபிஎல் அணியில் அவர் இருந்தார். உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ந்து ரன் குவித்தார்.

இந்த நிலையில் இந்திய அணியின் கதவு திறக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்றே தோன்றியது. ஆனால், காலம் ஒரேபோல இருக்காது என்று சொல்வார்கள். சர்ஃபராஸ் விஷயத்திலும் இதுதான் நடந்தது.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

தந்தைதான் சர்ஃபராஸின் பயிற்சியாளர்

2014 ஆம் ஆண்டு மும்பையின் ரஞ்சி அணியில் சர்ஃபராஸ் கான் அறிமுகமாகும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அணியில் அவரது இடம் உறுதி செய்யப்படவில்லை. அவர் அணியில் சேர்க்கப்படுவார். பின்னர் வெளியே எடுக்கப்படுவார். இதைக் கருத்தில் கொண்டு, அவரது தந்தையும் பயிற்சியாளருமான நௌஷாத் கான் ஒரு முடிவை எடுத்தார்.

தனது குடும்பம் உத்தரபிரதேசத்தில் உள்ள ஆசம்கர்ரை சேர்ந்தது என்பதால், தன் மகனுக்கு உத்தரப் பிரதேசத்தில் இருந்து அதிக வாய்ப்புகள் கிடைக்கலாம் என்று கருதிய நௌஷாத், 2015-16இல் உத்தரப் பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தார். இந்த முடிவு சர்ஃபராஸுக்கு மிகவும் மோசமாக அமைந்தது. இரண்டு சீசன்களாக தொடர்ந்து உ.பி.க்காக விளையாட அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

காயம் காரணமாக மாநிலத்தின் ஒருநாள் அணியிலிருந்தும் அவர் நீக்கப்பட்டார். இருப்பினும், அந்த நேரத்தில் அவர் 2016 ஆம் ஆண்டின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையில் பிரமாதமாக பேட்டிங் செய்தார். மேலும் ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் இருந்தார்.

இவை அனைத்தும் சர்ஃபராஸின் ஆட்டத்தை பாதிக்க ஆரம்பித்தன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அப்போதைய கேப்டனாக இருந்த விராட் கோலியும், சர்ஃபராஸ் கானிடம் உடல் எடையை குறைக்கும்படி கேட்டுக்கொண்டார். உடல் தகுதி இல்லாத காரணத்தால், அவர் அணியில் இருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருக்கு முதுகு மற்றும் முழங்கால் வலி பிரச்னையும் ஏற்பட்டது.

சர்ஃபராஸ் கான்

மும்பை அணிக்கு திரும்புவதில் சவால்

இந்த குழப்பமான காலகட்டத்தில், சர்ஃபராஸ் கான், தனக்கென இரண்டு இலக்குகளை ஏற்படுத்திக்கொண்டார். ஒன்று, உடற்தகுதி பெறுவது மற்றொன்று மும்பைக்குத் திரும்புவது. மும்பை அணிக்காக விளையாடினால்தான் இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பு பிரகாசமடையும் என்பதை அவர் புரிந்துகொண்டார். மும்பை அணிக்காக விளையாடுவதற்காக அவர் ஒரு சீசன் முழுவதும் காத்திருந்தார். இதன் பிறகு மும்பை அணிக்கு திரும்புவதுதான் அவருக்கு முன் இருந்த சவாலாக இருந்தது.

2018-19இல், மும்பையின் பிரீமியர் கிளப் போட்டியான காஞ்சா லீக்கின் ஏ பிரிவில் அதிக ரன்கள் எடுத்தார். மும்பையின் இரண்டு சிறந்த பேட்ஸ்மேன்களான ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் சிவம் துபே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்தது. இதன் காரணமாக, 2019-20 இல் சர்ஃபராஸ் மும்பை அணியில் விளையாட மீண்டும் வாய்ப்பைப் பெற்றார். இந்த சீசனில் மும்பையின் ஆட்டம் ஏமாற்றமளித்தது. ஆனால், சர்ஃபராஸ் 11 இன்னிங்ஸ்களில் 80 ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்களை எடுத்தார்.

சர்ஃபராஸ் கான்

பட மூலாதாரம்,GETTY IMAGES

அவர் ஆட்டமிழக்காமல் 08, ஆட்டமிழக்காமல் 71, ஆட்டமிழக்காமல் 36, ஆட்டமிழக்காமல் 301, ஆட்டமிழக்காமல் 226, 78, 25, 177 மற்றும் 06 என்ற விகிதத்தில் ரன்கள் எடுத்தார். அந்த சீசனில், அணிக்காக ரன்களை எடுத்த பேட்ஸ்மேன்களில் சர்ஃபராஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்தார். ஆனால், கிரிக்கெட் ஆய்வாளர்களிடமிருந்து அதிக பாராட்டுகள் அவருக்கே கிடைத்தன.

சர்ஃபராஸின் பேட்டிங்கின் மிகச்சிறந்த அம்சம் அவரது டைமிங். மட்டை இடுப்பளவுக்கே வந்தாலும், டைமிங் காரணமாக ஒவ்வொரு பந்தையும் விளையாட போதுமான நேரம் அவருக்கு கிடைக்கிறது. மும்பை அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களாக இருந்த சச்சின் டெண்டுல்கர் மற்றும் ரோஹித் ஷர்மா போல, வரும் நாட்களின் நட்சத்திரமாக சர்ஃபராஸ் கான் கருதப்படுகிறார். அவர் தனது பேட்டிங்கால் மக்களை கவர்ந்து வருகிறார்.

தொடர்ந்து இரண்டு சீசன்களிலும் ரஞ்சி கிரிக்கெட்டில் ரன் குவித்துள்ள சர்ஃபராஸின் கேரியர் மீண்டும் சரியான பாதையில் உள்ளது. சக கிரிக்கெட் வீரர்களான பிரித்வி ஷா, ஷர்துல் தாக்கூர், ஷ்ரேயஸ் ஐயர், ஷிவம் துபே ஆகியோருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில் 24 வயதான சஃர்பராஸ் கானும் வாய்ப்பை பெறுவார் என்ற நம்பிக்கை வலுப்பெற்று வருகிறது.

ரஞ்சி கோப்பை இறுதிப் போட்டியில் அவர் அடித்த சதம், தேசிய தேர்வாளர்களை மீண்டும் அவர் பக்கம் பார்க்க வைக்கும். நவம்பர் மாதம் வங்கதேசத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கும் இந்திய அணியில் அவரது பெயரும் இருக்கக்கூடும். மேலும் இந்திய அணிக்காக விளையாடும் அவரது கனவும் நனவாகக்கூடும்.

Previous Story

வானத்தால் வீழ்ந்த ரணில்!

Next Story

USA கருக்கலைப்பு செய்வதற்கு தடை