நஜீப் பின் கபூர்

நன்றி: 12.04.2026 ஞாயிறு தினக்குரல்
*****

ஈரானுக்கு சீனா கொடுத்த உத்தரவாதமே சமாதானத்தின் துவக்கம்!
தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கான பரிசாகவும் இதனை கருதலாம்!
நெத்தென்யாவால் ஏமாற்றப்பட்ட ட்ரம்ப் கசிந்த அதிரடி தகவல்கள்!
*****

ட்ரம்ப் தொடர்பில் எமது அனுபங்களையும் தொட்டுக் கருவுக்குள் பிரவேசிக்கலாம் என்று எதிர்பார்க்கின்றோம். மனிதனை நம்பி மட்டும் ஒரு கட்டுரையை கூட எழுத முடியாது. அடுத்த சில மணி நேரங்களில் நாம் எழுதி வைத்திருந்த கருத்துக்களுக்கும் அது தொடர்பாக தேடியிருந்த தகவல்களுக்கும் சற்றும் பொருத்தமில்லாத மற்றுமொரு செய்தியை-கதையைச் சொல்லி அவர் எமது முயற்சிகளையும் உலக மக்களின் கவனத்தையும் வேறு ஒரு பக்கமாக திசை திருப்பி இருப்பார்.
எனவேதான் இந்த சமாதானத்தையும் பெரிதாக கொண்டாடாதீர்கள் என்று நாம் மக்களுக்கு எச்சரிக்கை செய்கின்றோம். பத்திரிகை அச்சாகிக் கொண்டிருக்கின்ற நேரத்திற்கும் அது சந்தைக்கு வருவதற்குமான இடைவெளியில் நாம் சொல்லி இருந்த கருத்துக்கள் சற்றும் பொருத்தமில்லாதவையாக அமைந்து விடக்கூடும். ட்ரம்ப் ஒவ்வொரு தனி நபருக்கும் ஏதோ ஒருவகையில் காயங்களை உண்டு பண்ணிக் கொண்டுதான் வருகின்றார். இது அமெரிக்க குடிமக்களுக்கும் பொருந்தும்.
நமது ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்க கணக்குப்படி முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவது ட்ரம்பின் ஒரு இராஜதந்திரம் என்ற ஒரு கருத்தும் சொல்லப்பட்டதை நாம் முன்பு ஒரு முறை இங்கு சொல்லி இருந்தோம். இது கூட நமது ஜனாதிபதியின் ஒரு இராஜதந்திரமாக இருக்கலாம் என்று நாம் இங்கு பதிவதில் தவறுகள் ஏதும் இருக்க மாட்டாது.
உலகில் எவரும் இப்படியான ஒரு கருத்தை ட்ரம்ப் விவகாரத்தில் சொல்லாத நிலையில் நமது ஜனாதிபதி இப்படி பேசி கடுமையான வார்த்தைகளில் ட்ரம்பை விமர்சிப்பதை தவிர்த்துக் கொள்கின்றார் என்றுதான் நாம் நம்புகின்றோம். அரசியலில் இவை எல்லாம் இயல்பான விவகாரங்கள் தான்.

போரைத் துவங்கிய ட்ரம்ப் இப்போது போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஈரானுக்கு தொடர்ச்சியான காலக்கெடுக்களைக் கொடுத்து வருகின்றார். ட்ரம்ப் காலக்கெடுக்களை ஈரான் கண்டுகொள்வதாகவே இல்லை. இது ட்ரம்புக்கு பெருத்த வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. தற்போது ஏற்பட்டிருக்கின்ற 14 நாள் சமாதானம் இன்று பேசு பொருளாகி வருகின்றது.
ட்ரம்பை நம்பி சமாதானம் பற்றி கருத்துச் சொல்வதை மிகுந்த அடக்கத்தை கடைப்பிடிக்க வேண்டி இருக்கின்றது. இந்த ட்ரம்ப் பற்றி சில குறிப்புக்களை இப்போது பார்ப்போம். உலகில் இருக்கும் எல்லோரும் தன்னை மதிக்க வேண்டும் என்பது அவரது தனிப்பட்ட விருப்பமாக இருந்து வருகின்றது.
![]()
அதற்கு இந்தக் கதையையும் கேளுங்கள். அண்மையில் தனது அமைச்சர்கள் மத்தியில் பேசும் போது ரஸ்யா சீனா வடகொரிய தலைவர்கள் கூட்டங்களுக்கு வருகை தருகின்ற போது அங்குள்ள அமைச்சர்கள் அதிகாரிகள் எப்படி எல்லாம் எழுந்து நின்று அவர்களுக்கு மரியாதை தருகின்றார்கள் என்பதனை நீங்கள் பார்த்திருக்கின்றீர்களா?
ஆனால் நான் வரும் போது அப்படி எல்லாம் இங்கு நடப்பதில்லையே என்று அவர் அமைச்சர்களிடத்தில் ஒரு முறை பகிரங்கமாகவே கேட்டிருந்தார். இதிலிருந்து அவரது சிறுபிள்ளைத் தனத்தையும்-மனநிலையை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.
அதே போன்று ஒரு மனிதன் சுயகட்டுப்பாட்டை இழக்கின்றபோது அவன் வன்முறையாக நடந்து கொள்வதும் தூசன வார்த்தைகளில் பேவதும் நடக்கலாம். ஆனால் ஒரு பத்திரிகையாளர் மாநாட்டிலே அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தூசனத்தில் பேசி இருந்தது இன்று அமெரிக்காவில் மட்டுமல்ல முழு உலகத்திலும் கடுமையான விமர்சனத்துக்கு இலக்காகி வருகின்றது.
இப்படியான ஒரு மனிதனை நாம் அமெரிக்காவுக்கு அதிபராக வைத்திருப்பது பெரும் அவமானம் என்று சிரேஸ்ட அரசியல் தலைவர்களே அதுவும் அவர் கட்சியில் இருப்பவர்களே இன்று பேசி வருகின்றார்கள்.
போரை முடிவுக்குக் கொண்டுவருது பற்றி நீங்கள் எப்போதும் முன்னுக்குப் பின் முரணாக பேசுகின்றீர்களே இது ஏன் என்று ஒரு பெண் ஊடகவியலாளர் அங்கு கேள்வி கேட்ட போது எனக்குத் தெரியாது நான் அது பற்றி இங்கு ஏதும் சொல்ல மாட்டேன் என்று தனது முரண்பாடு தொடர்பாக அவர் பதில் வழங்குவதை அங்கு தவிர்த்திருந்தார்.

போர் துவங்கிய பின்னர் பல அதிகாரிகள் இந்த மனிதனுடன் பயணிக்க முடியாது என்று தமது பதவிகளைத் தூக்கி வீசிவிட்டு வெளியேறி இருக்கின்றார்கள். இன்னும் டசன் கணக்கான அதிகாரிகள் தனது பின்னடைவுக்கு காரணம் என்று சொல்லி அவர்களை ட்ரம்ப் வகித்த பதவிகளில் இருந்து தூக்கி இருக்கின்றார். ஈரானில் அதிகாரிகள் படை தளபதிகள் இழப்பது போல ஒன்றாகத்தான் நாம் இதனையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஈரானால் சுடப்பட்ட விமானத்தில் இருந்து தப்பிய முதலாவது விமானியை மீட்பதற்கு தான் அங்கு 170 விமானங்களையும் இரண்டாவது விமானியை மீட்பதற்கு 155 விமானங்களையும் டசன் கணக்கான ஹெலிக்கப்படர்களை அங்கு அனுப்பியதை ட்ரம்பே பகிரங்கமாக ஏற்றுக் கொள்கின்றார்.
இதற்கென அமெரிக்க 30000 கோடி டொலர்களை செலவு செய்திருக்கின்றது. இலங்கை நாணயத்தில் இதன் பெருமதி 9450000.00 கோடி ரூபாய்கள். ஆனால் மீட்கப்பட்டவரை அவர்கள் இன்றுவரை காட்சிப்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டும் இருக்கின்றது.
இந்த நிகழ்வுகளுக்கு மத்தியில்தான் இப்போது இடைக்கால சமாதானம் பற்றிய கதைகள் வருகின்றன. இதன் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் துருக்கி எகிப்து இருந்ததாக சொல்லப்படுகின்றது ஆனால் யதார்த்தம் அதுவல்ல சீனா கொடுத்த சில உத்தரவாதங்களை நம்பியே ஈரான் இந்த சமாதானம் பற்றி பேசுவதற்கு ஒத்துக் கொண்டிருக்கின்றது. பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டை நம்பி ஒரு போதும் ஈரான் சமாதானத்துக்கு ஒத்துக் கொள்ள வாய்ப்போ கிடையாது என்பது நமது கருத்தும் கூட.
இதற்கு காராணம் உலக்தையே ஏமாற்றிக் கொண்டிருக்கின்ற ட்ரம்புக்கு பாகிஸ்தான் தலைவர்கள் ஒன்றும் பெரிய மனிதர்கள் கிடையாது. அவர்களை ட்ரம்ப் கண்டுகொள்ள மாட்டார்-மதிக்க மாட்டார். சல்மானையே சூ நக்கி என்று ஒரு முறை ட்ரம்ப் சொல்லி இருந்தார். ஆனால் சீனா தலைவர்களை ட்ரம்ப் ஒரு போதும் அப்படி ஏமாற்ற முடியாது.
அப்படி நடந்தால் அதன் பிரதிபலன்கள் மிகவும் மோசமாக இருக்கும். மேலும் இந்தப் போரில் சீனா நேரடியாக ஈரானுக்கு ஆதரவாக இறங்காவிட்டாலும் அவர்களுக்கு நம்பத் தகுந்த சகாவாக இன்று வரை சீனா இருந்து வந்திருகின்றது. அந்தவகையில் சீனா தலைவர்கள் மீது ஒரு நல்ல நம்பிக்கை ஈரானுக்கு இருக்கின்றது.
டெலிகிராப் பத்திரிகையில் பெனடிக் ஸ்மித் எழுதிய கட்டுரையில் அமெரிக்க வரலாற்றில் ஒரு தலைவருக்குக் கிடைத்த மிகப் பெரிய தோல்வியைத்தான் அமெரிக்கர்களுக்கு ட்ரம்ப் வாங்கித் தந்திருக்கின்றார் என்று கருத்துப்பட கட்டுரை எழுதி இருக்கின்றார். இது அமெரிக்காவுக்கு படுதோல்வி. ட்ரம்பின் பிழையான அணுகுமுறையால் அமெரிக்காவுக்குக் கிடைத்த மிகப் பெரிய பின்னடைவு. இந்தப் போரை ட்ரம்ப் ஆரம்பித்திருக்கவே கூடாது. இது அமெரிக்கர்களுக்கான ஒரு போரே கிடையாது என்றும் அவர் குற்றம்சாட்டி வருகின்றார்.
அமெரிக்க வரலாற்று பேராசிரியர் இமேதிஸ் டைனர் ட்ரம்ப் பற்றி சொல்லி இருக்கின்ற கருத்துக்களைப் பாருங்கள். இன்று இரவு ஒரு நாகரிகமே அழிகின்றது. அடுத்த நாள் சமாதானம் பற்றி பேசும் போது இது ஒரு புரட்சிகர மாற்றம் என்று கூறுகின்றார். இன்னும் ஒரு வாரத்தில் தாக்குவேன் நாளை தாக்குவேன் இன்னும் நான்கு மணி நேரத்தில் தாக்குவேன்.
ஒரு மணி நேரத்தில் தாக்குவேன் இப்படி எல்லாம் ஒரு நாட்டுத் தலைவர் பேசுவது என்ன முரண்பாடு கோமாளித்தனம். ஒவ்வொரு ஈரானியனும் நாட்டுக்காக தற்கொலைத் தாக்குதலுக்கு தயாராக இருக்கின்றான். அதற்கு அவர்கள் பயிற்றுவிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
ஆனால் ஒரு அமெரிக்கனுக்காவது இப்படி ஒரு மனநிலை இருக்கின்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பி இருக்கின்றார். வரம்பற்ற அதிகாரத்தை பாவிக்க ட்ரம்பை இதுவரை அனுமதித்தது பெரும் தவறு என்றும் டைனர் மேலும் தெரிவித்திருக்கின்றார். இவரது கருத்துக்கள் அமெரிக்க புத்திஜீகள் மத்தியில் பெரும் தாக்கங்களை உண்டு பண்ணும் என்றும் சொல்லப்படுகின்றது.
ஈரானுடன் இந்தப் போரை துவங்குவதற்கு முன்னர் அமெரிக்காவில் இரகசிய அறையில் நடைபெற்ற ஒரு சந்திப்பில் ட்ரம்பும் பாதுகாப்புச் செயலாளர் இராணுவத் தளபதி அவருடைய ஓரிரு அதிகாரிகளும் இஸ்ரேல் தரப்பில் நெத்தென்யாவும் மேலும் இரண்டு பேரும் அங்கு போயிருந்தனர். ட்ரம்பும் நெத்தென்யாவும் மேசையில் நேருக்கு நேர் இரு பக்கங்களில் அமர்ந்திருக்கின்றனர்.
அப்போது அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நாம் தாக்குதல் நடாத்தினால் ஈரான் ஹேர்மூஸ் நீரிணையை மூடிவிட வாய்ப்பு இருக்கின்றதுதானே என்று அங்கு கேள்வி எழுப்பி இருக்கின்றார். ஆம் அப்படி நடக்க இடமிருந்தது. நாம் வகுத்திருக்கும் திட்டப்படி நமது தாக்குதல் நடக்கின்ற ஒரிரு நாட்களில் ஈரான் அரசு வீழ்ந்து நமக்கு விசுவாசமான ஒரு அணி அங்கு அதிகாரத்துக்கு வந்திருக்கும்.
அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எமது முகவர்கள் அங்கே அந்த ஏற்பாடுகளைச் செய்வார்கள் என்று நெத்தென்யா அங்கு உத்தரவாதம் கொடுத்திருக்கின்றார்.
அப்போது எவரும் அங்கு கேள்வி எழுப்பவில்லை. இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த இரகசிய பேச்சுவார்த்தை துவங்குகின்ற போது அமெரிக்க உதவி ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அதில் பங்கு கொள்ளாமல் தவிர்த்துக் கொள்வதற்கு ட்ரம்ப் திட்டமிட்டிருந்தார்.

அவர் அந்த நேரத்தில் அஸர்பைஜானுக்கு போய் இருந்தார். இவர் போருக்கு எதிரான மனநிலையில் இருந்ததனால் அவரை இதில் பங்குபற்றும் சந்தர்ப்பம் கொடுத்தால் இரகசியங்கள் வெளியாகி விடும் என்று ட்ரம்பும் நெத்தென்யாவும் கருதியதால்தான் இந்த ஏற்பாடு.
இப்படி எல்லாம் செய்துதான் இந்த போரை பிழையான தகவல்களைக் கொடுத்தே நெத்தென்யா கட்டாயப்படுத்தியே ட்ரம்பை போரில் இறக்கி விட்டார். இதற்கு ட்ரம்பின் மருமகனின் நல்ல ஒத்துழைப்பும் முறையாக கிடைத்து வந்தது.
ஆனால் அமெரிக்க கூட்டுப்படையின் தளபதி இந்தத் தாக்குதலுக்கு தனது முழு ஆதரவைக் கொடுக்க பல காரணங்களினால் பின்வாங்கி இருந்தாலும் தனக்கு ஜனாதிபதியால் கட்டளை பிறப்பிக்கப்படுமாக இருந்தால் தான் முழுமனதுடன் தாக்குதலை மேற்கொவேன் என்று ட்ரம்புக்கு வாக்குறுதி வழங்கி இருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த ஒன்றரை மாதங்களாக உலகம் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் போர் பற்றி பேசிக் கொண்டிருந்தது. ட்ரம்பைத் திட்டிக் கொண்டிருந்தது என்று சொல்வதிலும் தவறுகள் இருக்காது. இப்போது இரண்டு வாரங்கள் சமாதனம்.. சமாதானம்… என்று பேசலாம் என்ற நிலை.
அது கூட இன்னும் எத்தனை நாட்களுக்கு மணி நேரங்கள் வரை தொடரப் போகின்றது என்பது தெரியாது. சமாதானத்தை பேசிக் கொண்டிந்த நேரத்திலே நூற்றுக்காணக்கான அப்பாவி சிறுமிகளையும் ஈரானியத் தலைவர்களையும் கொன்று குவித்த ஒரு தலைவருடன் ஈரான் எவ்வளவு எச்சரிககையுடன் சமாதனம் பற்றி பேச்சவார்த்தைகளை நகர்த்திச் செல்ல முடியும் என்பது பெரும் சந்தேகம்.
இதற்கிடையில் தனக்குத் தெரியாது இந்த இடைக்கால சமாதானத்துக்கு அமெரிக்கா இணங்கி இருப்பது தமக்கு பெரும் அதிர்ச்சியாக இருக்கின்றது. இப்படிக்கூறி இருக்கின்றார் நெத்தென்யா.

தனது பத்துக் கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டால் மடடுமே பேச்சுவார்த்தை என்பதில் ஈரான் உறுதியாக இருந்தது. அதனை ட்ரம்ப் ஏற்றுக் கொண்டார் என்பது சற்று ஜீரணிக்க கஸ்டமாக இருக்கின்றது. இதனால்தான் சமாதானம் பற்றிய கதைகளை நாமும் மிகுந்த எச்சரிக்கையுடன் அவதானித்து வருகின்றோம்.
மேலும் சமாதானத்துக்காக இரு தரப்பு கோரிக்கைகளும் இமயமளவில்தான் இருக்கும். அல்லது யானைக்கும் பூனைக்கும் இருக்கின்ற வேறுபாட்டுடன்தான் இருக்கும். அதனை சமநிலைப்படுத்துவது இலகுவான ஒரு காரியமாகவும் இருக்க மாட்டாது.
மேலும் பாகிஸ்தானால் இந்த சமாதானப் பேச்சுவார்த்தைகளை நெறிப்படுத்த முடியும் என்று நாம் ஒருபோதும் நம்ப முடியாது. பின்னணியில் சீனா-ரஸ்யா போன்ற நாடுகள் இருந்தால் மட்டுமே இதனை முன்னகர்த்த முடியுமாக இருக்கும்.
சரியோ பிழையோ சாத்தியமே அசாத்தியமோ எப்படி இருந்தாலும் இந்த பதினாங்கு (14) நாள் சமாதானம் உலகிற்கு குறிப்பாக தமிழ்-சிங்களப் புத்தாண்டுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகவும் நாம் எடுத்துக் கொள்ள முடியும். கடந்த வெள்ளிக்கிழமை பேச்சுவார்த்தைகள் இஸ்லாமபாத்தில் துவங்கி இருக்கும். அது பற்றிய துவக்க தகவல்களும்; இப்போது ஊடகங்கள் விவாதித்துக் கொண்டிருக்கும்.
ட்ரம்பின் பிந்திய டுவிட்டர் பதிவில் சமாதானம் வெற்றி பெறும். அதன் மூலம் ஈரானுக்கு பில்லியன் கணக்கில் பணம் வரும். இது போலவே வளைகுடா நாடுகளிலும் செல்வம் கொழிக்கப் போகின்றது என்று ட்ரம்ப் சொல்லி இருக்கின்றார். இதனை ஒரு நகைச்சுவையாக எடுத்துக் கொள்வதா அல்லது பொறுப்புள்ள வார்த்தை என்று எடுத்துக் கொள்வதா என்று புரியவில்லை.
சமாதானத்தை உச்சரிக்க முடியும். அது பற்றிய நம்பிக்கைகளை கொடுக்க முடியும். ஆனால் அதனை அடைவது என்பது சுலபமான காரியமாக இருக்க மாட்டாது.
அதிரடியாக பேச்சுவார்தை கிடையாது. பேச்சுவார்த்தை முறிவடைந்து விட்டது என்று அறிவிப்புக்கள் வந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.




